பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்
இப்போது ஸ்டாண்ட் அப் காமெடி என்பது பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவர் மேடையில் வந்து நின்று கொண்டு ஜோக்குகளாக உதிர்த்து அரங்கில் இருப்பவர்களை சிரிக்கச் செய்ய வேண்டும்.
இந்த கான்செப்ட்டே கொஞ்சம் உதைக்கிறது. நகைச்சுவை என்பது பெரும்பாலும் டைமிங்கை பொறுத்துதான் அமையும். மேலும் உரையாடல்களில் இயல்பாக வெளிப்படும் பொழுதுதான் ரசிக்க முடியும். அப்படி இல்லாமல் நான் ஜோக் அடிப்பேன், நீங்கள் சிரிக்க வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கி சிரிக்க வைக்க முற்படுவது...?
இந்த ஸ்டாண்டப் காமெடியில் கார்த்திக் குமாரும், அரவிந் சுப்பிரமணியனும் முன்னணியில் நிற்கிறார்களாம். "இந்த இருவர்களின் காமெடியையும் கேள்" என்று என் மகன் கேட்க வைத்தான். கார்த்திக் குமாரை உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். அலைபாயுதே, கண்ட நாள் முதலாய் போன்ற படங்களில் அமெரிக்க ரிடர்ன் மாப்பிள்ளையாக வருவார். மிர்ச்சி சுசியின் கணவர். ஆழ்வார்பேட்டை மேட்டுக்குடி! ஆனால், அவருடைய நிகழ்ச்சி முழுவதும் கெட்ட வார்த்தைகள் விரவிக் கிடக்கின்றன. ஆங்கிலத்தில் F இல் தொடங்கும் வார்த்தை, தமிழில் 'ம..' என்ன கொடுமையிது!? சாதாரணமாக கெட்ட வார்த்தைகளை யாராவது பேசினால்,"நீ படித்தவன்தானே? படிக்காதவனைப் போல பேசுகிறாய் என்பார்கள். ஆனால், படித்த, மேட்டுக் குடியைச் சேர்ந்த கார்த்திக் குமார் போன்றவர்கள் இப்படி பேசுவதும், அதை நகைச்சுவை என்று ஒரு கூட்டம் கைதட்டி ரசிப்பதும்..??! நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?
இவரோடு ஒப்பிடும் பொழுது அரவிந்த் சுப்பிரமணியம் பரவாயில்லை. கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை, ஒரு மாதிரியான ஜோக்கை நாசூக்காக சொல்கிறார். அவருடைய பிரபலமான ஜோக் ஜெட்டி ஜோக்காம். உவ்வே!
நம்முடைய மதிப்பீடுகள் குறைந்து கொண்டே வருகிறதோ என்று எண்ண வைத்த இன்னொரு சம்பவம் 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தில் வந்த காதல் காட்சிகள். கதைப்படி ஐ.பி.எஸ். அதிகாரியான கதாநாயகன், போஸ்டிங் வருவதற்கு முன் தன் சொந்த ஊருக்கு வருகிறான். அங்கு எதிர் வீட்டிலிருக்கும் +2 முடிக்காத பெண் மீது காதல் வயப்படும் அவன் அவளுக்கு பாடம் சொல்லித் தருகிறேன் என்ற சாக்கில், "என்னை கட்டிப் பிடி", "முத்தம் கொடு" என்று மிரட்டுவதும், அதுவும் சிறு குழந்தைகள் இருக்கும் பொழுது, அவர்களை, "கண்ணை மூடிக் கொள்ளுங்கள்," "அந்தப் பக்கம் திரும்பி உட்கார்ந்து கொள்ளுங்கள்" என்று கூறி விட்டு இதையெல்லாம் செய்கிறான். போலீஸ் அதிகாரி, ஆசிரியர் என்ற இரண்டுமே புனிதமான பணிகள். ஒரு கௌரவமான போலீஸ் அதிகாரி, டியூஷன் எடுக்கிறேன் என்ற பெயரில் தரம்கெட்டத் தனமாக நடந்து கொள்வதாக காட்டுவது சரியாகப் படவில்லை. காதலை காட்ட வேறு களங்களா இல்லை?

