சனி, 15 அக்டோபர், 2016

இன்னும் கொஞ்ச நாள்...

இன்னும் கொஞ்ச நாள்...


"அப்பா.. ரொம்ப டையர்டா இருக்கு.. எப்போதான் இந்த பரீட்சை, படிப்பு எல்லாத்தையும் முடிப்போம்னு இருக்கு..." ராதிகா படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு அப்படியே சுருண்டு படுத்துக்க கொண்டாள்.

"ஆச்சு, இன்னும் கொஞ்சம்தான், படிச்சு முடிச்சு ஒரு நல்ல வேலையில் உட்கார்ந்து கொண்டு விட்டால் அப்புறம் நிம்மதியா இருக்கலாம்".. பக்கத்தில் வந்து உட்கார்ந்த அம்மா அவள் முதுகில் தட்டி அவளை எழுப்பி உட்கார வைத்தாள். 

"போம்மா நீ ஈஸியா சொல்லற, இது செகண்ட் இயர்தான், இன்னும் ஒரு வருஷம் படிக்கனும்.."
"ஒரே ஒரு வருஷம்தான்..ஓடிப்போய் விடும்...சூடா கொஞ்சம் டீ போட்டு தரட்டுமா"?
"நாங்களெல்லாம் படிக்கலை. எல்லாத்துக்கும் மற்றவர்கள் கையை எதிர்பார்த்து இருக்க வேண்டி இருக்கு, நீங்கள் அப்படி இருக்கக் கூடாது. சொந்தக் காலில் நிற்க வேண்டும்..."

அம்மாவின் தாரக மந்திரம் இது. "கொஞ்ச நாள் கஷ்டப்படு.. அப்புறம் சொளக்கியமா இருக்கலாம்". அவளும் அம்மாவின் சொல்படி கஷ்டப்பட்டு படித்தாள். படித்து முடித்த கையோடு வங்கி தேர்வில் தேறி வேலையிலும் சேர்ந்து விட்டாள். 

அப்பாடா! என்று இருக்க முடியவில்லை. "சி.ஏ.ஐ.ஐ.பி. எழுதுங்க மேடம், இன்க்ரீமெண்ட் கிடைக்கும், சீக்கிரம் ப்ரோமோஷன் வாங்கி செட்டில் ஆகிடலாம். கொஞ்சம் கஷ்டப்படுங்க,சின்ன வயசுதானே.."

அகௌண்ட்டெண்ட் அறிவுறுத்தினார். அது முடிப்பது அத்தனை சுலபமாக இல்லை. ஒரு முறைக்கு மூன்று முறை எழுத வேண்டி இருந்தது. அம்மா சொன்னபடி ரெஸ்ட் எடுக்க முடியவில்லை. 

இதற்கு இடையில் திருமணம் ஆகியது. முதல் இரவில் அவள் கணவன், "வேலையைத் தொடர்வதில் அவள் எண்ணம் என்ன"? என்று கேட்டான். "குழந்தை பிறக்கும் வரை வேலைக்குச் செல்வேன், அதன் பிறகு வேலையை விட்டு விடுவேன்" என்றாள். சிறிது நேரம் மௌனமாக இருந்தவன், அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டு, " எங்கள் வீட்டில் நான்தான் மூத்தப் பிள்ளை. ஒரு தங்கைக்கு கல்யாணம் செய்ய வேண்டும், தம்பி இப்போதுதான் பள்ளியில் படிக்கிறான், நீ கொஞ்ச நாள் வேலைக்குப் போனால் சௌகரியமாக இருக்கும். கொஞ்சம் கஷ்டம்தான்.. "

அவள் கொஞ்சம் கஷ்டப் பட தயாரானாள். நாத்தனாரின் திருமணம், மைத்துனனின் மேல் படிப்பு எல்லாவற்றுக்கும் அவளின் சம்பளமும் உத்தியோகமும் பெரிதும் உதவின.  
இதற்கிடையில் பிறந்த இரண்டு குழந்தைகளையும் அம்மாவிடம் கொஞ்சம், மாமியாரிடம் கொஞ்சம், வேலைக்காரியிடம் கொஞ்சம் என்று எப்படியோ வளர்த்தாள். 

மகனுக்கு பன்னிரெண்டு வயது, மகளுக்கு ஒன்பது வயது ஆன பொழுது வேலையை விட்டு விடலாம் என்று தோன்றியது. வீட்டில் நிம்மதியாக இருந்து கொண்டு நிதானமாக எழுந்து, சமைத்து, டி.வி. பார்த்து, குழந்தைகளை திட்டாமல் பாடம் சொல்லிக் கொடுத்து, சின்ன வயதில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்ட சங்கீதத்தையும் கற்றுக் கொள்ளலாமே..
அப்போதுதான் அவள் கணவன் ஒரு நாள் மாலை அவளையும், குழந்தைகளையும் "இன்னிக்கு வெளியே போகலாம்" என்று அழைத்துச் சென்றான். அண்ணா நகரின் விரிவாக்கமான அங்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் முளைத்துக் கொண்டிருந்தன. அதில் ஒரு வீட்டை காண்பித்து, "உனக்கு பிடித்திருக்கிறதா"? என்றான். 

ராதிகாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ""வீடு பிடித்ததுதான் இருக்கு, ஆனால் ஏன்?  வீடு மாத்தப் போறோமா என்ன? 
"வீடு வாங்கப் போறோம்.."
"வாட்"?
"எஸ்."!
"இது என் பிரெண்டோட மாமனார் வீடு. அவர் வீட்டை வித்துட்டு பணத்தை பாங்கில் போட்டுக் கொண்டு வரும் வட்டியில் சொச்ச காலத்தை ஓட்டலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம், எங்கிட்ட கேட்டான், அண்ணா நகரில் தனி வீடு.. ! லட்டு மாதிரி ஒரு ஆப்பர்சூனிட்டி, என்ன சொல்ற"?
"பணம்.."?
"நீ லோன் போடு, பேங்க் எம்பிளாயி, இன்ட்ரெஸ்ட் கம்மியா இருக்கும்". 

இரவு ஒரு மணி வரை இருவரும் வீடு வாங்கப் போவதால் வரும் சாதக,பாதகங்களை ஆராய்ந்தார்கள்.. சமாளித்து விட முடியும் என்று தோன்றியதும் நிம்மதியாக உறங்கினார்கள்.
புது வீட்டில் கிரகப் பிரவேசம் செய்த பொழுது சந்தோஷமாக இருந்தது. வந்தவர்கள் எல்லோரும் பாராட்டி, இப்படி ஒரு வீடு அமைந்தது அதிர்ஷடம்தான் என்று கூறியதை கேட்ட பொழுது, இந்த சந்தோஷத்துக்காக இன்னும் கொஞ்ச நாள் வேலை பார்க்கலாம் என்று தோன்றியது. 

வருடம் செல்லச் செல்ல, உத்யோக உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் அவர்கள் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தின. அவ்வப்பொழுது சுற்றுலாக்கள் சென்றார்கள். மகனையும், மகளையும் அவர்கள் ஆசைப்பட்ட கல்லூரியில் மேனேஜ்மேண்ட் கோட்டாவில் சேர்க்க முடிந்தது. அப்போதெல்லாம் ராதிகாவுக்கு வேலையை விட வேண்டும் என்று தோன்றவே இல்லை. இத்தனை நாட்கள் உழைத்து விட்டோம், இன்னும் கொஞ்ச நாள்தானே.. என்று தேற்றிக்கொண்டாள்.

மகனுக்கு கேம்பஸ் இன்டெர்வியூவில் முன்னணி ஐ.டி. கம்பெனியில் வேலை கிடைத்தது.அவனுடைய ஆபர் லேட்டரைப் பார்த்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. நாம் எந்த வயதில் சம்பாதித்ததை இவர்கள் எடுத்த எடுப்பில் ஈட்டுகிறார்கள் என்று பிரமிப்பாக இருந்தது. 
மகன்தான் வேலைக்கு வந்து விட்டானே, "நீ ஏம்மா இன்னும் கஷ்டப் படற, வேலையை விட்டு விடு. நான்தான் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டேனே" என்று சொல்லுவான் என்று எதிர்பார்த்தாள். அவனோ, இரவு சாப்பிடும் பொழுது, அப்பாவிடம்," நான் வீட்டு செலவுக்கு எவ்வளவுப்பா கொடுக்கணும்? ஏன்னா, இங்க ரெண்டு வருஷம் ஒர்க் பண்ணிட்டு, எம்.எஸ். படிக்க அமெரிக்கா போகணும், அதுக்கு ஐ ஹவ் டு சேவ்.." என்றான்.

அதன்படியே இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவன் அமெரிக்கா செல்வதற்கும், மகள் வேலைக்கு வருவதற்கும் சரியாக இருந்தது. 

"போறும்மா நீ வேலை பார்த்தது, நாங்கதான் செட்டில் ஆகிவிட்டோமே, நீ வேலையை விட்டு விடு"  என்றாள் மகள்.

"உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிட்டு வேலையை விடுகிறேன். இன்னும் கொஞ்ச நாள்தானே.."
சொன்னதோடு நிற்காமல் முனைந்து வரன் தேடினார்கள். மகன் அமெரிக்காவில் வசிப்பதால் மகளுக்கும் அங்கேயே மாப்பிளை கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று அமெரிக்கா வரங்களுக்கே முன்னுரிமை அளித்தார்கள். அதே போல கிடைத்தது. திருமணம் முடிந்து அமெரிக்கா செல்ல விமானம் ஏறும் முன், நீயும் அப்பாவும் பாஸ்போர்ட் ரெடி பண்ணிக்கோங்கோ என்று சொல்லி விட்டுதான் சென்றாள். மகள் கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்ததும் ராதிகா தன் வேலையை ராஜினாமா செய்தாள்.

மகளின் பிரசவத்திற்கு உதவ கிளம்பிக் கொண்டிருந்த பொழுது அவளின் சிநேகிதி ஒருத்தி தொலைபேசியில் அழைத்து, "பான் வாயேஜ்"! என்று வாழ்த்தி விட்டு, "இனிமேல் நீ ராதிகா ஐ.ஏ.எஸ்.தான்." என்றாள் 

"ஐ.ஏ.எஸ்.சா .."??

"ஆமாம், இந்தியன் ஆயா சர்வீஸ்..."என்று கூறி விட்டு, சிரித்தாள்.

"இது வயிற்று எரிச்சல், இவளுடைய குழந்தைகள் அமெரிக்காவில் இருந்து கொண்டு அழைத்தால் இவள் போகாமல் இருந்து விடுவாளா? ஜஸ்ட் இக்னோர்" என்றார் அவள் கணவர்.
மகனுக்கும் திருமணம் ஆனது. அவன் வேலை பார்த்த நிறுவனம் அவனை சிங்கப்பூருக்கு மாற்றியது. இப்போது கிழக்கில் ஒருவர், மேற்கில் ஒருவர் என்றாகி விட்டது. 

"அமெரிக்கா என்றால்தான் செல்வீர்களா? சிங்கப்பூர் என்றல் வர மாட்டிர்களா"?  எமோஷனல் ப்ளாக் மெயில் செய்தான் மகன். 

சிங்கப்பூர் விமானத்தில் ஏறுவதற்க்காக  விமான நிலையத்தில் காத்திருந்த பொழுது, "அங்கேயும் இங்கேயும் அலைவது அலுப்பாக இருக்கு, எப்போ நம்ம வீட்டில் அக்கடான்னு இருப்போன்னு இருக்கு.".கணவரிடம் குறைபட்டுக் கொள்ள,

"நம்மளால முடியற வரை செய்யப்போறோம், அப்புறம் வீட்டில் இருக்க வேண்டியதுதானே.. இன்னும் கொஞ்ச நாள்".