மசாலா சாட்
சென்ற வருடம் எங்கள் குடியிருப்பில் விநாயக சதுர்த்தி கொண்டாடவில்லை. கோவிட் பயம். இந்த வருடம் நிறைய பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டதால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடினோம். இதிலிருந்து மற்ற கொண்டாட்டங்களும் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன்.
விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட ஓவிய போட்டிக்கு வந்திருந்த ஓவியங்களில் மாஸ்க் அணிந்த விநாயகரும், தடுப்பூசி போட்டுக் கொள்வதை வலியுறுத்தும் ஓவியமும் என்னைக் கவர்ந்தன.
![]() |
எங்கள் வீட்டு கணேசர். |
சென்னை சென்ற பொழுது ஒரு ஹோட்டலில் டிஃபன் சாப்பிட்டோம். அங்கு காபிக்கு பாய்லர் வைத்திருந்தார்கள். இதே போன்ற பெரிய சைஸ் பாய்லர் முன்பெல்லாம் வீட்டில் வென்னீர் போட வைத்திருப்பார்கள். யாருக்காவது நினைவு இருக்கிறதா?
சுஜாதாவின் கற்றதும்,பெற்றதும் படிக்க கிடைத்தது. 2003 வெளியீடு. அதில் ஒரு கட்டுரையில் மண வாழ்க்கைக்கு பத்து விதிகள் என்னும் கட்டுரையில் அவர் சொல்லியிருப்பது கீழே:
எனக்கு கல்யாணமாகி முப்பத்தேழு வருஷம் ஆகிறது என்று சென்ற இதழில் சொன்னேன். செய்யாறிலிருந்து ஒரு வாசகர் "எனக்கு ஒரு வருஷமே அலுத்து விட்டதே, உங்கள் திருமண வெற்றியின் ரகசியம் என்ன?" என்று கேட்டு, சுய விலாசமிட்ட கவர் அனுப்பியிருந்தார். யோசித்தால் அப்படி எதுவும் ரகசியம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்பா அம்மா சொன்ன பெண்ணை கல்யாணம் செய்து கொண்டதால் இருக்கலாம். அது இந்த காலத்துக்கு சரிப்பட்டு வராது. சண்டை போட விஷயங்கள் தீர்ந்து போயிருக்கலாம். இதையும் வெற்றியின் ரகசியமாக சொல்ல முடியாது.
ஜேம்ஸ் தர்பர் எனக்குப் பிடித்த அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர். 'மகிழ்ச்சியான மண வாழ்வுக்கு எனக்கே எனக்கான பத்து விதிகள் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த பத்து விதிகளை மட்டுமே தருகிறேன். இந்த விதிகள் உங்கள் மண வாழ்வுக்கு பொருந்துமா.. யோசித்து பாருங்கள்.
1. கணவனோ, மனைவியோ பரஸ்பரம் மற்றவரின் நண்பர்களையோ, உறவினர்களையோ கிண்டல் செய்யாமலிருப்பது.
2. கணவன், மனைவியின் உறவினர்கள் பெயர்களை கூடிய மட்டும் தெரிந்து வைத்துக் கொள்வது.
3. கணவன் மனைவியை மற்றவர்கள் முன்னால் கிண்டல் செய்யாமல் இருப்பது.
4. எப்பவும் ஆண்களே இப்படித்தான் என்று மனைவியும், பெண்களே இப்படித்தான் என்று கணவனும் பொதுபடுத்தாமல் இருப்பது.
5. கணவன் எதையாவது முக்கியமானதை படித்துக் காட்டும் பொழுது மனைவி பராக்கு பார்ப்பதோ, அடிக்கடி மணி பார்ப்பதோ, நடுநடுவே கொசு அடிப்பதையோ தவிர்ப்பது.
6. வீட்டில் நெருப்புப் பெட்டி, காபிப் பொடி, பனியன் போன்ற சில அத்தியாவசிய பொருள்கள் எங்கெங்கே இருகின்றன என்று கணவன் தெரிந்து கொள்வது, மனைவி வரும் வரை காத்திருக்காமலிருப்பது.
7. மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது கணவன் கவனமின்றி தலையாட்டிவிட்டு பிற்பாடு மாட்டிக்கொள்ளாமல் இருப்பது.
8. கணவன் மனைவியை கண்ணே, கன்னுக்குட்டி, குட்டி நாயி, செல்லப்பாப்பு என்றும் 'டா' போட்டும் கூப்பிடுவதை முதல் வருஷத்துடன் நிறுத்தி விட்டால் அவன் சுய நிலைக்கு வந்து விட்டான் என்று மனைவி புரிந்து கொள்வது.
9. கணவன் இளவயசுக்காரர்களுடன் கிரிக்கெட்,ஓட்டப்பந்தயம்,டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை மனைவி முன்னிலையில் ஆடாமல் இருப்பது.
10. கணவன் மனைவியின் ட்ரெஸ்ஸிங் டேபிள் என்னும் புனித பிரதேசத்தின் பக்கமே போகாமல் இருப்பது.
இந்தப் பத்து விதிகளைக் கடைப்பிடித்தால் மண வாழ்வு பாலும் தேனும் பெருகும் என்கிறார் தர்பர் என்று சுஜாதா கூறுகிறார்.