கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, June 21, 2012

அடி கள்ளி !

அடி கள்ளி ! 


என்னதான் விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எனக்கு தோட்டக் கலையில் அவ்வளவாக ஆர்வம் கிடையாது. நானும் என் சகோதரியும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல, அவளுக்கோ தோட்ட கலையில் அபரிமித ஈடுபாடு, எனவே செடிகளை தேடி அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் நானும் செல்வேன். கவனியுங்கள்! செல்வேன் அவ்வளவுதான்! மற்றபடி செடிகளையும்,விதைகளையும் வாங்குவது, அவற்றை எப்படி பராமரிப்பது போன்ற விவரங்களை எல்லாம் அவள்தான் கேட்டுக் கொள்வாள். நான் அங்கு ஏதாவது துண்டு பேபர் கிடைத்தால் எடுத்து படிக்க ஆரம்பித்து விடுவேன், அப்படி ஒரு புத்தகப் பைத்தியம்! 

இதில் நான் மிகவும் ரசித்த விஷயம் கைக்குள் பொத்தி வைத்திருக்கும் கனகாம்பர விதைகள் கை சூட்டிலும் வியர்வையிலும் 'பட்'  'பட்' என்று வெடித்ததைதான்!

இப்படி அவ்வப்பொழுது செடிகளையும் விதைகளையும் வாங்கி  வந்து நட்டு
எப்படி கவனித்தாலும் பெரிதாக  எதுவும்  வளரவில்லை.   ஒரே  ஒரு  முறை  ஒரு  ரோஜா  செடி நன்கு வளர்ந்து  நான்கைந்து பூக்களைக்  கொடுத்து   எங்களுக்கு  சந்தோஷம் அளித்தது. அதற்கு மேல் அதோடு மெனக்கெட முழு பரீட்சையும், கோடை  விடுமுறையும் இடம் கொடுக்கததால் ரோஜா செடி பட்டு போனது.  அதன் பிறகு என் தோட்ட கலை, வீட்டில் இருந்த துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றுவது மட்டும்தான்.

திருமணமாகி மஸ்கட் சென்ற பொழுதும் பின்னர் சென்னை திரும்பிய பிறகும் மணி பிளான்ட் வளர்க்கலாம் என்று இரண்டு மூன்று முறை முயற்சி செய்தேன். மணி பிளான்ட் நன்றாக இருக்கும் வரை ஓகே தான், அது காய்ந்தலோ கையில் இருக்கும் கொஞ்சம் சேமிப்பும் தடாலென்று கரையும்  வண்ணம்  பெரிய செலவு  ஏதாவது வந்து விடும். எதற்கு வம்பு என்று மணி பிளான்ட் ஆசைக்கு முடிவு கட்டினேன்.

அப்பொழுதுதான் கள்ளிச்செடி(cactus) வீட்டில் வளர்ப்பது நல்லது, திருஷ்டி தோஷங்களை நீக்கும் என்று  ஒரு புத்தகத்தில் படித்தேன். எனவே ஒரு கள்ளிச் செடியை வாங்கிக் கொண்டு வீட்டில் ஒரு தொட்டியில்
வைத்தேன். அதை வாங்கிக்கொண்டு வரும் பொழுது வேறு சில வேலைகளும்
இருந்ததால் வண்டியை இரண்டு மூன்று இடங்களில் நிறுத்தி அந்த
வேலைகளை முடித்துக்கொண்டு வந்தேன். நிறுத்திய இடங்களிலெல்லாம் எல்லோரும், " கள்ளி செடியா ? வீட்டுல வைக்க போறீங்களா" ? என்று விசாரித்தார்கள். இத்தனை பேர்களின் கண்களில்  விழுந்து விட்டது, அவ்வளவுதான் இது வந்த மாதிரிதான் என்று நினைத்தபடிதான் அதை 
வைத்தேன்.

பக்கத்தில் இருந்த ரோஜா செடிக்கு அளித்த கவனத்தில் பத்தில் ஒரு பங்கு கூட
இதற்க்கு கிடையாது. தண்ணீர் கூட எப்போதாவது விட்டால் போதுமே, ஆனாலும்  வஞ்சனை  இல்லாமல்  ரோஜாவை  விட நன்றாகவே வளர்ந்தது.

நான் ஊரில் இல்லாத மூன்று மாதங்களில் என் குழந்தைகள் அதை சுத்தமாகவே புறக்கணித்து விட்டார்கள் போலிருக்கிறது, வாடிப் போய்  விட்டது. அதை வைத்து ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது, அதன் லைப் அவ்வளவுதான் போலிருக்கிறது என்று நானும் பேசாமல் இருந்து விட்டேன். கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கியது தினசரி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போல  அன்றைக்கும் சென்றவளுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது... காய்ந்து விட்டது என்று நினைத்த கள்ளிச் செடி மீண்டும் துளிர்த்திருந்தது..! காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சியே துளிர்த்து விடுமாமே! மீண்டும் துளிர்த்த கள்ளிச்செடியை இப்போதெல்லாம் நன்கு கவனித்துக் கொள்கிறேன்! இப்போது எனக்கு அதிகம் அலட்டிக் கொள்ளும் ரோஜாவை விட இந்த கள்ளியே மிகவும் பிடித்திருக்கிறது. தரையில் படுத்தபடி புத்தகம் வாசிக்கும் நான் யதேச்சையாக கள்ளியை பார்க்கிறேன், இந்த கோணத்தில் பூர்ண கும்பம் போலஅழகாகத்  தெரிகிறது.

வாழ்ந்தால் கள்ளி  போல வாழ வேண்டும் என்று தோன்றுகிறது. குறைந்த தேவைகள், எளிமையான வாழ்க்கை, தீமை தரும் புறச் சூழலை எதிர்த்து நிற்கும் உறுதி, அதோடு மற்றவர்களுக்கு உதவும் (மருத்துவ) குணம்.. அழகு கொஞ்சம் குறைச்சலாக இருந்தால்தான் என்ன?