நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் ஆகி, நித்திய பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வந்த நேரம், அந்த கோவில் கமிட்டி மெம்பர்களில் ஒருவர் காஞ்சி மடம் மஹா பெரியவரை தரிசிக்க காஞ்சீபுரம் சென்றிருக்கிறார்.
அங்கு பெரியவரிடம் கோவில் நடைமுறைகளைப் பற்றி கூறி விட்டு, தினமும் இரண்டு வேளையும் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற பிரசாதங்கள் வருகின்றவர்களுக்கு வயிறு நிறையும் வண்ணம் நிறைய விநியோகம் செய்வதாக பெருமையாக கூறிக் கொண்டாராம். அதைக் கேட்ட மஹா பெரியவர்," பிரசாதம் அவ்வளவு அதிகமாக கொடுக்கக்கூடாது, கொஞ்சமாகத்தான் தர வேண்டும், இதை நீயே புரிந்து கொள்வாய்" என்றாராம்.
இவருக்கு கொஞ்சம் வருத்தம். "என்னது இது? பிரசாதம் விநியோகிப்பதை குறை கூறுகிறாரே?" என்று நினைத்தாராம். எனவே வழக்கம் போல் பிரசாதத்தை ஒரு தட்டில் நிறைய வைத்து விநியோகம் செய்வது தொடர்ந்தது.
ஒரு நாள் மதியம் சாம்பார் சாதத்தை பெற்றுக் கொண்ட ஒருவர், " இனிமேல் சாம்பார் சாதத்தோடு ஒரு பொரியலும், தயிர் சாதத்தோடு ஊறுகாயும் வைத்துக் கொடுங்கள், தனியாக சாப்பிடுவது கஷ்டமாக இருக்கிறது" என்றாராம். அப்போதுதான் இவருக்கு மகா பெரியவர் சொன்னது புரிந்ததாம். பிரசாத அளவை குறைத்தார்களாம்.
பிரசாதம் என்பதை மிகவும் குறைவாக தொண்டைக்கு கீழ் இறங்காத அளவிற்குத்தான் சாப்பிட வேண்டும், அது விஸர்ஜனமாகக் கூடாது. அதாவது கழிவாக மாறாக கூடாது என்பார்கள்.
![]() |
கோகுலாஷ்டமி பிரசாதங்கள் |
![]() |
விநாயக சதுர்த்தி மோதகம் |
![]() |
அக்காரவடிசல் |
இது ஒரு பக்கம் என்றால் ஒவ்வொரு கோவிலையும் ஒரு பிரசாதத்தோடு இணைத்து வைத்திருக்கிறோம். திருப்பதியென்றால் லட்டு, பழனி பஞ்சாமிர்தம். திருவல்லிக்கேணி புளியோதரை, ஸ்ரீரங்கம் அரவணைப் பாயசம். குருவாயூரில் ஸ்வாமியை தரிசிக்க நிற்கும் நேரத்தை விட அதிகமான நேரம் பால் பாயசம் வாங்க காத்திருக்க வேண்டும்.
மஸ்கட்டில் சிவன் கோவிலில்தான் ஆஞ்சநேய ஸ்வாமிக்கும் தனி சந்நிதி இருக்கும். அங்கு வியாழக் கிழமை, அல்லது சனிக்கிழமை மாலையில் சென்றால் இரவு உணவை அங்கே முடித்து விட்டு வந்து விடலாம். அவ்வளவு பேர்கள் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுவார்கள். அதோடு கேசரி, பொங்கல்,தயிர் சாதம் என்று வகையறாக்களும் இருக்கும். தவிர இரண்டு, மூன்று பேர் வடை மாலை சாற்றுவதால் விதம் விதமான பிரசாதங்களை ருசித்து வீட்டில் வந்து தூங்கி விடலாம். பேச்சிலர்களுக்கு ரொம்ப சௌகரியம். அங்கு ஹோட்டல்களிலேயே 'ஆஞ்சநேயருக்கு வடை மாலை செய்து தரப்படும்' என்னும் அறிவிப்பை காணலாம்.
ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர்,"எனக்கு ஞானம், வைராக்கியம் வர வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டாராம். பரமஹம்சர் ,"தினமும் பகவத் கீதையின் சில ஸ்லோகங்களை படித்து விட்டு, கடவுளுக்கு திராட்சைப் பழங்களை நைவேத்தியம் செய்" என்றாராம். அந்த ஆசாமி உடனே," தினமும் எத்தனை திராட்சைப் பழங்கள் நைவேத்தியம் செய்ய வேண்டும்?" என்று கேட்டதும் ராமகிருஷ்ண பரமஹம்சர்," தினமும் எத்தனை ஸ்லோகங்கள் படிக்க வேண்டும் என்று கேட்டிருந்தால் உனக்கு ஞானம் அடைவதில் நிஜமாகவே விழைவு இருக்கிறது என்று கொள்ளலாம், நீ எத்தனை திராட்சை நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று கேட்கிறாய், உனக்கும், ஞான,வைராக்யத்திற்கும் வெகு தூரம்" என்றராம்.
அவர் சொன்னது ஞான வேட்கை உள்ளவர்களுக்கு, நமக்கல்ல. இன்று சங்கடஹர சதுர்த்தி, குக்கரில் கொத்து கடலை சுண்டல் வேகப் போட்டிருக்கிறேன். நம் வேலையை நாம் பார்ப்போம். ஞானம் லபிக்கும் பொழுது லபிக்கட்டும்.