Thursday, August 30, 2018

பிரசாத விசேஷங்கள்


பிரசாத விசேஷங்கள்

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் 
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் ஆகி, நித்திய பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வந்த நேரம், அந்த கோவில் கமிட்டி மெம்பர்களில் ஒருவர் காஞ்சி மடம் மஹா பெரியவரை தரிசிக்க காஞ்சீபுரம் சென்றிருக்கிறார். 



அங்கு பெரியவரிடம் கோவில் நடைமுறைகளைப் பற்றி கூறி விட்டு, தினமும் இரண்டு வேளையும் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற பிரசாதங்கள் வருகின்றவர்களுக்கு வயிறு நிறையும் வண்ணம் நிறைய விநியோகம் செய்வதாக பெருமையாக கூறிக் கொண்டாராம். அதைக் கேட்ட மஹா பெரியவர்," பிரசாதம் அவ்வளவு அதிகமாக கொடுக்கக்கூடாது, கொஞ்சமாகத்தான் தர வேண்டும், இதை நீயே புரிந்து கொள்வாய்" என்றாராம்.

இவருக்கு கொஞ்சம் வருத்தம். "என்னது இது? பிரசாதம் விநியோகிப்பதை குறை கூறுகிறாரே?" என்று நினைத்தாராம். எனவே வழக்கம் போல் பிரசாதத்தை ஒரு தட்டில் நிறைய வைத்து  விநியோகம் செய்வது தொடர்ந்தது. 

ஒரு நாள் மதியம் சாம்பார் சாதத்தை பெற்றுக் கொண்ட ஒருவர், " இனிமேல் சாம்பார் சாதத்தோடு ஒரு பொரியலும், தயிர் சாதத்தோடு ஊறுகாயும் வைத்துக் கொடுங்கள், தனியாக சாப்பிடுவது கஷ்டமாக இருக்கிறது" என்றாராம். அப்போதுதான் இவருக்கு மகா பெரியவர் சொன்னது புரிந்ததாம். பிரசாத அளவை குறைத்தார்களாம். 

பிரசாதம் என்பதை மிகவும் குறைவாக தொண்டைக்கு கீழ் இறங்காத அளவிற்குத்தான் சாப்பிட வேண்டும், அது விஸர்ஜனமாகக் கூடாது. அதாவது கழிவாக மாறாக கூடாது என்பார்கள். 


கோகுலாஷ்டமி பிரசாதங்கள்  
விநாயக சதுர்த்தி மோதகம் 

அக்காரவடிசல் 
நம்முடைய இந்து மதத்தில் பூஜையும்,பண்டிகைகளும்,  கோவில்களும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பிரசாதங்களும்.  இதோ நெருங்கி வந்து கொண்டிருக்கிறதே கோகுலாஷ்டமியும், விநாயக சதுர்த்தியும். கோகுலாஷ்டமிக்கு பதினெட்டு வகை பட்சணங்கள் செய்வார்கள். விநாயக சதுர்த்திக்கு அப்பம், வடை, மோதகம், பாயசம், அவல், மற்றும் பழங்கள். நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு சுண்டல். சரஸ்வதி பூஜைக்கு சுகியன் அல்லது அப்பம், வடை, பாயசம். தீபாவளிக்கு கேட்கவே வேண்டாம். கார்த்திகை பொரி சாப்பிட்டே ஆக வேண்டும். திருவாதிரை களி, ஏழு தான் கூட்டு. கூடாரவல்லிக்கு அக்காரவடிசல். போகி அன்றும் போளி வடை உண்டு. தைப்  பொங்கல் என்றால் பால் பொங்கல், ஏழு தான் கூட்டு. பங்குனி உத்திரம், ராம நவமி போன்றவைகளுக்கு பானகம், நீர் மோர், வடை பருப்பு என்று சீதோஷணத்தை ஓட்டி பிரசாதம் மாறும். சித்திரை வருடப் பிறப்பிற்கு போளி வடை கண்டிப்பாக வேண்டும். அன்று மாலை பஞ்சாங்கம் படிக்கும் பொழுது பானகம், நீர் மோர், வடை பருப்பு உண்டு. ஆடி மாதம் அம்மனுக்கு கூழ், மாவிளக்கு, ஆவணியில் ஆவணி அவிட்டத்திற்கு போளி, வடை, காயத்திரி ஜபத்தன்று கலந்த சாதம் அவியல். வரலக்ஷ்மி நோன்பிற்கு எல்லோரும் இப்போதுதான் பாயசம், வடை, கொழுக்கட்டை, சுண்டல் என்று சாப்பிட்டிருப்பார்கள். ஓணம் என்றாலே எல்லோருக்கும் 'ஓணம் சத்யா'தான் நினைவுக்கு வரும். பச்சடி,காளன்,ஓலன், கறி, கூட்டு, அவியல், எரிசேரி, புளிசேரி, சாம்பார், புளியிஞ்சி, பப்படம், இரண்டு வகை பாயசம், உண்ணியப்பம், என்று ஒரு கட்டு கட்டியிருப்பார்கள். இப்போதெல்லாம் சென்னை, பெங்களூர் இங்கெல்லாம் கூட உணவகங்களில் 'ஓணம் சத்யா' என்று விளம்பரப் படுத்துகிறார்கள்.



இது ஒரு பக்கம் என்றால் ஒவ்வொரு கோவிலையும் ஒரு பிரசாதத்தோடு இணைத்து வைத்திருக்கிறோம். திருப்பதியென்றால் லட்டு, பழனி பஞ்சாமிர்தம். திருவல்லிக்கேணி புளியோதரை, ஸ்ரீரங்கம் அரவணைப் பாயசம். குருவாயூரில் ஸ்வாமியை தரிசிக்க நிற்கும் நேரத்தை விட அதிகமான நேரம் பால் பாயசம் வாங்க காத்திருக்க வேண்டும். 

மஸ்கட்டில் சிவன் கோவிலில்தான் ஆஞ்சநேய ஸ்வாமிக்கும் தனி சந்நிதி இருக்கும். அங்கு வியாழக் கிழமை, அல்லது சனிக்கிழமை மாலையில் சென்றால் இரவு உணவை அங்கே முடித்து விட்டு வந்து விடலாம். அவ்வளவு பேர்கள் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுவார்கள். அதோடு கேசரி, பொங்கல்,தயிர் சாதம் என்று வகையறாக்களும் இருக்கும். தவிர இரண்டு, மூன்று பேர் வடை மாலை சாற்றுவதால் விதம் விதமான பிரசாதங்களை ருசித்து வீட்டில் வந்து தூங்கி விடலாம். பேச்சிலர்களுக்கு ரொம்ப சௌகரியம். அங்கு ஹோட்டல்களிலேயே 'ஆஞ்சநேயருக்கு வடை மாலை செய்து தரப்படும்' என்னும் அறிவிப்பை காணலாம்.     



ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர்,"எனக்கு ஞானம், வைராக்கியம் வர வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டாராம். பரமஹம்சர் ,"தினமும் பகவத் கீதையின் சில ஸ்லோகங்களை படித்து விட்டு, கடவுளுக்கு திராட்சைப் பழங்களை நைவேத்தியம் செய்" என்றாராம். அந்த ஆசாமி உடனே," தினமும் எத்தனை திராட்சைப் பழங்கள் நைவேத்தியம் செய்ய வேண்டும்?" என்று கேட்டதும் ராமகிருஷ்ண பரமஹம்சர்," தினமும் எத்தனை ஸ்லோகங்கள் படிக்க வேண்டும் என்று கேட்டிருந்தால் உனக்கு ஞானம் அடைவதில் நிஜமாகவே விழைவு இருக்கிறது என்று கொள்ளலாம், நீ எத்தனை திராட்சை நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று கேட்கிறாய், உனக்கும், ஞான,வைராக்யத்திற்கும் வெகு தூரம்" என்றராம். 

அவர் சொன்னது ஞான வேட்கை உள்ளவர்களுக்கு, நமக்கல்ல. இன்று சங்கடஹர சதுர்த்தி, குக்கரில் கொத்து கடலை சுண்டல் வேகப் போட்டிருக்கிறேன். நம் வேலையை நாம் பார்ப்போம்.  ஞானம் லபிக்கும் பொழுது லபிக்கட்டும். 

18 comments:

  1. ஒரு பதிவிலிருந்து இன்னொரு பதிவு, அதுவும் வித்தியாசமாக, சுவாரஸ்யமாக.... அருமை.

    மஹா சங்கடஹர சதுர்த்திக்கு நாங்கள் சர்க்கரைப் பொங்கல்!

    ReplyDelete
    Replies
    1. மஹா கணபதியின் அருள் பிரசாதம் உங்களுக்கு கிட்டியிருக்கும்.

      Delete
  2. பிரசாதங்களைப் பற்றி விவரித்திருப்பது அருமை... இனிமை...

    ReplyDelete
  3. அன்புடையீர் ,உங்கள் பதிவுகளை நான் போன் மூலம் படித்து இருக்கிறேன். ஆனால், போன் மூலம் டைப் பண்ணி கருத்து சொல்வது கடினம். அதனால் இது வரை செய்தது இல்லை. இனிமேல் நேரம்கிடைக்கும் போது வந்து படித்து கருத்து சொல்கிறேன் இப்போது நான் ஒரு புதிய லேப் டாப் வாங்கி இருக்கிறேன் அதன் மூலம் என் உயிர் தமிழா https://enuyirthamizha.blogspot.com/ என்ற வலைத்தளத்தை ஆரம்பித்து இருக்கிறேன். என்னையும் உங்களில் ஒருவனாக நினைத்து ஆதரவு தாருங்கள், நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி. வாழ்க,வளர்க!

      Delete
  4. இன்னின்ன விசேஷத்துக்கு இன்னின்ன பிரசாதம் என்று தெரிந்துகொண்டேன்

    ReplyDelete
  5. இதைப்பற்றி கூட நீங்கள் ஒரு பதிவிட்டிருந்தீர்கள். அதில் ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேறு பிரசாதங்கள் என்று எதை வைத்து தீர்மானிக்கிறார்கள் என்று கேட்டிருந்தீர்கள். உங்களுக்கு கன்வின்சிங்காக பதில் கிடைத்ததாக தெரியவில்லை. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. பிரசாதம் பற்றிய செய்திகள் சிறப்பு. இந்தப் பண்டிகைக்கு இந்த பிரசாதம் - நல்ல விஷயம். வித்தியாசமாக சாப்பிட ஒரு வழி.

    ReplyDelete
  7. வாங்க வெங்கட். உங்களைப் போல தனியாக இருப்பவர்களுக்கு கோவில் பிரசாதங்களும், நண்பர்கள் வீடுகளில் கலந்து கொள்ளும் விசேஷ பூஜைகளில் வழங்கப்படும் பிரசாதங்களும் மகிழ்ச்சியளிக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. மகா சங்கடசதுர்த்திக்கு இந்த வருஷம் வெளியே இருந்துட்டோம். அதனால் எதுவும் பண்ணலை. வழக்கமாய்க் கொழுக்கட்டை செய்துடுவேன். ஆனாலும் இந்த வருஷம் கோயில் பிரசாதங்கள் தான் சாப்பிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் நீங்கள் பிள்ளையாருக்கு கொடுப்பீர்கள், இந்த முறை பிள்ளையார் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். :)

      Delete
  9. மகா சங்கடசதுர்த்திக்கு பிடி கொழுக்கட்டை செய்து வணங்கி விட்டேன்.
    பிரசாதம் பற்றி சொன்னது சிறப்பு.
    கொஞ்சமாய் தான் கொடுக்கவேண்டும் அப்போதுதான் அதன் மதிப்பு உயரும்.
    சிலர் கோவில்களில் பிராசாதங்களை கீழே கொட்டி விட்டு போவதை பார்த்தால் வருத்தமாய் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பிடித்த காரியம் நிறைவேற பிடி கொழுக்கட்டை செய்ய வேண்டும் என்பார்கள். பிரசாதத்தின் பெருமையை உணர்ந்தால் வீணாக்க மாட்டார்கள்.

      Delete
  10. வணக்கம் சகோதரி

    ஒரு வருடத்தில் இந்தந்த மாதங்களில் இந்தந்த விரதங்கள், அதற்குரிய பிரசாதங்கள் என வகைப்படுத்தி எழுதியிருப்பது நன்றாக உள்ளது.தாங்கள் எழுதியுள்ளது போல் பிரசாதம் கொஞ்சமாக தந்தால்தான் அதன் மதிப்பு நிலைத்து நிற்கும்.நம் வீட்டிலும் இறைவனுக்கென்று எந்த உணவையும் சிரத்தையுடன், பரிசோதிக்காமல் கொஞ்சமாக (எப்போதும் செய்வது போலில்லாமல்) செய்து நைவேத்தியம் செய்து பின்,அதை வீட்டிலுள்ளவர்களுடன் பகிர்ந்து உண்ணும் போது அது அவ்வளவு ருசியாக இருக்கும்.
    அது இறைவனின் கண் பார்வை பட்ட, அவன் மனம் நிறைந்த நைவேத்திய பிரசாதத்தின் சிறப்பு. நீங்கள் மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    ReplyDelete
    Replies
    1. என் மகள் நீண்ட நாட்களாக என்னென்ன பண்டிகைக்கு என்னென்ன பிரசாதம் என்று என்னிடம் கெடுக்க கொண்டே இருந்தாள். அது ஒரு ப்ளாக் ஆக எதேச்சையாக அமைந்து விட்டது. நன்றி சகோதரி.

      Delete
  11. துளசிதரன்: எங்களுக்கு ஓணம் மற்றும் விஷுப்பண்டிகை தான் பண்டிகைகள் என்றால் ஆனால் வீட்டில் சத்யா எனப்படும் விருந்துச்சாப்பாடு மட்டுமே மற்றபடி ஸ்னாக்ஸ் எதுவும் செய்வதில்லை. கோயில்ககளில் சிவராத்திரி விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.
    தமிழ்நாட்டில் இருந்தவரை நிறைய சாப்பிட்டிருக்கிறேன் நண்பர்கள் கொண்டுவருவதை. அது போல கேரளத்தில் கோயில் பிரசாதம் என்று விநியோகிப்பது இல்லை பொதுவாக. தமிழ்நாட்டில்தான் அதுவும்.

    கீதா: நம்ம பண்டிகைகளுக்குக் குறைவா என்ன? ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒன்று வந்துவிடுமே...இதிலும் கூட வீடுகளுக்கு வீடுகள் குடும்ப வழக்கம் என்று மாறுபடுவதுண்டே...கோயில் பிரசாதம் என்றெல்லாம் சொல்லி நாவில் நீர் சுரக்க வைச்சுட்டீங்க பானுக்கா..நான் சரியான தீனிப்பண்டாரமாக்கும்..நான் கூட ஏதேனும் பண்டிகைனா அன்று என்ன பூசை அல்லது ஸ்வாமிக்கு என்ன செய்வார்கள் என்றெல்லாம் கேட்க மாட்டேன்...என்ன திங்கறதுக்குச் செய்யணும் என்றுதான் கேட்பேன்...ஹா ஹா ஹா ஹா..நேக்கு ஞானமே லெபிக்காது கேட்டேளா!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன். கேரளா கோவில் நடைமுறைகள் எனக்கு பிடிக்கும். அதை தமிழ் நாட்டிலும் கடை பிடிக்கலாமே என்று தோன்றும்.

      டோன்ட் ஒரி கீதா. நாம்தான் பெரும்பான்மை.

      Delete