கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, December 18, 2015

வாராது போல் வந்த மாமழையும் பெரு வெள்ளமும்

வாராது போல் வந்த மாமழையும் பெரு வெள்ளமும் 

 
மழை இல்லை மழை இல்லை என்று சென்னை வாசிகள் புலம்பியது போக கிட்ட தட்ட ஒரு மாதமாக மழை கொட்டோ கொட்டென்று கொட்டி சென்னையை ஒரு வழி பண்ணி விட்டது. அக்டோபர் மாத ஆரம்பம் வரை வறண்டு கிடந்த ஏரிகள் நிரம்பி வழிகின்றன. 

என் வாழ்க்கையில் நான் சந்தித்த இரண்டாவது வெள்ளம் இது. 38 வருடங்களுக்கு முன் 1977 நவம்பரில் திருச்சியில் சரியாக சொன்னால் ஸ்ரீரங்கத்தில் சந்தித்த வெள்ளம். கரை புரண்டோடிய காவேரி திருச்சியை வெள்ளக் காடாக்கியதில் ஸ்ரீரங்கம் துண்டிக்கப்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்த ஐந்தாறு குடும்பத்தினர் எங்கள் வீட்டு மாடியில்தான் அடைக்கலம் ஆனர். சத்தமே இல்லாமல் பெருகி வந்த காவேரி, கவனியுங்கள் சத்தமே இல்லாமல் பெருகி வந்த காவேரி... ஆம் சினிமாக்களில் காண்பிப்பது போல வெள்ளம் சப்தம் போட்டுக் கொண்டு, ஆர்பரித்து, சீறிப் பாய்ந்து வராது. சப்தமே இல்லாமல்தான் வரும். எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த குடிசைகளை ஒவ்வொன்றாக இடித்துத் தள்ளி, எங்கள் தெருவில்(ராகவேந்திரபுரம்) நுழைந்து, கொஞ்சம் கொஞ்சமாக வீடுகளையும் ஆக்கிரமிக்க தொடங்கியது.தண்ணீர் ஏறிக் கொண்டிருந்து, பெரும்பான்மையோர் மாடியில், கீழே படுத்த படுக்கையாக இருந்த எங்கள் தாத்தா, சின்ன தாத்தா, அப்பா,அம்மா, மாமா, மற்றும் எங்கள் வீட்டு பசு மாடு. 

நாங்கள் மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டிருந்த தண்ணீரை வேடிக்கை பார்த்தபடி இருந்தோம். காலையில் எங்கள் மாமா மாட்டிடமிருந்து பால் கறந்து தர, அம்மா எல்லோருக்கும் காபி வழங்கினாள். பின்னர் தீபாவளி பட்சணங்கள் விநியோகிக்கப்பட்டன. எட்டு மணிக்குப் பிறகு எங்கள் அம்மாவும், பக்கத்து வீட்டு சரோஜா மாமியும் எலுமிச்சை சாதம், தயிர் சாதம் தயாரித்து எல்லோருக்கும் போட்டார்கள். ஏதோ பிக்னிக் சென்றது போல கொஞ்சம் ஜாலியாக அனுபவித்த வெள்ளம் அது. மதியம் நீர் மட்டம் நன்றாக குறைந்து விட அவரவர் வீடுகளுக்குச் சென்று வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள். தொன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வெள்ளம் என்றார்கள். ஆஹா! வாழ்க்கையில் ஒரு முறை வெள்ளம் பார்த்து விட்டேன் என்று சந்தோஷப் பட்டுக் கொண்டேன். 

இந்த வருட கதையை பார்ப்போமா: நவம்பர் 25ம் தேதி மதியம் வெளியே சென்ற என் கணவரும் மருமகளும் மாலை ஆறு மணிக்கு அமிஞ்சி கரையிலிருந்து கிளம்பி  விட்டதாகவும் நல்ல மழை பெய்து கொண்டிருப்பதால் வண்டிகள் வேறு பாதையில் திருப்பி விடப் பட்டிருப்பதாகவும் அவர்கள் தேனாம்பேட்டை வழியாக வந்து கொண்டிருப்பதாகவும் கை பேசியில் கூறினார்கள். ஒன்பது மணி ஆகியும் வீடு வந்து சேராததால் தொடர்பு கொண்ட போது, டிராப்பிக் ஜாம் காரணமாக  சைதாபேட்டை பாலத்தில்  நிற்பதாக கூறினார்கள். மணி பத்து, பதினொன்று என்று ஓடிக் கொண்டே இருந்தது அவர்கள் வீடு திரும்பவில்லை,மழையும் நிற்கவில்லை. பல முறை கை பேசியில் அழைத்த பொழுதும் அழைப்பை ஏற்கவில்லை.. பன்னிரண்டு மணிக்கு என் கணவர், "இப்போதுதான் ஒவ்வொரு வண்டியாக விட ஆரம்பித்திருக்கிறார்கள், கிண்டியில் இருக்கிறோம் வந்து விடுவோம்" என்றார். அவர்கள் வீடு வந்து சேர்ந்த பொழுது மணி ஒன்று முப்பது. அதன் பிறகு சாப்பிட்டு விட்டு படுத்தோம்.  ஆட்டோ ஓட்டுனரையும் எங்கள் வீட்டிலேயே உறங்கச் சொல்லி விட்டோம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த ஓட்டுனருக்கு இருட்டி விட்டால் கண் சரியாக தெரியாது. அதனால் அவர் ஏழு மணிக்கு மணிக்கு மேல் சவாரிக்குச் செல்ல மாட்டார். அன்று இருட்டோடு மழையும் சேர்ந்து கொண்டு விட்டது..!இந்த கூத்தில் அவர்கள் நல்லபடியாக வந்து சேர்ந்தது கடவுள் அருள்தான்.

அன்று பெய்த மழையில் எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கால்வாய் நிரம்பி எங்கள் குடியிருப்பின் பின் வாசல் வழியாக தண்ணீர் உள்ளே புகுந்து குழைந்தைகள் விளையாடும் இடத்திர்க்கருகே உள்ள கார் பார்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை லேசாக சேதம் செய்தது.


அதன் பிறகு 29ம் தேதி வரை மழை இல்லை. ஆனால் பளிச்சென்று வானம் கண் திறக்கவில்லை. 29ம் தேதி மீண்டும் மழை துவங்கியது. 30ம் தேதி விடியல் காலை நல்ல மழை.வழக்கம் போல பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தவுடன் மழை விட்டு கொஞ்சம் வெய்யல் கூட வந்தது!!! 

அன்று மதியம் தொடங்கிய மழை மறு நாளும் விடாமல் கொட்டித் தீர்க்க, காலை ஏழு மணிக்கு அலுவலகம் கிளம்பிய என் மாப்பிள்ளை தாம்பரம் சென்று சேர பத்து மணி ஆகி இருக்கிறது. வண்டலூர் வரை சென்றவரை ஊரப்பாக்கம் ஏரி உடைந்து விட்டதால் இப்படியே திரும்பி சென்று விடுங்கள் என்று திருப்பி விட்டு விட்டார்களாம். அப்போது மணி இரண்டு, அவர் வடபழனியில் இருக்கும் தன் வீட்டை அடையும் போது மாலை ஆறு மணி ஆகி இருக்கிறது என்றால் போக்கு வரத்து நெரிசலை யூகித்துக் கொள்ளுங்கள்.

எங்களுக்கு பிற்பகல் பதினோரு மணிக்கு மின்சாரம் துண்டிக்கப் பட்டது. பன்னிரண்டு மணி சுமாருக்கு என் மகள் தொலை பேசியில் அழைத்து, "செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 30000 கண அடி நீர் திறந்து விட்டிருக்கிறார்களாம், அங்கு தண்ணீர் வந்து விட்டதா?" என்றாள்.நான், "இல்லை கார் பார்கிங்கில் மணல் மூட்டைகள் போட்டிருக்கிறார்கள், எனவே தண்ணீர் வராது" என்று மிகவும் நம்பிக்கையோடு கூறினேன். மேலும் குழந்தைக்கு பால் பவுடர் டப்பா வாங்கி கை வசம் வைத்துக் கொள்ள அறிவுறுத்தி விட்டு, அவர்கள் வீட்டிற்கு வந்து விடும்படி அழைத்த அவள் மாமியாருக்கு நன்றி கூறி அப்படி அவசியம் வந்தால் வருகிறோம் என்றேன்.

மாலை அசோக் நகரில் வசிக்கும் என் சகோதரியிடம் பேசிய பொழுது,செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப் பட்டால் எங்கள் தெருவிற்கு தண்ணீர் வரும், ஆனால் சீக்கிரம் வடிந்து விடும் என்றாள். நான் தமாஷாக அழகன் படத்தில் வரும்,
"என் வீட்டில் இரவு, அங்கே இரவா? இல்ல பகலா? 
எனக்கும் மயக்கம்.." 
என்னும் பாடலை ரீ மிக்ஸ் செய்து, 
என் வீட்டில் வெள்ளம் அங்கே வந்துச்சா, இன்னும் வல்லையா? எத்தனை அடி? " 
என்று பாடி சிரித்தோம். அப்போது கூட நான் வெள்ளம் வரும் என்று நம்பவில்லை.

இரவு பதினோரு என் கணவர் என்னை எழுப்பி நம் காலனியில் தண்ணீர் புகுந்து விட்டது, "உன் வண்டி சாவி கொடு வண்டியை வேறு இடத்தில் வைக்கலாம்" என்றார். கீழே சள சளவென்று  மக்களின் பேச்சுக் குரல். அர்த்த ராத்திரியில் வெள்ளம் வந்ததால் செய்வதறியாது தவித்த மக்கள்!!. இரண்டு மணிக்கு தரை தளத்தில் புகுந்தது தண்ணீர். அங்கிருந்தோர் மாடி வீடுகளுக்கு வந்தனர். காலை ஆறு மணிக்கு மாடிப் படியின் கடைசி படியில் இருந்த தண்ணீர் பத்து மணிக்குள் விறு விறுவென்று பத்து படிகளுக்கு மேல் ஏறி விட்டது.  நாங்கள் முக்கியமான பொருள்களையும், ஆவணங்களையும்(documents) லாப்டில்(loft) வைத்தோம். ஓவர் ஹெட் டாங்கில் இருந்த தண்ணீரை குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களை தவிர்த்து தேவையான பாத்திரங்களை கழுவுவது, சமைப்பது இவைகளுக்கு மட்டும் பயன் படுத்தினோம்.
மொட்டை மாடிக்குச் சென்று பக்கத்தில் இருக்கும் செல்லம்மாள் நகர் மக்களுக்கு  ஒரு ஏணிக்கு அடியில் இரண்டு தெர்மோ கோல்அட்டைகளை வைத்து கட்டி  படகு போல செய்து அதில் வந்து உணவும் நீரும் தன்னார்வ தொண்டர்கள் வழங்குவதை வேடிக்கை பார்த்தோம். மறு நாள் இதே படகில்தான் செல்லம்மாள் நகரில் இருந்தவர்களை ஒவ்வொருவராக வெளியேற்றினார்கள். 
எங்கள் காலனியை சூழும் வெள்ளம் 

வெள்ள நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் எங்கள் குடியிருப்பின் கார்கள்

மேலே ரோந்து வரும் ஹெலிகாப்டர்

அசோக் நகரிலிருந்து வட பழனி செல்லும் என் சகோதரி குடும்பம்
எங்கள் குடியிருப்பில் இருந்த ஒரு நிறை மாத கர்ப்பிணி பெண் ராணுவ வீரர்களால் ஹெலிகாப்டர் மூலம் காப்பற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இரட்டை குழந்தைகளை ஈன்றதை செய்தி தாள்களில் படித்திருப்பீர்களே.

புதன் கிழமை இரவு சீக்கிரம் எல்லோரும் உறங்கச் சென்று விட்டார்கள் என்றுதான் தோன்றியது. முதல் நாள் ஏறிய நீர் மட்டம் உயரவும் இல்லை தாழவும் இல்லை. என்னதான் செய்ய முடியும்? ஆனால் அந்த அமைதி கொஞ்சம் அச்சம் ஊட்டியது. 

மறு நாள் காலை எழுந்து பார்த்த பொழுது குறைந்திருந்த நீர் மட்டம் சற்று தைரியம் அளித்தது. மொட்டை மாடியில் சென்று பார்த்த என் மருமகள்,"ரோடு தெரிகிறது" என்று சந்தோஷப் பட்டாள். மதியம் சாப்பிட்டு விட்டு கை அலம்பினோம், தண்ணீர் தீர்ந்தது. நான் பிடித்து வைத்திருந்த தண்ணீரை வைத்து ஒரு நாள் ஓட்டி விடலாம்.. நாளை என்ன செய்வோம் என்று கவலை வந்தது.

அன்று இரவு வானில் நட்சத்திரங்கள் தெரிய,"அப்பாடா! நட்சத்திரங்கள் தெரிய ஆரம்பித்து விட்டன இனிமேல் மழை வராது" என்று சந்தோஷப் பட்டேன். என் மகிழ்ச்சியில் தண்ணீர் ஊற்றி அணைத்தது  மீண்டும் கொட்டிய மழை. நல்ல வேளை பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பெய்யவில்லை.

வெள்ளி அன்று காலை சுத்தமாக தண்ணீர் வடிந்து விட்டிருந்தது. ஆனால் பாதிப்பு அதிகம்! குறிப்பாக தரை தள வீட்டில் இருந்தவர்களுக்கு மிக மிக அதிகம். வீடிற்கு வெளியே போடப் பட்டிருந்த விலை உயர்ந்த சோபக்களையும், தொலை காட்சி பெட்டிகளையும், வீட்டு  உபயோக பொருள்களையும் பார்க்க, பார்க்க மனது நொந்தது. எங்கள் குடியிருப்பில் மட்டும் ஏறத்தாழ இருநூறு கார்களும், முன்னூறுக்கும் மேல் இரு சக்கர வாகனங்களும் தண்ணீரில் மூழ்கின. இது ஒரு புறம் என்றால் உடுத்த மாற்றுத்  துணி கூட இல்லாமல் வாழ்கையை மீண்டும் அடிப்படையிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய ஏழை மக்களின் நிலை மிகவும் பரிதாபம். 

நகரின் பல இடங்களில் வெள்ளம் வடிந்து பதினைந்து நாட்கள் ஆன பிறகும் கூட தண்ணீர் வடியவில்லை. சாலைகள் கிழித்து போடப் பட்டிருக்கின்றன. என்றாலும் சாலையில் வழக்கம் போல போக்குவரத்து தொடங்கி விட்டது. சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வெகு சீக்கிரம் திரும்பி விட்டார்கள். "எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான், இவன் ரொம்ப நல்லவன்டா" என்னும் வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது.    

ஒரு பின்னூட்டம்:

1977ல் ஒரு வெள்ளம் 2015ல் ஒரு வெள்ளம் என இரு வெள்ளங்களை பார்த்திருக்கிறேன். இந்த 38 கால இடைவெளியில் நம் வாழ்க்கை எத்தனை மாறி விட்டது? 

அப்போது திருச்சியில் தொலை காட்சி பெட்டி,வாஷிங் மிஷின்  யாரிடமும் கிடையாது. பிரிஜ், மிக்சி, கிரைண்டர், போன்றவை ஆடம்பர பொருள்கள். விலை உயர்ந்த புடவைகளும் மிகக் குறைவு. ஆனால் இன்றோ அரசாங்கமே விலை இல்லா மிக்சி, கிரைண்டர் என்று கொடுத்து மக்களை ஆடம்பரத்திற்கு பழக்கி விட்டு விட்டது. அப்போது தனி மனித இழப்பு குறைவு. இப்போதோ தனி மனித இழப்பே அதிகம்.

முற்றிலும் கணினி மயமாக்கப் பட்டு விட்டதால் வங்கியில் பணம் இருந்தாலும் அதை எடுக்க முடியவில்லை. ஏ.டி.எம்., ஆன் லைன் செயல்பாடு என்று இருப்பதால் வாடிக்கையாளர்கள் யார் என்றே வங்கி மேலாளர்களுக்கு தெரியாத நிலையில் அவர் எப்படி உதவுவார்? யோசிக்க வேண்டிய விஷயம் இது.