Tuesday, February 22, 2011

masi magam

மாசி மகம்

ஹிந்து மதம் ஒரு மனிதனுக்குரிய ஆன்மீக வளர்ச்சிக்கு தேவையான விஷையங்களை அந்தர்முக சாதனை, பகிர்முக சாதனை என இரண்டாகப் பிரிக்கிறது. அந்தர்முக சாதனை பிராணாயாமம், ப்ரித்யாகாரம், தாரணை,த்யானம்,சமாதி என விரிந்தால்  பகிர்முக  சாதனையில்  தினசரி வழிபாடு, தான தர்மங்கள் செய்தல், ஆலய தரிசனம், புனித நீராடுதல் என்பவை அடங்கும். 

முக்கிய புண்ணிய நதிகளாக கருதப்படும் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி, போன்ற  நதிகளில் நீராடுவதும்,  ஒரு சில கோவில்களில் உள்ள குளங்களில்(உ,ம். மாமங்க குளம்,மற்றும் திரு நள்ளார் குளம்)   முழுகுவதும், சமுத்திரத்தில் ஸ்நானம் செய்வதும் சிறப்பானதாக கருதப்படுகின்றன. ஆனாலும் எல்லா சமுத்திரங்களும்   எல்லா நாட்களிலும் ஸ்நானம் செய்ய ஏற்றதாகது. ராமேஸ்வரம் தவிர மற்ற  கடல்களில்  குறிப்பிட்ட  நாட்களில்  மட்டும்தான் புனித நீராடலாம்  என்பது  சாத்திர  விதி.   அப்படிப்பட்ட கடல் நீராடலுக்கு ஏற்ற சிறப்பான  நாள் மாசி மகம்!


 
மாசி மாதத்தில் பௌர்ணமியும் மக நட்சத்திரமும் சேரும் நாளே மாசி மகம் ஆகும். சைவர்கள், வைணவர்கள், சாக்தர்கள்  ஆகிய  எல்லோருக்குமே  இது ஒரு சிறப்பான நாள் ஆகும்.

பிரளயத்திற்குப் பிறகு பிரபஞ்சத்தை படைக்க தேவையான பொருள்கள் அடங்கிய அமுத கலசத்தை சிவ பெருமான்  உடைத்து  பிரும்மாவிடம்  கொடுத்த நாள் மாசி மக திருநாள் ஆகும்.

திருவண்ணாமலையில் இருந்த   வல்லாளன்  என்னும்  அரசனுக்கு  குழந்தைகள் கிடையாது, பெரும்  சிவ பக்தனான அவன், தான் இறந்து  போனால்  தனக்கான  இறுதிச்  சடுங்குகளை செய்ய ஒரு மகன்  இல்லையே  என வருந்த, சிவ பெருமானே அவனுக்கு முன் ஒரு சிறுவனாக  தோன்றி அவனுடைய இறுதிச் சடங்குகளை  தானே  செய்யவதாக  வாக்குறுதி அளித்தார். அந்த மன்னன் இறந்து போனது ஒரு மாசி மகமாக அமைய, சிவ பெருமான் அவனுக்குரிய  சம்ஸ்காரங்களை  கடற் கரையில்  செய்ததோடு அன்று கடலில் நீராடுபவர்களுக்கு முக்தி அளிப்தாகவும் அருளினார்.    

 மேலும் மீனவப்  பெண்ணாக பிறந்த பார்வதி தேவியை, யாராலும் கொல்ல முடியாத ராட்சச திமிங்கலத்தை  மீனவ தோற்றத்தில் வந்த   சிவ பெருமான் கொல்வதன் மூலம்    மணம் முடித்த நாளும் ஒரு மாசி  மகத்திலேதான்!(திரு விளையாடல் படத்தில் ஜிங்கு சக்கு.. ஜிங்கு சக்கு என்று  பின்னணி     ஒலிக்க  சிவாஜி  கணேசன்  நடந்தது  நினைவிற்கு  வருகிறதா?அதே தான்...!)  பராசக்தியே தனக்கு மகளாகப் பிறந்தது குறித்து மகிழ்ந்த மீனவ குல அரசன், சிவனும் பார்வதியும் மணக்கோலத்தில் தனக்கு காட்சி தந்தது போல உலக மக்கள் அத்தனை பேருக்கும் காட்சி தர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள மாசி மகத்தன்று பார்வதி தேவியோடு சிவ பெருமானும் கடற் கரையில் எழுந்தருள்கிறார்!

வைணவ சம்பிரதாயத்தில் சமுத்திர ராஜன் மகளான லட்சுமி தேவியை திருமால் மணந்து கொண்டதால், சமுத்திர ராஜன் திருமாலுக்கு  மாமனாராகிறார்! தொலை  தூரத்தில்  மகளை  திருமணம்  செய்து கொடுக்கும் எல்லா தந்தையரையும்  போலவே கடலரசனும் தான் தான் மகளையும்  மருமகனையும்  எப்போது பார்ப்பது என கேட்க, ஒவ்வொரு வருடமும் மாசி மகத்தன்று தான் கடற் கரைக்கு வந்து காட்சி தருவேன் என பெருமாள் வாக்களித்து, அப்படியே கடற் கரைக்கு எழுந்தருளுகிறார். எனவேதான் கடற்கரையை ஒட்டிய நகரங்களில் உள்ள பெருமாள் கோவில்களிலெல்லாம் அன்று பெருமாள் கடற் கரைக்குச் செல்வதும் தீர்த்தவாரி கொண்டருள்வதும் இன்றும் வழக்கமாக உள்ளன.      

இந்த வருடம் மாசி மகம் 18 .02 .2011  வெள்ளைக் கிழமையன்று வந்தது. நானும் என மகளும் கடற் கரையை(மெரினா பீச்) அடைந்த பொழுது கலை மணி 6:30 . அப்பொழுதே  அங்கு  பலர்  பெருமாளின்  வருகைக்காக  காத்திருந்தனர். முதலில் எழும்பூரிலிருந்து ஸ்ரீனிவாச பெருமாள் வந்தார்.

  கண்ணகி சிலை சிக்னலுக்கு எதிரே பெருமாளின் குடை தெரிந்தது, அதுவரை அமர்ந்து கொண்டிருந்த மாமிகள் பரபரவென்று பெருமழை வரவேற்க 
பெரிதாகவும் அழகாகவும் கோலங்கள் போட்டனர். பின்னர் பெருமாளோடு பக்தர்களும் கடலுக்குச் சென்று நீராடினர். அதன் பின்னர் திருவல்லிகேணியில் இருந்து பார்த்தசாரதி பெருமாள் கடற்கரைக்கு எழுந்தருளினார். அவரோடும் தீர்த்தவாரியில் உற்சாகமாக பங்கெடுதுக்கொண்டோம்.  


 

அதன் பின்னர் திருவடீஸ்வரன்பேட்டையில்ருந்து  கடற் கரைக்கு வந்த சிவன் பார்வதி தேவியை தரிசனம் செய்து கொண்டு உடல்   முழுக்க நர நரத்த மணலோடும், மனம் முழுக்க கொப்பளித்த சந்தோஷத்தோடும்  வீடு வந்தோம்.