வியாழன், 27 செப்டம்பர், 2018

மாற்றங்கள்

மாற்றங்கள்  

சென்ற ஞாயிரன்று சென்னை செல்ல வேண்டிய நிர்பந்தம். பெங்களூர் வந்திருந்த என் தோழி, "நான் தனியாக இன்னோவாவில் வந்திருக்கிறேன், நீங்கள் என்னோடு வந்து விடுங்களேன்" என்று அழைத்தார். எனவே அவரோடு சென்றோம். வழியில் A2B  உணவகத்தில் சாப்பிடலாம் என்று அங்கு சென்றால், அது மூடியிருந்தது, ஒருவர் பைக்கில் வந்து, அந்த உணவகம் இடம் மாற்றியிருப்பதாக கூறினார். முன்பிருந்த இடத்திற்கு அருகிலேயே பெரிதாக, நிறைய கார்களை பார்க் பண்ணும்படியாக புதிய வளாகம் இருந்தது. உணவின் தரம் எப்போதும் போலத்தான். அங்கிருந்து வியூ நன்றாக இருந்ததால் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டேன். சென்னையில் கூடுவாஞ்சேரி பக்கம் ஏறத்தாழ ஒரு வருடத்திற்குப் பிறகு செல்கிறேன். முன்பெல்லாம். சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் இடது புறம், அருண் எக்செல்லோவின் எஸ்டான்ஷியா வளாகத்தில் ஒருபெரிய நீல நிற பக்கெட்(சிலர் டம்பளர் என்பார்கள்) போன்ற ஒரு கட்டிடத்தை பார்க்க முடியும். இப்போது அந்த டம்பளரை காணவில்லை, காக்கா தூக்கிக் கொண்டு போய் விட்டதா என்று தேடினால், அதற்கு முன்னால் ஒரு கட்டிடம் வந்து மறைத்து விட்டது. அங்கிருக்கும் zoho நிறுவனத்தின் மல்டி லெவல் கார் பார்க்கிங்காம்!!!zoho tower அன்றும் இன்றும் 

ஞாயிறன்றும், திங்களன்றும் திங்களில் அதாவது நிலாவில் சாய்பாபா உருவம் தெரிகிறது என்று ஒரே அமளி. நாம் சாய்பாபா என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் தெரிந்தார். சில சமயம் நிலாவில் எனக்கு வடை சுடும் பாட்டியும், சில சமயம் ரங்கநாதரும்,சில சமயம் மகாலட்சுமியும் தெரிவதுண்டு.

ஞாயிறன்று நான் பிடித்த நிலா 

புரட்டாசி பௌர்ணமி அன்று மயிலை கற்பகாம்பாள் கோயிலில் அம்பாள் சந்நிதியில் காய்கறிகளால் அலங்காரம் செய்வார்கள் என்பது மறந்து விட்டதால் கோவிலுக்குச் செல்வதை தவற விட்டு விட்டேன். 


 


மறுநாள் மயிலாப்பூர் சென்ற பொழுது, கொஞ்சமாக வர ஆரம்பித்திருந்த நவராத்திரி கடைகளை பார்க்க முடிந்தது. சுக்ரா ஜூவல்லரி வாசலில் பொம்மைகளை வைத்திருந்தார்கள். நான் புகைப்படம் எடுக்கச்சென்ற பொழுது, அங்கே அமர்ந்திருந்த பெண் எழுந்து வந்தார். சில பொம்மைகளின் விலை விசாரித்தேன். ரெங்கநாதர் ரூ.700/-, மாப்பிள்ளை அழைப்பு செட் ரூ.1500/-, கோவர்தனகிரி கிருஷ்ணன் ரூ.2000/- என்று கூறியவர், "நான் சொல்ற விலைதான் முடிவான விலை கிடையாது, நீங்க கேளுங்க, கட்டி வந்தால் கொடுக்கப் போறேன், வண்டிக் கூலிதான் ரொம்ப அதிகமாகி விட்டது" என்றார். ஜி.எஸ்.டி.யையும், டீ மானிடைசேஷனையும் குறை சொல்லவில்லை. அதெல்லாம் பெரிய வியாபாரிகள் செய்வார்கள். விலை கேட்டு விட்டு வாங்காமல் வந்த குற்ற உணர்ச்சியால் சரியாக படம் எடுக்க முடியவில்லை. ஆரிய கௌடா ரோடில் நவராத்திரி எக்சிபிஷன் தொடங்கிவிட்டதாம். என் அக்கா அனுப்பியிருந்த படங்கள் கீழே.பெங்களூர் எக்ஸ்பிரஸில் திரும்பி வரும் பொழுது, மஹாளய பட்சத்தைப் பற்றி கவலைப்படாமல் சமோசா சாப்பிட்டேன். சன் NXT இல் 'குலேபகாவலி படம் பார்த்தேன். சும்மா சொல்லக்கூடாது. ரேவதி கலக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் வரும் அத்தனை பேரும் திருடர்கள். இப்போது வரும் எல்லாப் படங்களைப் போலவும், ஏமாற்றுபவர்களையும், திருடர்களையும் நாயக, நாயகியர்களாக்கி, கடைசியில் கூட அவர்கள் திருந்துவதாகவோ, மாட்டிக் கொள்வதாகவோ காட்டாத படம். இந்த நிலை மாறாதா?   


திங்கள், 24 செப்டம்பர், 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும் நவ கைலாசமும் - 5

பரவசம் தந்த நவ திருப்பதியும் 
நவ கைலாசமும் - 5 திருச்செந்தூரிலிருந்து நாங்கள் சென்ற கோவில் தென் திருப்பேரை என்னும் சுக்கிர ஷேத்திரம். 

திருமகளைப் போல தான் அழகாக இல்லாததால்தான் பெருமாள் தன்னை விட லட்சுமியிடம் அதிக பிரேமை கொண்டிருக்கிறார் என்று நினைத்த பூமி பிராட்டி திருமாலின் அஷ்டாக்ஷர மந்திரத்தை  துர்வாச மகரிஷியிடம் உபதேசமாக பெற்று, அதை ஜபித்து வருகிறாள். ஒரு பங்குனி மாத பௌர்ணமி அன்று மந்திர ஜபத்தை முடித்து ஆற்றிலிருந்து நீரை அள்ளி எடுக்க, அதில் இரண்டு மகர குண்டலங்கள்(மீன் வடிவ குண்டலங்கள்) கிடைக்கின்றன. அதை அங்கு அப்போது பிரத்யக்ஷமான திருமாலுக்கு அணிவித்து மகிழ்கிறாள். அவளுடைய தவத்திற்கு மகிழ்ந்த திருமால் அவளுக்கு மகாலட்சுமிக்கு நிகரான அழகை அளிக்கிறார். பூமி பிராட்டியால் அளிக்கப்பட்ட மகர குண்டலங்களை அணிந்து கொண்டதால் இங்கிருக்கும் பெருமாள் மகர நெடுங்குழைக்காதன் என்று அறியப்படுகிறார்.  பேரை என்றால் குண்டலம் என்று பொருள். பெருமாள் காதில் அணிந்து கொண்டிருக்கும் குண்டலத்தால் புகழ் பெற்றிருப்பதால் இத்தலம் தென் திருப்பேரை என்னும் பெயர் பெற்றுள்ளது.

வருணன் அசுரர்களிடம் போரிட்டு  இழந்த தன் ஆயுதத்தை இந்த தலத்திற்கு வந்து மீண்டும் பெற்றதால், இங்கு செய்யப்படும் வருண ஜெபங்கள் பொய்ப்பதில்லை என்கிறார்கள். 

மூலவர் மகர நெடுங்குழைக்காதன். வீற்றிருந்த திருக்கோலம். உற்சவர் நிகரில் முகில்வண்ணன் . குழைக்காது நாச்சியார், திருப்பேரை நாச்சியார் என்று இரண்டு தாயார்கள் தனித்தனி சந்நிதிகளில் கோவில் கொண்டுள்ளனர்.

நாங்கள் சென்ற அன்று ஸ்ரீ ஜெயந்தி என்பதால் அர்த்த மண்டபத்தில் அரையர் போல தலையில் பரிவட்டம் கட்டிக்கொண்ட ஒருவர்  ஸ்ரீ கிருஷ்ணஜெனனம் கதை படித்துக் கொண்டிருந்தார். பட்டாச்சாரியர்கள் உள்ளே அமர்ந்திருக்க வெளியில் இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தார்கள். உள்ளே போவதற்கு அனுமதி இல்லை போலிருக்கிறது என்று நினைத்து நான் நின்று கொண்டிருந்தேன். ஒரு பட்டாச்சாரியார் என்னை உள்ளே வரச் சொல்லி ஜாடை காட்டினார். 

உள்ளே சென்ற நான் பெருமாளின் திருநாமம் என்ன என்று கேட்க," மகரநெடுங்குழைகாதன், என்றும் இந்தக் கோவிலில் எல்லாக் கோவில்களையும் போல கருடன் பெருமாளுக்கு நேராக இருக்க மாட்டார், பக்கவாட்டில் இருக்கிறார் பாருங்கள்" என்றம் கூறி விட்டு, "கிருஷ்ண ஜனனம் படிக்கிறா பேசக்கூடாது, அது முடிந்த பின்னர்தான் தீர்த்தமும்,ஜடாரியும் சாதிக்க முடியும்" என்றும் கூறினார். நான் கருடாழ்வாரை சேவித்துக் கொண்டு வெளியே வந்தேன். 

வேதம் ஓதி வரும் வேத வித்துக்களை காணவும், விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சிசையைக் காணவும் கருடாழ்வாரை கொஞ்சம் ஒதுங்கி இருக்கச் சொன்னாராம் பெருமாள். அதனால்தான் கருடன் பக்கவாட்டில் இருக்கிறார்.

அதன் பிறகு செவ்வாய் ஷேத்திரமாகிய திருக்கோளூர் என்னும் தலத்தில் வைத்தமாநிதி பெருமாளை தரிசித்ததோடு எங்கள் நவ திருப்பதி யாத்திரை நிறைவு பெற்றது.

திருக்கோளூர்தான் மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம்.

சிவ பெருமானை வழிபட ஒரு முறை கைலாயம் சென்ற குபேரன், பார்வதி தேவியை தீய எண்ணத்தோடு நோக்க, சினம் கொண்ட பார்வதி குபேரனை சபிக்கிறாள். இதனால் குபேரன் உருவம் விகாரமாவதோடு, அவனிடமிருந்த நவ நிதிகளும் அவனை விட்டு அகன்று விடுகின்றன. அந்த நவநிதிகள் இங்கிருக்கும் பெருமாளை தஞ்சமடைகின்றன. நவநிதிகளை பெற்றிருக்கும் பெருமாள் வைத்தமாநிதிபெருமாள் ஆகிறார். 

குபேரன் தன் பிழையை உணர்ந்து சிவபெருமானிடம் மன்னிப்பு கோருகிறான். சிவபெருமான் அவனை பார்வதி தேவியிடம் மன்னிப்பு கோரச்சொல்கிறார். பார்வதியின் பாதம் பணிந்த அவனிடம்," உனக்கு ஒரு கண் தெரியாது, உடலில் விகாரம் மாறாது, இழந்த நவ நிதிகளை வைத்தமாநிதிப் பெருமாளை வேண்டி பெற்றுக் கொள் என்று கூறி விடுகிறாள். அதன்படி, இந்த ஊர் பெருமாளை நோக்கி கடும் தவம் செய்து இழந்த செல்வங்களை பெற்றான். எனவே இழந்த செல்வங்களை மீண்டும் பெற விரும்புவார்கள் இக்கோவிலுக்கு வந்து பெருமாளை வழிபடுதல் சிறப்பு. 

மூலவர் வைத்தமாநிதிப் பெருமாள்(நிஷேதவிந்தன்).கிடந்த திருக்கோலம். புஜங்க சயனம். இரு தனி சந்நிதிகளில் குமுதவல்லி, கோளூர்வல்லி என்று இரெண்டு தாயார்கள்.

நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்
'உண்ணும் சோறு பருகும் நீர்  தின்னும் வெற்றிலை ..'  என்னும் எனக்குப் பிடித்த நம்மாழ்வார் பாசுரம் இங்கிருக்கும் பெருமாள் மீது  நம்மாழ்வாரால் நாயகி பாவத்தில் எழுதப்பட்டது. மொத்தம் பன்னிரண்டு பாசுரங்கள் எழுதியிருக்கிறார். 

நவத்திருப்பதி கோவில்கள் எல்லாமே நம்மாழ்வாரால் மட்டுமே மங்களாசாசனம் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இறையருளாலும், குருவருளாலும், பெரியோர்கள் ஆசியாலும் நவதிருப்பதி யாத்திரை நல்லவிதமாக முடிந்தது. குறிப்புக்கள் தந்து உதவிய கீதா அக்காவுக்கும், சகோதரர் நெல்லை தமிழனுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  தொடர்ந்து வருபவர்களுக்கு நன்றி. 

 அடுத்து நவ கைலாசங்களை தரிசிக்கலாம்.