சனி, 6 ஆகஸ்ட், 2016

குருவே சரணம்

                  குருவே சரணம்


ஹிந்து ஆன்மீக பொருட்காட்சியில் ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவர்கள் பாத பூஜை செய்ததை குறித்து கனிமொழி பார்லிமெண்ட் டில் சர்ச்சை கிளப்பியுள்ளார்,என்னவோ செய்யக் கூடாததை செய்ய வைத்ததைப்போல. கனிமொழியிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? மாணவர்களை தூண்டி விட்டு 'ஒழிக' கோஷம் போடச் சொல்லி தான் படிக்கும் பள்ளிகளில் மற்றும் கல்லூரிகள் மீது கல்லெரியக் கற்றுக் கொடுத்த கூட்டத்தின் வாரிசு தானே இவர்.

மாணவர்கள் ஆசிரியர்களை வணங்குவதால் அவர்களிடம் கேள்வி கேட்க முடியாதாம்...!! எங்கே போய் முட்டிக் கொள்வது? உலகிலேயே கேள்வி பதில் மூலம் ஒரு மதக் கொள்கைகள் பரப்பப்பட்டது என்றால் அது ஹிந்து மதம் தான். உபநிஷத் முழுவதுமே மாணவன் கேள்விகள் கேட்க அதற்கு ஆசரியர் அளித்த பதில்கள்தான்.

ஆசிரியர்களை மதிப்பதும் வணங்குவதும் உயரிய பண்பு. அது ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டது. நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அவர்கள் ஓமான் நாட்டிற்கு விஜயம் செய்த போது அந்த நாட்டின் அரசரான சுல்தான் காபூஸ் அவரகள் சங்கர் தயாள் சர்மாவிற்கு அளிக்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையில்  தானும் கலந்து கொண்டதோடு திரு.சர்மா நாற்காலியில் அமர்ந்த பிறகே தான் தன் ஆசனத்தில் அமர்ந்தார். காரணம் சுல்தான் காபூஸ் புனேயில் படித்த பொழுது அவருடைய ஆசிரியராக சங்கர் தயாள் சர்மா இருந்திருக்கிறார். தான் ஒரு நாட்டின் அரசர், அதற்கு வருகை தந்திருக்கும் மற்றொரு நாட்டின் அதிபர் சங்கர் தயாள் சர்மா என்று நினைக்காமல் அவர் தன்னுடைய முன்னாள் ஆசிரியர் என்று வணங்கிய சுல்தான் காபூஸ் பண்பாளர்.