கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, January 9, 2017

சேனை கிழங்கு மசியல்

சேனை கிழங்கு மசியல்

தேவையான பொருட்கள்:
சேனை கிழங்கு ---- 1/2 கிலோ
பச்சை  மிளகாய் ---- 4 அல்லது 5
எலுமிச்சம் பழம் ------ 1/2 மூடி
இஞ்சி ----- ஒரு சிறு துண்டு
தாளிக்க: கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு .... 1 1/2 டீ ஸ்பூன் 
கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி தழை



சேனை கிழங்கை நன்றாக கழுவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். கிழங்கு வெந்ததும் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி இவைகளை சேர்த்து கீரை மசிக்கும் மத்து அல்லது குழியாக இருக்கும் கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும்.   





மேற்படி மசியல் கொஞ்சம் ஆறியதும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்றாக கிளறி விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு,மிளகாய் வற்றல் இவைகளை தாளித்தால் சேனை கிழங்கு மசியல் ரெடி. 

பிடி கருணை கிழங்கிலும் இந்த மசியலை செய்வதுண்டு. கருணை கிழங்கு மசியலைப் போல சேனை கிழங்கு மசியல் தொண்டையை அரிக்காது. தளர இருந்தால் பிசைந்து சாப்பிடலாம், கெட்டியாக செய்தால் கூட்டு போல சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளலாம். மிகவும் சுவையானது.

Sunday, January 8, 2017

துருவங்கள் பதினாறு (திரை விமர்சனம்)

துருவங்கள் பதினாறு
(திரை விமர்சனம்)



எத்தனை நாட்கள் ஆயிற்று இப்படி ஒரு படம் பார்த்து? ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை கட்டிப் போடும் திரைக்கதை!  'துருவங்கள் பதினாறு' படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு இருபத்தியோரு வயதுதான் ஆகிறதாம். ஸ்ரீதர்,பாண்டியராஜனுக்குப் பிறகு இள வயது இயக்குனர். ஆனால் வியக்க வைக்கும் முதிர்ச்சி. பார்முலா படங்களிலிருந்து விலகி விறுவிறுப்பாக ஒரு த்ரில்லர் படத்தை தந்திருக்கிறார். பாடல் வேண்டாம், காமெடி வேண்டாம் என்று முடிவு செய்தது பெரிய விஷயம் இல்லை, கதாநாயகியே வேண்டாம் என்று தைரியமாக முடிவு செய்திருக்கிறாரே..! பெரிய விஷயம்தான். இந்த தைரியம் பின்னாளில் சூப்பர், சுப்ரீம்,மெகா, தலை, வால், தளபதி, சேனாதிபதிகளை வைத்து படம் எடுக்கும் போதும் குறையாமல் இருக்க வேண்டுகிறேன். 

படத்தில் நமக்கு தெரிந்த ஒரே முகம் ரகுமான். பாத்திரத்தை உணர்ந்து வெகு இயல்பாக, அழகாக நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல படத்தில் வரும் எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். காமிரா, இசை என்று அத்தனையும் அருமை.! 

குறை சொல்லித்தான் தீர வேண்டுமென்றால் இரண்டு விஷயங்களை சொல்லலாம். ஒன்று முதல் நாளிரவு பெரும் மழையில் நனைந்த சாலை மறு நாள் காலை துப்புரவாக காய்ந்திருப்பது சற்றே உறுத்துகிறது.   அதே போல கடைசி சண்டைக் கட்சியில் ஒரே இருட்டு, யார் யாரை அடிக்கிறார்கள்? யாரால் யார் சுடப்படுகிறார்? யார் தப்பி ஓடுகிறார்? யார் கார் முன் விழுகிறார் என்பதெல்லாம் ஒரே குழப்பம். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் சற்றே குறைகிறது, ஆனாலும் படம் தொய்யவில்லை.

படம் முடிந்தவுடன் இயல்பாக கை தட்டுகிறார்கள் ரசிகர்கள். இது போதாதா?