கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, August 10, 2018

பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம்

பிக் பாஸ் -  காலத்தின் கோலம் அலங்கோலம் 


எழுபதுகளின் ஆரம்பம் வரை பெரும் தலைவர்கள் யாரவது இறந்து விட்டால், அரசு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறதோ, அத்தனை நாட்கள் ரேடியோவில் நிகழ்ச்சிகள் எதுவும் ஒலிபரப்பப்படாது. 'டொ..ய்...ங்..' என்று சித்தார் அல்லது 'பீ...ய்..ங்..' என்று ஷெனாய்தான் அழுது கொண்டிருக்கும். அதை கேட்டு எனக்கு ஷெனாய் இசை என்றாலே ஒரு அலர்ஜி. "வட இந்தியர்கள் திருமணத்தில் கூட இதைத்தான் வாசிப்பார்களாமே..?இதைப் போய் எப்படி..?" என்று நினைத்துக் கொள்வேன். 

அதன் பிறகு நிலைமை கொஞ்சம் மாறியது. அரசு துக்கம் அனுஷ்டிக்கும் நாள்களில் பக்தி பாடல்கள் ஒலி பரப்ப ஆரம்பித்தார்கள். இப்போது கலைஞர் என்னும் மாபெரும் தலைவர் இறந்திருக்கும் பொழுது ஜெயா, விஜய், ஜீ போன்ற சேனல்கள் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் வழக்கம் போல் சமைத்துக் கொண்டு, விளையாடிக்கொண்டு, ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்தது  பார்க்க ரசமாக இல்லை. ஏன் கலைஞர் டி.வி. குழுமத்தை சார்ந்த மியூசிக் சேனல் வழக்கம்போல் பாட்டு போட்டுக் கொண்டிருந்தது. கலைஞரை புதைத்த உடனேயே சன் டி.வி.யிலும், கலைஞர் டி.வி.யிலும் சீரியல்களுக்கு திரும்பி விட்டார்கள். ஹும், இதுதான் உலகம்!

பார்ப்பதற்கு ரசமாக இல்லாத இன்னொரு விஷயம் பிக் பாஸ்! நான் கூட சென்ற வாரம், "கூட்டு குடும்பம் என்றால் என்னவென்று தெரியாத இந்த தலைமுறையினர் பிக் பாஸை பார்த்து கூட்டு குடித்தனத்தின் தன்மைகளை தெரிந்து கொள்ளலாம். சின்ன சின்ன பொறாமைகள், புறம் பேசுதல், சண்டைகள் எல்லாம் கொண்டதுதான் கூட்டு குடித்தனம். என்ன வேற்றுமை இருந்தாலும் எல்லோரும் ஒரு குடும்பம், ஒருவருக்கு ஒரு கஷ்டம் வரும்பொழுது மற்றவர்கள் உதவிக்கு வருவார்கள்" என்று பிக் பாஸை சிலாகித்து கூறினேன். திருஷ்டி பட்டு விட்டது போலிருக்கிறது.  அன்று 'உன்னைப் போல் ஒருவன்' என்று ஒரு டாஸ்க்!. அதில் ஒவ்வொருவருக்கும் யாருடைய படம் போட்ட டீ ஷர்ட் வருகிறதோ அந்த படத்தில் இருபவரைப் போல நடந்து கொள்ள வேண்டும். வைஷ்ணவி பாலாஜியாகவும், பாலாஜி டேனியலாகவும், டேனியல் யாஷிகாவாகவும், யாஷிகா வைஷ்னவியாகவும், ஜனனி சென்ராயனாகவும், மும்தாஜ் ஐஸ்வர்யாவாகவும், மஹத் மும்தாஜாகவும், நடித்தார்கள். தலை சுற்றுகிறதா? இதோடு விட்டு விட்டு விஷயத்திற்கு வருகிறேன். இதில் நீல அணிக்கு ஒரு சீக்ரெட் டாஸ்க். சிவப்பு அணியினறில், ஒருவரை அழ வைக்க வேண்டும், ஒருவரை சிரிக்க வைக்க வேண்டும், ஒருவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்று சொல்ல வைக்க வேண்டும், ஒருவரை எம்ப்ராஸ்(embarrass) அடையச் செய்ய வேண்டும். எம்ப்ராஸ் என்னும் வார்த்தையை எப்படி புரிந்து கொண்டார் வைஷ்ணவி என்று தெரியவில்லை. பிரபல எழுத்தாளரான சாவி அவர்களின் பேத்தியாகிய இவர் பாலாஜியை சங்கடப்பட வைக்கிறேன் பேர்வழி என்று அவருக்கு முன்னால் தான் அணிந்திருந்த டீ ஷர்ட் ஐ அவிழ்த்து வேறு மாற்றிக் கொண்டார்.    

அதை பாலாஜி மட்டுமா பார்த்தார்? அந்த நிகழ்ச்சியை பார்க்கும் ஆயிரக்கணக்கானவர்கள் பார்க்க மாட்டார்களா? இது வைஷ்ணவியின் மண்டையில் உதிக்கவே இல்லையா? அல்லது வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கத் தயார் என்று சொல்கிறாரா? இதனால் பாலாஜி கொஞ்சம் கூட சங்கடப் படவில்லை என்பதுதான் விஷயம். வைஷ்ணவி உன்னை நினைத்து வெட்கப் படுகிறோம், வேதனைப் படுகிறோம், வருத்தப் படுகிறோம். Shame on you! இதை கமல் கண்டிப்பாரா?