ஞாயிறு, 29 ஜனவரி, 2017

ஸ்வட்ச் பாரத்?

ஸ்வட்ச் பாரத்?அரசுடைமை ஆக்கப்பட்ட வாங்கி ஒன்றின் ATM இல் கொட்டி கிடைக்கும் குப்பைகள். ஏ.டி.எம். ஐ பயன்படுத்துபவர்கள் எல்லோரும் படித்தவர்கள்தான். குப்பை கூடை வைத்திருந்தும் அதில் குப்பையை போடாமல் சுற்றி எறிந்திருக்கிறார்கள். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது பட்டுக்கோட்டையாரின்(பிரபாகர் இல்லை, கல்யாண சுந்தரம் ) பிரபலமான வரிகள். மக்களுக்கே நாட்டை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்னும் எண்ணம் இல்லாவிட்டால் என்ன செய்ய முடியும்?

இங்கு இன்னொரு விஷயமும் எழுதத் தோன்றுகிறது. சில நாட்களுக்கு முன் மக்கும் குப்பை, மக்காத குப்பை இவைகளை பிரித்து போடச் சொல்லி கார்பரேஷனிலிருந்து பச்சையில் ஒன்று, சிவப்பில் ஒன்று என இரண்டு பிளாஸ்டிக் கன்டைனர்கள் கொடுத்தார்கள். அதை எப்படி செயல் படுத்த வேண்டும்? பிளாஸ்டிக் பையில் குப்பைகளை சேகரிக்கலாமா போன்ற கேள்விகளுக்கு விடை கொடுக்க யாரும் இல்லை.

நான் தனியாக பிரித்து கொடுத்தாலும், என் வீட்டு பணிப்பெண்,"யாரும் பிரிச்சு போடறதில்லைமா, ஒன்னாதான் போடறாங்க, நாம பிரிச்சு கொடுத்தாலும், அவங்க ஒன்னாதான் போடறாங்க.." என்றாள். ஆனால் காலனி வாசலில் என்னவோ மூன்று டஸ்ட் பின்கள் வைக்கப் பட்டுள்ளன.

இந்த விஷயத்தில் பெங்களூர் பரவாயில்லை என்று தோன்றுகிறது.  நான் என் மகன் வீட்டிற்கு பெங்களூர் சென்றிருந்தபொழுது என் மகன் என்னிடம், " அம்மா குப்பைகளை பிரித்து போடம்மா, ஏற்கனவே மெயின்டனன்ஸ் பார்க்கிறவர்கள், குப்பைகளை பிரித்து போடாவிட்டால் ரூ.1000/- அபராதம் கட்ட தயாராக இருங்கள் என்று எச்சரித்திருக்கிறார்கள்", என்றான். அதைப் போல அங்கு சிறிய கடை முதல் பெரிய சூப் மார்க்கெட் வரை பிளாஸ்டிக் கவரில் சாமான்கள் தருவதில்லை, பேப்பர் கவர்தான். ஏன் திருவண்ணாமலையில் கூட இதை கண்டிப்பாக கடை பிடித்தார்கள். பிளாஸ்டிக் கவர்கள் தர மாட்டார்கள்.

சென்னையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் இருந்தாலும் அதை சீரியசாக கடை பிடிப்பதில்லை. மற்ற ஊர்களை பற்றி எனக்கு தெரியவில்லை.

இப்படி சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருக்கும் அரசாங்கம், சமூக பொறுப்பில்லாத மக்கள் இவர்களை வைத்துக் கொண்டு ஸ்வாட்ச்சாவது? பாரதமாவது?