புதன், 20 மார்ச், 2019

மசாலா சாட்

மசாலா சாட் 


படித்தவைகளில் பிடித்தவை:


*பிரசவத்திற்கு இலவசம் என்று   எழுதப்பட்ட ஆட்டோக்களை பார்த்திருப்போம். பிரசவமே இலவசமாக பார்க்கப்படும்  என்கிறார் புனேயைச்சேர்ந்த ஒரு மருத்துவர். ஒரே ஒரு கண்டிஷன் பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும். அந்த பட்சத்தில் பிரசவக்கட்டணம் மட்டுமல்ல, முழு மருத்துவ செலவுகளும் இலவசம். இதைச் செய்பவர் புனேயை சேர்ந்த டாக்டர் கணேஷ். இதற்கு இவர் சொல்லும் காரணம், பெண் சிசுக்கொலை தடுக்கப்பட வேண்டும் என்பது.

"பெண் சிசுக்கொலைகளால் இன்று ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு தொள்ளாயிரத்து பதினான்கு பெண்களே இருக்கின்றார்கள். ஒரு ஆஸ்பத்திரியில், "ஒரு நோயாளி இறந்து விட்டான்  என்று சொல்வதை விட,  கடினமான செயல் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்வது. ஆண் குழந்தை பிறந்தால் குடும்பமே அதை கோலாகலமாக கொண்டாடும், ஆனால் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னால் அத்தனை பெரும் வெளியேறி விடுவார்கள்" என்று கூறும் இவர் தன் மருத்துவமனையில் பெண் குழந்தைகள் பிறகும் பொழுதெல்லாம்,  குடும்பத்தினர் அந்த குழந்தையை கொண்டாடும் விதமாய் கேக் வெட்டி, பிறந்த நாள் பாட்டு பாடி  உலகிற்கு அந்த குழந்தையை வரவேற்க ஏற்பாடு செய்கிறாராம். இதுவரை அவர் மருத்துவமனையில் 464 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனவாம். வாழ்க நீ எம்மான்! என்று வாழ்த்த தோன்றுகிறது. 

#இது ஒரு வகை என்றால், இன்னொரு அசத்தல் செய்தி சிந்து என்னும் சிறுமியைப் பற்றியது. சோளிங்கர் திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ அருட்சாய் மெட்ரிக் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவியான சிந்து என்னும் மாணவி கண்களை கட்டிக்கொண்டு ரூபாய் நோட்டுகளின் நிறம் மற்றும் அதில் உள்ள எங்களை சரியாக சொல்கிறாளாம். மேலும் புத்தகத்திற்குள் என்னென்ன தலைப்பில் பாடங்கள் உள்ளன என்பதையும் தெரிவிக்கிறாளாம். இதெல்லாம் எப்படி சாத்தியமாகின்றன? மூன்றாவது கண், அல்லது ஃபோகஸ் மைண்ட் என்னும் பயிற்சிதான் காரணமாம். 

மனதை ஒரு நிலைப்படுத்தும் பயிற்சி போன்ற இது மூன்று கட்டங்களை கொண்டதாம். முதலில் கண்களைக் கட்டிக்கொண்டு, தொடுதல்,வாசனை, சப்தம் இவை மூலம் ஒரு பொருளை உணரும் பயிற்சி, பிறகு ஒரு பேப்பரில் நாம் எழுதினால், அதை அப்படியே வாசிக்கும் பயிற்சி, இதைக் கடந்தால், சிறப்பு பயிற்சி, அதில் கண்களை கட்டிக் கொண்டு செஸ் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சிகள் அளிப்பார்களாம். 

இதில் சேரும் சிலர் தொடர முடியாமல் பாதியில் விட்டு விட்டு சென்று விடுகிறார்களாம், காரணம் இந்த பயிற்சி எடுக்க சில நிபந்தனைகள் உண்டு, முதலாவது, அசைவம் சாப்பிடக் கூடாது, இரண்டாவது தொலைக்காட்சி பார்க்கக்கூடாது, மூன்றாவது மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது. நமக்கெல்லாம் கொஞ்சம் கஷ்டம் இல்லையா?

அடுத்த செய்தி அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வாட்ஸாப்பில் வந்து கொண்டிருக்கிறதே. எ.பி. வாட்சாப்பிலும் வந்தது. இருந்தால் என்ன? நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் சொல்லவதில் தவறில்லையே?

பால் கவர்களை கட் பண்ணும் முறை பற்றிதான்.

நாம் சாதாரணமாக கட் பண்ணுவது போல் மூலையில் கட் பண்ணி அந்த சிறு துணுக்கை கீழே போடும்பொழுது அது டன் கணக்கில் சேர்ந்து விடுகிறதாம், அழிப்பதும் கடினமாம் எனவே அப்படி செய்யாமல் நீள் வாக்கில் கேட் பண்ணுங்கள் என்கிறார்கள். இதை நாம் பால் பாக்கெட்டுகளுக்கு மட்டுமல்லாமல் எல்லா பிளாஸ்டிக் கவர்களுக்கும் பின்பற்ற வேண்டும்.

தவறான முறைசரியான முறை  வாட்ஸாப்பில் வந்தது:


28.3.19 தேடியிட்ட குமுதம் சிநேகிதியில் வெளியாகியுள்ளது.
# பிப்ரவரி 16-28 மங்கையர் மலரில் வெளியாகியுள்ளது.