வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

ஒரு நடிகை நாடகம் பார்ப்பதை ஒரு ரசிகை நினைத்துப் பார்க்கிறாள்

ஒரு நடிகை நாடகம் பார்ப்பதை ஒரு ரசிகை நினைத்துப் பார்க்கிறாள் 


ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - திரைப்படமாக்கப்பட்ட ஜெயகாந்தனின் இன்னொரு கதை. 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படம் தந்த வெற்றியில்   இந்த கதையையும் படமாக்கினார்கள் போலிருக்கிறது, ஆனால் படம் வெற்றி பெறவில்லை. இந்த படத்தின் பலம் , வசனம்(இந்தப் படத்தை பார்ப்பதற்கு பதிலாக, எல்.பி. ரெகார்டாக வந்தால் போட்டுக் கேட்கலாம் என்று விகடன் விமர்சனத்தில் எழுதியிருந்தார்கள்)நடிப்பு, மற்றும் பாத்திரப் படைப்பு. இந்த படத்தில் வரும் கல்யாணியைப் போன்ற பெண் பாத்திரப் படைப்பை அதற்கு முன்னும் தமிழ் சினிமாவில் கண்டதில்லை, அதற்கு பின்னும் இது வரை காணவில்லை.

கல்யாணியை காதலித்து மணந்து கொள்ளும் பத்திரிகையாளன் ரெங்கா, அவளோடு ஏற்படும் கருத்து  வேற்றுமை காரணமாக," ஒரு நல்ல நட்பை நாம் அவசரப் பட்டு கெடுத்து விட்டோம், பிரிந்து விடலாம்" என்பான். அதற்கு அவள், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நீங்கள்தான் சொன்னீர்கள், இப்போது பிரிந்து விடலாம் என்றும் நீங்கள்தான் சொல்கிறீர்கள், இதில் எனக்கு எதுவும் இல்லை" என்பாள்.

என்னைப் பிரிந்தால் நீ வருத்தப் படுவாயா? என்று கணவன் கேட்க, "இல்லை வருத்தப்பட மாட்டேன், உங்களோடு இருந்த நாட்களை நினைத்துக் கொண்டு சந்தோஷமாக இருப்பேன்" என்று அவள் கூறியதும், "உன்னுடைய இந்த பதில் எனக்கு ஏமாற்றமளிக்கிறது. அதுதான் ஆம்பள புத்தி" என்பான்.

விவகாரத்துக்காக அவர்கள் சந்திக்கும் ரங்காவின் நண்பரான வக்கீல்," நீங்கள் சொல்வதெல்லாம் விவாகரத்துக்கு போதுமான காரணம் கிடையாது. நீங்கள் இரண்டு பேரும் ஒரு வருடம் பிரிந்திருக்க வேண்டும்" என்று கூறி விடுகிறார். அந்த கால கட்டத்தில் கல்யாணிக்கு இடுப்புக்கு கீழே பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகி விடுகிறார்.  அந்த செய்தியை கேள்விப் பட்டு அவளுக்கு உதவுவதர்க்காக வந்து அவளோடு சேரும் ரங்காவிடம் வழக்கறிஞர், "நீ கேட்ட விவாகரத்து கிடைப்பதற்கு இந்த ஒரு காரணம் போதும்" என்றதும், "வாழ இஷ்டமில்லாத இரண்டு பேரை இழுத்து பிடித்து வாழச் சொல்லி கட்டாயப் படுத்தும் உங்கள் சட்டம், எப்போது ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கவேண்டுமோ அப்போது பிரிந்து போகலாம் என்கிறது" என்று சீறுவார்.  

படம் கொஞ்சம் மெதுவாகத்தான் நகரும். இருந்தாலும் எல்லா பாத்திர படைப்புகளுமே சிறப்பு. சொற்ப நேரமே வரும் தேங்காய் சீனிவாசன்,காந்திமதி போன்ற எல்லோருமே நன்றாக நடித்திருப்பார்கள். ஸ்ரீகாந்த் நடித்திருந்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று. லட்சுமியின் நடிப்பை பற்றி சொல்ல வேண்டுமா?  கதையை படிக்கும் பொழுது கல்யாணி, ரங்கா பாத்திரங்களைப் பற்றி நம் மனதில் வரும் பிம்பங்களை முழுமையாக லட்சுமியும் ஓரளவுக்கு ஸ்ரீகாந்தும்  திரையில் கொண்டு வந்திருப்பார்கள். ஆனால் படிக்கும் பொழுது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத வக்கீல் கதா பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு  நாகேஷ் நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருப்பார்.

என்னுடைய கல்லூரி காலத்தில் பார்த்த படம் இது. இப்போதும் ஜெயா டி.வி.யில்(அதில் மட்டும்தான் போடுகிறார்கள்) ஒளிபரப்பும் பொழுதெல்லாம் பார்ப்பேன்.

இந்த படத்தில் இரண்டு பாடல்களை ஜெயகாந்தன் எழுதி இருக்கிறார். அதில் கடைசியில் வரும் பாடல் இது.

தனிமையில் ஒரு கொண்டாட்டம்!

தனிமையில் ஒரு கொண்டாட்டம்!

எங்கள் வீட்டு விநாயகர்
என் வாழ்க்கையில் நானும் என் கணவரும் மட்டும் தனியாக கொண்டாடிய முதல் விநாயகர் சதுர்த்தி இந்த வருடம்தான். 
திருமணத்திற்கு முன்பு எங்கள் வீட்டில் எல்லா பண்டிகைகளும் உறவினர்களோடு சேர்ந்துதான் கொண்டாடுவோம். 

திருச்சியிலேயே இருந்த எங்கள் மாமாக்களின் குடும்பத்தார்கள் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள். வீடு நிறைய மனிதர்கள் இருப்பார்கள். குறிப்பாக விநாயகர் சதுர்த்தியும், தீபாவளியும் எல்லோரும் சேர்ந்துதான் கொண்டாடுவோம்.

*நாங்கள் கணபதி அக்கிரஹாரத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் வீட்டில் பிள்ளையார் சிலை வாங்கி பூஜிக்கக்கூடாது. என் அப்பா பிள்ளையார் படம் ஏன் பிள்ளையார் படம் போட்ட காலண்டர் கூட வைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டார். கோவிலுக்கு சென்றுதான் அர்ச்சனை செய்து, நைவேத்தியம் செய்து விட்டு வர வேண்டும். அதனால் காலை எட்டரை மணிக்குள் பிரசாதம் ரெடியாகி விடும். அப்பா எங்களை அழகிரி குதிரை  வண்டியில் திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச் செல்வார். அங்கிருக்கும் மாணிக்க விநாயகருக்கு அர்ச்சனை செய்து விட்டு, பட்டர் ஒர்த் ரோடில் இருந்த அத்தை  வீட்டிற்கு சென்று பிரசாதம் கொடுத்து விட்டு வருவார். வண்டியிலிருந்து எங்களை இறங்க விட மாட்டார். நாங்களெல்லாம் இறங்கினால் நேரமாகி விடும் என்று பயம். அத்தை வீட்டில் பெரும்பாலும் பூஜை நடந்திருக்காது, சில சமயம் பூஜை முடிந்திருந்தால் அத்தை அவர்கள் வீட்டு பிரசாதம் கொடுப்பாள். எல்லா வருடமும், "வாசல் வரை வந்து விட்டு, உள்ளே வராமல் போகிறீர்களே" என்பாள். அப்பாவும் எல்லா வருடமும்," மணியாகி விட்டது, அங்கே எல்லோரும் காத்துக் கொண்டிருப்பார்கள்,போய் சாப்பிட வேண்டும்" என்பார்.

அம்மா, பாட்டி,மாமி என்று  நாங்கள் எல்லோரும் சேர்ந்து கொழுக்கட்டை செய்வோம். குழந்தைகளாகிய  நாங்கள் கொழுக்கட்டைக்கு சொப்பு செய்து கொடுப்போம், அம்மாவும், மாமியும் பூர்ணம் வைத்து மூடுவார்கள். மாமி கொழுக்கட்டையின் மூக்கு பெரிதாக இருந்தால், "உன் மூக்கு மாதிரி பெரிய மூக்கு, இது என் மூக்கு மாதிரி சின்ன மூக்கு, இது ஜப்பான்காரன் போல சப்பை மூக்கு" என்றெல்லாம் பேசிக் கொண்டே செய்வார். காலையில் எல்லோருக்கும் இலையில் போடுவதற்கு கொஞ்சம் செய்து விட்டு, மாலையில் மீண்டும் ஒரு செஷன் கொழுக்கட்டை செய்வோம். பூர்ண கொழுக்கட்டையும் அம்மணி கொழுக்கட்டையும் மாலை மற்றும் இரவு நேர மெனு. 

திருமணமாகி மஸ்கட்டில் இருந்த பொழுது நண்பர்கள் யாராவது வருவார்கள். பிறகு குழந்தைகள் இருந்தார்கள். இருவருக்கும் திருமணமாகி அவரவர் வீட்டில் கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் எங்களாலும் மகன் வீட்டிற்கு செல்ல முடியவில்லை, அவர்களுக்கும் இங்கு வர இயலவில்லை. எனவே நாங்கள் மட்டும் தனியாக கொண்டாடுகிறோம். தனியாக பண்டிகை கொண்டாடுவதைப் போல் போர் வேறொன்றும் இல்லை. 

கணவருக்கு இனிப்பு சாப்பிட முடியாது, வெறும் பழங்களை மட்டும் வைத்து நைவேத்தியம் செய்து விடலாமா? என்று தோன்றியது. ஆனலும் பழக்கத்தை விட மனமில்லாமல் பாயசம், வடை, அப்பம், கொழுக்கட்டை(பூர்ணம்,எள்ளு பொடி) என்று எல்லாம் செய்து விட்டேன். யார் சாப்பிடுவது? சுண்டல் வேறு இருக்கிறது..

வலை உலக நண்பர்கள் யாரையாவது கூப்பிட்டிருக்கலாம்.ஏனோ கில்லர்ஜியின் பெயர்தான் நினைவுக்கு வருகிறது. :)
-------------------------------------------------------------------------------------------------------------

* கணபதி அக்கிரகாரம் என்பது திருவையாருக்கும் கும்பகோணத்திற்கும் இடையில் உள்ள கிராமம். இங்கு வசிப்பவர்களுக்கு விநாயகரே எல்லாமும். பிள்ளையார் என்றால் கணபதி அக்கிரஹார பிள்ளையார்தான் என்பதால்தான் வீட்டில் வேறு பிள்ளையார் படங்கள் வைத்துக் கொள்வதில்லை. அந்த ஊரில் விநாயக சதுர்த்தி அன்று எல்லா வீட்டிலிருந்தும் வரும் பிரசாதங்களை ஒன்றாக கலந்து ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து பிறகு எல்லோரும் எடுத்துக் கொள்வார்கள். அன்று வழக்குகள் தீர்த்து வைக்கப்படும், சகோதரர்களுக்குள் பாகப் பிரிவினை கூட அன்றுதான் நடக்கும் என்றெல்லாம் கேள்வி பட்டிருக்கிறேன். 

நாங்கள் பல தலைமுறைகளுக்கு முன்பாக கண்டமங்கலத்தில் வந்து செட்டில் ஆகி விட்டாலும், விநாயக சார்த்தி அன்று எங்கள் ஊரில் உள்ள பிள்ளையார் சன்னிதியில் எங்கள் தாயாதிகள் எல்லோரும் ஒன்றாக அர்ச்சனை செய்து, எல்லார் வீடு ப்ரசாதங்களையும் கலந்து நைவேத்தியம் செய்து பின்னர் பகிந்து கொள்வார்கள். 

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

வரமா? சாபமா?

வரமா? சாபமா?

என்னுடைய 'நாள்  நல்ல நாள்' என்னும் பதிவில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது விடுமுறை அளிப்பது என்பதை பற்றி நகைச்சுவையாக எழுதியிருந்தேன். ஆனால் சமீபத்திய குமுதம் சிநேகிதி இதழில் இதைப் பற்றிய செய்தி ஒன்றை படித்த பொழுது அதே விஷயத்தை கொஞ்சம் சீரியசாக யோசிக்கலாமோ என்று தோன்றியது. மேற்கண்ட செய்தியை மேலெழுந்தவாரியாக பார்த்தால் பெண்களுக்கு மிகவும் உதவும் ஒரு திட்டமாகத்தான் தோன்றும். ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால்...?

மேலும் இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து பார்த்தார்களா என்று தெரியவில்லை. பள்ளியில் ஒவ்வொரு பெண்ணுக்கும், ஆசிரியைக்கும் மாதம் மூன்று நாட்கள் விடுமுறை என்பது எவ்வளவு பெரிய சிக்கல்? அன்றைக்கு தேர்வு இருந்தால் அதிலிருந்தும் விலக்கு கோருவார்களா ?  தவிர பெண்களின் அந்த வலியையும், வேதனையையும் உணர முடியாத விடலை பருவ ஆண்கள், "இவர்களுக்கு வேறு வேலை கிடையாது," என்றோ, "உங்களுக்கு என்ன மாதம் மூன்று நாள் ஜாலியாக லீவு போட்டு விடுவீர்கள்" என்றோ கேலிதான் பேசுவார்கள்.  

மாத விலக்கின் பொழுது எல்லா பெண்களுக்கும் வயிற்று வலி வரும் என்று கூறி விட முடியாது. அப்படியே வந்தாலும் அது இரண்டு மணி நேரங்களுக்கு மேல் நீடிக்காது. அப்பொழுது, சூடாக ஏதாவது குடித்து விட்டு,கொஞ்சம் தூங்கினால் சரியாகி விடும். எனவே பள்ளிகளில், ரிட்டயரிங் ரூம் ஒன்று கட்டி, வயிற்று வலியால் அவதிப் படும் பெண்களை ஓய்வெடுக்கச் சொல்லலாம். வேண்டுமென்றால் வலி நிவாரணி மருந்துகளை தரலாம். இன்னும் நிஜமான அக்கறை இருந்தால் யோகா பயிற்சிகள் கொடுத்து வயிற்று வலியை சமாளிக்கும் வழிகளை சொல்லிக் கொடுக்க வேண்டுமே ஒழிய, விடுமுறை அளிப்பது பயன் அளிக்காது. 

என்னுடைய இரண்டாவது அக்கா கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர்கள். அவர் வயதுக்கு வந்த புதிதில் ஒவ்வொரு மாத விலக்கின் பொழுதும் பள்ளி செல்லாமல் விடுமுறை எடுத்துக் கொண்டாராம். ஒரு முறை ஊரிலிருந்த வந்திருந்த எங்கள் பெரிய மாமா,(அவருக்கு பெண்கள் ஆண்களுக்கு நிகராக படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டு) என் அக்காவுக்கு கவுன்சிலிங் கொடுத்து பள்ளி செல்ல வைத்தாராம். அதுதான் முறையான செயல். 

அலுவலகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு பணி புரியும் பெண்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டால் அவர்கள் செயல் திறன் குறைவாக மதிப்பிடப்படாதா? கட்டிட வேலை, வயல் வேலை, ஏன் திரைப்பட துறையில் கூட ஆண்களுக்கு வழங்கப் படும் சம்பளம் பெண்களுக்கு கிடையாது. காரணம், ஆண்கள் செய்யும் அளவிற்கு, பெண்களால் வேலை செய்ய முடியாது என்பதுதான். மாதம் மூன்று நாள் விடுமுறை என்பதை ஒப்புக் கொண்டால், எல்லா துறைகளிலும் ஆண்கள் அளவு பெண்கள் செயலாற்றுவதில்லை என்று குறிப்பிட்டு, பெண்களுக்கு சம்பளத்தை குறைத்தால் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியுமா?

பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது இப்போது மட்டும் நடக்கும் ஒரு நிகழ்வு அல்ல. காடு,கழனிகளில் வேலை செய்யும் பெண்களுக்கும், வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கும் இந்த தொந்திரவுகள் கிடையாதா? இந்த திட்டத்தை வரவேற்பவர்கள் அவர்கள்  வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்ணுக்கு மாதம் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கத் தயாரா?

பெண்கள் பணியாற்ற மிகவும் கடினமான துறைகளான ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி, திரை உலகில் தொழில் நுட்ப பிரிவுகள் ஆகி இவற்றில் பெண்கள் புகுந்து, சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் சிறகுகளை வெட்டும் முயற்சியாகத்தான் இது எனக்குப் படுகிறது.