வியாழன், 17 ஜனவரி, 2019

பாகுபலிகோவிலும், ஹளபேடு சிற்பங்களும்பாகுபலிகோவிலும், ஹளபேடு சிற்பங்களும்
பொங்கல் விடுமுறையில் பாகுபலியை பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். பாகுபலி என்றதும் அனுஷ்கா நடித்த பாகுபலி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நாங்கள் சென்றது பெங்களூரிலிருந்து 140 கி.மீ. தொலைவில் இருக்கும் ஜைனர்களின் புனிதத்தலமான கோமதீஸ்வரர் பாகுபலி கோவில். 

ஒரு மலையின் மீது அமைந்திருக்கும் இந்த கோவிலை அடைய 620 படிகள் என்று சிலரும், 720 படிகள் என்று சிலரும் கூறுகிறார்கள். மூச்சு முட்ட முட்ட படிகள் ஏறி அதுவும் கடைசி 20 படிகள் ஏறுவது மிகவும் கடினமாக இருக்கிறது.  அப்படி கஷ்டப்பட்டு ஏறி 58 அடி உயர நிர்வாண சிலை... நான் ஒரு ஜெயின் ஆக இருந்திருந்தால் ஈர்த்திருக்கலாம். 

அந்த சிலைக்கு அருகே கீழ் பக்கத்தில் காணப்படும் புற்றிலிருந்து வெளிவரும் பாம்புகள் சிற்றின்ப வேட்கையையும், அவர் பாதத்திலிருந்து மேலெழும்பும் கொடி ஆன்மீக முன்னேற்றத்தையும் குறிக்கிறதாம். 

பாகுபலி சிலைக்கு எதிரே உள்ள விதானத்தில் காணப்படும் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி சிலைகள், பாகுபலியை தரிசிப்பதற்காகச் செல்லும் முன் காணப்படும் குபேரன் சந்நிதி அதற்கு இரண்டு புறங்களிலும் இருக்கும் துவாரபாலகர்கள் போன்றவை இது ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட ஹிந்து கோவிலாக இருக்குமோ என்னும் சந்தேகத்தை தோற்றுவிக்கின்றன.  அங்கு கையில் கின்னாரத்தோடு இருக்கும் பெண்ணின் சிலையின் நுட்பம் கவர்கிறது. 
தஞ்சை பெரிய கோவிலில் கூட எனக்கு இதே விதமாகத்தான் தோன்றும். காளஹஸ்தி, திருவண்ணாமலை, சிதம்பரம் போன்ற தலங்களில் இருக்கும் தெய்வீக சாநித்யம் தஞ்சை பெருவுடையார் கோவிலில் இருக்காது. அங்கு வருபவர்களின் மனோபாவமும் கூட வழிபாடு என்பதை விட, கோவிலின் சிற்ப சிறப்பை ரசிப்பதாகத்தான் இருக்கிறது. 

ஹலபிடுவிற்கு அருகில் இருக்கும் பேலூருக்கு செல்லவில்லை. நிறைய சினிமாக்களில் பார்த்திருக்கிறோமே, நேரில் பின்னொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பி விட்டோம். 


 மலையின் மீதிருந்து தோற்றம் 

குபேரன் சிலை 
பாறாங்கல்லால் ஆன கொப்பரை  அங்கிருந்து ஹளபேடு (உள்ளூர்வாசிகள் ஹலபிடு என்கிறார்கள்) சென்றோம். விஷ்ணுவர்தன் என்னும் அரசனால் கட்டப்பட்ட அந்த சிவன் கோவில் ஒரு கலை பொக்கிஷம். ஒவ்வொரு சிலையும் அவ்வளவு அழகு! 

அந்த கோயிலுக்குள்ளேயே இரண்டு சிவன் சன்னிதிகள் இருக்கின்றன. ஒன்று ராஜ கட்டியதாம், மற்றொன்று ராணி ஸ்தாபிதம் செய்ததாம். இருந்தாலும், அங்கு செல்பவர்கள் யாரும் பெரிதாக வழிபடுவதில்லை. சிற்பக்கலையை ரசிக்கத்தான் செல்கிறார்கள். கோவில் ஒரு மியூசியம் போலத்தான் இருக்கிறது. 


வாலி வதம் 

போர் காட்சி. சரமாக பாயும் அம்பு 

கோவர்த்தன கிரியை தூக்கி ஆனிரைகளை காக்கும் கண்ணன் 

உமா மகேஸ்வரர்

பாற்கடல் கடையப்படும் சிற்பம் சிதைக்கப்பட்டிருக்கும் சோகம் 

ஹலபிடுவிற்கு அருகில் இருக்கும் பேலூருக்கு செல்லவில்லை. நிறைய சினிமாக்களில் பார்த்திருக்கிறோமே, நேரில் பின்னொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பி விட்டோம். 

திங்கள், 14 ஜனவரி, 2019

பண்டிகைகள்

பண்டிகைகள் 

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் கனுப் பொங்கல் வாழ்த்துக்கள்! பண்டிகைகள் எல்லாம் பேட்டரி சார்ஜரைப் போல. சலிப்பூட்டும் ரொடீன் வாழ்க்கையிலிருந்து ஒரு மாறுதல். வித்தியாசமான சமையல், தெரிந்தவர்களுக்கு வாழ்த்து கூறுதல் என்று நம்மை புதுப்பித்துக் கொள்ள ஒரு வழி. 
இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால் பணத்தை ஒரே இடத்தில் தேங்க விடாமல் சமூகம் முழுவதும் பரவச்  செய்வதில் பண்டிகைகளுக்கு பெரும் பங்கு உண்டு.  ஒரு பண்டிகை கொண்டாட வேண்டுமென்றால் எத்தனையத்தனை விதமாக பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கிறது? ஆடை, உணவுப் பொருள்கள் என்று தொடங்கி வீட்டில் கட்ட வேண்டிய மாவிலைத் தோரணங்கள் உட்பட சமுதாயத்தில் பல மட்டங்களில் இருக்கும் மக்களுக்கும் வருவாய்க்கு வழி வகுக்கின்றன பண்டிகைகள். அதோடு கூட பெண்களுக்கு பலகாரங்கள் செய்வது, வீட்டை அலங்கரிப்பது, பாட்டுப் பாடுவது, கோலம் போடுவது, கும்மி அடிப்பது என்று தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டுவரவும் பண்டிகைகள் உதவுகின்றன. 
இந்தியாவைப் பொறுத்தவரை எல்லாப் பண்டிகைகளும் எல்லா மாநிலங்களிலும்(கேரளா தவிர) வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டாலும்,  ஒவ்வொரு மாநிலமும் ஏதோ ஒரு பண்டிகையை சிறப்பாக கொண்டாடும். நம் தமிழ் நாட்டில் பொங்கல் ஒரு விசேஷமான பண்டிகை. 
மற்ற மாநிலங்கள் சூரியன் தன் கதியை வடக்கு நோக்கி மாற்றிக் கொள்வதை மட்டும் மகர சங்கராந்தி என்று ஒரே ஒரு நாள் கொண்டாடுகிறார்கள். நாமோ, போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல்(அன்றுதான் கனுப் பொங்கலும் கூட), காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் திகட்ட திகட்ட கொண்டாடுகிறோம். 
ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒரு வாசம் இருப்பதை போல அந்த பிரதேசத்திற்குரிய பண்டிகைகள் சமயத்தில் அங்கிருக்கும் கொண்டாட்ட மனோநிலையை(festivel mood) மற்ற இடங்களில் உணர முடிவதில்லை. 
ஓமானில் ரம்ஜான் களை கட்டும். கடைகள், பூங்காக்கள் போன்றவை இரவு 11:00 மணி வரை திறந்திருக்கும். திருச்சியில் தீபாவளி சிறப்பாக இருக்கும்.
சென்னை எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுகிறது என்றாலும், டிசம்பர் சீசனில் தொடங்கும் இசை விழா, மார்கழி உற்சவங்கள் தைப் பொங்கல், காணும் பொங்கலுக்கு பீச்சுக்கு சென்று அங்கு பிளாஸ்டிக் குப்பைகளை போட்டு முடிக்கிறோம். இந்த சமயத்திலேயே புத்தக கண்காட்சியும் நடப்பது ஒரு அடிஷனல் சிறப்பு. புத்தக கண்காட்சியை புத்தகத்திருவிழா என்றுதானே குறிப்பிடுகிறோம். இந்த சமயங்களில் சென்னையின் காற்றிலேயே பண்டிகையின் வாசம் இருக்கும். 
எனக்கு வாட்ஸாப்பில் வந்த ஒரு கனுப்பொங்கல் பாடல் என்னைக்கவர்ந்ததால் அதைப்  பாடி இணைத்துள்ளேன். 

போண்டாவில் கரைந்த பணம்

போண்டாவில் கரைந்த பணம் 

Image result for bajji bonda maduva vidhana


இன்று திங்கற கிழமையாக இருப்பதால் திங்கற விஷயத்தை வைத்து இரண்டு நகைச்சுவைகள். இரண்டுமே நிஜமாக நடந்தவை.

என் அண்ணாவும் அவரோடு பணி புரிந்த சில நண்பர்களும் ஒன்றாக தங்கி இருந்தார்கள். அதில் விஜயகுமார் என்னும் ஒரு நண்பர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அறையில் இருக்கும் மற்ற சில நண்பர்களிடம் அவ்வப்பொழுது கை மாற்றாக பணம் வாங்கிக் கொள்வாராம். தினசரி அலுவலகத்திலிருந்து வரும்பொழுது பஜ்ஜி, போண்டா போன்ற தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுப்பாராம், அதிலும் அவர் யாரிடம் கைமாற்று வாங்கியிருக்கிறாரோ அவரை வற்புறுத்தி எடுத்துக் கொள்ளச் சொல்வாராம். 

இப்படி மூன்று மாதங்கள் கழிந்து விட்டன. விஜயகுமார் பணத்தை திருப்பித் தருவதாக இல்லை. கடன் கொடுத்த நண்பர் மெதுவாக ஒருநாள், "விஜய் நீங்கள் கூட எனக்கு 30 ரியால் பணம் தர வேண்டும், ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டதும் விஜயகுமார்,
"என்னது 30 ரியாலா?" தினமும் பஜ்ஜி, போண்டாவெல்லாம் சாப்பிட்டீர்களே? எப்படி சாப்பிட்டீர்கள்? அந்த 30 ரியாலில்தான்" என்றதும் கடன் கொடுத்த நண்பர் ஆடிப்போய் விட்டாராம். 

இதுவும் மஸ்கட்டில் இருந்த ஒரு நண்பர் கூறியதுதான். அவர் பட்டப்படிப்பை முடித்து விட்டு பம்பாயில் இருந்த தன் மூத்த சகோதரர் வீட்டில் தங்கி சி.ஏ.படித்துக்கொண்டிருந்தாராம். அவருடைய இன்னொரு சகோதரரும் பெரிய அண்ணா வீட்டிலிருந்துகொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது ஊரிலிருந்து நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக பம்பாய் வந்த உறவினர் பையன் ஒருவன் இவர்கள் வீட்டில் தங்கியிருக்கிறான்.  வேலைக்குச்சென்று கொண்டிருந்த நண்பரின் அண்ணி, சகோதரர்கள் மூன்று பேர், ஊரிலிருந்து வந்த பையன் ஆகிய எல்லோருக்குமாக ஒன்பது அடைகள் வார்த்து டைனிங் டேபிளில் வைத்து விட்டு இவர்களிடமும் சொல்லிவிட்டு அலுவலகம் சென்று விட்டாராம். அவரைத் தொடர்ந்து ஊரிலிருந்து வந்த பையனும் சாப்பிட்டு விட்டு கிளம்பி சென்று விட்டானாம். இவர்கள் குளித்து விட்டு சாப்பிடலாம் என்று பாத்திரத்தை திறந்தால், காலியாக இருந்ததாம். சரி, அண்ணி மறந்து விட்டார்  போலிருக்கிறது என்று இவர்களும் கிளம்பி விட்டார்களாம்.

மாலையில் எல்லோரும் வீடு திரும்பிய பின் அந்த விருந்தினர் பையனை இண்டர்வியூ பற்றி விசாரித்து விட்டு, " காலையில் எங்கு சாப்பிட்டாய்?" என்று கேட்டதும், "இங்குதான், அடை வார்த்து வைத்திருந்தார்களே?" என்று கூறி விட்டு, தொடர்ந்து,"ஆனால் பிரேக்ஃ பாஸ்டுக்கு ஒன்பது அடை கொஞ்சம் அதிகம்தான்.." என்றானாம், இவர்களுக்குத்தான் அதை ஜீரணம் செய்வது கஷ்டமாக இருந்ததாம்.   

படங்கள்: நன்றி கூகுள்