வெள்ளி, 9 நவம்பர், 2012

Kodiyadhu katkin...

கொடியது கேட்கின்....

நமக்கு செய்ய பிடிக்காத விஷயங்களை,"உலகத்திலேயே கொடுமையான விஷயம் என்றல் அது இதுதான்" என்போம் அப்படி ஒரு கொடுமையான விஷயங்களுள் ஒன்று துக்கம் கேட்கச் செல்வது! மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் பொழுது சம்பந்தப்பட்டவர்களின் துக்கம் பாதியாக குறையும் என்ற நம்பிக்கையில் செல்கிறோம். ஆனால் நிஜமாகவே துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

சமீபத்தில் அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய துர்பாக்கியத்திற்கு ஆளானேன்! காலமானது மிக நெருங்கிய நண்பர். என்னதான் மிக மோசமான விபத்தை சந்தித்து ஐந்து வருடங்களாக கோமாவில் இருந்தாலும் அவருடைய மனைவியின் அக்கறை மிகுந்த கவனிப்பால் மிக மிக சொற்ப முன்னேற்றத்தை காட்டி வந்த அவர் இறுதி வரை முழு நினைவு திரும்பாமலேயே இறந்தது கொடுமை இல்லையா? அந்தப் பெண்ணின் உழைப்பு அத்தனையும்  வீண்தானா? தன கணவர் நிச்சயமாக பிழைத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் ஐந்து வருடங்கள் சரியாக தூங்காமல் அவருடைய ஒவ்வொரு அசைவையும் புரிந்து கொண்டு பணியாற்றிய, அந்தப்பெண், "நான் கஷ்டப்பட்டேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள், நான் கஷ்டப்படவேயில்லை,எனக்கு ஒரு குழந்தை இருந்தால் பார்த்துக்கொள்ள மாட்டேனா? ஐந்து வருடங்கள் நான் பட்டது ஒன்றுமே இல்லை,கடைசி ஒரு மாதத்தில் ஆஸ்பத்ரியில் அவர் அனுபவித்த
கஷ்டத்தை பார்த்த பொழுது அவர்இருப்பதை விட இறப்பதே மேல் என்று தோன்றி விட்டது அதனால்தான் நான் அழவே இல்லை என்று கண்களில் வழிந்த நீரை துடைத்தபடியே பேசும்
 அந்தப் பெண்ணிடமும், எண்பத்தைந்து வயதில் மகனை பறிகொடுத்து  விட்டு புத்திர சோகத்தில் தவிக்கும் தாயிடமும்,  பிறந்ததில்  இருந்து  மிக செல்லமாக குறிப்பாக அப்பாவின் செல்லமாக ஒரு இளவரசி போல வளர்ந்த குழந்தை, மோசமான ஒரு நாளில் நடந்த விபத்து வாழ்கையையே புரட்டி போட அதை மிக இயல்பாக
ஏற்றுக்கொண்டு இப்பொழுது சீ.ஏ. பரீட்சி நேரத்தில் தந்தை இறந்து போக, என்னால் சரியாக அழக்கூட முடியவில்லை எனும் சின்னப் பெண்ணிடமும்,'உப்பும் நீரும் சேரச் சேர
எல்லா துக்கமும் மாறிப்போகும்" என்று கூற வேண்டிய தருணம் கொடியதுதானே?