திக் திக் நேரம்
(ஒரு கதையும் ஒரு நிஜமும்)
கதை:
முரளி அலுவலகத்திலிருந்து கிளம்பி, அம்மா சொல்லியிருக்கும் சாமான்களை வாங்கிக் கொண்டு ஊருக்கு கிளம்பும் பொழுது மணி ஏழாகி விட்டது. அவன் அலுவலக பியூன் அவனோடு பஸ் ஸ்டாண்ட் வரை வந்து பஸ்ஸில் ஏற்றி விட்டான்.
"இருட்டடிச்சே சார், கையில் பூவெல்லாம் எடுத்துக்கிட்டு போறீங்க.."
"ஊருல குல தெய்வம் கோவிலில் நாளைக்கு பூஜை. அதுக்குத்தான் பூ".
"கொஞ்சம் முன்னாள் கிளம்பியிருக்கலாமே சார். இருட்டின பிறகு மல்லிகைப் பூவெல்லாம் எடுத்துக்கிட்டு போகக் கூடாது"
"ஏன்?"
அது வந்து.. மோகினி.. சென்று தொடங்கியவன், "அதெல்லாம் சும்மா சார். நீங்க தகிரியமா போங்க.. வீடு ரோடு மேல தான இருக்கு?
"இல்ல ரோட்டிலிருந்து உள்ள ஒரு முக்கா மைல் நடக்கணும்." என்று முரளி கூறியதும்,"அப்படியா? என்றவன் கொஞ்சம் சுரத்து குறைந்து
கந்த சஷ்டி கவசம் தெரியும்ல? சொல்லிகிட்டே போய்டுங்க.. ஒண்ணும் பயமில்ல.." என்று பய விதையை மனசுக்குள் விதைத்தான்.
முரளியின் சொந்த ஊருக்கு திருச்சியிலிருந்து இரண்டு பஸ்கள் மாறிச் செல்ல வேண்டும். கடைசி பஸ் இரவு எட்டு மணிக்கு. அவர்கள் ஊரின் மெயின் ரோடில் இறங்கி அங்கிருந்து முக்கால் மைல் நடக்க வேண்டும். இரண்டு புறமும் வயல்கள் இருக்க, ஒத்தையடி பாதை. ஊரின் ஆரம்பத்தில் ஒன்றும், நடுவில் ஒன்றுமாக இரண்டே விளக்குகள்தான். அதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல்தான் இருந்தான். ஆனால் அவனை ரோட்டில் இறக்கி விட்டு விட்டு பேருந்து நகர்ந்ததும் பொட்டென்று தெரு விளக்குகள் அணைந்து சாலை கும்மிருட்டாகியது.
"எங்க போறீங்க?' என்று ஒரு குரல் வந்ததும் கொஞ்சம் திடுக்கிட்டான். இருட்டுக்கு கண்களை பழக்கிக் கொண்டு பார்த்தபொழுது அந்தக் குரலுக்குரியவர் பக்கத்திலிருந்கும் குடிசை வாசலில் நின்றிருப்பது தெரிந்தது.
"பட்டாமணியர் வீட்டுக்கு".
"பார்த்து போங்க, இன்னிக்கு காலையிலிருந்து கரெண்டு போயிட்டு போயிட்டு வருது."
முரளி நடக்க ஆரம்பித்தான். செல் ஃபோனில் டார்ச் லைட்டை போட்டுக் கொண்டான். கொஞ்ச தூரம் போனதும் டார்ச் ஒளியிழந்து நின்றது. வேலை பளுவில் சார்ஜ் செய்ய மறந்தது நினைவில் வந்தது. வேரு வழியில்லை. இருட்டில்தான் நடக்க வேண்டும்.
சுற்றிலும் கண்ணை ஓட்டிய பொழுது சற்று தொலைவில் குபீரென்று ஏதோ பற்றி எரிந்தது. கொள்ளிவாய் பிசாசு..? சீ ! அப்படியெல்லாம் ஒன்று கிடையவே கிடையாது. அது மீத்தேன் வாயு.
கால்கள் சற்று எட்டிப் போட, வாய் கந்த சஷ்டி கவசத்தை முணுமுணுக்க ஆரம்பித்தது. தன்னை யாரோ தொடர்கிறார்கள் என்பது போல் உணர்ந்தான்.
பிரமை இல்லை, நிஜம்தான். தனக்குப் பின்னால் சரக் சரக்கென்று காலடி ஓசை சீராக கேட்பதை உணர்ந்தான். அவன் வேகமாக நடக்கத் துவங்க அந்த காலடியும் வேகமாக தொடர்ந்து வந்தது.
பாதி தூரம் கடந்து விட்டோம், இன்னும் பாதிதான், வேறு வழியில்லை, ஓட ஆரம்பித்தான். அவனைத்துரத்தி வந்த அதுவும் ஓடி வந்தது.
மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடினான். அப்பாடா! இதோ ஊரு துவக்கத்தில் இருக்கும் சந்திக்கரை பிள்ளையார் கோவில் கண்ணில் படுகிறது. வேகத்தை மட்டுப்படுத்தினான்.
கோவிலை நெருங்கி கன்னத்தில் போட்டுக்கொண்டு கும்பிட்ட பொழுது,
"வா முரளி, ஏன் இவ்வளவு நேரமாயிடிச்சு? " மாமா தோளைத் தொட்டார்.
"என்ன இது? உடம்பெல்லாம் இப்படி வேர்துருக்கு?"
"நடந்து வந்ததால இருக்கும்." பேசிக் கொண்டே வந்த வழியை உற்றுப் பார்த்தான். எதுவும் தென்படவில்லை.
வீட்டிற்குப் போய் குளித்து, சாப்பிட்டு, படுக்கும் பொழுது கூட பயம் முழுமையாக விலகவில்லை. நடந்த அசதி, ஜில்லென்று காற்று எல்லாமுமாக சேர்ந்து ஆழ்ந்த தூக்கம் வந்தது. காலையில் தாத்தா யாரிடமோ சத்தம் போட்டுக் கொண்டிருப்பது கேட்டு கண் விழித்தான். பல் துலக்க கொல்லைப்புறம் சென்ற பொழுது, அங்கு மாட்டுக் கொட்டிலில் ரெங்கனும், அனுசுயாவும் பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது.
"நேத்து ராத்திரி சினிமாவுக்கு போயிட்டு எத்தனை மணிக்கு வந்த?"
அதையேன் கேக்குற? ஒன்பது மணிக்கு ரோட்டுல வந்து எறங்கினா கும்மிருட்டு. மெதுவா நடந்தேன். முன்னால யாரோ போய்கிட்டிருந்தாங்க, சரி தொணையாச்சுன்னு நானும் பின்னலேயே வந்தேன், அவன் என்ன நினைச்சானோ..திடீர்னு ஓட ஆரம்பிச்சுட்டான்.."
"அப்புறம்?"
அப்புறம் என்ன? நானும் அவன் பின்னாலேயே ஓடியாந்துட்டேன்.."
ரங்கன் சொன்னதைக் கேட்டு அனுசுயா கலகலவென்று சிரிக்க, முரளி எதுவும் காதில் விழாதது போல் உள்ளே வந்தான்.
*********************************************************************************
நிஜம்:
அப்போது எங்கள் அக்கா செயின்ட் மேரீஸ் சாலையில் வசித்து வந்தார். அவர் வீட்டுக்கு எதிரே ஒரு இடுகாடு உண்டு. பல திரைப்படங்களில் வந்திருக்கிறது அந்த இடுகாடு.
என் சகோதரியின் கணவர் வேலை பார்த்த தொழிற்சாலையில் வேலை நேரம் காலை, மதியம், இரவு என்று ஷிஃப்ட் மாறி மாறி வரும். அவர் இரவு நேர ஷிஃப்ட் பார்க்கச் சென்றிருந்த ஒரு நாள் நாங்கள் இரவு உணவை முடித்து விட்டு பேசிக் கொண்டிருந்தோம். அப்போது 'ஜல் ஜல்' என்று சலங்கை ஒலி கேட்டது. முதலில் சற்று அசிரத்தையாக இருந்த நாங்கள் அந்த ஒலி வீட்டைச் சுற்றி வருவது போல் கேட்டதும் கொஞ்சம் பயந்தோம். தினமும் இரவு 9:30க்கு மேல் கேட்கத் தொடங்கும் அந்த சலங்கை சத்தம் பத்து அல்லது பத்தே காலுக்கு அடங்கி விடும்.
ஒரு தனி வீட்டின் போர்ஷனான அதில் குழாய், பாத்ரூம், டாய்லெட் எல்லாம் வெளியேதான் இருந்தன. ஒரு நாள் இரவு சாப்பாடு,மற்றும் வேலைகளை முடித்து கதவை சாத்தியாகி விட்டது. திடீரென்று பாத்ரூமில் விளக்கெரிந்து குழாயில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டதும், நானும் என் அக்காவும் மிகவும் பயந்து விட்டோம். பாத்ரூமில் யாரு? என்ற எங்கள் கேள்விக்கு பதில் இல்லை. சற்று நேரம் கழித்து வாசல் அழைப்பு மணியை யாரோ அழுத்தினார்கள். தயக்கத்தோடும், பயத்தோடும் மெள்ள கதவைத் திறந்து பார்த்தால் வெளியே எங்கள் சகோதரர்! வரும் வழியில் எதையோ மிதித்து விட்டதாகவும், அதனால் நேராக பாத்ரூமுக்குப் போய் காலை கழுவிக் கொண்டு வந்ததாகவும் சொன்னார். எங்களை பயமுறுத்தவே வேண்டுமென்றே எங்கள் கேள்விக்கு பதில் அளிக்கவில்லையென்றும் சொன்னார்.
அதோடு தினசரி ஜல் ஜல் என்று சப்தம் வருகிறதே அது என்ன தெரியுமா? என்று கேட்டார். அவரே சொல்லட்டும் என்று நாங்கள் பேசாமல் இருந்தோம்.
"ஒரு ரிக்ஷாகாரன் தன்னுடைய வண்டியின் முன் சக்கரத்தில் சலங்கையை கட்டி வைத்திருக்கிறான். அவன் சவாரிக்காக இந்த தெருவை சுற்றி சுற்றி வரும்பொழுது எழுப்பப்படும் ஒலிதான் நம்மை இத்தனை நாட்களாக பயமுறுத்தியிருக்கிறது".என்று கூறியதும் "சே! இவ்வளவுதானா?" என்று நினைத்துக் கொண்டோம். பயம் விலகி விட்டதாலோ என்னவோ எங்களுக்கு அதன் பிறகு அந்த சலங்கை சத்தம் காதில் விழவில்லை.