கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, December 16, 2010

aacharyamana ahobilam - II

நெல்லூரிலிருந்து அஹோபிலம்  செல்லும் வழி ஆந்திராவின் அழகையும் வளத்தையும் செப்புகிறது.

இரவு சுமார் ஒன்பதரைக்கு அஹோபிலத்தை அடைந்தோம் .  அங்குள்ள அஹோபிலம் மடத்தில் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வார இறுதி என்பதால்  யாத்ரிகர்கள்  வந்த வண்ணம்  இருந்தார்கள். "முன்பெல்லாம் இத்தனை கும்பல்  கிடையாது, இப்பொழுது  மீடியாயக்களில் கோவில்களை பற்றி அதிகம் வருவதால் வார இறுதி என்றால் ஒரே கும்பல்தான்" என்று ஒரு பட்டாச்சாரியார் கூறினார்.

 108 வைஷ்ணவ திருப்பதிகளில் முக்கியமான ஒன்று.  திருமங்கை ஆழ்வாரால் பாடப் பெற்றது.   அஹோபிலம் என்று  வட மொழியில்  கூறப்பட்டாலும்  தமிழில் சிங்கவேழ் குன்றம் என்று அறியப்படும் இந்த திவ்ய தேசம்  கிழக்கு தொடர்ச்சி மலையில்  அமைந்துள்ளது.  ஆதிசேஷனே மலையாக சுருண்டு படுத்திருப்பதாகவும், படமெடுத்திருக்கும் அதன் தலைப்பகுதி திருப்தி(திருமலை), உடல் அஹோபிலம், வால் பகுதி ஸ்ரீ சைலம் என்றும் ஐதீகம். மஹா விஷ்ணுவை நரசிம்மராக தரிசிக்க ஆவல் கொண்ட கருடன் இங்கே தபஸ் செய்ய அவருக்கு நரசிம்மராக பகவான் காட்சி அளித்த இடம் இது என்பதால் இந்த மலை கருடாசலம் என்றும் அறியப்படுகிறது.

மறு நாள் காலை விஸ்வரூப தரிசனம்  காண அஹோபிலம் கோவிலுக்குக் சென்றோம். மூலவர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள். அமர்ந்த கோலத்தில்  சங்கு சக்கர தாரியாக இடது மடி மீது தாயாரை இருத்திக்கொண்டு ஒரு கை அபயம் அளிக்க மறு கையால் தாயாரை அணைத்த வண்ணம் நான்கு கரங்களோடு அருளுகிறார். அமிர்த வல்லி தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார்.  ப்ராகாரத்தில்   கல்யாண  கோலத்தில்  பத்மாவதி தாயாரோடு ஸ்ரீனிவாச பெருமாளுக்கும் தனி சந்நிதி உள்ளது. திருப்பதியில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருமணம்  நடக்கும் பொழுது செய்யப்படும் நைவேத்தியத்தை அஹோபில  நரசிம்மரே ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். கற்றளி கோவில். மண்டபத்திலும் பிராகார சுற்று சுவர்களிலும்  வெகு  அழகான  சிற்பங்களை  காண முடிகிறது. கிருஷ்ண தேவராயர் எடுபித்த கோவில்.  கிருஷ்ணா தேவா ராயர் தன்னுடைய  வெற்றியை  கொண்டாட ஜெய ஸ்தம்பம் நிறுவி உள்ளார். அதனாலோ என்னவோ சுற்று சுவர் சிற்பங்களில் போர் காட்சிகள் அதிகம்  காணப்படுகின்றன. ஒரு சில  கஜுரஹோ பாணி சிற்பங்களும் இருக்கின்றன.
குதிரை மீதமர்ந்து யானை மீது அம்பு தொடுக்கும் வீரன்  
  
மற்றும் ஒரு போர் காட்சி  

அன்று   காலை சிற்றுண்டிக்குப்பிறகு பார்கவ நரசிம்மரை  தரிசிக்க  சென்றோம். எங்களுடைய திட்டப்படி நவ நரசிம்மர்களில் அன்று பார்கவ நரசிம்மர்,  பாலயோக  நரசிம்மர், சத்ரவட நரசிம்மர், மற்றும் பாவன நரசிம்மர் என்று நான்கு நரசிம்மர் கோவில்களை சேவிப்பதாக ஏற்பாடு. இதற்கென்று ஜீப்புகளை டிராவல்ஸ்காரர்களே ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஜீப்புகள் ஒரு ஹெட் லைட் இல்லாமல் காயலான் கடைக்குச் செல்ல தயார் நிலையில் இருந்தன. ஒரு ஜீப்பில் எல்லோரும் அமர்ந்த பிறகு இரண்டு  பேர்கள்  தள்ளி  ஸ்டார்ட்  செய்ய வைத்ததைப் பார்த்த நான் என் தோழியிடம்,"பிரமிளா, அங்கே பாருங்கள் வண்டியை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்கிறார்கள் என்றேன்.."  "எல்லா வண்டியும் அப்படிதான்.." என்று அவள் என் வாயை அடைத்தாள்.
பார்கவ    நரசிம்மர் கோவிலுக்குச் செல்ல சுமார் 130 ௦ படிகள்  ஏற  வேண்டும்.  பார்க்க முனிவர் ஸ்ரீமன் நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யனை வதைத்ததை
தனக்கு காட்சி அருள வேண்டும் என்று தவம் இருக்க, அவருக்கு அப்படியே பெருமாள் காட்சி தந்த கோலம். பெருமாள் சதுர் புஜங்களோடு, தன் மடி மீது ஹிரண்யனை போட்டுக்கொண்டு அவன் குடலை கீழ் இரு கரங்களால் கிழித்த படியும், மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியும் காட்சி அளிக்கிறார். சிறிய சுயும்பு மூர்த்தம். படிகள் துவங்கும்  இடத்தில் பார்கவ முனிவரால் உண்டாக்கப்பட்ட சிறிய குளம் பார்கவ  தீர்த்தம்என்று அழைக்கப்படுகிறது. அதில் தண்ணீர் எப்போதும் வற்றுவது கிடையாது என்பதால் அக்ஷய தீர்த்தம் என்றும் வழங்கப்படுகிறது.    அதிலிருந்துதான்  பெருமாளுக்கு  திருமஞ்சனத்திர்க்காக தீர்த்தம் எடுத்துச்  செல்லப்படுகிறது.

இந்த குளத்து நீரை தலையில் தெளித்துக் கொள்ளலாம் என்று     நாங்கள்  சென்ற  போது அஹோபிலத்திர்க்கு முப்பது வருடங்களுக்கும் மேலாக சென்று கொண்டிருக்கும்  ஒருவர், "ஒரு முறை இந்த குளத்தில் கால் அலம்பினேன் ஒரு முதலை  சர்ரென்று  வந்தது அவசர அவசரமாக கரை ஏறி ஒரே ஓட்டம்தான்" என்றார்.  எங்களுக்கு  எதுவும்  பயம் இல்லை முதலை வந்து காலை கவ்வினால் ஆதி மூலமே! என்று அழைத்து விடுவோம், பெருமாள் பாவம் ஓடி வர வேண்டும். அதெல்லாம் வேண்டாம் என்று அதன் கரையில் நின்று போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டோம்.
அக்ஷய தீர்த்தத்தின் முன் நானும் ப்ரமீலாவும்
 
 இதற்குப் பிறகு சத்ரவட நரசிம்மரை தரிசிக்க சென்றோம். வட மொழியில் சத்ரம் என்றால் குடை என்று பொருள்; வடம்  என்பது  அரச  மரத்தைக்  குறிக்கும். அரச மரமே  ஒரு குடை போல கவிழ்ந்திருக்க அதனடியில் பத்மாசனத்தில் நான்கு திருக்கரங்களோடு  நரசிம்ம பெருமான் எழுந்தருளியிருக்கும் அழகை வர்ணிக்க எனக்கு ஆற்றல் போதாது.  சற்றே பெரிய சாளக்ராம விக்கிரகம்.

பெருமாள் தலையில்  கிரீடம், மார்பில் ஹாரம், கால்களில் சதங்கை, கைகளில் காப்பு, விரலில் மோதிரம் என்று சர்வாபரண பூஷிதராக விளங்குகிறார். மேலிரண்டு கைகளும் சங்கு சக்கரம் தாங்கி இருக்க, கீழ் வலது  கை அபய ஹஸ்தமாகவும், இடது  கையை  தொடையில்  ஊன்றியும்  வித்தியாசமான  ஒரு கோலத்தில் விளங்குகிறார். இதைப் பார்த்த ஒருவர், "வலது கை அபய ஹஸ்தமாக இருந்தால் இடது கை வர ஹஸ்தமாக இருக்கும் அல்லது கையை இடுப்பில்  வைத்து  கொண்டிருந்தால் பொருத்தமாக இருக்கும். இதிலே வலக்கரத்தை தொடையில் வைத்துக் கொண்டிருக்கிறாரே"? என்று கேட்டார். அதற்கு  கோவில் பட்டாச்சாரியார்,  "இங்கு 'ஆஹா', 'ஊஹு' என்று இரண்டு கின்னரர்கள் பெருமாளை இசையாலும் நடனத்தாலும் வழிபட்டனராம் அவர்களின் பெர்பார்மன்சை பகவான் தொடையில் தாளம் போட்டு ரசிப்பதாக ஐதீகம்". என்று விளக்கம் அளித்தார். ஒரு வேளை அதனால்தான் இப்பொழுதும் கூட உச்ச பட்ச பாராட்டு வார்த்தைகளாக  ஆஹா ஊஹு  என்று சொல்கிறோம் போலிருக்கிறது! இந்த கோவில் அமைந்திருக்கும் அழகை சொல்வதா? பெருமாளின் அழகை போற்றுவதா? அல்லது அங்கு நிலவும் சாநித்தியத்தை வியப்பதா?   நவ நசிம்மர்களில் என்னை மிகவும் கவர்ந்த கோவில் இது.

இதை அடுத்து  யோக நரசிம்மரை சேவித்தோம். பிரஹலாதனுக்கு யோக முத்திரைகளை கற்பித்த இடம் என்று நம்பப்படுகிறது. நான்கு கரங்களோடு கூடிய சிறிய மூர்த்தம். மேல் இரண்டு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியும் கீழ் இரண்டு கரங்களில் யோக முத்திரை காட்டிய படியும் அருளுகிறார்.

இந்த கோவிலுக்கு வெளியே ஒரு மண்டபத்தில் நவ நரசிம்மர்களும் எந்தெந்த நரசிம்மர் எந்தெந்த க்ரஹதிற்குரியவர் என்ற குறிப்போடு நவ கிரகங்கள் போல வட்டமாக எழுந்தருளப் பட்டிருக்கின்றனர். அம்மூர்தங்களை தனித் தனியே வலம் வரவும் முடியும். 

இதோடு எங்கள் காலை தரிசனங்கள் முடிந்தன. மதியம் பாவன நரசிம்மரை தரிசிக்கலாம் என்றார்கள். ஒரே ஒரு கோவிலுக்கு அரை நாளா? என்று நினைத்தேன்...என் யோசனை சரியா? தவறா? கொஞ்சம் பொறுத்திருங்கள் சொல்கிறேன்...                     



                                                

Monday, December 6, 2010

aachirayamaana ahobilam...!

அஹோபிலம் என்பதற்கு ஆச்சர்யமான குகை என்று பொருளாம். நிஜமாகவே ஆச்சர்யம்தான் குகை மட்டுமல்ல, அமைந்திருக்கும் இடம் மற்றும் அங்கு நிலவும் தெய்வீக சானித்தியமும்!

"ஜெயஸ்ரீ டிராவேல்சில் அஹோபிலம் அழைத்துச் செல்கிறார்கள் மூன்று நாள்கள் யாத்திரை, நீங்களும் வருகிறீர்களா?"  என்று என் தோழி பிரமிளா கேட்டதும் அதிகம் யோசிக்காமல் "சரி"  என்று விட்டேன். பிறகு கொஞ்சம் பயம் வந்தது, "அஹோபிலம் போனால் அரை சொர்க்கம் போனது போல என்பார்களே.. "என்று ஒரு சிந்தனையும், "ஏதோ பெருமாள் நம்மை அழைக்கிறார் போலிருக்கிறது, போகும் வரை தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணலாம்" என்று நினைத்துக்கொண்டாலும் செயல் படுத்தியது என்னவோ ஒரு நாளைக்கு மட்டும்தான்.

மூன்று நாட்களுக்கு தேவையான உடைகள், ஒரு மெல்லிய போர்வை,  டார்ச் லைட், மற்றும் உங்களுக்கு தேவையான மருந்துகள் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சாமான்களின் பட்டியல் தந்தார், டூர் ஆபரேடர். அதோடு செல் சார்ஜெர், காமிரா என்று நான் சேர்த்துக்கொண்டேன். ஆனால் வேறு சிலர் கல்கண்டு, உலர்ந்த திராட்சை, பாதாம் இவைகளை ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்துக்கொண்டு எல்லா கோவில்களிலும் அர்ச்சனை செய்யும் பொழுது  கையோடு கொண்டு வந்திருந்த சிறிய மரபேழையில் இவைகளை போட்டு நெய்வேத்தியம் செய்ய செய்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் கருவறை தீபத்தில் சேர்க்க நெய் கொண்டு வந்தவர்களும் உண்டு. ஒரு மாமி கையோடு அரிசி மாவு கொண்டு வந்து சுவாமி சந்நிதியில் கோலம்  கூட போட்டார்.

நவம்பர்  25 வியாழக்கிழமை தி.நகர் நாதேல்ளாவுக்கு அருகே இரவு ஒன்பது முப்பதுக்கு புறப்பட்ட எங்கள் பேருந்து இரவு இரண்டு மணிக்கு நெல்லூரை அடைந்தது. அங்கு ஒரு கல்யாண சத்திரத்தில் தங்க வைக்கப்பட்டோம். காலை ஐந்து மணிக்கு காபிக்குப் பின்னர் அருகில் இருந்த நெல்லூர் ரெங்கநாதர் கோவிலில்  விஸ்வரூப தரிசனம்! எங்கெல்லாம் ஆறு இரண்டாக பிரிகிறதோ அங்கெல்லாம் ரெங்கன் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருவார் என்னும் கோட்பாட்டின்படி இங்கு வட பெண்ணை ஆறு இரண்டாக பிரிகிறது நடுவே  ஆதிசேஷன் மீது  பள்ளிகொண்ட அரங்கன், அவருடைய தொப்பூழிளிருந்து  புறப்பட்ட தாமரையில் பிரம்மா. வடக்கே சிரம் வைத்து தெற்கே பாதம். அழகான திருக்கோலம்!  தனி சந்நிதியில் அருள் வடிவான தாயார். கண் குளிர தரிசம் செய்தோம்   அதன் பின்னர் அருகிலேயே இருந்த ஸ்ரீதேசிகன் மடத்திலேயும்  தரிசனம் செய்தோம்.  சமீபத்தில்   கட்டப்பட்டுள்ள  தேசிகன் மடத்தில் பெரிய அளவில் மகாவிஷ்ணுவின்   
 விஸ்வரூப கோலம், சக்கரத்தாழ்வார், யோகா நரசிம்மர் சிலைகள் கண்ணைக் கவருகின்றன.    
வடபெண்ணை ஆற்றங்கரையில் பிரேமா மாமி,உஷா மற்றும் நான்  

நரசிம்மாகுடாவில் கருடன் புடைப்பு சிற்பம்  

 

Premila infront of Mahavishnu staue - Desikan asram 

நரசிம்ம குடாவில் அனுமன் புடைப்பு சிற்பம்
 

நெல்லூர் தேசிகன் ஆஸ்ரமத்தில் நவீன சிற்பங்கள் முன்பு கட்டுரை ஆசிரியர்      
 
அதற்குப் பிறகு சிற்றுண்டி, பிறகு நரசிம்ஹாகுடாவிற்கு சென்றோம். சிறிய குன்றின் மீது அமைந்துள்ள அழகிய கோவில். கீழேயே அர்ச்சனை தட்டு, சீட்டு முதலியவை வாங்கிக்கொண்டு சென்று விட வேண்டும். சுயும்பு மூர்த்தியான மூலவர், அளவில் பெரியவர். வெள்ளி கவசம் அணிவித்திருந்தார்கள். அந்த சன்னதியிலும் அமிர்தவல்லி தாயார் சன்னதியிலும் மிக நல்ல அதிர்வுகளை உணர முடிகிறது. விசாலமான பிராகாரம் .  பிராகரத்தில்  மகாலக்ஷ்மிகென்று தனி சந்நிதி உள்ளது. 
 அங்கிருந்து புஜ்ஜிரெட்டிபாளையத்தில் உள்ள  ராமர்  கோவிலுக்குச்  சென்றோம். இதுவும் சிறிய கோவில்தான்.  கருவறையில்  நின்ற திருக்கோலத்தில் ராமர், லக்ஷ்மணர் மற்றும் சீதா பிராட்டி! அவர்களுக்கு கீழே சிறிய விக்கிரக ரூபங்களாக  சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர்  சேவை சாதிக்கிறார்கள். கோவிலுக்கு வெளியே ராமர் சன்னதிக்கு நேர் எதிரே  கூப்பிய கரங்களோடு சிறிய கோவிலில் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர்! கோவிலின் நுழை வாயில் அழகிய சிற்பங்களோடு விளங்குகிறது.  வாயிலின் இரண்டு புறமும் மற்றும் விதானத்தில் செதுக்கப்பட்டிருக்கும்  தசாவதார,அஷ்ட லக்ஷ்மி சிற்பங்கள் மிகவும்   அழகாக   இருக்கின்றன. 
 
 
 
 
முதல் நாள் தரிசனங்களை முடித்துக்கொண்டு  மதிய உணவையும்  முடித்துக்கொண்டு அஹோபிலம் புறப்பட்டோம்.   
 
அஹோபில  யாத்திரை அனுபவங்கள் தொடரும்.....                                                                              

Sunday, October 24, 2010

தமிழ் சினிமாவில் சில முழியர்கள்!

தமிழ் சினிமாவில் சில முழியர்கள்!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முழி என்றால் முதலில் நினைவுக்கு வருவது
சோவின் முட்டை கண்ணாகத்தான் இருக்கும். இவருடைய  ஆரம்ப  காலங்களில்  அப்பாவித்தனமாக விழித்தும் விழிகளை உருட்டியும் ரசிகர்களை கலகலக்க வைத்தது இவருடைய முழிதான். போக போக தன் அறிவு ஜீவி இமேஜை வெளிப்படுத்தி அரசியல் நையாண்டியை அவிழ்த்து விடத் தொடங்கியதும் முழி பின்னுக்கு போய் விட்டது.

அடுத்த படியாக நம் நினைவுக்கு வருபவர் நடிகரும் இயக்குனரும் ஆன பாக்யராஜ் அவர்கள். உண்மையில் பார்த்தால் இவருக்கு முட்டை கண்ணோ திரு திரு விழியோ கிடையாதுதான், ஆனால் கெட்டிக்காரரான இவர் தானே தன்னை திருட்டு முழி, திரு திரு விழி என்றெல்லாம் விமர்சித்துக்கொண்டு சில பாவங்களை வெளிப்டுத்த முடியாத தன் இயலாமையை  சாமர்த்தியமாக மறைத்துக்கொள்ள தன் முழியை பயன் படுத்தினார்.  
                      
அடுத்த  முட்டை கண்ணாளர் பாக்யராஜின்  சீடரான  பாண்டியராஜன்!  அசல் திரு திரு விழி கொண்ட இவரை முட்டை கண்ணர்களின்  அரசன்  எனலாம். இவரின் ஆரம்ப கட்ட படங்களில் இவரது விழி இவருக்கு  உதவியது  போக  போக எல்லா படங்களிலும் எல்லா இடங்களிலும்  ஒரே மாதிரி  விழித்தது இவரின் வீக்னெஸ்!



சாக்லேட் பாய் ஆகவும் ரொமாண்டிக் ஹீரோவாகவும்
இருந்த வரை மாதவனின் லுக் ஓகேதான், ஆனால்  அவருக்கு ஆக்க்ஷன் ஹீரோவாக  வேண்டும்  என்னும்  விபரீத  ஆசை  வந்தது  நம்முடைய  போதாதா  காலம்தான். முகத்தில் ரௌத்திரம் காட்ட வேண்டுமென்றால் கரு விழி தெறித்து விழுந்து விடுவதை போல இவர் விழிக்கும் விழி ...அப்பப்பா! 
  
இந்த லிஸ்டில் சமீபத்தில் சேர்ந்திருப்பது கார்த்தி !  பருத்தி  வீரனில்  அமீரின்  உதவியோடு நடித்து விட்டார், மற்ற படங்களிலோ காதல்,கோபம், அதிர்ச்சி, ஆசை, எல்லாவற்றிக்கும் ஒரே மாதிரி இவர் விழிப்பதை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது. அண்ணனுக்கு போட்டியாக செல் போன் விளம்பரத்தில்  நடித்தால் போதுமா? அண்ணனிடம்  கண்களை  எப்படி  பயன் படுத்த வேண்டும் என்றும் கற்று கொள்வது நல்லது.  

                             

Sunday, October 3, 2010

navrathri the unique festival!

சென்னை நவராத்ரியை வரவேற்க தயாராகிவிட்டது! 

 மயிலாப்பூர் மாட வீதியில் குவிந்து கிடக்கும் பொம்மைகள், அலங்கார பொருள்கள்,





கிரி ட்ரேடிங்கில் அடுக்க பட்டிருக்கும் நவராத்திரி கிப்ட் சாமான்கள் எல்லாமே நவராத்ரிக்கு நாங்கள் ரெடி என்கின்றன.
  
நவராத்திரி...மிகச்சிறப்பான வித்தியாசமான  ஒரு பண்டிகை! நாம் கொண்டாடும் பல பண்டிகைகள் 
சமயம் சார்ந்ததாகத்தான் இருக்கும். பூஜை நோன்பு போன்றவைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படும். தீபாவளி, ஹோலி  (வட இந்தியாவில்) போன்று கொண்டாட்டங்களுக்கு 
முன்னுரிமை அளிக்கும் பண்டிகைகள் குறைவுதான். ஜன்மாஷ்டமியில் தாண்டியா  போன்ற கொண்டாட்டங்களுக்கு ஓரளவிற்கு 
இடம் இருக்கிறது அதுவும் வட இந்தியாவில் மட்டும். 
மற்றபடி இவை எல்லாவற்றிலுமே முக்கிய இடம் வகிப்பது உபவாசம்,விரதம்,மற்றும் பூஜை இவைகளே.  
ஆனால் நவராத்ரியோ தேவி மகாத்மியம்,  லலிதாசஹஸ்ரநாம  பாராயணம் என்று ஒரு பக்கம் பக்தி , கொலு வைப்பதில் வெளிப்படும் கலை மற்றும் அழகுணர்ச்சி, சுண்டல் 
போன்ற பிரசாதங்கள் தயாரிப்பதில் வெளிப்படும் சமையல் திறமை, மறந்தே போய் விட்ட பாடல்களை நினைவு படுத்திக்கொண்டு சூப்பர் சிங்கர் என்று பேர் வாங்கும் ஆப்போர்ச்சுநிட்டி என்று பன்முக பண்டிகை இது ஒன்றுதான்  have a wonderful navratri!     

Friday, September 10, 2010

பிள்ளையாரைப் பணிவோம்!





ஸ்ரீ விநாயகர் எனக்கு அருள் புரியட்டும்

ஸ்ரீ ஆறுமுக பெருமான் எனக்கு அருள் புரியட்டும்

ஸ்ரீ மகேஸ்வரரும் எனக்கு மங்கலத்தை உண்டாக்கட்டும்

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் குடிகொண்டு

யானை முகமும் நான்கு தோள்களும்

பெருத்த தொந்தியும் வாய்தவரான

ஸ்ரீ விநாயக மூர்த்தியை நான் தொடங்கும்

எல்லா காரியங்களிலும் எந்த வித

விக்ஞங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக

வணங்குகிறேன்!

மங்கல முகம் கொண்ட சுமுகர்

ஒற்றைக் கொம்பை கொண்ட ஏக தந்தர்

கபில நிறம் வாய்ந்த கபிலர்

யானை காதுகள் உடைய கஜகர்னர்

பெரும் வயிற்ரோடு கூடிய லம்போதரர்

குள்ள தோற்றம் உடைய விகடர்

சகல விக்ஞங்களுக்கும் ராஜாவான விக்ஞராஜன்

எல்லா துன்பங்களையும் அழிக்கக்கூடிய விநாயகன்

நெருப்பை போல ஓளி வீசக்கூடிய தூமகேது

பூத கணங்களுக்கு தலைவராகக்கூடிய கனாத்யக்க்ஷன்

நெற்றியில் பிறை சந்திரனை சூடியவரான பாலச்சந்திரன்

யானை தோற்ற்றம் உள்ள கஜானனன்

வளைந்த துதிக்கை கொண்ட வக்ர துண்டார்

முறம் போன்ற காதுகள் கொண்ட சூற்பகர்னர்

தம்மை வணங்கி நிற்கும் அடியவர்களுக்கு

அருள் புரியும் ஹேரம்பர்

கந்த பெருமானுக்கு மூத்தவரான ஸ்கந்த பூர்வஜன்

இவ்வாறு சொல்லப்படும் விநாயகப் பெருமானின்

பதினாறு திருநாமங்களையும்

வித்தைகளை கற்கும் பொழதும்

வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுதும்

போர் காலத்திலும் இன்னல்கள் வந்த பொழுதும்

யாராவது வாசித்தாலும் மனங்குளிர கேட்டாலும்

அவர்களுக்கு எந்த வித துன்பங்களும் நேரிடாது!

Monday, September 6, 2010

Shringarika- a must visit!

 சமீப காலங்களில் அசுர வளர்ச்சி   கண்டுள்ள புறநகர் பகுதிகளுள் ராமாபுரம்மும்   ஒன்று   இருந்தாலும் நவீன ஆடைகள் வாங்க வேண்டுமென்றால் தி.நகர்தான்
சென்றாக வேண்டும். இனி அந்த அலைச்சல், கும்பலில் தள்ளு முள்ளு  போன்றவைகளை தவிர்த்துவிட்டு ராமபுரத்திலேயே நிம்மதியாக  தனிப்பட்ட கவனிப்போடு ஷாபிங் செய்யல்லாம். ராமாபுரம் காமராஜர் சாலையில் "ஸ்ரின்காரிகா" என்ற பெயரோடு தொடங்க பட்டிருக்கும் பூடிக் இல்  பெண்களுக்கு தேவையான  புடவை,சுடிதார்,குர்தி போன்ற எல்லா விதமான துணி  ரகங்களும் அழகாக அடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை நமக்கு  பொறுமையாக  பிரித்து காண்பித்து  விளக்குகிறார்  அதன்  உரிமையாளர் திருமதி பிட்சுலக்ஷ்மி.




பட்ட படிப்பை முடித்து விட்டு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றிய  பிட்சுலக்ஷ்மி ஒரு கட்டத்தில் மற்றவர்களுக்காக செலவிடும் தன் திறமையையும் உழைப்பையும் தனக்கே செலவிட்டு உழைப்பாளி என்பதிலிருந்து
முதலாளி என்னும் நிலைக்கு உய்ரந்ததாக கூறுகிறார்.  

திறமையும், எளிமையும், சுறுசுறுப்பும் கொண்டிறுக்கும் இவர் நடிகர் டெல்லி கணேஷின் மகள்!.  
      
          


            

Monday, August 30, 2010

madarasa pattinum

எல்லோராலும் பெரிதும் புகழப்பட்ட மதராசபட்டினம் திரைப்படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன். technical சிறப்பு  மட்டும் கருத்தில் கொண்டு பார்த்தால் மதராசபட்டினம் ஒரு நல்ல படம்தான்.
கதை நடக்கும் காலம் 1946-1947. அந்த சமயத்தில் மதராஸ் நன்கு வளர்ந்து விட்ட ஒரு பெரிய நகரம். அத்தனை பெரிய நகரத்திற்கு ஒரே ஒரு வண்ணாந்துறை மட்டும்தானா இருந்திருக்கும்? வாஷர்மேன்பேட்டிலிருந்து அடையாறு வரை சென்று துணிகளை துவைக்க  எடுத்து வரவேண்டும் என்பது சற்று இடிக்கிறதே? தவிர அது என்ன டிரஸ்?  லகானிலிருந்தா? அதுவே தப்பு.. நம் ஊரில் உழைப்பாளிகள் எப்போது மூல கச்சம்  அணிந்து குடிமியும் இல்லாமல் க்ராப்பூம் இல்லாமல் ஒரு ஹேர் ஸ்டைலோடு இருந்திருக்கிறார்கள்?
மிகப்பெரிய ப்ளா க்ளைமாக்ஸ் நடக்கும்  காலம்....நாம் அறிந்தவரை இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு முதல்நாள் நாடே திருவிழா கோலம் பூண்டிருந்தது என்பதுதான்.  வெறிச்சோடிய சென்றலும் கூவம் கால்வாய் பகுதிகளும் யதார்தத்திற்கு வெகு தூரம்.        
ஆர்யாவைத்தவிர மற்ற அணைவரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். எனிவே குட் அட்டெம்ப்ட்!