கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, March 2, 2018

முதல் நாள் இன்று...

முதல் நாள் இன்று...

கிரீஷுக்கு ஒரே சந்தோஷம். அவர்களுடைய குழந்தைக்கு நகரத்தின் மிகச் சிறந்த பள்ளியில் இடம் கிடைத்து விட்டது.  அந்தப் பள்ளியில் பிளே ஸ்கூலில் இடம் வாங்க வேண்டுமென்றால் அப்ளிகேஷன் தரப்படும் நாளுக்கு முதல் நாள் இரவே பெற்றோர்கள் வரிசையில் நிற்க தொடங்கி விடுவார்கள். விடிய விடிய வரிசையில் நின்று அப்ளிகேஷன் வாங்கியது ஒரு காலம். இப்போதெல்லாம் ஆன் லைனில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் மீண்டும் அணுக முடியாது. அப்படிப்பட்ட பள்ளியில் இடம் கிடைப்பது எவ்வளவு பெரிய விஷயம்!

பள்ளிக்கு பணம் கட்டிய பிறகு, குழந்தையிடம் தினசரி," நீ ஸ்கூலுக்கு போகணும், அங்கு உனக்கு நிறைய ஃப்ரண்ட்ஸ் இருப்பார்கள், ஜாலியா விளையாடலாம்" என்றெல்லாம் தினமும் சொல்லி தயார் படுத்தினார்கள். சில நாட்கள் "ஓகே" என்று கூறிய குழந்தை, சில நாட்கள் "வேண்டாம்", என்று அம்மாவை கட்டிக்க கொள்ளும். 

பள்ளி செல்வதற்காக, ஸ்கூல் பேக், டிஃபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில் ஷூ என்று ஒவ்வொன்றாய் வாங்கினார்கள். அப்போதெல்லாம் சந்தோஷமாக இருந்த தீப்தி, நாட்கள் நெருங்க நெருங்க, அழ ஆரம்பித்து விட்டாள். கிரீஷுக்கு அவளை எப்படி சமாதானப் படுத்துவது என்று தெரியவில்லை. 

ஸ்கூலுக்கு செல்ல வேண்டிய நாள் வந்தது. வழியெல்லாம் ஒரே அழுகை. பள்ளிக்கூட வாசலில் இவர்களை நிறுத்தி விட்டு, குழந்தையை இவர்களிடமிருந்து வாங்கி கொண்ட ஆயா அம்மாவும், ஒரு ஆசிரியையும்," நீங்க போய்டுங்க, நாங்க பாத்துக்கறோம்" என்றார்கள். பல குழந்தைகள் வீறிட்டு அழ, ஒரே களேபரம். தீப்தியும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் பெரிதாக அழ ஆரம்பித்தாள்.
குழந்தை ஸ்ரீஷா,"அம்மா அழாதம்மா, நான் சமத்தா இருப்பேன்" என்று அம்மா தீப்தியின் கண்களை துடைத்து விட்டது. 

"பாரு, குழந்தை அழாமல் இருக்கு, நீ அழற, எல்லோரும் உன்னை வேடிக்கை பார்க்கிறார்கள், கம் ஆன் " என்று கிரீஷ் தீப்தியை தேற்றி அழைத்துச் சென்றான்.    

Thursday, March 1, 2018

மாசி மகம்

மாசி மகம்

ஹிந்து மதம் ஒரு மனிதனுக்குரிய ஆன்மீக வளர்ச்சிக்கு தேவையான விஷையங்களை அந்தர்முக சாதனை, பகிர்முக சாதனை என இரண்டாகப் பிரிக்கிறது. அந்தர்முக சாதனை பிராணாயாமம், ப்ரித்யாகாரம், தாரணை,த்யானம்,சமாதி என விரிந்தால்  பகிர்முக  சாதனையில்  தினசரி வழிபாடு, தான தர்மங்கள் செய்தல், ஆலய தரிசனம், புனித நீராடுதல் என்பவை அடங்கும்.  





முக்கிய புண்ணிய நதிகளாக கருதப்படும் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி, போன்ற  நதிகளில் நீராடுவதும்,  ஒரு சில கோவில்களில் உள்ள குளங்களில்(உ,ம். மாமங்க குளம்,மற்றும் திரு நள்ளார் குளம்)   முழுகுவதும், சமுத்திரத்தில் ஸ்நானம் செய்வதும் சிறப்பானதாக கருதப்படுகின்றன. ஆனாலும் எல்லா சமுத்திரங்களும்   எல்லா நாட்களிலும் ஸ்நானம் செய்ய ஏற்றதாகது. ராமேஸ்வரம் தவிர மற்ற  கடல்களில்  குறிப்பிட்ட  நாட்களில்  மட்டும்தான் புனித நீராடலாம்  என்பது  சாத்திர  விதி.   அப்படிப்பட்ட  கடல் நீராடலுக்கு ஏற்ற சிறப்பான  நாள் மாசி மகம்! 



மாசி மாதத்தில் பௌர்ணமியும் மக நட்சத்திரமும் சேரும் நாளே மாசி மகம் ஆகும். சைவர்கள், வைணவர்கள், சாக்தர்கள்  ஆகிய  எல்லோருக்குமே  இது ஒரு சிறப்பான நாள் ஆகும்.

பிரளயத்திற்குப் பிறகு பிரபஞ்சத்தை படைக்க தேவையான பொருள்கள் அடங்கிய அமுத கலசத்தை சிவ பெருமான்  உடைத்து  பிரும்மாவிடம்  கொடுத்த நாள் மாசி மக திருநாள் ஆகும்.

திருவண்ணாமலையில் இருந்த   வல்லாளன்  என்னும்  அரசனுக்கு  குழந்தைகள் கிடையாது, பெரும்  சிவ பக்தனான அவன், தான் இறந்து  போனால்  தனக்கான  இறுதிச்  சடங்குகளைச் செய்ய ஒரு மகன்  இல்லையே  என வருந்த, சிவ பெருமான் அவனுக்கு முன் ஒரு சிறுவனாக  தோன்றி அவனுடைய இறுதிச் சடங்குகளை  தானே  செய்யவதாக  வாக்குறுதி அளித்தார். அந்த மன்னன் இறந்து போனது ஒரு மாசி மகமாக அமைய, சிவ பெருமான் அவனுக்குரிய  சம்ஸ்காரங்களை  கடற் கரையில்  செய்ததோடு அன்று கடலில் நீராடுபவர்களுக்கு முக்தி அளிப்தாகவும் அருளினார்.    

 மேலும் மீனவப்  பெண்ணாக பிறந்த பார்வதி தேவியை, யாராலும் கொல்ல முடியாத ராட்சச திமிங்கலத்தை  மீனவ தோற்றத்தில் வந்த  சிவ பெருமான் கொல்வதன் மூலம்    மணம் முடித்த நாளும் ஒரு மாசி  மகத்திலேதான்!(திரு விளையாடல் படத்தில் ஜிங்கு சக்கு.. ஜிங்கு சக்கு என்று  பின்னணி     ஒலிக்க  சிவாஜி  கணேசன்  நடந்தது  நினைவிற்கு  வருகிறதா?அதே தான்...!)  பராசக்தியே தனக்கு மகளாகப் பிறந்தது குறித்து மகிழ்ந்த மீனவ குல அரசன், சிவனும் பார்வதியும் மணக்கோலத்தில் தனக்கு காட்சி தந்தது போல உலக மக்கள் அத்தனை பேருக்கும் காட்சி தர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள மாசி மகத்தன்று பார்வதி தேவியோடு சிவ பெருமானும் கடற் கரையில் எழுந்தருள்கிறார்!



வைணவ சம்பிரதாயத்தில் சமுத்திர ராஜன் மகளான லட்சுமி தேவியை திருமால் மணந்து கொண்டதால், சமுத்திர ராஜன் திருமாலுக்கு  மாமனாராகிறார்! 
தொலை  தூரத்தில்  மகளை  திருமணம்  செய்து கொடுக்கும்  எல்லா  தந்தையரையும்  போலவே கடலரசனும் தான் தான் மகளையும்  மருமகனையும்  எப்போது பார்ப்பது என 
கேட்க, ஒவ்வொரு வருடமும் மாசி மகத்தன்று தான் கடற் கரைக்கு வந்து காட்சி தருவேன் என பெருமாள் வாக்களித்து, அப்படியே கடற் கரைக்கு எழுந்தருளுகிறார். எனவேதான் கடற்கரையை ஒட்டிய நகரங்களில் உள்ள பெருமாள் கோவில்களிலெல்லாம் அன்று பெருமாள் கடற் கரைக்குச் செல்வதும் தீர்த்தவாரி கொண்டருள்வதும் இன்றும் வழக்கமாக உள்ளன.      

இந்த வருடம் மாசி மகம் 18 .02 .2011  வெள்ளைக் கிழமையன்று வந்தது. நானும் என மகளும் கடற் கரையை(மெரினா பீச்) அடைந்த பொழுது கலை மணி 6:30 . அப்பொழுதே  அங்கு  பலர்  பெருமாளின்  வருகைக்காக  காத்திருந்தனர். முதலில் எழும்பூரிலிருந்து  ஸ்ரீனிவாச பெருமாள் எழுந்தருளினார்.

கண்ணகி சிலை சிக்னலுக்கு எதிரே பெருமாளின் குடை தெரிந்தது, அதுவரை  அமர்ந்து கொண்டிருந்த மாமிகள் பரபரவென்று பெருமாளை  வரவேற்க  பெரிதாகவும் அழகாகவும் கோலங்கள் போட்டனர்.





பின்னர்  பெருமாளோடு பக்தர்களும் கடலுக்குச் சென்று நீராடினர். அதன் பின்னர் திருவல்லிகேணியில் இருந்து பார்த்தசாரதி பெருமாள் கடற்கரைக்கு  எழுந்தருளினார்.  அவரோடும்  தீர்த்தவாரியில்  உற்சாகமாக  பங்கெடுத்துக்   கொண்டோம்.  


  
அதன் பின்னர் திருவடீஸ்வரன்பேட்டையில்ருந்து  கடற் கரைக்கு வந்த சிவன் பார்வதி தேவியை தரிசனம் செய்து கொண்டு உடல்   முழுக்க நர நரத்த மணலோடும், மனம் முழுக்க கொப்பளித்த சந்தோஷத்தோடும்  வீடு வந்தோம்.  




Monday, February 26, 2018

கதை அல்ல நிஜம்!

கதை அல்ல நிஜம்!

"சினிமாவைப் பார்த்துதான் உலகம் கெட்டுப்போகிறது," என்று பொது மக்களும், "உலகத்தில் நடப்பதைத்தான் நாங்கள் காட்டுகிறோம்" என்று திரை உலகத்தினரும் ஒருவரை ஒருவர் கை காட்டுவது வழக்கம்தான் என்றாலும், திரைப்படங்களில் நாம் பார்க்கும் சில சம்பவங்கள் நம் வாழ்க்கையிலோ அல்லது நம்மை சுற்றி இருப்பவர்கள் வாழ்க்கையிலோ நடப்பதைப்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதே போல திரைப் படங்களில் சித்தரிக்கப்படும் சில கதை மாந்தர்களைப் போல நிஜ வாழ்க்கையிலும் நாம் சிலரை பார்க்க முடியும்.

அப்படிப்பட்ட மனிதர்களையும் சம்பவங்களையும் அலசுவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். 

எனக்கு ஒரு தோழி இருந்தாள். கொஞ்சம் குறும்புக்காரி. என் அக்காவின் வகுப்புத் தோழி. பின்னாளில் எனக்கும் நட்பானாள். பெண்களும் ஆண்களும் சகஜமாக பழகாத அந்தக் காலத்திலேயே பசங்களோடு சுலபமாக பழகுவாள். அப்போதெல்லாம் ஸ்ரீரங்கத்தில் ரெயில் நிலையத்தை ஒட்டி ரயில்வே க்ராஸிங்கில்  மேம்பாலம் கிடையாது. ரயில்வே கேட்டுதான். ரயில்வே கேட் மூடப் பட்டு விட்டால் பேருந்துகள் கேட் திறப்பதற்காக காத்திருக்கும். passenger train இல் தொத்திக் கொண்டு செல்லும் விடலைப் பையன்கள் பேருந்தில் உட்காந்திருக்கும் இளம் பெண்களைப் பார்த்து கை அசைப்பார்கள். அந்த சமயம் பேருந்தில் என் தோழி இருந்தால், டாடா காட்டும் பையன்களுக்கு இவளும் பதிலுக்கு டாடா காண்பிப்பாள். "ஏன் இப்படி செய்கிறாய்?" என்றால், "ஏதோ அவர்களுக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கட்டுமே" என்பாள். 

அவள் அவளை விட ஒரு வயது இளைய பையனை காதலித்தாள். இருவரும் பிராமணர்கள் என்றாலும், வேறு வேறு பிரிவினர் என்பதால் இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தது. அவளுடைய காதலன் பம்பாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு முறை விடுப்பில் வந்த பொழுது, இவள் வீட்டு சாமி அறையில், ஒரு மஞ்சள் கயிற்றில் மஞ்சளைக் கோர்த்து அவனை விட்டு கட்ட சொல்லி விட்டாள். என்னிடம் அதைக் கூறிய பொழுது, "இது என்ன பைத்தியக்காரத்தனம்? இது என்ன மாதிரி திருமணம்? ஒருவர் கூட சாட்சிக்கு இல்லாத இந்த திருமணம் எப்படி செல்லும்?" என்று கேட்டதற்கு, "கடவுள் சாட்சியாக அவன் என் கழுத்தில் தாலி  கட்டியிருக்கிறானே..?" என்றாள்.  அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு முறை என் வீட்டிற்க்கு வந்தாள். அவளிடம் என் அம்மா," என்ன .... எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போற?" என்று கேட்டார். (ஏனென்றால் அப்போது அவள் வாதை ஒத்த பெண்களுக்கு திருமணம் ஆகி குழந்தை கூட பிறந்து விட்டது. ஏன் எனக்கே திருமணமாகி விட்டது).  அவள் சற்றும் அசராமல், "எனக்கு கல்யாணம் ஆயிடுத்து மாமி, நான் சுமங்கலி" என்றதும், என் அம்மா, "பார்த்தியாடி, இவளுக்கு எல்லாம் விளையாட்டுதான்" என்றார். எனக்கு ஒரே கிலி, நான் சற்று மறைவாக,வெளிச்சம் என் முகத்தில் விழாதபடி நின்று கொண்டிருந்ததால், நான் முழித்த முழியை என் அம்மாவால் பார்க்க முடியவில்லை, நான் தப்பித்தேன். 



அலை பாயுதே படத்தில் மாதவனும் ஷாலினியும் இரு வீட்டுக்கும் தெரியாமல் ஒரு கோவிலில் கல்யாணம் செய்து கொள்ள போவார்கள்  அப்போது மாதவன் குடும்ப நண்பரான ஒரு பெண்மணி,  "கார்த்திக், என்ன கோவிலுக்கெல்லாம் வந்திருக்க?"என்று கேட்பார், உடனே, மாதவன், "இங்க ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்" என்று சீரியசாக கூற அந்தப் பெண்மணியோ அதை நம்பாமல்,"உனக்கு எல்லாம் விளையாட்டுதான்" என்பார் 

அலை பாயுதே படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் குறிப்பாக இந்த காட்சியை பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு என் தோழிதான் நினைவுக்கு வருவாள்.  'அவள் அப்படித்தான்' படம் பார்த்த பொழுதும்  இவள் ஞாபகம்தான் வந்தது.  

எந்தப் படம் என்று தெரியவில்லை, அந்தப் படத்தின் காமெடி மிகவும் பிரபலம். காலையில் பிரமாதமாக பூஜை செய்து, பெற்றோர்கள் காலில் விழுந்து வணங்கும் வடிவேலு, மாலை நன்றாக குடித்து விட்டு வந்து அதே பெற்றோர்களை துவைத்து எடுப்பார். கேட்டால், "அது நல்ல வாய், இது நாற வாய்" என்பார்.



என் சகோதரியின் வீட்டிற்கு பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிலிருந்து காலையில், கணகணவென்று மணி அடித்து "ஓம், ஸ்ரீ மாதா மஹாராக்னி,ஸ்ரீமத் சிம்ஹாசனேஸ்வரி .." என்று பலமாக சப்தம் கேட்கும். இரவில் அதே குரல், கன்னா பின்னாவென்று கெட்ட வார்த்தைகளை இரைக்கும். சில சமயம் பெற்றோர்கள் அடி வாங்கும் ஓசை கூட கேட்கும். மேற்படி படத்தை இயக்கிய இயக்குனர் இப்படிப்பட்ட காட்சிகளை பார்த்திருப்பாரோ?

எங்கள் நெருங்கிய உறவில் ஒரு பையன் தன் முப்பத்திரெண்டாவது வயதில் இளம்  மனைவியையும், மூன்று வயது மகனையும் விட்டு விட்டு, அகாலமாக இறந்து போனான். குடும்பமே அந்த இழப்பை தாங்க முடியாமல் கதறிக் கொண்டிருந்தது. அவனுடைய குழந்தையோ வீட்டிற்கு வருபவர்களிடம் எல்லாம்,"என்னோட அப்பா செத்துப் போய்ட்டா.." என்று  தான் என்ன சொல்கிறோம் என்பது புரியாமலேயே சொல்லி எல்லோருடைய துக்கத்தையும் அதிகப் படுத்திக் கொண்டிருந்தது. 

நாயகன் திரைப்படத்தில் கதா நாயகனால் கொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரின் மன நிலை பிறழ்ந்த மகன் வீட்டிற்கு வருபவர்களிடம் எல்லாம்," மேரா பப்பா மர் கயா" என்று சொல்லும் அந்த காட்சியை காண நேர்ந்தால் வயிற்றில் கத்தி சொருகப் படும் வேதனையை உணருவேன்.

காட்சிகள் இவை என்றால், நிறைய நிஜ மாந்தர்கள் சினிமா பாத்திரங்களை நினைவூட்டுவார்கள். என் மருமகளை பாலசந்தர் பட ஹீரோயின் என்போம். பாலசந்தரின் படங்களில் மலையாளம் பேசும் ஒரு பாத்திரம் வரும். நிறைய படங்களில் கதாநாயகி திடீர் திடீரென்று ஹிந்தியில் பேசுவாள். என் மருமகள் டில்லியில் பிறந்து வளர்ந்ததால், என்னதான் வீட்டில் பேசும் மொழி தமிழ் என்றாலும், அவளுக்கு சரளமாக பேச வேண்டுமென்றால் ஹிந்தியைத்தான் நாடுவாள். இதைப் பற்றி என் மகன், "கோபமாக இருக்கும் பொழுது ஹிந்தியில் பேசுவாள், அதானல் கோவமா இருக்கானு புரிந்து விடும்" என்பான். எனவே கே.பி.பட ஹீரோயின். 

என்னுடைய சின்னஞ்சிறு வயதில் நான் பார்த்த படம் 'சின்னஞ் சிறு உலகம்'. அந்தப் படத்தி நடித்தவர்கள் யார்? என்ன கதை போன்ற விஷயங்கள் எனக்கு நினைவில் இல்லை. ஒரே ஒரு காட்சி மட்டும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்தப் படத்தில் ஒரு திருமணத்திற்குச் செல்லும்  நாகேஷ் அழ ஆரம்பிப்பார். அடக்க முடியாமல் அவர் அழுவதைப் பார்த்த எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக அழ ஆரம்பித்து விடுவார்கள். இறுதியில் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருபவர்களும் அதை கீழே வைத்துவிட்டு அழ ஆரம்பித்து விடுவார்கள். கடைசியில் யாரோ ஒருவர் நாகேஷிடம்,"ஏன் அழுதாய்?" என்று கேட்பார். அவர் அதற்கு," கல்யாணப் பெண்ணுக்கு அருகில் குத்து விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது, எங்கேயாவது அந்தப் பெண்ணின் புடவைத்த தலைப்பு பறந்து அந்த விளக்கில் பட்டு, புடவை பிடித்துக் கொண்டு, அந்த நெருப்பு பெண்ணிடமிருந்து மாப்பிள்ளைக்கு பரவி, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் பரவி விட்டால் என்ன செய்வது என்று நினைத்தேன், அழுகை வந்து விட்டது" என்பார். இதைப் போலவே மிகையாக கற்பனை செய்து கவலைப் படும் மனிதர்களை நான் அறிவேன். அப்படிப்பட்டவர்களை 'சின்னஞ் சிறு உலகம் நாகேஷ் என்போம். 

தில்லானா மோகனாம்பாளில் நாகேஷ் ஏற்றிருந்த கதா பாத்திரமான சவடால் வைத்தி போல பல பேரை நிஜத்தில் பார்த்ததுண்டு. 



மணல் கயிறு படத்தில் விசு ஏற்ற கதா பாத்திரமான நாரதர் நாயுடு போல பல திருமணங்களை செய்து வைத்திருக்கிறார் என் அம்மா. அதைப் போல பொய்கள் சொல்லி அல்ல. பெண் வீட்டாரைப் பற்றிய நல்ல விஷயங்களை மட்டும் பிள்ளை வீட்டாரிடமும், பிள்ளை வீட்டாரைப் பற்றிய நல்ல விஷயங்களை மட்டும் பெண் வீட்டாரிடமும் சொல்லி, இரு வீட்டாரிடமும் இருக்கும் அதீத எதிர்பார்ப்புகளை பேசி சரி செய்து, திருமணத்தை நடத்தி வைப்பார். திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனை வந்தால், அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு என் அம்மாவை குற்றம் சாட்டுவார்கள்(மணல் கயிறு க்ளைமாக்ஸ்). என் அம்மாவோ அதை எல்லாம்  பொருட்படுத்தாமல், வேறு யாராவது "என் பெண்ணுக்கு/பையனுக்கு நல்ல வரன் இருந்தால் சொல்லுங்களேன்" என்றால் உடனே அடுத்த கல்யாணத்தை நடத்தி வைக்க தயாராகி விடுவார். ஆனால் சம்பந்தப்பட்ட பெண்கள் , என் அம்மாவிடம் அதற்காக நன்றியோடு  இருந்திருக்கிறார்கள்.  



'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'  படத்தில் ஐஸ்வர்யா ராய் ஏற்றிருந்த கதாபாத்திரம் என்னை நினைவூட்டியதாக என் கணவர் சொன்னார். அதில் அப்பாஸ், பாரதிதாசன் பாடலை,பாரதியார் பாடல் என்று கூறி விட, அவர் கூறியது தவறு என்று புத்தகத்தை எடுத்துக் காட்டி நிரூபிப்பார் ஐஸ். என்னிடமும் அந்த அசட்டுத்தனம் உண்டு.  

"யாரோ, ஏதோ சொல்கிறார்கள், சொல்லிவிட்டு போகட்டுமே.."என்று என்னால் விட முடியாது.  தன் தோல்வியால்  தளராத விக்ரமாதித்யன் போல பல முறை தோற்றாலும் மீண்டும் மீண்டும் இந்த குணத்தை மாற்றிக் கொள்ள முயற்சி செய்து கொண்டேதான் இருக்கிறேன். அடுத்த ஜென்மத்தில் அந்த டிப்ளமசி கை கூடலாம்!!