Monday, February 26, 2018

கதை அல்ல நிஜம்!

கதை அல்ல நிஜம்!

"சினிமாவைப் பார்த்துதான் உலகம் கெட்டுப்போகிறது," என்று பொது மக்களும், "உலகத்தில் நடப்பதைத்தான் நாங்கள் காட்டுகிறோம்" என்று திரை உலகத்தினரும் ஒருவரை ஒருவர் கை காட்டுவது வழக்கம்தான் என்றாலும், திரைப்படங்களில் நாம் பார்க்கும் சில சம்பவங்கள் நம் வாழ்க்கையிலோ அல்லது நம்மை சுற்றி இருப்பவர்கள் வாழ்க்கையிலோ நடப்பதைப்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதே போல திரைப் படங்களில் சித்தரிக்கப்படும் சில கதை மாந்தர்களைப் போல நிஜ வாழ்க்கையிலும் நாம் சிலரை பார்க்க முடியும்.

அப்படிப்பட்ட மனிதர்களையும் சம்பவங்களையும் அலசுவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். 

எனக்கு ஒரு தோழி இருந்தாள். கொஞ்சம் குறும்புக்காரி. என் அக்காவின் வகுப்புத் தோழி. பின்னாளில் எனக்கும் நட்பானாள். பெண்களும் ஆண்களும் சகஜமாக பழகாத அந்தக் காலத்திலேயே பசங்களோடு சுலபமாக பழகுவாள். அப்போதெல்லாம் ஸ்ரீரங்கத்தில் ரெயில் நிலையத்தை ஒட்டி ரயில்வே க்ராஸிங்கில்  மேம்பாலம் கிடையாது. ரயில்வே கேட்டுதான். ரயில்வே கேட் மூடப் பட்டு விட்டால் பேருந்துகள் கேட் திறப்பதற்காக காத்திருக்கும். passenger train இல் தொத்திக் கொண்டு செல்லும் விடலைப் பையன்கள் பேருந்தில் உட்காந்திருக்கும் இளம் பெண்களைப் பார்த்து கை அசைப்பார்கள். அந்த சமயம் பேருந்தில் என் தோழி இருந்தால், டாடா காட்டும் பையன்களுக்கு இவளும் பதிலுக்கு டாடா காண்பிப்பாள். "ஏன் இப்படி செய்கிறாய்?" என்றால், "ஏதோ அவர்களுக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கட்டுமே" என்பாள். 

அவள் அவளை விட ஒரு வயது இளைய பையனை காதலித்தாள். இருவரும் பிராமணர்கள் என்றாலும், வேறு வேறு பிரிவினர் என்பதால் இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தது. அவளுடைய காதலன் பம்பாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு முறை விடுப்பில் வந்த பொழுது, இவள் வீட்டு சாமி அறையில், ஒரு மஞ்சள் கயிற்றில் மஞ்சளைக் கோர்த்து அவனை விட்டு கட்ட சொல்லி விட்டாள். என்னிடம் அதைக் கூறிய பொழுது, "இது என்ன பைத்தியக்காரத்தனம்? இது என்ன மாதிரி திருமணம்? ஒருவர் கூட சாட்சிக்கு இல்லாத இந்த திருமணம் எப்படி செல்லும்?" என்று கேட்டதற்கு, "கடவுள் சாட்சியாக அவன் என் கழுத்தில் தாலி  கட்டியிருக்கிறானே..?" என்றாள்.  அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு முறை என் வீட்டிற்க்கு வந்தாள். அவளிடம் என் அம்மா," என்ன .... எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போற?" என்று கேட்டார். (ஏனென்றால் அப்போது அவள் வாதை ஒத்த பெண்களுக்கு திருமணம் ஆகி குழந்தை கூட பிறந்து விட்டது. ஏன் எனக்கே திருமணமாகி விட்டது).  அவள் சற்றும் அசராமல், "எனக்கு கல்யாணம் ஆயிடுத்து மாமி, நான் சுமங்கலி" என்றதும், என் அம்மா, "பார்த்தியாடி, இவளுக்கு எல்லாம் விளையாட்டுதான்" என்றார். எனக்கு ஒரே கிலி, நான் சற்று மறைவாக,வெளிச்சம் என் முகத்தில் விழாதபடி நின்று கொண்டிருந்ததால், நான் முழித்த முழியை என் அம்மாவால் பார்க்க முடியவில்லை, நான் தப்பித்தேன். அலை பாயுதே படத்தில் மாதவனும் ஷாலினியும் இரு வீட்டுக்கும் தெரியாமல் ஒரு கோவிலில் கல்யாணம் செய்து கொள்ள போவார்கள்  அப்போது மாதவன் குடும்ப நண்பரான ஒரு பெண்மணி,  "கார்த்திக், என்ன கோவிலுக்கெல்லாம் வந்திருக்க?"என்று கேட்பார், உடனே, மாதவன், "இங்க ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்" என்று சீரியசாக கூற அந்தப் பெண்மணியோ அதை நம்பாமல்,"உனக்கு எல்லாம் விளையாட்டுதான்" என்பார் 

அலை பாயுதே படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் குறிப்பாக இந்த காட்சியை பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு என் தோழிதான் நினைவுக்கு வருவாள்.  'அவள் அப்படித்தான்' படம் பார்த்த பொழுதும்  இவள் ஞாபகம்தான் வந்தது.  

எந்தப் படம் என்று தெரியவில்லை, அந்தப் படத்தின் காமெடி மிகவும் பிரபலம். காலையில் பிரமாதமாக பூஜை செய்து, பெற்றோர்கள் காலில் விழுந்து வணங்கும் வடிவேலு, மாலை நன்றாக குடித்து விட்டு வந்து அதே பெற்றோர்களை துவைத்து எடுப்பார். கேட்டால், "அது நல்ல வாய், இது நாற வாய்" என்பார்.என் சகோதரியின் வீட்டிற்கு பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிலிருந்து காலையில், கணகணவென்று மணி அடித்து "ஓம், ஸ்ரீ மாதா மஹாராக்னி,ஸ்ரீமத் சிம்ஹாசனேஸ்வரி .." என்று பலமாக சப்தம் கேட்கும். இரவில் அதே குரல், கன்னா பின்னாவென்று கெட்ட வார்த்தைகளை இரைக்கும். சில சமயம் பெற்றோர்கள் அடி வாங்கும் ஓசை கூட கேட்கும். மேற்படி படத்தை இயக்கிய இயக்குனர் இப்படிப்பட்ட காட்சிகளை பார்த்திருப்பாரோ?

எங்கள் நெருங்கிய உறவில் ஒரு பையன் தன் முப்பத்திரெண்டாவது வயதில் இளம்  மனைவியையும், மூன்று வயது மகனையும் விட்டு விட்டு, அகாலமாக இறந்து போனான். குடும்பமே அந்த இழப்பை தாங்க முடியாமல் கதறிக் கொண்டிருந்தது. அவனுடைய குழந்தையோ வீட்டிற்கு வருபவர்களிடம் எல்லாம்,"என்னோட அப்பா செத்துப் போய்ட்டா.." என்று  தான் என்ன சொல்கிறோம் என்பது புரியாமலேயே சொல்லி எல்லோருடைய துக்கத்தையும் அதிகப் படுத்திக் கொண்டிருந்தது. 

நாயகன் திரைப்படத்தில் கதா நாயகனால் கொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரின் மன நிலை பிறழ்ந்த மகன் வீட்டிற்கு வருபவர்களிடம் எல்லாம்," மேரா பப்பா மர் கயா" என்று சொல்லும் அந்த காட்சியை காண நேர்ந்தால் வயிற்றில் கத்தி சொருகப் படும் வேதனையை உணருவேன்.

காட்சிகள் இவை என்றால், நிறைய நிஜ மாந்தர்கள் சினிமா பாத்திரங்களை நினைவூட்டுவார்கள். என் மருமகளை பாலசந்தர் பட ஹீரோயின் என்போம். பாலசந்தரின் படங்களில் மலையாளம் பேசும் ஒரு பாத்திரம் வரும். நிறைய படங்களில் கதாநாயகி திடீர் திடீரென்று ஹிந்தியில் பேசுவாள். என் மருமகள் டில்லியில் பிறந்து வளர்ந்ததால், என்னதான் வீட்டில் பேசும் மொழி தமிழ் என்றாலும், அவளுக்கு சரளமாக பேச வேண்டுமென்றால் ஹிந்தியைத்தான் நாடுவாள். இதைப் பற்றி என் மகன், "கோபமாக இருக்கும் பொழுது ஹிந்தியில் பேசுவாள், அதானல் கோவமா இருக்கானு புரிந்து விடும்" என்பான். எனவே கே.பி.பட ஹீரோயின். 

என்னுடைய சின்னஞ்சிறு வயதில் நான் பார்த்த படம் 'சின்னஞ் சிறு உலகம்'. அந்தப் படத்தி நடித்தவர்கள் யார்? என்ன கதை போன்ற விஷயங்கள் எனக்கு நினைவில் இல்லை. ஒரே ஒரு காட்சி மட்டும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்தப் படத்தில் ஒரு திருமணத்திற்குச் செல்லும்  நாகேஷ் அழ ஆரம்பிப்பார். அடக்க முடியாமல் அவர் அழுவதைப் பார்த்த எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக அழ ஆரம்பித்து விடுவார்கள். இறுதியில் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருபவர்களும் அதை கீழே வைத்துவிட்டு அழ ஆரம்பித்து விடுவார்கள். கடைசியில் யாரோ ஒருவர் நாகேஷிடம்,"ஏன் அழுதாய்?" என்று கேட்பார். அவர் அதற்கு," கல்யாணப் பெண்ணுக்கு அருகில் குத்து விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது, எங்கேயாவது அந்தப் பெண்ணின் புடவைத்த தலைப்பு பறந்து அந்த விளக்கில் பட்டு, புடவை பிடித்துக் கொண்டு, அந்த நெருப்பு பெண்ணிடமிருந்து மாப்பிள்ளைக்கு பரவி, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் பரவி விட்டால் என்ன செய்வது என்று நினைத்தேன், அழுகை வந்து விட்டது" என்பார். இதைப் போலவே மிகையாக கற்பனை செய்து கவலைப் படும் மனிதர்களை நான் அறிவேன். அப்படிப்பட்டவர்களை 'சின்னஞ் சிறு உலகம் நாகேஷ் என்போம். 

தில்லானா மோகனாம்பாளில் நாகேஷ் ஏற்றிருந்த கதா பாத்திரமான சவடால் வைத்தி போல பல பேரை நிஜத்தில் பார்த்ததுண்டு. மணல் கயிறு படத்தில் விசு ஏற்ற கதா பாத்திரமான நாரதர் நாயுடு போல பல திருமணங்களை செய்து வைத்திருக்கிறார் என் அம்மா. அதைப் போல பொய்கள் சொல்லி அல்ல. பெண் வீட்டாரைப் பற்றிய நல்ல விஷயங்களை மட்டும் பிள்ளை வீட்டாரிடமும், பிள்ளை வீட்டாரைப் பற்றிய நல்ல விஷயங்களை மட்டும் பெண் வீட்டாரிடமும் சொல்லி, இரு வீட்டாரிடமும் இருக்கும் அதீத எதிர்பார்ப்புகளை பேசி சரி செய்து, திருமணத்தை நடத்தி வைப்பார். திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனை வந்தால், அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு என் அம்மாவை குற்றம் சாட்டுவார்கள்(மணல் கயிறு க்ளைமாக்ஸ்). என் அம்மாவோ அதை எல்லாம்  பொருட்படுத்தாமல், வேறு யாராவது "என் பெண்ணுக்கு/பையனுக்கு நல்ல வரன் இருந்தால் சொல்லுங்களேன்" என்றால் உடனே அடுத்த கல்யாணத்தை நடத்தி வைக்க தயாராகி விடுவார். ஆனால் சம்பந்தப்பட்ட பெண்கள் , என் அம்மாவிடம் அதற்காக நன்றியோடு  இருந்திருக்கிறார்கள்.  'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'  படத்தில் ஐஸ்வர்யா ராய் ஏற்றிருந்த கதாபாத்திரம் என்னை நினைவூட்டியதாக என் கணவர் சொன்னார். அதில் அப்பாஸ், பாரதிதாசன் பாடலை,பாரதியார் பாடல் என்று கூறி விட, அவர் கூறியது தவறு என்று புத்தகத்தை எடுத்துக் காட்டி நிரூபிப்பார் ஐஸ். என்னிடமும் அந்த அசட்டுத்தனம் உண்டு.  

"யாரோ, ஏதோ சொல்கிறார்கள், சொல்லிவிட்டு போகட்டுமே.."என்று என்னால் விட முடியாது.  தன் தோல்வியால்  தளராத விக்ரமாதித்யன் போல பல முறை தோற்றாலும் மீண்டும் மீண்டும் இந்த குணத்தை மாற்றிக் கொள்ள முயற்சி செய்து கொண்டேதான் இருக்கிறேன். அடுத்த ஜென்மத்தில் அந்த டிப்ளமசி கை கூடலாம்!!36 comments:

 1. இனிய தொகுப்பு. சுவாரஸ்யமான விவரங்கள்.

  ReplyDelete
 2. நல்லதொரு தொகுப்பு. பல கேரக்டர்கள் இங்கே - சினிமா போலவே!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட். நன்றி.

   Delete
 3. சுவராஸ்யமாக பல விஷயங்களை சொல்லி சென்றவிதம் மிக அருமை...

  ReplyDelete
 4. தொகுப்பு அலசிய விதம் நன்று.

  ReplyDelete
 5. ஒவ்வொன்றும் அருமை...ரசித்தேன்

  ReplyDelete
 6. நல்லாவே சொல்லியிருக்கீங்க. முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா என்று சொல்லிவருவதைப் போலத்தான் இதுவும். கதைக்குக் கதை மாந்தர்கள் இப்படித்தான் கிடைக்கிறார்கள்...

  கீதா: பானுக்கா அதே க்ருத்துடன்....நாங்க அடிக்கடி கேலி செய்வது காலையில் பூசை இரவு குடித்துவிட்டு ஆர்பாட்டம் செய்பவர்களை...."காலையிலயும் பட்டை....ராத்திரியும் பட்டை...காலைல நெத்தில பட்டை....ராத்திரியான வாயில பட்டை....எனக்கென்னவோ சினிமா பாத்து கெடறா மாதிரி தெரியலை...இங்க நடக்கறதைத்தான்...அது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்...அதையே சினிமாவுல நிறைய பேருக்கு அதுவும் விஷுவல் எஃபெக்டோடு சொல்லறாங்கனு மாதிரி தோனும்...அதனால தெரியாதவங்களும் தெரிஞ்சு கெட்டு போறாங்கனு சொல்லலாம்...மத்தபடி எல்லாமே நடப்பதுதான் என்றுதான் எனக்குத் தோன்றும்.

  நல்லாருக்கு பானுக்கா..

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசி.
   நன்றி துளசி.

   எதையுமே முழுமையாக கற்பனை செய்து எழுத முடியாது. பார்ப்பதை கொஞ்சம் கற்பனை கலந்து எடுக்கிறார்கள். அது நீங்க சொல்லியிருப்பது போல பெரிய மீடியமாக இருப்பதால் தெரியாதவர்களுக்கும் தெரிந்து விடுகிறது. நன்றி கீதா.

   Delete
 7. திரைப்படத்தில் வரும்
  பாத்திர அமைப்பை
  காத்திரமாகச் சொல்லி விட்டீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா!

   Delete
 8. கதை அல்ல நிஜம் என்று கூறி பல திரைப்படக்காட்சிகளைக் கூறி இருக்கிறீர்கள் ஒரு நிஜ நிகழ்ச்சியை மையமாக வைத்து ஒரு பதிவு எழுதீருந்தேன் தலைப்பு கதை அல்ல நிஜம்

  ReplyDelete
 9. // கதை அல்ல நிஜம் என்று கூறி பல திரைப்படக்காட்சிகளைக் கூறி இருக்கிறீர்கள் // என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று புரியவில்லை. தலைப்பில் பொருள் குற்றம் உள்ளது என்கிறீர்களா?
  நீங்கள் எழுதியிருந்த கதை அல்ல நிஜம், நான் படித்ததில்லை. வருகைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு திரை நிகழ்ச்சிகளே அதிகம்கண்ணில் பட்டது எதையும் குற்றம் என்று சொல்லவில்லை

   Delete
 10. சினிமா காட்சிகளுக்கேற்ப நிஜக் காட்சிகளா, இல்லை நிஜ காட்சிகளுக்கேற்ப சினிமா காட்சிகளா என்று பிரித்துப் பார்க்க முடியாத பின்னல்கள்.

  இரண்டாவது தான் என்று நீங்கள் சொல்லியிருக்கக் கூடாது.
  வாசிக்கறவர்கள் அதைச் சொல்லுவார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதில் உள்ளார ஒரு சுகம் உண்டு. யாரும் சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. வாசிக்கிறவர்கள் ரசிக்காதவற்றை நாம் மட்டுமே ரசிக்கிற இன்னொரு சுகமும் எழுதுவோருக்கு உண்டு.

  ReplyDelete
 11. //இரண்டாவது தான் என்று நீங்கள் சொல்லியிருக்கக் கூடாது.//
  பாயிண்ட் நோட்டட். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 12. ஒரு பெண்மணி ஏடாகூட பொய் சொல்லி ஒருவரை திருமணம் செய்தார் .பொய்யான வாழ்க்கையும் நிலைக்கலை அது போல பல சீரியல்களில் இப்போ காட்டறாங்க இவர் செய்தது 70 களில் ..ஆனான் சீரியல் 90 களில்தான் இப்படி வில்லிங்களை காட்டுனாங்க.
  அலைபாயுதே வர கொஞ்சம் நாள் முன்னாடியே இந்த அவசர ரெஜிஸ்டர் அதன்பின்னும் அவசர வீட்டுக்கு தெரியாம ரெஜிஸ்டர் செய்யும் திருமணங்கள் அதிகரித்தன .பல விஷயங்கள் நம்மை சுற்றி நடப்பவையாத்தான் இருக்கும் .

  ReplyDelete
  Replies
  1. தி.ஜானகிராமன் மோக முள்ளில் முத்தாய்ப்பு வைத்திருந்தது போல இந்த பிரபஞ்சத்திற்கு எதுவுமே புதுசு இல்லைதான். எங்கோ ஒரு மூலையில் நடப்பதை சினிமா என்னும் மாஸ் மீடியா மூலம் காட்டுவதன் மூலம் அந்த விஷயங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைப்பது போல ஆகி விடுகிறது.

   Delete
 13. // யாரோ, ஏதோ சொல்கிறார்கள், சொல்லிவிட்டு போகட்டுமே.."என்று என்னால் விட முடியாது. ///

  ஹீஹீ :) என்கிட்டயும் கொஞ்சம் இருக்கு அதுவும் விடாம முந்தி சண்டை போடுவேன் fb ல ஒருகாலத்தில் .
  போன வருஷம் அங்கிருந்து வந்ததோடு சண்டைலாம் ஸ்டாப்ட் ..சில நேரங்களில் சில விஷயங்களை பார்த்தும் பார்க்காதுபோல் போறது நல்லதோனு தோணுது .
  ஐஸ் புக் எடுத்து டீட்டெயில்ஸ் காட்டுறமாதிரி நன் எல்லாத்தையும் ஒரு போட்டோவா க்ளிக்கி வச்சிப்பேன் .நேற்றுகூட கணவர் ஒரு முக்கியமான அரசாங்க கடிதம் என்றார் நான் இல்லை வந்ததுன்னு சொல்லி அது வந்த அன்று எடுத்த போட்டோவை காட்டினேன் .இறுதியில் கடிதத்தை அவர்தான் பத்திரமா பைல் செஞ்சு வச்சதை தேடி எடுத்தார் :)

  ReplyDelete
  Replies
  1. //நேற்றுகூட கணவர் ஒரு முக்கியமான அரசாங்க கடிதம் //வரவேயில்லை என்றார்

   Delete
  2. //நேற்றுகூட கணவர் ஒரு முக்கியமான அரசாங்க கடிதம் //வரவேயில்லை என்றார் நான் இல்லை வந்ததுன்னு சொல்லி அது வந்த அன்று எடுத்த போட்டோவை காட்டினேன்//

   சில சமயங்களில் இப்படி நல்லதும் நடக்கும், பல சமயங்களில் நட்பு முறியும், மறைமுக எதிரிகள் உருவாவார்கள், அதனால் விட்டு விடலாம்.

   வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஏஞ்சல்.

   Delete
 14. அழகிய தொகுப்பு...

  படங்கள் பார்த்து மக்கள் கெடுகிறார்கள் என்பதனை நான் மாத்தி யோசிக்கிறேன், மக்களின் வாழ்க்கையை எடுத்துத்தானே படமாக்குகிறார்கள்:)... எந்தப் படமாயினும் எப்போ ஒரு தடவை எங்கோ நடந்த ஒரு சம்பவத்தை மருவியதாகத்தானே இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. //மக்களின் வாழ்க்கையை எடுத்துத்தானே படமாக்குகிறார்கள்:).. //
   மக்கள் வாழ்க்கையை காமெடியாக காட்டுவது ஓ.கே. மோசமான முன்னுதாரணங்களாக இருக்கக் கூடாது.

   Delete
 15. அந்த அறையில் வைத்து தாலி கட்டிய தோழி இப்போ நலமாக இருக்கிறாவோ? இவர்களுக்கெல்லாம் என்ன தைரியம் பாருங்கோ... எந்த சட்சியும் இல்லை எனில்.. நான் எப்போ தாலி கட்டினேன் என ஈசியாக சொல்லிடுவார்களே சிலர்.. இப்போ அப்படித்தானே நிறைய நடக்குது. குழந்தையைக் கூட அது என் குழந்தை இல்லை என்கிறார்களே கர்ர்ர்:).

  அந்த 3 வயதுக் குழந்தை வீட்டுக்கு வருவோரிடம் சொல்லிய வசனம் நெஞ்சைப் பிசைகிறது... இப்படியான நேரம்தான் கடவுள் மேல் கோபம் வருகிறது.. கடவுள் இருக்கிறாரா இல்லையா எனக் கேட்கவேண்டும் போல் உள்ளது:(.

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்வது அதிரா? வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு விடை இல்லை.

   வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

   Delete
 16. ஆமாம் அந்த வீட்டுக்குள் தாலி கட்டிய பெண் என்ன ஆனார் ?

  ReplyDelete
 17. //என்கிட்டயும் கொஞ்சம் இருக்கு அதுவும் விடாம முந்தி சண்டை போடுவேன் fb ல ஒருகாலத்தில் .// இப்போவும் இருக்கு! ஆனால் இதனால் மனக்கசப்புகளே அதிகம் என்பதால் கூடியவரை குறைத்து வருகிறேன். தானாகத் தெரிஞ்சுக்கட்டும்னு விட்டுடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. வாங்க கீதா அக்கா. ஊருக்கெல்லாம் பொய் விட்டு வந்தாச்சா? பிரயாணமெல்லாம் சௌகரியமாக இருந்ததா?

   Delete
 18. அந்தப் பெண் அப்புறமாகக் கணவனோடு வாழ்ந்தாளா?

  ReplyDelete
  Replies
  1. ஏஞ்சல், அதிரா, கீதா அக்கா மூவருக்கும் சேர்த்து பதில் சொல்லி விடுகிறேன். நான் மஸ்கட் சென்ற பிறகு அவளோடு தொடர்பு விடுப்பு போய் விட்டது. அவள் அந்தப் பையனையே திருமணம் செய்து கொண்டாள் என்றும், அவளுடைய மைத்துனன் ஒரு குஜராத்தி பெண்ணை காதலித்த பொழுது இவள்தான் முன் நின்று அந்த திருமணத்தை நடத்தி வைத்தாள் என்றும் கேள்விப்பட்டேன்.

   Delete
 19. ஒவ்வொன்றிலும் நுணுக்கமான செய்தி. பாராட்டுகள்.

  ReplyDelete