Tuesday, October 9, 2018

நவராத்திரி - ஒரு முன்னோட்டம்

நவராத்திரி -  ஒரு முன்னோட்டம்

கொலுப்படி கட்டும் கணவர்,மகன்,மருமகள்


கொலுவேற காத்திருக்கும் பொம்மைகள்

எங்களுக்கு எங்கு இடம் கிடைக்குமோ?

95% சதவிகிதம் ரெடி. இன்னும் சீரியல் செட் போட வேண்டும்
ஆக, ஒரு வழியாக கொலுவிற்கு ரெடியாகி விட்டோம். கொலுவிற்கு டச் அப் வேலைகள் பாக்கி. சுண்டலுக்கு தேவையான சாமான்கள் வாங்கியாச்சு.  புடவைகள், ப்லௌஸ்கள் ரெடி, கிஃப்ட் ரெடி. ஆகவே மக்களே ஒன்பது நாட்களும் பாடுவதற்கு தோடி, கல்யாணி, காம்போதி, பைரவி, பந்துவராளி, நீலாம்பரி, புன்னாகவராளி, வசந்தா ராகங்களில் பாடல்கள் தயார் செய்து கொண்டு எங்கள் வீட்டுக்கு தாம்பூலம் வாங்கிக் கொள்ள வாங்கோ.

உங்கள் வரவை அன்போடும், ஆவலோடும், மிகுந்த எதிர்பார்ப்போடும் எதிர்பார்க்கும்.

பானுமதி வேங்கடேஸ்வரன்

Sunday, October 7, 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் - 8

பரவசம் தந்த நவ திருப்பதியும், 
நவ கைலாசமும் - 8 


சேரன்மாதேவியில் அம்மநாதரை தரிசனம் செய்த பிறகு குன்னத்தூர் நோக்கிச் சென்றோம். கோடகநல்லூரிலிருந்து குன்னத்தூர் வரை, ஒரு புறம் மலை, அதன் கீழ் பச்சை புல்வெளி என பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது

குன்னத்தூர் ராகு தலம்.மூலவர் கோத பரமேஸ்வரர், அம்மன் சிவகாமி அம்மன். குன்னத்தூர் என்னும் இந்த இடம் செங்காணி என்றும் அழைக்கப் படுகிறது. காணி என்றால் நிலம், இந்த ஊரின் நிலம் செம்மண்ணாக இருப்பதால் செங்காணி என்று பெயர்.செங்காணி என்பது பேச்சு வழக்கில் இப்போது சங்காணி என்று அழைக்கப் படுகிறது. 

இந்த ஊரில் ஒரு வருடத்திற்கு ஒரு பூ பூத்து, ஒரு காய் மட்டும் காய்க்கும் மரம் ஒன்று இருந்தது. அந்த காய் பழுத்த பிறகு அதை அந்த ஊர் அரசன் சாப்பிடுவான். ஒரு முறை அந்த பழம் மரத்திலிருந்து ஆற்றில் விழுந்து விட்டது. ஆற்றில் நீரெடுக்க வந்த ஒரு பெண்ணின் குடத்தினுள்  நீரோடு அந்தப் பழமும் சென்று விட்டது. பழத்தினை காணாத அரசன் அதைத்  தேட பணிக்கிறான். அரசனின் காவலர்கள் எல்லா வீடுகளிலும் புகுந்து அதை தேடி, இந்தப் பெண்ணின் வீட்டில் குடத்தினுள் அதைக் காண்கிறார்கள். அரசன் சரியாக விசாரிக்காமல் அவளை கழுவிலேற்ற உத்தரவிடுகிறான். சாகும் தருவாயில் அப்பெண், இந்த ஊரில் பசுக்களையும், பெண்களையும் தவிர மற்ற அனைத்தும் அழியட்டும் என்று சாபமிடுகிறாள். அதனால் இந்த ஊர் வளம் குன்றத்தொடங்கி விட்டது. ஊரில் நாகங்கள் பெருகின. அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சிவபெருமானை வழிபட சிவபெருமான் அந்த நாகங்களை எடுத்து தன்  உடல் மேல் போட்டுக் கொண்டு இந்த ஊரின் பாதிப்பை நீக்குகிறார். இன்றும் சிவலிங்கத்தின் நடுவில் பாம்பு இருப்பது போல் அமைப்பு உள்ளது. 

அதன் பிறகு பலரும் அறிந்த பாபநாசம் சென்றோம். நவ கைலாச கோவில்களில் முதலாவதான இக்கோவில் சூரிய க்ஷேத்திரமாக கருதப்படுகிறது. 


பாபநாசம் கோவில் கதவுகள் 

அழகான இயற்கை சூழலில் அமைந்திருக்கும் கோவில். கோவிலுக்கு எதிரே தாமிரபரணி ஆரவாரமாக ஓடுகிறது. அங்கிருக்கும் ஸ்னான கட்டத்தில் குளித்து விட்டு பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். வெகு அழகான கோவில். நாங்கள் சென்றது உச்சிகால பூஜை நேரம். அப்போதுதான்அபிஷேகம், அலங்காரம் எல்லாம் முடிந்து திரை விலக்கினார்கள், மூலவருக்கும், நடராஜருக்கும் காண்பித்த ஆரத்தியை வெகு அருகில் நின்று தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. இங்கிருக்கும் நடராஜரின் சபை 'புனுகு சபை' என்றழைக்கப் படுகிறது.

இந்திரன் சுக்கிராச்சாரியாரின் மகனான த்வஷ்டாவை தன் குருவாக ஏற்கிறான். ஒரு முறை அசுரர்களின் நலனுக்காக ஒரு யாகத்தை செய்வதை கண்டு கோபம் கொண்டு, அவனைக்  கொன்று விடுகிறான். அதனால் அவனை ப்ரம்மஹத்தி தோஷம் பீடிக்கிறது. அதை போக்கிக் கொள்ள அவன் பல சிவ ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்கிறான். இருந்தாலும் அவனுடைய தோஷம் நீங்கவில்லை. இறுதியில் குரு பகவான் அறிவுரைப்படி இங்கு வந்து வழிபாடு செய்ய, அவனுடைய பாவம் நீங்குகிறது. அதனால்தான் இவ்விடம் பாபநாசம் என்று அழைக்கப்படுகிறது. 

இங்கிருக்கும் நடராஜர் தைப்பூசத்தன்று பதஞ்சலி முனிவருக்கும், வ்யாக்ரபாதருக்கும் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் தரிசனம் தந்ததால் இப்போதும் தைப்பூச நாளில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுமாம்.

சிவ பார்வதி திருமணம் கைலாயத்தில் நடந்த பொழுது தேவர்கள் அனைவரும் கைலாயத்தில் குழுமி விட, பூமியின் வட பகுதி தாழ்ந்து, தென் பகுதி உயர்ந்து விடுகிறது. அப்போது பூமியை சமன் செய்ய அகத்தியரை தென் பகுதிக்கு அனுப்புகிறார் சிவபெருமான். பொதிகை மலைக்கு வரும் அகத்தியருக்கு தன்னால் அந்த மகத்தான திருமண காட்சியை காண முடியவில்லையே என்ற வருத்தமும் இருக்கிறது. சிவபெருமான் தாங்கள் தங்கள் திருமண கோலத்தில் அவருக்கு காட்சி கொடுப்பதாக  கூறி, சித்திரை மாதம் ஒன்றாம் தேதியன்று திருமண கோலத்தில் காட்சியளித்து  அவருடைய அந்த குறையை போக்குகிறார்.  அதனால் இப்போதும் சித்திரை மாதத்தில் சிறப்பு உற்சவங்கள் நடக்கின்றன.

கருவறையில் ருத்திராக்ஷ வடிவிலும், பிரகாரத்தில் ருக்,யஜுர்,சாம வேதங்கள் கிளா மரத்தின் மூன்று கிளைகளாக லிங்கத்திற்கு நிழல் தர, அதர்வண வேதம் பூஜித்ததால் முக்கிளா லிங்கம் என்று வழங்கப்படுகிறது. மூலவர் பாபநாசர், அம்பாள் லோகநாயகி என்னும் உலகம்மை. அம்மனுக்கு செய்யப்படும் மஞ்சள் பொடியை சிறிதளவு உட்கொள்ள, திருமணத்தடை அகலும், பிள்ளைப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. 

கடைசியாக நாங்கள் தரிசித்தது முறப்பநாடு, குரு ஸ்தலம். நாங்கள் மாலை நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று விட்டு நெல்லையப்பரையும், காந்திமதி அம்மனையும் தரிசித்து விட்டு வருவதற்கு கொஞ்சம் நேரமாகி விட்டது. முறப்பநாடு கோவிலில் அர்ச்சகர் இருக்க வேண்டுமே, பக்தர்கள் யாரும் இல்லையென்றால் அவர் சீக்கிரமே கிளம்பி விடுவார் என்று கொஞ்சம் அச்சத்தோடு டிரைவர் வண்டி ஓட்டினார். அவர் போல அங்கு பூ விற்றுக் கொண்டிருந்த பெண்மணியைத் தவிர வேறு யாரும் இல்லை. அவரும் கடையை கட்டி விட்டார்.  

தாமிரபரணியின் கரையில் அமைந்திருக்கிறது இந்தக் கோவில்.  தாமிரபரணி இங்கு உத்திரவாஹினியாக அதாவது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுவதால் காசிக்கு இணையான க்ஷேத்திரம். இங்கு நீராடி, நீத்தார் கடன் செய்வது சிறப்பு. 

இங்கிருக்கும் நந்தியின் முக அமைப்பு கொஞ்சம் குதிரையின் முகத்தைப் போல இருக்கிறதே? என்று நினைத்துக் கொண்டேன். அங்கிருக்கும் தல வரலாற்றைப் படித்த பிறகுதான் அதற்கான காரணம் புரிந்தது.

முறப்பநாடு கோவில் நந்தி - குதிரை முகத்தோடு 
சோழ அரசனின் மகள் ஒருவள்  முகத்தோடு பிறந்து விடுகிறாள். மனம் வருந்திய அரசன் தன் மகளின் குதிரை முகம் மாறி அழகிய முகம் கிடைக்க வேண்டும் என்று இங்கிருக்கும் படித்துறையில் நீராடி,சிவ பெருமானை வழிபடுகிறான். சிவபெருமான் வரம் கொடுப்பதற்கு  முன்பாக நந்தி பகவான் அந்தப் பெண்ணிற்கு அழகன் தோற்றத்தை கொடுத்து விடுகிறார். இதனால் அந்தப் பெண்ணின் குதிரை முகத்தை நந்தி பகவானை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார் சிவபெருமான். இதனால்தான் இங்கிருக்கும் நந்தி பகவானுக்கு குதிரை முகம்.  

மூலவர் கைலாசநாதர், அம்பிகை சிவகாமி அம்மன்.  

அவனருளால் அவன் தாள் வணங்கும் பேறு கிடைத்தது. இதை கூட்டிவைத்த குருவருளுக்கும், முன்னோர்களுக்கும் நவ கைலாசம் பற்றி தெரிவித்த கீதா அக்காவுக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஓம் நம சிவாய!   

Saturday, October 6, 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் - 7

பரவசம் தந்த நவ திருப்பதியும், 
நவ கைலாசமும் - 7
திங்கள் கிழமை ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயிலோடு அன்றைய கோவில் விசிட்டுகளை முடித்த நாங்கள், மறுநாள் காலை குளித்து, உணவருந்தி விட்டு முதலில் சென்ற கோவில்  கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில். 


சிறிய கோவில் சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் சிவகாமி தெற்கு நோக்கியும் இருக்கிறார்கள். சுவாமியின் கருவறையில் நுழையும் முன், இடது பக்கம் விநாயகரும், வலது புறம் சுப்பிரமணிய ஸ்வாமியையும் வணங்கிக் கொள்கிறோம். நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய க்ஷேத்திரமாக கருதப் படுகிறது. அன்று செவ்வாய் கிழமையாக இருந்ததால், அம்மன் சந்நிதியில் ஒரே கும்பல். ஏதோ சிறப்பு பூஜை. அம்பிகை மஞ்சள் நிற புடவை உடுத்திக்கொண்டு மிக அழகாக இருந்தாள். ஸ்வாமியையும் அழகாக அலங்கரித்திருந்தார்கள். புகைப்படம் எடுக்கலாமா என்று நினைத்தேன். மூல ஸ்தானத்தை எடுக்க வேண்டாம் என்று தவிர்த்து விட்டேன். அப்போது  அம்மன் சந்நிதியில் இருந்த அர்ச்சகர் ஒரு படம் மற்றும் குங்குமம், விபூதி பிரசாதங்களை கொடுத்தனுப்பினார். மிகவும் சந்தோஷமாக இருந்தது. 
கோவிலை வலம் வந்து நமஸ்கரித்தோம். எல்லா சிவன் கோவில்களையும் போலவே சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், பைரவர் தனி சந்நிதிகளில். கோவில் வளர்ந்து கொண்டிருப்பது தெரிகிறது. பிரகாரத்தில் நந்தவனம் அமைத்திருக்கிறார்கள்.  ஆனால் கொடி மரம், கோபுரம் போன்றவை இல்லை.  பச்சரிசி, வெல்லம் எண்ணெய் போன்றவை பிரசாதத்திற்காக பெற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிப்பு காணப்பட்டது. செவ்வாய் கிழமைகளில் மட்டும் பரிகாரத்திற்காக நிறைய பேர்கள் வருவார்கள் போலிருக்கிறது. 

அங்கிருந்து சந்திரன் தலமான சேரன்மாதேவி நோக்கிச் சென்றோம்.  அந்த கோவில் சீக்கிரம் மூடி விடுவார்களாம். எங்கள் காரோட்டி கோவில் அர்ச்சகருக்கு ஃபோன் செய்து, எங்கள் வருகையை தெரிவித்தார். அவர், "ஏற்கனவே அம்மன் சந்நிதியை மூடி விட்டேன். சுவாமி சந்நிதியை மட்டும் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறேன் சீக்கிரம் வாருங்கள்" என்றார்.  கோபுரம், கொடி மரம், பலி பீடம், நந்தியம் பெருமான், நடராஜர் சந்நிதி  என்று எல்லாம் முறையாக அமைந்திருக்கும் கற்றளி கோவில். ராஜ ராஜ சோழன்,ராஜேந்திர சோழன் ஆகிய இருவருமே திருப்பணி செய்திருப்பதற்கு சான்றாக கல்வெட்டுகள் உள்ளதாம். இப்போது பக்தர்கள் வருகை குறைவாக இருப்பதால் அர்ச்சகர் வந்து காலை பூஜையை முடித்து விட்டு சென்று விடுகிறார்.

நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய கோவில். இங்கு வழிபடுவது திருவையாற்றுக்கருகில் இருக்கும் சந்திர க்ஷேத்ரமான திங்களூரில் சென்று வழிபடுவதற்கு சமம் என்று அர்ச்சகர் கூறினார். ரோமச முனிவர்  கைலாயம் அடைந்து நித்தியத்துவம் பெற வேண்டும் என்று இங்குதான் ஆல மரத்தின் அடியில் சிவ லிங்கம் அமைத்து வழிபட்டார் என்றும் அவருக்கு சிவ பெருமான் காட்சி அளித்ததாகவும் தல புராணம் கூறுகிறது. அதனாலோ என்னவோ இங்கு ஸ்தல விருட்சம் ஆல மரம்தான்.  இங்கிருக்கும் தூண்களில் ஒன்றில் ரோமச ரிஷிக்கு சிலை இருக்கிறது. 


சகோதரிகளும் அவர்கள் பயன் படுத்திய உரலும், உலக்கையும் மற்றொரு தூணில் இரண்டு பெண்கள் உரலில் நெல் குத்துவது போன்ற சிற்பம் ஒன்றும் இருக்கிறது. அதற்கு பின்னால் சுவாரஸ்யமான கதை ஒன்று இருக்கிறது. இங்கு வசித்து வந்த சகோதரிகள் இருவர் தினமும் உரலில் நெல் குத்தி அரிசியாக்கி, அதைக் கொண்டு அன்னதானம் செய்து வந்தனராம். அவர்களுக்கு இந்தக் கோவிலின் மூலஸ்தானத்தை கட்டுவதற்கு ஆசை, ஆனால் அதற்கான பொருள் தங்களிடம் இல்லையே என்று வருத்தம். ஒரு நாள் சிவ பெருமானே ஒரு அந்தணராக வடிவெடுத்து வந்து இவர்களிடம் பிட்சை பெற்று, அவர்களை ஆசிர்வதித்துச் சென்றாராம். அதன் பிறகு அவர்களின் செல்வ செழிப்பு வளர, அவர்கள் இந்த கோவிலாய் கட்டினார்கள் என்பது வரலாறு. அதற்கு சாட்சியாக இருப்பதுதான் பெண்கள் இருவர் உரலில் நெல் குத்தும் சிலை. 

ஸ்வாமி அம்மநாதர், அம்பாள் ஆவுடையம்மை. சுயம்பு லிங்கம். ஸ்வாமி, அம்மன் இருவருமே கிழக்கு நோக்கிய திருக்கோலம். இப்போது சேரன்மாதேவி என்று அழைக்கப் பட்டாலும், இதன் புராண பெயர் சதுர்வேதி மங்கலம்.தொடரும்..


Thursday, October 4, 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் - 6


பரவசம் தந்த நவ திருப்பதியும், 
நவ கைலாசமும் - 6


அகத்திய முனிவரின் முதல் சீடரும், பிரம்மாவின் பேரனுமான ரோமச மகரிஷி, தான் முக்தி அடைய என்ன செய்ய வேண்டும் என்று தன் குருவை வினவுகிறார்.அதற்கு அகத்தியர், "ஒன்பது தாமரை புஷ்பங்களை தாமிரபரணியில் விடு, ஒவ்வொரு மலரும் எந்த இடத்தில் கரையில் ஒதுங்குகிறதோ அங்கு சிவபெருமானுக்கு ஆலயம் அமைத்து வழிபட்டு, சங்குமுக தீர்த்தத்தில் நீராடினால் நீ விரும்பியதை அடைவாய்" என்று கூறுகிறார். ரோமச மகரிஷியும் அவ்விதமே ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி நதியில் விடுகிறார். அவை ஒதுங்கிய இடங்களில் சிவாலயங்கள் அமைத்து சிவ பெருமானை வழிபட்டு, சிவ தரிசனமும், மோட்சமும் அடைகிறார். அந்த ஆலயங்களே நவ கைலாச ஆலயங்கள் என்று வழங்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவகிரகங்களுக்கு உரிய ஷேத்திரங்களாகவும் கருதப்படுகின்றன.

பாபநாசம்      -  சூரியன் (1)
சேரன்மகாதேவி   -  சந்திரன் (2)
கோடகநல்லூர்   -  செவ்வாய் (3)
தென்திருப்பேரை  -  புதன் (7)
முறப்ப நாடு   -  குரு (5)
சேர்ந்த பூ மங்கலம்  - சுக்கிரன்(9)
ஸ்ரீ வைகுண்டம்  -  சனி (6) 
குன்னத்தூர்  -  ராகு (4)
ராஜ பதி  -  கேது (8)

அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்கள் நவ கைலாச கோவில்கள் அமைக்கப்பட்ட வரிசை. முதல் பூ கரை சேர்ந்த இடம் பாபநாசம். கடைசி பூ கரை சேர்ந்த இடம் சேர்ந்த பூ மங்கலம். 


ஒரு  முறை தாம்ப்ராஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்னிடம் ஒரு  பாக்கு மட்டை தட்டை கொடுத்து பிரசாதம் வாங்கி கொள்ளச் சொன்னார்கள். பிரசாதம் வாங்குவதற்காக நின்றிருந்த வரிசையின் நீளத்தைப் பார்த்து மலைத்த நான்,"கியூ எங்க ஆரம்பிக்கிறதுனே தெரியவில்லையே..?!" என்றதும் வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவர், "எங்கு முடிகிறதோ, அங்குதான் ஆரம்பிக்கிறது" என்றார். 
அது போல எங்கள் நவ கைலாச யாத்திரையும் கடைசி கோவிலான சேர்ந்த பூ மங்கலத்தில்தான் துவங்கியது. 

நாங்கள் அங்கு போன பொழுது கோவிலில் யாரும் இல்லை. எங்கள் டிரைவர் அர்ச்சகருக்கு போன் செய்தார். அந்த கோவிலின் அர்ச்சகர் காலை ஒரு நேரம் வந்து பூஜை செய்து விட்டு சென்று விடுவாராம். யாராவது வந்திருப்பது தெரிந்தால் வருவாராம். ஆனால் அன்று அவர் வரவில்லை. அங்கிருந்த காவலாளி சந்நிதி கதவுகளை திறந்து வைத்து வெளியிலிருந்தே சூடம் ஏற்றி வைத்தார். தரிசனம் செய்து கொண்டோம். கிழக்கு நோக்கி சுவாமி சந்நிதியும், தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன. ஸ்வாமியின் திருநாமம் கைலாசநாதர், அம்மன் சிவகாமி.

சுவாமி சந்நிதி இருக்கும் நிலை மனதை வருந்த வைக்கிறது. பிரகாரத்தில் நவகிரகங்கள், பைரவர், சண்டிகேஸ்வரர் எல்லோருக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன. அன்று அஷ்டமி என்பதால் காலையில் பைரவருக்கு அஷ்டமி பூஜை நடந்ததாம். இப்போது இருக்கும் வருந்தத்தக்க விஷயங்களில் இதுவும் ஒன்று. பலர் பரிகாரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மூல ஸ்வாமிக்கு கொடுப்பதில்லை.

நவகிரக லிங்கங்கள் - சேர்ந்தபூ மங்கலம் நவகிரக லிங்கங்கள் - ராஜபதி 
அங்கிருந்து கேது ஸ்தலமான ராஜபதிக்குச் சென்றோம். சிதிலமடைந்திருந்த கோவிலை இப்பொழுது எடுத்து பெரிதாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பார்க்க சந்தோஷமாக இருந்தது. இங்கும் ஸ்வாமி கைலாசநாதர்,அம்பாள் சவுந்தரநாயகி. பூஜைகளும் சிறப்பாக நடைபெறுவதாக அறிந்தோம். 

அங்கிருந்து தென் திருப்பேரை கைலாசநாதர் கோவிலுக்குச் சென்றோம். புதனுக்குரிய ஷேத்திரமாகிய இங்கு சிவ பெருமானை வழிபடுபவர்களுக்கு வாக்கு சாதுர்யம் கிடைக்கும் என்று நம்பப் படுகிறது. 

மூலவர் கைலாசநாதர் அம்பிகை அழகிய பொன்னம்மை. 

ஆங்கிலேயர் காலத்தில் இந்தப் பகுதியை ஆய்வு செய்ய வந்த கேப்டன் துரை என்பவர் மதியம் இக்கோவிலுக்கு அருகில் இருந்த சாவடியில் ஓய்வெடுக்க தங்கியிருக்கிறார். தாகமாக உணர்ந்த அவர் கண்களில் பக்கத்தில் இருந்த தென்னம் தோப்பு பட அங்கிருக்கும் மரம் ஒன்றிலிருந்து இளநீர் காய் ஒன்றை பறித்துப் போடச் சொல்லியிருக்கிறார். இந்த தோப்பில் இருக்கும் காய்கள் கைலாசநாதர் கோவிலைச் சேர்ந்தவை என்று பணியாட்கள் கூற, அந்த தேங்காயில் என்ன கொம்பா முளைத்திருக்கிறது? பறித்துப் போடுங்கள்" என்று ஆணையிட, மீற முடியாமல் பறித்து போடுகிறார்கள்... பார்த்தால், அந்த தேங்காயில் நிஜமாகவே மூன்று கொம்புகள் இருந்ததாம். அரண்டு போன துரை தன் தவறை உணர்ந்து, தினமும் 26 சல்லி பைசா வழங்க உத்தரவிட்டாராம். அந்த கொம்புத் தேங்காயை இப்போதும் கூட அம்மன் சந்நிதியில் பார்க்க முடியும் என்கிறார்கள். நான்தான் அவசரத்தில் பார்க்காமல் வந்து விட்டேன்.   

அதன் பிறகு ஸ்ரீ வைகுண்டம் கைலாசநாதர் ஆலயத்திற்கு வந்தோம். இது வரை பார்த்த கோயில்களிலேயே பெரிய கோவில் இதுதான். அழகான சிற்பங்களோடு கோவில் சிறப்பாக பராமரிக்கப் படுகிறது. மூலவர் கைலாசநாதர், அம்மன் சிவகாமி.  நவகிரகங்களில் சனி பகவானுக்குரிய ஷேத்திரமாக கருதப்படுகிறது. குமரகுருபரர் பிறந்த ஊர். இந்த கோவிலிலும் அழகான சிற்பங்கள் காண கிடைக்கின்றன.
Tuesday, October 2, 2018

செக்கச் சிவந்த வானம்(விமர்சனம்)

செக்கச் சிவந்த வானம்(விமர்சனம்) 


நிழலுலக சக்கரவர்த்தியான சேனாபதி(ப்ரகாஷ ராஜ்) யின் மறைவுக்குப் பிறகு அந்த இடத்தைப் பிடிக்க அவருடைய மூன்று மகன்கள் வரதராஜன்(அரவிந்த சாமி), தியாகராஜன்(அருண் விஜய்), எத்திராஜன்(சிம்பு) போட்டி போடுவதுதான் கதை. பிரகாஷ் ராஜை கொலை செய்ய முயற்சித்தவர்கள் யார் என்னும் முடிச்சோடு இடைவேளை வருகிறது. 

நிழலுலகத்தின் மீது மணி ரத்தினத்திற்கு அப்படி என்ன ஈடுபாடு என்று தெரியவில்லை. மீண்டும் ஒரு காங்ஸ்டர் கதை. படத்தில் மருந்துக்கு கூட ஒரு நல்லவன் கிடையாது.  கணவனாக ஒரு கதாநாயகனை இவர் காண்பிக்கவே மாட்டாரா? 

தாதா அப்பா,அவருக்குப் பிறகு அந்த அதிகாரத்திற்கும், பணத்திற்கும் ஆசைப்படும் மகன்கள், அதில் இருவர் வெளிநாட்டில் இருந்தாலும் அங்கேயும் நிழல் வேலைகளில்தான் ஈடுபடுகிறார்கள் என்பதால் படத்தில் மானாவாரியாக துப்பாக்கி வெடிக்கிறது, படம் முடியும் பொழுது நம் மீதும் ரத்தக் கறை படிந்திருக்கிறதோ, வீட்டில் போய் குளிக்க வேண்டும்  என்று தோன்றும் அளவிற்கு ரத்தம் தெளிக்கிறது. ஆழமாகவோ, அழுத்தமாகவோ ஒரு காட்சி கூட இல்லை. 

வெளிநாட்டில் படமாக்கப்பட்ட மணிரத்தினத்தின் முதல் படம் என்னும் பெருமையைப் பெறுகிறது. இசை ஏ.ஆர். ரஹ்மானாம், ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லை. முதல் பாதியில் விஜய் சேதுபதி வரும் சில இடங்கள் சின்ன சிரிப்பை உண்டாக்குகின்றன என்பதை தவிர நகைச்சுவை பஞ்சம். சந்தோஷ் சிவனின் காமிரா அற்புதம். 

எப்படி பந்தை போட்டாலும் அடிக்கும் பிரகாஷ் ராஜ் இந்தப் படத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். வித்தியாசமாக அரவிந்த் சாமி, அழகாக அருண் விஜய், அலட்டலில்லாமல் சிம்பு, வழக்கம் போல விஜய் சேதுபதி. க்ளைமாக்சில் எதிர்பார்த்த ஒரு திருப்பமும் எதிர்பாராத திருப்பமும் இருக்கின்றன.
  
மருமகள்களாக கம்பீரம் காட்டும் ஜோதிகா, இலங்கைத் தமிழ் பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ், தாராள கவர்ச்சி காட்டும் டயானா எரப்பா. பிரகாஷ் ராஜின் மனைவியாக ஜெய சுதா. வரதனின் பள்ளித்தோழனாகவும், போலீஸ் அதிகாரியாகவும் விஜய் சேதுபதி, எதற்கு என்றே தெரியாமல் அதிதி ராவ் ஹயாத்ரி. மீடியாவில் பணியாற்றும் பெண்ணாக வரும் இவர் வெளியில் அரவிந்த் சாமியிடம் கேள்வி கேட்டு விட்டு தனிமையில் அவரோடு படுக்கையை பகிர்ந்து கொள்கிறாராம். அடடா! என்ன புரட்சி! படத்தின் ஓட்டத்திற்கு எந்த விதத்திலும் உதவாத இவர் கதாபாத்திரம் எதற்கு? ஒரு நட்சத்திர பட்டாளம். ஆனால் பிரகாசம் குறைவு. 

Thursday, September 27, 2018

மாற்றங்கள்

மாற்றங்கள்  

சென்ற ஞாயிரன்று சென்னை செல்ல வேண்டிய நிர்பந்தம். பெங்களூர் வந்திருந்த என் தோழி, "நான் தனியாக இன்னோவாவில் வந்திருக்கிறேன், நீங்கள் என்னோடு வந்து விடுங்களேன்" என்று அழைத்தார். எனவே அவரோடு சென்றோம். வழியில் A2B  உணவகத்தில் சாப்பிடலாம் என்று அங்கு சென்றால், அது மூடியிருந்தது, ஒருவர் பைக்கில் வந்து, அந்த உணவகம் இடம் மாற்றியிருப்பதாக கூறினார். முன்பிருந்த இடத்திற்கு அருகிலேயே பெரிதாக, நிறைய கார்களை பார்க் பண்ணும்படியாக புதிய வளாகம் இருந்தது. உணவின் தரம் எப்போதும் போலத்தான். அங்கிருந்து வியூ நன்றாக இருந்ததால் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டேன். சென்னையில் கூடுவாஞ்சேரி பக்கம் ஏறத்தாழ ஒரு வருடத்திற்குப் பிறகு செல்கிறேன். முன்பெல்லாம். சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் இடது புறம், அருண் எக்செல்லோவின் எஸ்டான்ஷியா வளாகத்தில் ஒருபெரிய நீல நிற பக்கெட்(சிலர் டம்பளர் என்பார்கள்) போன்ற ஒரு கட்டிடத்தை பார்க்க முடியும். இப்போது அந்த டம்பளரை காணவில்லை, காக்கா தூக்கிக் கொண்டு போய் விட்டதா என்று தேடினால், அதற்கு முன்னால் ஒரு கட்டிடம் வந்து மறைத்து விட்டது. அங்கிருக்கும் zoho நிறுவனத்தின் மல்டி லெவல் கார் பார்க்கிங்காம்!!!zoho tower அன்றும் இன்றும் 

ஞாயிறன்றும், திங்களன்றும் திங்களில் அதாவது நிலாவில் சாய்பாபா உருவம் தெரிகிறது என்று ஒரே அமளி. நாம் சாய்பாபா என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் தெரிந்தார். சில சமயம் நிலாவில் எனக்கு வடை சுடும் பாட்டியும், சில சமயம் ரங்கநாதரும்,சில சமயம் மகாலட்சுமியும் தெரிவதுண்டு.

ஞாயிறன்று நான் பிடித்த நிலா 

புரட்டாசி பௌர்ணமி அன்று மயிலை கற்பகாம்பாள் கோயிலில் அம்பாள் சந்நிதியில் காய்கறிகளால் அலங்காரம் செய்வார்கள் என்பது மறந்து விட்டதால் கோவிலுக்குச் செல்வதை தவற விட்டு விட்டேன். 


 


மறுநாள் மயிலாப்பூர் சென்ற பொழுது, கொஞ்சமாக வர ஆரம்பித்திருந்த நவராத்திரி கடைகளை பார்க்க முடிந்தது. சுக்ரா ஜூவல்லரி வாசலில் பொம்மைகளை வைத்திருந்தார்கள். நான் புகைப்படம் எடுக்கச்சென்ற பொழுது, அங்கே அமர்ந்திருந்த பெண் எழுந்து வந்தார். சில பொம்மைகளின் விலை விசாரித்தேன். ரெங்கநாதர் ரூ.700/-, மாப்பிள்ளை அழைப்பு செட் ரூ.1500/-, கோவர்தனகிரி கிருஷ்ணன் ரூ.2000/- என்று கூறியவர், "நான் சொல்ற விலைதான் முடிவான விலை கிடையாது, நீங்க கேளுங்க, கட்டி வந்தால் கொடுக்கப் போறேன், வண்டிக் கூலிதான் ரொம்ப அதிகமாகி விட்டது" என்றார். ஜி.எஸ்.டி.யையும், டீ மானிடைசேஷனையும் குறை சொல்லவில்லை. அதெல்லாம் பெரிய வியாபாரிகள் செய்வார்கள். விலை கேட்டு விட்டு வாங்காமல் வந்த குற்ற உணர்ச்சியால் சரியாக படம் எடுக்க முடியவில்லை. ஆரிய கௌடா ரோடில் நவராத்திரி எக்சிபிஷன் தொடங்கிவிட்டதாம். என் அக்கா அனுப்பியிருந்த படங்கள் கீழே.பெங்களூர் எக்ஸ்பிரஸில் திரும்பி வரும் பொழுது, மஹாளய பட்சத்தைப் பற்றி கவலைப்படாமல் சமோசா சாப்பிட்டேன். சன் NXT இல் 'குலேபகாவலி படம் பார்த்தேன். சும்மா சொல்லக்கூடாது. ரேவதி கலக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் வரும் அத்தனை பேரும் திருடர்கள். இப்போது வரும் எல்லாப் படங்களைப் போலவும், ஏமாற்றுபவர்களையும், திருடர்களையும் நாயக, நாயகியர்களாக்கி, கடைசியில் கூட அவர்கள் திருந்துவதாகவோ, மாட்டிக் கொள்வதாகவோ காட்டாத படம். இந்த நிலை மாறாதா?   


Sunday, September 23, 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும் நவ கைலாசமும் - 5

பரவசம் தந்த நவ திருப்பதியும் 
நவ கைலாசமும் - 5 திருச்செந்தூரிலிருந்து நாங்கள் சென்ற கோவில் தென் திருப்பேரை என்னும் சுக்கிர ஷேத்திரம். 

திருமகளைப் போல தான் அழகாக இல்லாததால்தான் பெருமாள் தன்னை விட லட்சுமியிடம் அதிக பிரேமை கொண்டிருக்கிறார் என்று நினைத்த பூமி பிராட்டி திருமாலின் அஷ்டாக்ஷர மந்திரத்தை  துர்வாச மகரிஷியிடம் உபதேசமாக பெற்று, அதை ஜபித்து வருகிறாள். ஒரு பங்குனி மாத பௌர்ணமி அன்று மந்திர ஜபத்தை முடித்து ஆற்றிலிருந்து நீரை அள்ளி எடுக்க, அதில் இரண்டு மகர குண்டலங்கள்(மீன் வடிவ குண்டலங்கள்) கிடைக்கின்றன. அதை அங்கு அப்போது பிரத்யக்ஷமான திருமாலுக்கு அணிவித்து மகிழ்கிறாள். அவளுடைய தவத்திற்கு மகிழ்ந்த திருமால் அவளுக்கு மகாலட்சுமிக்கு நிகரான அழகை அளிக்கிறார். பூமி பிராட்டியால் அளிக்கப்பட்ட மகர குண்டலங்களை அணிந்து கொண்டதால் இங்கிருக்கும் பெருமாள் மகர நெடுங்குழைக்காதன் என்று அறியப்படுகிறார்.  பேரை என்றால் குண்டலம் என்று பொருள். பெருமாள் காதில் அணிந்து கொண்டிருக்கும் குண்டலத்தால் புகழ் பெற்றிருப்பதால் இத்தலம் தென் திருப்பேரை என்னும் பெயர் பெற்றுள்ளது.

வருணன் அசுரர்களிடம் போரிட்டு  இழந்த தன் ஆயுதத்தை இந்த தலத்திற்கு வந்து மீண்டும் பெற்றதால், இங்கு செய்யப்படும் வருண ஜெபங்கள் பொய்ப்பதில்லை என்கிறார்கள். 

மூலவர் மகர நெடுங்குழைக்காதன். வீற்றிருந்த திருக்கோலம். உற்சவர் நிகரில் முகில்வண்ணன் . குழைக்காது நாச்சியார், திருப்பேரை நாச்சியார் என்று இரண்டு தாயார்கள் தனித்தனி சந்நிதிகளில் கோவில் கொண்டுள்ளனர்.

நாங்கள் சென்ற அன்று ஸ்ரீ ஜெயந்தி என்பதால் அர்த்த மண்டபத்தில் அரையர் போல தலையில் பரிவட்டம் கட்டிக்கொண்ட ஒருவர்  ஸ்ரீ கிருஷ்ணஜெனனம் கதை படித்துக் கொண்டிருந்தார். பட்டாச்சாரியர்கள் உள்ளே அமர்ந்திருக்க வெளியில் இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தார்கள். உள்ளே போவதற்கு அனுமதி இல்லை போலிருக்கிறது என்று நினைத்து நான் நின்று கொண்டிருந்தேன். ஒரு பட்டாச்சாரியார் என்னை உள்ளே வரச் சொல்லி ஜாடை காட்டினார். 

உள்ளே சென்ற நான் பெருமாளின் திருநாமம் என்ன என்று கேட்க," மகரநெடுங்குழைகாதன், என்றும் இந்தக் கோவிலில் எல்லாக் கோவில்களையும் போல கருடன் பெருமாளுக்கு நேராக இருக்க மாட்டார், பக்கவாட்டில் இருக்கிறார் பாருங்கள்" என்றம் கூறி விட்டு, "கிருஷ்ண ஜனனம் படிக்கிறா பேசக்கூடாது, அது முடிந்த பின்னர்தான் தீர்த்தமும்,ஜடாரியும் சாதிக்க முடியும்" என்றும் கூறினார். நான் கருடாழ்வாரை சேவித்துக் கொண்டு வெளியே வந்தேன். 

வேதம் ஓதி வரும் வேத வித்துக்களை காணவும், விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சிசையைக் காணவும் கருடாழ்வாரை கொஞ்சம் ஒதுங்கி இருக்கச் சொன்னாராம் பெருமாள். அதனால்தான் கருடன் பக்கவாட்டில் இருக்கிறார்.

அதன் பிறகு செவ்வாய் ஷேத்திரமாகிய திருக்கோளூர் என்னும் தலத்தில் வைத்தமாநிதி பெருமாளை தரிசித்ததோடு எங்கள் நவ திருப்பதி யாத்திரை நிறைவு பெற்றது.

திருக்கோளூர்தான் மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம்.

சிவ பெருமானை வழிபட ஒரு முறை கைலாயம் சென்ற குபேரன், பார்வதி தேவியை தீய எண்ணத்தோடு நோக்க, சினம் கொண்ட பார்வதி குபேரனை சபிக்கிறாள். இதனால் குபேரன் உருவம் விகாரமாவதோடு, அவனிடமிருந்த நவ நிதிகளும் அவனை விட்டு அகன்று விடுகின்றன. அந்த நவநிதிகள் இங்கிருக்கும் பெருமாளை தஞ்சமடைகின்றன. நவநிதிகளை பெற்றிருக்கும் பெருமாள் வைத்தமாநிதிபெருமாள் ஆகிறார். 

குபேரன் தன் பிழையை உணர்ந்து சிவபெருமானிடம் மன்னிப்பு கோருகிறான். சிவபெருமான் அவனை பார்வதி தேவியிடம் மன்னிப்பு கோரச்சொல்கிறார். பார்வதியின் பாதம் பணிந்த அவனிடம்," உனக்கு ஒரு கண் தெரியாது, உடலில் விகாரம் மாறாது, இழந்த நவ நிதிகளை வைத்தமாநிதிப் பெருமாளை வேண்டி பெற்றுக் கொள் என்று கூறி விடுகிறாள். அதன்படி, இந்த ஊர் பெருமாளை நோக்கி கடும் தவம் செய்து இழந்த செல்வங்களை பெற்றான். எனவே இழந்த செல்வங்களை மீண்டும் பெற விரும்புவார்கள் இக்கோவிலுக்கு வந்து பெருமாளை வழிபடுதல் சிறப்பு. 

மூலவர் வைத்தமாநிதிப் பெருமாள்(நிஷேதவிந்தன்).கிடந்த திருக்கோலம். புஜங்க சயனம். இரு தனி சந்நிதிகளில் குமுதவல்லி, கோளூர்வல்லி என்று இரெண்டு தாயார்கள்.

நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்
'உண்ணும் சோறு பருகும் நீர்  தின்னும் வெற்றிலை ..'  என்னும் எனக்குப் பிடித்த நம்மாழ்வார் பாசுரம் இங்கிருக்கும் பெருமாள் மீது  நம்மாழ்வாரால் நாயகி பாவத்தில் எழுதப்பட்டது. மொத்தம் பன்னிரண்டு பாசுரங்கள் எழுதியிருக்கிறார். 

நவத்திருப்பதி கோவில்கள் எல்லாமே நம்மாழ்வாரால் மட்டுமே மங்களாசாசனம் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இறையருளாலும், குருவருளாலும், பெரியோர்கள் ஆசியாலும் நவதிருப்பதி யாத்திரை நல்லவிதமாக முடிந்தது. குறிப்புக்கள் தந்து உதவிய கீதா அக்காவுக்கும், சகோதரர் நெல்லை தமிழனுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  தொடர்ந்து வருபவர்களுக்கு நன்றி. 

 அடுத்து நவ கைலாசங்களை தரிசிக்கலாம்.