கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, December 26, 2020

தெய்வம் மனுஷ ரூபேண

 தெய்வம் மனுஷ ரூபேண


சென்ற வார சண்டே டாபிக்காக மத்யமரில் கொடுத்திருந்தார்கள். அதற்காக நான் எழுதிய கட்டுரை. அதில் எழுதாத சில விஷயங்களையும் இதை எழுதியிருக்கிறேன். 

எனக்கு பல சமயங்களில் தெய்வம் போல் மனிதர்கள் உதவியிருக்கிறார்கள். அதில் முக்கியமான இரண்டு தருணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

எனக்கு திருமணமாகி மூன்று வருடங்களுக்குப் பிறகே  மஸ்கட்டில் இருந்த என் கணவரோடு சேர்ந்து வாழும் விதமாக எனக்கு விசா கிடைத்து அங்கு செல்ல முடிந்தது. 1987 ஜனவரியில் அங்கு சென்ற நான் உடனே கருவுற்றேன். வெளிநாட்டில்தான் பிறக்க வேண்டும் என் மகன் தீர்மானித்திருந்தான் போலிருக்கிறது. என் மணிவயிற்றில் வந்துதித்தான். 

வீட்டில் கடைசி பெண்ணான என்னை சூலுற்ற கோலத்தில் பார்க்க என் வீட்டில் எல்லோருக்கும் ஆசை. பிரசவத்திற்கு ஊருக்கு  வரச்சொல்லி அழைத்தார்கள். ஆனால் என் கணவரோ, "நாம் மினிஸ்டரி ஆப் ஹெல்த்தில் வேலை பார்ப்பதால் நமக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவ செலவு இலவசம்தான், மேலும், நீ இப்போதுதான் இங்கு வந்திருக்கிறாய், அதனால் பிரசவத்திற்கு முன்பாக ஊருக்குச் சென்றால் குழந்தை பிறந்து அதிக நாட்கள் அங்கு இருக்க முடியாது, அதற்குப் பதிலாக இங்கு பிரசவித்து விட்டு பிறகு ஊருக்குச் சென்றால் மெட்டர்னிட்டி லீவையும் சேர்த்து மூன்று மாதங்கள் அங்கு இருந்துவிட்டு வரலாம்" என்று என்னை அங்கேயே இருக்கச்சொல்லி விட்டார். என் பெற்றோர்கள்  எத்தனையோ சொல்லியும் கேட்கவில்லை. அங்கும் நண்பர்கள் எல்லோரும், எப்போது ஊருக்குச் செல்லப் போகிறீர்கள்?" என்று கேட்பார்கள்,நான் "ஊருக்கு போகப்போவதில்லை, இங்கேயேதான் இருக்கப்போகிறேன்" என்றால் "ஊரிலிருந்து யாரவது உதவிக்கு வருகிறார்களா? என்பார்கள். "அதுவும் இல்லை, பிரசவத்திற்குப் பிறகு நான் ஊருக்குப் போகப் போகிறேன்" என்ற என் பதில் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும். "தனியாக எப்படி மேனேஜ் பண்ணுவீர்கள்?" என்ற பலரும் கேட்ட பொழுது, "இருக்கலாம் பானு, ஒண்ணும்  கவலை இல்லை, நாங்கள் எல்லாம் இருக்கிறோம் என்று தைரியம் கொடுத்தவர்கள் மூன்று  பேர்கள்தான்.  என் கணவரின் நண்பரான  திரு.ரமணன் என்பவரின் மனைவி திருமதி வசந்தா ரமணனும், இன்னொரு நண்பரான திரு.ஸ்ரீதரன் மற்றும் அவரின் மனைவி திருமதி. ராஜேஸ்வரி ஸ்ரீதரன். அறிமுகத்திற்காக ராஜேஸ்வரி என்று சொல்லி விட்டேன், இனிமேல் ராஜி என்று குறிப்பிடுகிறேன். 

ராஜியும் ஸ்ரீதரும் என் முதல் பிரசவத்தில் செய்த  உதவிகளை  எப்படி சொல்வது? அவளுக்கும் எனக்கும் சம வயதுதான். மூணு வயதில் குழந்தையை வைத்துக் கொண்டிருந்த அவள் நிறைய அனுபவம் மிகுந்தவன் போல் எனக்கு தைரியம் சொன்னாளே அதைச் சொல்வதா?  எனக்கு ஃபால்ஸ் பெயின் எடுத்த பொழுது,  தன் மைத்துனருக்கு போன் பண்ணி பள்ளியிலிருந்து வரும் குழந்தையை பிக் அப் பண்ணிக் கொள்ளச் சொல்லி விட்டு, என்னோடு மருத்துவமனைக்கு புறப்பட்டு வந்தாளே அதைச் சொல்வதா? எனக்கு பனிக்குடம் உடைந்து, மருத்துவ  மனைக்கு கிளம்ப வேண்டிய நிலை ஏற்பட்ட பொழுது, ஸ்ரீதர் "தைரியமா இரு பானு," என்று கூறி வழியில் என்னை உற்சாகப்படுத்தியபடி பேசிக்கொண்டே வந்ததை சொல்வதா? மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வேண்டிய நாளில் தன்னுடைய  மாஸ்டா காரை ஒரு சிறு குலுங்கல் கூட இல்லாமல் ஒட்டிக் கொண்டு வந்ததை சொல்வதா? பதினைந்து நாட்கள் என்னை அவர்கள் வீட்டில் வைத்துக் கொண்டு உடன் பிறந்த சகோதரிக்கு செய்வதைப் போல் பத்தியம் வடித்துப் போட்டு, பார்த்துக் கொண்டதை சொல்வதா? என்னைப் பார்ப்பதற்காக தினசரி யாரவது வருவார்கள், அவர்களை யெல்லாம் முகம் சுளிக்காமல் உபசரித்ததை சொல்வதா? 

இதைத் தவிர,நான் ஆஸ்பத்திரியில் இருந்த எட்டு நாட்களும் பல நண்பர்களின் மனைவிகள் போட்டி போட்டுக் கொண்டு எனக்கு சாப்பாடு கொடுத்து  அனுப்புவார்கள். இதில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர் என் கணவரின் மற்றொரு நண்பரின் மனைவியான  மாலா சங்கர் ராமகிருஷ்ணன் அவர்கள். அவர் எனக்கு தினசரி மதிய உணவு கொடுத்தனுப்பியதோடு தன் காரையும் என் சகோதரருக்கு கொடுத்து பயன்படுத்திக் கொள்ளச் சொன்னார். 

என்னை வார்டுக்கு மாற்றிய பிறகு ஒரு நாள் திருமதி வசந்தா ரமணன் என் உதவிக்காக வந்திருந்தார். சிசேரியன் ஆகியிருந்த எனக்கு படுக்கையிலிருந்து எழுந்திருப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் அவர் எனக்கு உதவாமல் பேசாமல் உட்கார்ந்திருந்தார். நான் எப்படியோ  வலியை பொறுத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து உட்கார்ந்ததும்," நீங்கள் எழுந்திருக்க சிரமப்படுவதை பார்ப்பதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது, ஆனால் நான் உங்களுக்கு உதவி விட்டால், உங்களுக்கு தானாக முயற்சிக்க வேண்டும் என்று தோன்றாது, அதனால்தான் நான் உதவவில்லை" என்றார். உண்மைதான். நானே முயற்சி செய்து எழுந்திருந்து, நடந்து எல்லாம் செய்ததால் தான் பதினைந்து  நாட்களே ஆன குழந்தையை தூக்கிக் கொண்டு திருச்சி வரை விமானத்தில் பயணிப்பது எனக்கு எளிதாக  இருந்தது. 

மேலும் நான் செவிலியர்களை உதவிக்கு அழைக்காமல் இருந்ததால்  அவர்களுக்கு பிடித்த பேஷண்டானேன்.   நான் கேட்கும் சின்ன சின்ன  உதவிகளை மறுக்காமல் செய்வார்கள். அந்த அனுபவம் என்னுடைய இரண்டாவது பிரசவத்திலும்  எனக்கு கை கொடுத்தது. இரண்டாவதும் சிசேரியன்தான். நான் ஐ.சி.யூ.வில் இருந்தபொழுதே ஒரே பக்கமாக  படுத்துக் கொள்ளாமல், உதவிக்கும் நர்ஸுகளை அழைக்காமல் நானே திரும்பி படுத்துக்க கொள்வேன். பாத்ரூம் செல்ல வேண்டும் என்றாலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தனியாகவே செல்வேன்.  அப்படி ஒரு மனோ தைரியத்தை அளித்தது திருமதி வசந்த ரமணன் செய்யாமல்  செய்த உதவி

1995ஆம் வருடம் என் கணவருக்கு ஒரு விபத்தில் வலது கை தோள்பட்டை பந்து கிண்ண மூட்டு மூன்று சில்லுகளாக உடைந்து விட்டது. முதலில் செய்யப்பட்ட சிகிச்சையில் சரியாக சேரவில்லை. மீண்டும் ஒரு சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அப்பொழுதும் என் குழந்தைகளை பார்த்து கொண்டது, ராஜிதான். அந்த சமயத்தில் என் மைத்துனர் இறந்து விட்டதால் எங்களுக்கு பத்து நாட்கள் தீட்டு உண்டே, அப்பொழுது மற்றவர்கள் வீடுகளுக்குச் செல்லக் கூடாது என்பார்கவே என்று நான் தயங்கிய பொழுது,"இந்த சமயத்தில் இப்படியெல்லாம் யோசிக்கலாமா? நீ தாராளமாக எங்கள் வீட்டிற்கு வரலாம்" என்றதோடு இரண்டு மூன்று நாட்களுக்கு எனக்கு சமையல் வேலை இல்லாமல்    பார்த்துக் கொண்டாள்.   

என் கணவருக்கு இரண்டாம் முறை அறுவை சிகிச்சை நடந்த பொழுது சாயி அன்பர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு ஷிஃப்ட் முறையில் மருத்துவமனையில் என் கணவரோடு இருந்து கவனித்துக் கொண்டார்கள். என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், அங்கிருந்து அழைத்து வரவும், என் கணவரால் வண்டி ஓட்ட முடியாத மூன்று மாதங்களும்  மாதாந்திர சாமான்கள் வாங்கவும், கறிகாய்கள் வாங்கவும் பல நண்பர்கள் உதவினார்கள். 

அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆக வேண்டிய நாளன்று என் அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றிய  ஓமானியர்   சமீர் என்பவர் தன்னுடைய காரை மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தார். கடைசி நிமிடத்தில் மருத்துவமனையில் நீங்கள் முதலில் பணம் கட்ட வேண்டும், பின்னர் அது ரீ எம்பர்ஸ் செய்யப்படும் என்றார்கள், என் கையிலோ பணம் இல்லை,  அப்பொழுதெல்லாம் ஏ.டி.எம். கார்ட் இப்போது போல் அவ்வளவு புழக்கத்தில் வரவில்லை. என்ன செய்வது என்று யோசித்த பொழுது  உடனே என் அலுவலக சக ஊழியர் தன்னுடைய  க்ரெடிட்  கார்ட்டில் பணம் கட்டிவிட்டு பின்னர் வாங்கி கொண்டார். எத்தனை தெய்வங்கள்!

Friday, December 18, 2020

பய பக்தி

பய பக்தி  

நாம் கோவிலுக்குச் சேரும் பொழுது பய பக்தியோடு செல்வோம். ஆனால் பயம் 90% பக்தி 10% என்று ஒரு கோவிலுக்குச் சென்றோம் என்றால் அது சோட்டாணிக் கரை பகவதி கோவிலுக்குச் சென்றதை கூறலாம். 

ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு முன் கேரளா சென்ற பொழுது சோட்டாணிக் கரைக்கும் சென்றோம். நாங்கள் சென்றபொழுது சாயரட்சை தீபாராதனை நேரம். அந்தக் கோவிலைப் பற்றி பரணீதரன் எழுதியிருந்தவை நினைவுக்கு வந்து கிலியை  ஊட்டியது. மன நலம் சரியில்லாமல் அங்கே தங்கியிருப்பவர்கள் தரிசனத்திற்கு வரும் நேரம். 

அந்தக் கோவிலின் சுவர்களில் அடிக்கப் பட்டிருந்த  பெரிய பெரிய ஆணிகளை  பார்த்தாலே பகீரென்றது. அவை எல்லாம் அந்தக் கோவிலில் தங்கியிருந்த மன நலம் குன்றியவர்கள், மற்றும் பேய் பிடித்தவர்கள் அர்த்தஜாம குருதி  பூஜையில்  அவர்கள் கைகளால், அல்லது தலையால்  அந்த கருங்கல் சுவர்களில் அடித்தவை.

மன நலம் குன்றியவர்களும், பேய், பிசாசு முதலிய தொல்லைகள் உள்ளவர்களும் சோட்டாணிக்கரைக்கு வந்து தங்கி, அந்த கோவிலில் நடக்கும் பூஜைகளில் கலந்து  கொண்டு, தேவியின் பிரசாதத்தை உண்ண வேண்டும். அங்கு நடக்கும்  குருதி பூஜையின் பொழுது இந்த மன நலம் குன்றியவர்கள் தங்கள் கைகளாலோ அல்லது  தலையாலோ ஆணியை கோவிலின்  கருங்கல் சுவரிலோ அல்லது அங்கிருக்கும் மரத்திலோ  அடிப்பார்களாம், அப்போது அவர்கள் உடலிலிருந்து பெருகும் ரத்தத்தின் வழியே துர் சக்திகள் வெளியேறிவிடும் என்பது நம்பிக்கை. 

இந்த கோவில் இரண்டு பகுதிகளை கொண்டது. மேலே இருக்கும் கோவிலில் அம்பிகை பகவதியாக காலையில் சரஸ்வதியின் அம்சமாகவும், பகலில் லக்ஷ்மியின் அம்சமாகவும் இரவில் துர்கையின் அம்சமாகவும் காட்சி அளிக்கிறாள். மிகவும் சௌமியமான, அழகான ரூபம். கீழ்க்காவு என்று படிகள் இறங்கி கீழே இருக்கும் கோவிலில் குடி கொண்டிருக்கும் அம்மன் பத்ரகாளியின் அம்சமாக விளங்குகிறாள். இங்குதான்  வெள்ளிக்கிழமை இரவுகளில் குருதி பூஜை நடைபெறுமாம். அதை காண்பதற்கு மனதில் மிகவும் உறுதி வேண்டும் என்று திரு.பரணீதரன் அவர்கள் அந்த பூஜை நடக்கும் விதத்தை விவரித்து எழுதியிருப்பார்.  அந்தக் காலங்களில் நிஜமாகவே ஒரு கோழியையோ, ஆட்டையோ பலி கொடுத்து அந்த ரத்தத்தில் சோற்றைக்   கலந்து அதைத்தான் நிவேதனம் செய்வார்களாம். பின்னர் அரசாங்கம் உயிர் பலியை தடை செய்த பிறகு மஞ்சள் பொடியில் சுண்ணாம்பை கலந்தால் சிவப்பு நிறத்தில் வருமே, அதை ரத்த சோறாக கொடுக்கிறார்கள் என்றார்கள். இருந்தாலும் அந்த கீழ்க்காவில் ரத்த வாடை அடிப்பது போல இருந்தது. ஜலதாரைகளில் படிந்திருந்த கறை, ரத்தக்  கறையோ என்று தோன்றியது.  அந்தக் கோவிலில் ஒரு அமானுஷ்யம் நிலவியது.

அதுவும் நாங்கள் சென்றது சாயரட்சை தீபாராதனை நேரம். மன நலம் குன்றிய பெண்கள் சிலர் குளித்துவிட்டு தரிசனத்திற்கு வந்தனர். அவர்கள்  அங்கிருக்கும்  மஹாவிஷ்ணு சந்நிதியில் அமர வைக்கப்பட்டனர். அதில் ஒரு பெண் திடீரென்று விசித்து விசித்து அழுதபடி எழுந்திருக்க நான் வெலவெலத்துப் போனேன்.  அம்மனை தரிசிக்க எங்கே மனம் சென்றது? அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை அல்லவா பார்க்கத் தோன்றியது. "கோவிலுக்கு வந்தால் சாமியை பார்க்காமல், வேறு எதையாவது ஏன் பார்க்கிறீர்கள்?" என்று அம்மா திட்டினாள். 

அதே கோவிலுக்கு மிக சமீபத்தில் சென்றிருந்தோம். கோவில் அடியோடு மாறி நவீனமாகிவிட்டது. அந்த அமானுஷ்யம் போன இடம் தெரியவில்லை. 

Saturday, November 28, 2020

அண்ணாமலையானுக்கு அரோஹரா!

அண்ணாமலையானுக்கு அரோஹரா!



கார்த்திகை என்றாலே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை! பஞ்சபூத தலங்களில் நெருப்பிற்கு உரிய தலமாகும்.  இந்த மலையோடு சம்பந்தப்பட்ட பண்டிகை திருக்கார்த்திகை ஆகும். 

கைலாயத்தில் ஒரு முறை உமா தேவியார் சிவ பெருமானின் கண்களை விளையாட்டாக பொத்தி விட, அந்த ஒரு நொடியில் அண்ட சராசரமும் இருண்டு விடுகிறது. இதனால் சினம் கொண்ட சிவ பெருமான், உமா தேவியை பூமிக்குச் சென்று  தவம் புரிய ஆணையிடுகிறார். சிவனின் ஆணைப்படி திருவண்ணாமலையில் இருந்த கௌதம மஹரிஷியின் ஆஸ்ரமத்திற்கு வந்து தவம் செய்து, கார்த்திகை மாத பௌர்ணமி அன்று சிவ பெருமானின் உடலில் பாதியைப் பெறுகிறாள். அதனால்தான் கார்த்திகை அன்று அர்த்தநாரீஸ்வர கோலத்தில்தான் அண்ணாமலையார் எழுந்தருளுவார். 

ஸ்ரீரங்கம், அடுத்து உயரமான(217 அடி) கோபுரத்தை கொண்டது. 2668 அடி உயரமான மலையின் மீது ஏற்றப்படும் தீபம் மகாதீபம் என்று அழைக்கப் படுகிறது.  ஏழு அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரையில் ஏற்றப்படும் தீபத்தை எரிய வைக்க 3000கிலோ பசு நெய் தேவைப்படும். திரிக்கு 1000 மீட்டர் காடாத் துணியும், இரண்டு கிலோ கற்பூரமும் பயன்படுத்தப் படுகின்றன.  எரிந்த பஸ்மம் திருவாதிரை அன்றுதான் பிரஸாதமாக வழங்கப்படும்.  

மலை வடிவில் இருப்பது சிவ லிங்கமே என்பதால் இதை வலம் வருவது சிறப்பான வழிபாடாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக பௌர்ணமி அன்று இந்த மலையை வலம் வருவது மிகவும் சிறப்பு என்ற நம்பிக்கை இருந்தாலும் ஒவ்வொரு கிழமையில் கிரி வலம் செய்வதும் ஒரு சிறப்பான பலனைத்தரும். 

ஞாயிறன்று கிரி வலம் செய்தால் நோய்கள் நீங்கி, உலகில் அரசனைப் போல் வாழலாம் 

திங்கள் கிழமைகளில் கிரிவலம் செய்ய பாவங்கள் நீங்கி, போகங்களை அனுபவிக்க முடியும்.

செவ்வாய் கிழமையில் திருவண்ணாமலையை வலம் வர கடன்கள் தீரும், தரித்திரம் அகலும்.

புதன் கிழமைகளில் கிரிவலம் செய்தால் எல்லா கலைகளிலும் நிபுணத்துவம் பெறலாம். சாத்திர ஞானம் வாய்க்கும். 

வியாழக் கிழமைகளில் கிரிவலம் செய்ய தேவ முனிவர்களுக்கு தலைவனாகும் யோகம் வாய்க்கும்.

வெள்ளிக்கிழமைகளில் கிரிவலம் வர லக்ஷ்மிபதியான மஹாவிஷ்ணுவின் திருவடிகளை அடையலாம். 

சனிக்கிழமைகளில் கிரி வலம் செய்யும் பொழுது நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும், பாதிப்புகளும் அகலும். 

முடிந்தபொழுது திருவண்ணாமலை சென்று வணங்கி வரலாமே. இயலாதவர்கள் இருந்து இடத்தில் இருந்தபடியே நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையாரை மனதார வணங்கலாம். அண்ணாமலையனுக்கு அரோஹரா!



Tuesday, November 17, 2020

கேள்வி பிறந்தது கனவில், பதில் கிடைத்தது காரில்

கேள்வி பிறந்தது கனவில், பதில் கிடைத்தது காரில்

ஆறு மாதங்களுக்குப் பிறகு சென்னை விஜயம். கடந்த மார்ச்சில் சென்னை, அங்கிருந்து மதுரையில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு பெங்களூர் திரும்பினேன். அப்போதே கொரோனாவும் தொடங்கி விட்டது. கூ்டவே லாக் டவுன், எங்கும் செல்ல முடியவில்லை. 

கட்டுப்பாடுகளை தளர்திய பிறகு ஒரு முறை சென்னைக்கு வரச்சொல்லி சகோதரிகள் அழைத்துக் கொண்டிருந்தனர். தீபாவளி அன்று மாலை சகோதரிகள் வீடுகளுள் ஒன்றில் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று் சேர்ந்து பட்டாசுகள் வெடிப்பது பழக்கம். 

தீபாவளியன்று காலை பெங்களூர் எங்கள் வீட்டில் எண்ணெய்,தேய்த்து குளித்து, சிம்பிளாக தீபாவளி கொண்டாடி விட்டு, எட்டே முக்காலுக்கு கிளம்பினோம். மதியம் ஒண்ணே முக்காலுக்கு சென்னையை அடைந்து விட்டோம். மதிய உணவறுந்தி விட்டு, சிறிது ஒய்வு எடுத்துக் கொண்டு விட்டு மாலையில் பட்டாசுகள் வெடித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினோம். பட்டாசுகளை கண்டால் எனக்குள் இருக்கும் குழந்தை குதித்து வெளியே ஓடி வந்து விடுவாள்.

ஒரு வினோத கனவு:

தீபாவளிக்கு முதல் நாள் எனக்கு ஒரு கனவு வந்தது. நான் கல்லூரி மாணவியாக இருக்கிறேன். எகனாமிக்ஸ் வகுப்பு. அதில் வகுப்பெடுக்கும் ஒரு பேராசிரியர்," இதில் ABCD என்பதன் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறி, விளக்குகிறார். அவர் சென்றதும் நான் அருகில் இருக்கும் மாணவியிடம்,"ABCD என்பதன் விரிவாக்கம் கூறினாரே, அது என்ன?" என்று கேட்கிறேன் ஆனால் பதில் கிடைக்கவில்லை. முழித்துக் கொண்டு விட்டேன். 

காரில் பயணித்த பொழுது, நியூ ஜெர்ஸியில் நடந்த கல்யாண மாலை பட்டிமன்ற நிகழ்ச்சியை (பழையது) கேட்டோம். குடும்ப வாழ்க்கை இனிப்பது இந்தியாவிலா? அமெரிக்காவிலா? என்பதுதான் தலைப்பு. இந்தியாவில்தான் என்று பேசிய ஒருவர், "இங்கிருப்-பவர்களில் ABCD என்று ஒரு பிரிவு உண்டு, America Born Confused Desi" என்றார். என் கனவில் ஏற்பட்ட சந்தேகத்திற்கு விளக்கம் காரில் கிடைத்தது.

வழியில் சாய் சங்கீத்தில் காபிக்காக நிறுத்தினோம். அங்கு கண்ணை கவர்ந்தவற்றை க்ளிக்கினேன்.

யாராவது வாங்கி ஊறுகாய் போடுவாரக்கள் என்று காத்திருக்கும் ஜாடிகள்

                    கருங்கல் காளான்கள்

கோமதி அக்காவை நினைவூட்டின

இது யாரை நினைவூட்டியது என்று சொல்ல வேண்டுமா?
அழகான டெரகோட்டா சொப்பு

Trilogy:

ஒரே கருத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்படும் மூன்று கதைகள் ட்ரிலாஜி  எனப்படும். நான் திருமணம் என்னும் கருவை அடிப்படையாகக் கொண்டு இதுவரை இரண்டாம் தாரம், தீமெடிக் கல்யாண வைபோகமே,  திருமணத் திருத்தங்கள் சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். இவற்றில் முதல் கதையும்,மூன்றாாவது கதையும் என் தளத்தில் வெளியாயின. இரண்டாவது கதை எங்கள் ப்ளாகில் வெளியாயின.


Wednesday, November 11, 2020

புத்தம் புது காலை(விமர்சனம்)

 புத்தம் புது காலை(விமர்சனம்) 


தமிழின் முதல் அந்தாலஜி(anthology) படமான புத்தம் புது காலை  படத்தை  அமேசான் ப்ரைமில் பார்த்தேன். இது அமேசான்  பிரைம்ல்தான் வெளியிடப் பட்டது. அந்தாலஜி என்பது ஒரே கருவை அடிப்படையாக கொண்ட ஐந்து கதைகள் . இதில்  லாக் டவுன் நாட்களில் நடப்பதை அடிப்படையாக  கொண்ட  கதைகள் படமாக்கப்பட்டுள்ன. 

 
இந்த ஐந்து படங்களில் 'இளமை இதோ இதோ' படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவும், 
இரண்டாவது படமான அவளும் நானும்/அவரும் நானும்  படத்தை கௌதம் வாசுதேவன் மேனனும் 
மூன்றாவது படமான எனி ஒன் காஃபி படத்தை சுஹாசினி மணிரத்னமும், 
நாகவது படமான ரீ யூனியன் ஐ ராஜீவ் மேனனும், 
ஐந்தாவது படமான மிராக்கிள் படத்தை கார்த்திக் சுப்புராஜும் இயக்கி உள்ளனர்.

இளமை இதோ இதோ: முன்னாள் காதலரான, மனைவியை  இழந்து, தனியாக  வாழும் ஜெயராமை காண அவரது முன்னாள் காதலியான கணவனை இழந்த ஊர்வசி யோகா ரிட்ரீட்டுக்கு பாண்டிச்சேரி  செல்வதாக மகனிடம் சொல்லிவிட்டு வருகிறார். அவர் வந்ததும்  21 நாட்களுக்கு லாக் டவுன் அறிவிக்கப்படுகிறது. 
21 நாட்கள் சேர்ந்து வசிக்கும் அவர்கள் எடுக்கும் முடிவு என்ன? 

ஊர்வசியும், ஜெயராமும் ஊதித்  தள்ளிவிட்டார்கள்.  காதல் வசப்படும் பொழுது வயது குறைந்து போகிறது என்பதை உணர்த்த இளமையான ஜெயராம், ஊர்வசி பாத்திரங்களில் காளிதாஸ் ஜெயராம்(ஜெயராமின் மகன்), கல்யாணி பிரியதர்சனை நடிக்க வைத்திருப்பதையும் காளிதாஸ் அப்பாவை காப்பி அடிக்காமல் தனி பாணியை பின்பற்றியிருப்பதையும் பாராட்டலாம்.  இருவருமே   இயல்பாக நடித்திருக்கிறார்கள். சகஜமாக, சவுகர்யமாக feel good உணர்வு தரும் படம். 

லாக் அவுட் சமயத்தில் தனியாக வசிக்கும் ரிட்டையர்டு சயிண்டிஸ்டான தாத்தாவோடு சேர்ந்து இருக்க வரும் பேத்திக்கும், தாத்தாவுக்கும் இடையே வலுப்படும்  உறவைப் பேசுகிறது  கௌதம் மேனன் இயக்கியிருக்கும் அவரும் நானும்/அவளும் நானும் படம்.  

நகைச்சுவை நடிகராக அறிமுகமான எம்.எஸ்.பாஸ்கர் தான் ஒரு சிறந்த  குணச்சித்திர நடிகன் என்று இதற்கு முன் சில படங்களில்  நிரூபித்திருந்தாலும் இதில் ஒரு தனி பரிமாணம் காட்டுகிறார். பேத்தியாக வரும் ரிது வர்மா  பார்க்கவும் அழகு, நடிப்பும் அப்படியே. நிஜமான தாத்தா,பேத்தியை பார்ப்பது போல்தான் இருக்கிறது. இந்த தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த  படம் இது. 

சுஹாசினி மணிரத்னம் இயக்கியிருக்கும் எனி ஒன் காஃபி? படத்தை ஒரு குடும்பப் படம் எனலாம். சுஹாசினி, அனு ஹாசன், சுருதி ஹாசன், சாருஹாசன் மனைவி கோமளா என்று குடும்ப உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் படம். இவர்களோடு காத்தாடி ராமமூர்த்தி. 

கோமாவில் இருக்கும் தாயாரை பார்க்க லண்டனிலிருந்தும் துபாயிலிருந்தும், மூத்த சகோதரிகள் வருகை தர, மும்பையில் இருக்கும் கடைசி பெண் மட்டும் அம்மா மீது கோபித்துக் கொண்டு  அக்காக்கள் அழைத்தும் வர மறுக்கிறார். திடீரென்று மனம் மாறி (மன மாற்றத்திற்கு காரணம் சொல்லப் படவில்லை) அம்மாவிடம்   வீடியோ காலில் மன்னிப்பு கேட்டு, அவருக்காக ஒரு பாடலும் பாட, அம்மாவிற்கு நினைவு திரும்பி விடுகிறது. 

மூத்த சகோதரிக்கு டிஸ்லெக்சிக்காக ஒரு குழந்தை, இரண்டாவது சகோதரிக்கு நீண்ட நாட்கள் கழிந்து கர்ப்பம் தரித்திருப்பது தெரிய வருகிறது  போன்றவை  கதையின் ஓட்டத்திற்கு எந்த வகையிலும்  உதவவில்லை. 

அனு ஹாசன் எக்கச்சக்கமாக வெயிட் போட்டிருந்தாலும் இயல்பான நடிப்பு. சுஹாசினி வழக்கம் போல். சுருதி ஹாசன் ஓகே! படம் ஸோ ஸோ!

ரீ யூனியனில், தன் ஸ்கூட்டி பஞ்சரானதால் மருத்துவராக  இருக்கும்  தன்னுடைய பள்ளித் தோழன் வீட்டிற்கு  வருகிறார்  ஆண்ட்ரியா. பள்ளித்  தோழனாக கர்னாடக இசைப் பாடகரான  குருசரண்.  ஜி.என்.பி.,பாலமுரளி,  சேஷ கோபாலனைத் தொடர்ந்து சிக்கில் குருசரணா? நன்றாகவே நடித்திருக்கிறார். அவருடைய அம்மாவாக லீலா சாம்சன். காஸ்டிங், செட்டிங், ஆக்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது. ஆனால் கதை?? 

ஆண்ட்ரியா டிரக் அடிக்ட்டாம், அவரை மீட்க ஹீரோவும், அவன் அம்மாவும் முயல்கிறார்களாம். எதிலும் ஒரு ஆழமோ, அழுத்தமோ இல்லை. அளவிற்கு அதிகமாக ஆங்கில வசனங்கள். 

இந்த படத்தில் என்னைக் கவர்ந்தது குருசரண் வீடுதான். இந்த தொகுப்பிலேயே மொக்கையான படம் என்றால் இதுதான். 

அடுத்ததாக வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்! இது வரை எல்லா படங்களுமே மேல் மட்டத்தை மட்டுமே குறி வைத்தன. கார்த்தி சுப்புராஜின் மிராக்கிள் மட்டுமே  கீழ் மட்டத்தை லாக் டவுன் எப்படி பாதித்திருக்கிறது என்று கொஞ்சம் நெகட்டிவாக தொட்டு பார்த்திருக்கிறது . 

மிராக்கிள் நடக்கும் என்று நம்புங்கள் என்று ஒரு ஸ்வாமிஜி டி வி.யில்          பேசுவதோடு படம் தொடங்குகிறது. லாக் டவுனில்  வேலை இல்லாத இரண்டு திருடர்கள் காரை திருட முயற்சிப்பது கடைசியில் மிராக்கிள் நடக்கிறது, யாருக்கு?  என்பது கார்த்திக் சுப்புராஜுக்கே உரிய ஸ்பெஷல். ஆனால் படம் பெரும்பான்மை இருட்டில் நடப்பதாக காண்பித்திருப்பதை  செல்போனில் பார்க்கும் பொழுது முழுமையாக ரசிக்க முடியவில்லை. 

இந்த தொகுப்பில் ஒரு குறை எல்லா கதைகளுமே லாக் டவுனில்  நடப்பதை  காட்டினாலும், எந்த படமும்  லாக் டவுனால் வேலை இழந்தவர்கள், உறவினர்களை இழந்தவர்கள் அவர்களின்  ஈமச் சடங்கிற்கு கூட வர முடியாதது போன்ற விஷயங்களை தொடவே இல்லை என்பதுதான். ஐந்து 
குறும் படங்களை சேர்த்து பார்த்தது போல் இருக்கிறது. 

  




Sunday, November 8, 2020

திருமண திருத்தங்கள்

 திருமண திருத்தங்கள் 


ரெஸ்டாரெண்டில்  தனக்கு எதிர்  நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஆர்த்தியிடம், விஷால் ," நீ உங்க அப்பா,அம்மாவிடம் பேசினாயா?" என்று கேட்டான். 

காபியை ஒரு சிப் அருந்தி விட்டு, "பேசினேன், பட் நோ யூஸ்"  என்றாள்.

எங்க வீட்டிலும் அதே கதைதான் என்ற விஷால் ," "ஸோ, வேற வழியில்லை, நம்ம பிளானை எக்சிகியூட் பண்ண வேண்டியதுதான்" என்றான்.   
 
அவனுக்கு பதில் சொல்லாமல் ஆர்த்தி, ஜன்னல் வழியே தெரிந்த தோட்டத்தை வெறிக்க, டேபிளை தட்டி, "என்னாச்சு? எனி பிராப்லம்?" 

"ஒண்ணுமில்லை, நம்ம அப்பா,அம்மாவுக்கு இது ரொம்ப ஷாக் ஆக இருக்குமோனு தோண்றது"

"வேற வழியில்ல, நம்ம இஷ்டம் என்னனு கேட்காம அவங்களா  ஒன்றை டிசைட் பண்ணி, அதை நம்ம மேல திணிச்சா வேற என்ன பண்ண முடியும்?"

ஆமாம், அப்போ நீ சொல்ற மாதிரி நாம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கொள்வதைத் தவிர வேற வழியில்லை. அதுக்கான அரேஞ்சு மென்ட்ஸ்..?"

"அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். உன் சைடுல நீ ஸ்ட்ராங்கா இரு அது போறும். அம்மா, அப்பா செண்டிமெண்டில் நீ கட்சி மாறிடக் கூடாது" 

"நோ! நோ! " என்று அவள் புன்னகைத்ததும் விஷால்,"அப்பா! வந்ததிலிருந்து இப்போதான் சிரிக்கிற.." என்றதும் அவள் மேலும் தன் புன்னகையை விரிவு படுத்தினாள். அந்த புன்னகைக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று விஷாலுக்குத் தோன்றியது.

அடுத்தடுத்து வேலைகளை விஷால் விரைந்து முடித்தான்.  ஆர்த்தி  அம்மாவுடன்  புடவை  வாங்க கடைக்குச் சென்று, இரண்டு புடவைகள் மட்டும் எடுத்துக் கொண்டாள். அவர்களுக்கு  திருமணப் பதிவில் உதவி செய்த ஏஜென்ட் பெண்மணி ஆர்த்தியிடம், "நாளைக்கு ரிஜிஸ்டர் பண்ண வரும் பொழுது இப்படி ஜீன்ஸில் வராதம்மா, புடவை கட்டிக்கிட்டு வா"  என்றாள்.  

குறிப்பிட்ட நாளில்," அம்மா இன்னிக்கு விஷாலோட அப்பா அம்மா நம்ம வீட்டுக்கு வருவாங்க," என்று ஆர்த்தியும், ஆர்த்தியோட அப்பா அம்மா உங்களை அவங்க வீட்டுக்கு வரச் சொல்லியிருக்காங்க" என்று விஷாலும் கூறி, அவர்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் கூட்டினர். எதற்காக தாங்கள் அங்கே கூடியிருக்கிறோம் என்று புரியாத பெரியவர்கள் பொதுவாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். அப்போது காரில் பட்டுப் புடவையில் ஆர்த்தியும்  பட்டு வேஷ்டியில் விஷாலும்  மாலையும் ,கழுத்துமாக வந்திறங்கிய பொழுது அவர்களின் பெற்றோர்கள், ஆச்சர்யமா? அதிர்ச்சியா? என்று சொல்லத் தெரியாத உணர்வில் திகைக்க, 

"நாங்க இன்னிக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கொண்டு விட்டோம். எல்லோரும் சேர்ந்து நில்லுங்கோ, நாங்க நமஸ்காரம் பண்றோம்"  

வாட்?
என்ன நடக்கறது இங்க?
என்னடி கூத்து இது?

என்று விதம் விதமாக தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். 

கோபமாக எழுந்த விஷாலின் தந்தை வெளியிடம் என்பதால் தன் கோபத்தை காட்ட முடியாமல் விருட்டென்று எழுந்து வெளிப் பக்கம் நடக்கத் துவங்க, அவருக்கு முன்னாள் ஓடி வாசல் கதவை தாளிட்ட ஆர்த்தி, "அங்கிள் ப்ளீஸ் ,ஒரு நிமிஷம்.. நாங்க சொல்றத கேளுங்க.." என்றதும் திரும்பி வந்து சோபாவில் கோபமாக அமர்ந்தார். 

"ஆர்த்தி, வாட்ஸ் ஹாப்பனிங்?" என்ற ஆர்த்தியின் தகப்பனாரிடம் "அங்கிள், நான் சொல்றேன். கொஞ்சம் எல்லோரும் அமைதியா இருங்கோ" என்ற விஷால் தன் கழுத்திலிருந்த மாலையை கழற்றி டீப்பாயின் மேல் வைத்தான். 

உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணி, அடுத்த மாசம் தேதி குறிச்சிருக்கு, அதுக்குள்ள இப்போ என்ன அவசரம்? 

விஷாலின் அம்மா முதல் முறையாக வாய் திறந்தாள்.

கரெக்ட்! எங்களுக்கு கல்யாணம் நீங்க நிச்சயம் பண்ணி விட்டீர்கள். ஆனால் அதை எப்படி பண்ணப் போறேள்? ஒரே ஆடம்பரம்.,லட்சக்கணக்கா செலவு, அதெல்லாம் எதுக்கு? எங்க ரெண்டு பேருக்குமே அதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்ல. நாங்க எவ்வளவு சொல்லியும் நீங்க கேட்கறதா இல்ல, அதனால்தான் நாங்கள் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு முடிவு எடுத்தோம். 

இன்னிக்கு நல்ல நாளானு பார்க்க வேண்டாமா? 

"இன்னிக்கு நல்ல முகூர்த்த நாள்தான். கிருஷ்ணமூர்த்தி ஜோசியர் கிட்ட கன்சல்ட் பண்ணிதான் இந்த தேதியை பிக்ஸ்  பண்ணினோம்."

"வேற என்ன பாக்கி? தனிக்குடித்தனம் போக வீடு பார்த்தாச்சா?"

"சே! சே! அப்படியெல்லாம் கிடையாதுப்பா..  இந்த ஆடம்பர கல்யாணத்துக்கு ஒரு முடிவு கட்டணும்னு நினைச்சோம். "

"என்னடி ஆடம்பரம்? எங்களுக்கு இருக்கறது நீ ஒரு பொண்ணு, உன்னோட கல்யாணத்தை சிறப்பா பண்ணனும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா?" என்று ஆர்த்தியின் அம்மாவும்,

"லைஃபில் ஒரு தடவ நடக்கப்போற விஷயம், நம்மால் அஃபோர்ட் பண்ணவும் முடியும், அப்படியிருக்க எதுக்காக சிம்பிளா பண்ணனும்?"  என்று விஷாலின் அம்மாவும் கேட்க,

"இதுதான் பிரச்னை. லைஃபில் ஒரு தடவைத்தானே வரப்போறதுனு ஒரு பேச்சு, அடுத்தது அஃபோர்ட்டபிலிட்டி... நம்மால்  முடியும்னு நினைக்கிறவங்க ஆடம்பரமா செய்வதால் அவர்களை பார்த்து மற்றவர்களுக்கும் அந்த ஆசை வருகிறது. ஒரு பியர் பிரஷரை நாம் கிரியேட் பண்ணிவிடுகிறோம். கல்யாணத்தில் இவ்வளவு ஆடம்பரம் தேவையே இல்லை. இதுக்கு யார் முடிவு கட்டுவது? நாங்க ஸ்டாப் பண்ணலாம்னு நினைச்சோம். ."  பட்டிமன்ற பேச்சாளர் போல் விஷால் பேசி முடித்தான். 

"நீ ஒருத்தன் இதையெல்லாம் நிறுத்தினா, எல்லாரும் நிறுத்திடுவாளா?"

"மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை, எங்களுக்கு ஆடம்பரத் திருமணம் வேண்டாம்.  தவிர எல்லா நல்ல விஷயங்களையும் யாரோ ஒருத்தர்தான் ஆரம்பித்திருக்கிறார்". 

"இப்படி நீண்ட விவாதம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு குறைந்து, ஆர்த்தி,விஷால் சொல்வதின் நியாயம் புரிந்து பெரியவர்கள் தங்கள் பிடியைத் தளர விட்டார்கள். " சரி, நடந்தது நடந்து விட்டது. வாங்கோ ரெண்டு பேரும் சுவாமிக்கு முதலில் நமஸ்காரம் பண்ணுங்கோ,  நான் ஒரு பாயசமாவது பண்றேன்.." என்று ஆர்த்தியின் அம்மா எழுந்திருக்க, 

"இல்ல மாமி, நீங்க எதுவும் பண்ண வேண்டாம், நாங்க கேடரிங்கில் சாப்பாடு சொல்லி விட்டோம்."

"மை காட்!.. எங்களுக்கு எதுவுமே விட்டு வைக்கலையா?"

"சாப்பிட்டு விட்டு, ரிசப்ஷன் எங்க வெச்சுக்கலாம்னு டிசைட் பண்ணலாம், ஹனிமூன் எந்த ஊருக்கு போகச் சொல்கிறீர்களோ அந்த ஊருக்கே போகிறோம்"  சிரித்துக் கொண்டே விஷால் கூற,

"ஹனிமூனா? நத்திங் டூயிங். முதலில் குல தெய்வம் கோவில், அப்புறம், திருப்பதி, குருவாயூர்னு ஷேத்ராடனம் எல்லாம் முடி, அப்புறம் யோசிக்கலாம்" என்று அவன் அப்பா அவனை சீண்ட, "பெருமாளே!" என்று அவன் அதிர்ச்சியடைய, "அதையேதான் நானும் சொல்றேன்" என்றார் அவன் தந்தை.   

பி.கு.:
என்னதான் ஆர்த்தியும், விஷாலும் பதிவுத் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுடைய பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எளிமையாக ஒரு வைதீக திருமணமும் செய்து கொண்டதாக கேள்வி. 

Saturday, October 24, 2020

மாறுவது பொம்மை, மாறாதது சுண்டல்

 மாறுவது பொம்மை, மாறாதது சுண்டல் 


நவராத்திரி என்றால் முதலில் நினைவுக்கு வருவது  பொம்மைகள்தான். பொம்மை கொலு என்றே இதை சொல்வார்கள். இந்த பொம்மைகளின் பரிணாம வளர்ச்சியை பார்க்கலாமா? 


முன்பெல்லாம் கொலு என்றால் அதில் மரப்பாச்சி  பொம்மைகள்தான்  பிரதான இடம் பிடிக்கும். எங்கள் அப்பா, மரப்பாச்சியைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பார்.  மரப்பாச்சி என்றால் நினைவுக்கு வருவது திருப்பதி. "திருப்பதியில் மரப்பாச்சி கடை வைத்தவனுக்கும், ஸ்ரீரெங்கத்தில் பட்டாணி கடை வைத்தவனுக்கும் நேரே வைகுண்டம், ஏனென்றால் கோவிலிலிருந்து வருபவர்கள் நேரே அங்கேதான் செல்வார்கள்"  என்று அனந்தராம தீக்ஷதர் கூறுவாராம். இப்போதும் எங்கள் வீடுகளில் படி கட்டியதும் முதலில் மரப்பாச்சியைத்தான் வைப்போம்.

அதன்பிறகு மண் பொம்மைகள் வந்தன. மண் பொம்மைகள் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது பண்ருட்டிதான். ஆரம்பத்தில் கடவுள் உருவங்கள்தான் பொம்மைகளாக வந்தன. செட் பொம்மைகள் என்று வரத்தொடங்கிய பொழுது இரண்டு பொம்மைகள் ஜோடியாக வரும். இடுப்பில் குடத்தோடு நிற்கும்  பெண்கள், தலையில் பூக்கூடையோடு நிற்கும் பெண்கள், நடனமாடும் பெண்கள். எங்கள் வீட்டில் இருந்த இரண்டு நடன பொம்மைகளை பத்மினி, ராகினி  பொம்மைகள் என்பார்கள். அதே போல் தியாக பூமி படம் வந்த காலத்தில் பேபி சரோஜா பொம்மை என்பது பிரபலமாக இருந்ததாம். 



பின்னர் ராமர் செட்(ராமன், சீதை, லட்சுமணன், ஹனுமான்), தசாவதார செட், ஆறுபடை வீடு செட், அஷ்ட லட்சுமி செட், கிருஷ்ணர் ராச லீலை செட்  போன்றவை வந்தன. அதற்குப் பிறகு கல்யாண  செட், என்றுதான் முதலில் வந்தது. பின்னர் அதில் முகூர்த்த செட், ஜான்வாச செட், ரிசப்ஷன் செட் என்று விதம் விதமாக வர ஆரம்பித்து விட்டன.  

புத்தர், விவேகானந்தர், மகாபெரியவர் , ஜெயேந்திரர், விஜயேந்திரர் இவர்களோடு காந்தி, நேரு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்கள் பொம்மைகளும் இடம் பெறத் தொடங்கின. அப்போதெல்லாம் பைஜாமா, ஜிப்பா, குல்லா அணிந்து  கையில்  தேசிய கொடியை  தாங்கிக் கொண்ட இளைஞன் பொம்மை பல வீடுகளில் இருக்கும். 

அதே போல முன்பெல்லாம் வெள்ளைக்கார பொம்மைகள் எனப்படும் பீங்கான் பொம்மைகள் நிறைய இருக்கும். அவை பெரும்பாலும் ஆங்கிலேயர்களின் உருவங்களாகத்தான் இருக்கும். கோட், சூட், தொப்பி அணிந்து ஆண்கள், நீண்ட கவுன் அணிந்த பெண்கள் பொம்மைகள் எங்கள் வீட்டில் ஒரு பெட்டி நிறைய இருந்தது. அவை எல்லாம்  வீடுகள்  மாற்றியதில் எங்கே சென்றன என்றே தெரியவில்லை. அவைகளை பெரும்பாலும் பார்க்குகளில் வைப்போம். நவராத்திரி கொலுவில்  ஆங்கிலேயர்களுக்கு என்ன வேலை என்று அப்போது தோன்றவில்லை.  இப்போதும் பீங்கான் பொம்மைகள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் விலங்குகள், பறவைகள், மீன்கள் போன்றவைதான். 


இப்போதெல்லாம் பாற்கடல் கடைவது, ராமாயண காட்சிகள், பாட்டி வடை சுடும் கதை போன்றவை பொம்மைகளாக வருகின்றன. அதைத்தவிர பள்ளிக்கூட செட், கிரிக்கெட் செட், கிரிவலம் செட், கிராம காட்சிகள் , போன்ற சமூக நிகழ்வுகளும் பொம்மைகளாக வருகின்றன. இந்த வருடம் கொரோன செட் என்று மாஸ்க் அணிந்த மனிதர்கள், வெறிச்சோடிய வீதிகள், ஒர்க் ஃபிரம் ஹோம், போன்றவை  பொம்மைகளாக வரும் என்று எதிர்பார்த்தேன். அடுத்த வருடம் நிச்சயமாக வந்துவிடும்.   



பொம்மைகளின் அடுத்த அவதாரம் காகிதக்கூழ் பொம்மைகள். இவைகள் அளவில் பெரிதாக இருந்தாலும் கனமில்லாமல் இருப்பதால் பராமரிப்பது எளிது. எனவே வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இவ்வகை  பொம்மை களையே எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள். இப்போது ஃபைபர் பொம்மைகள் வந்து விட்டன.    

கிராமங்களில் வீடுகள் பெரிதாக இருந்த காலத்தில் பொம்மைகளும் பெரிதாக இரண்டடியில் வந்தன. எங்கள்  வீட்டில், எங்கள் கொள்ளு பாட்டி கால  தவழும் கிருஷ்ணர் பொம்மை நிஜமாக ஒரு எட்டு மாத குழந்தை சைசில் இருக்கும்.  அதற்கு பிறகு வந்தவை ஓரடி பொம்மைகள். அவைகளை வைப்பதற்கு ஏற்றார்போல் படிகளும் பெரிதாக இருக்கும். இப்போது அபார்ட்மெண்ட் வீடுகளுக்கு ஏற்றாற்போல் பொம்மைகளும் அளவில் சுருங்கி விட்டன. படிகளும், கனமில்லாமல், ஈசியாக  விரித்து, மடிக்க கூடியவர்களாக வந்திருக்கின்றன. எதிர் காலத்தில் படிகளும், பொம்மைகளும் இல்லாமல் விருந்தினர் வரும் பொழுது மட்டும் கொலு இருப்பது போல் தோற்றம் அளிக்கும்  வெர்ச்சுவல் கொலுவாக, வந்தாலும் வந்து விடும்.  ஆனால் சுண்டல் கொடுக்கும் பழக்கம் மட்டும் மாறாது என்று நினைக்கிறேன்.   

Thursday, October 22, 2020

மசாலா சாட் - 20

 மசாலா சாட்  - 20


யார் யாரை எப்படி வணங்க வேண்டும்? 

பெற்றோர்களை நாபிக்கு எதிரே கை கூப்பி வணங்க வேண்டும். காரணம் நம்மை தன் வயிற்றிலே சுமந்தவள் தாய் நமக்கு உணவளித்தவர் தந்தை. 

நண்பர்களையும், பெரியவர்களையும் நம் நெஞ்சில் வைத்து போற்றுகின்றோம் என்பதை உணர்த்த நெஞ்சிற்கு எதிரே கை கூப்பி வணங்க வேண்டும். 

ஆன்மீக வழி காட்டும் குருவுக்கு, அவர் நமது ஞானக் கண்ணை திறப்பதால் நெற்றிக்கு நேரே கரம் குவித்து வணங்க வேண்டும். 

எல்லாவற்றையும் கடந்த இறைவனையோ தலைக்கு மேல் கை கூப்பி வணங்க வேண்டும். 
- அபிராமி அந்தாதி உரையில் சுகி சிவம்.

ஆண்  மூலம் அரசாளும் என்கிறார்கள். இது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பழமொழி. ஆனி மாதத்திலே மூலம் நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும். அன்று பிறப்பது சிறப்பான யோகத்தை தரும். ஆனி மூலம் அரசாளும் என்பதை,ஆண் மூலம் அரசாளும் என்று திரித்து விட்டார்கள்.  
- ஜீ தமிழில் ஜோதிட சிம்மம் கண்ணன் பட்டாச்சார்யா 
அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லையே, பெண் மூலம் நிர்மூலம் என்று வேறு சேர்த்து விட்டார்களே, அதுதான் கொடுமை!


தனிஷ்க் விளம்பரத்திற்கு மதச்சாயம் பூசி அதை வாபஸ் பெற வைத்து விட்டார்கள். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதை ஆதரிக்கும் தேநீர் விளம்பரத்திற்கு ஏன் எந்த எதிர்ப்பும் இல்லை? 


நவராத்திரியில் லலிதா சஹஸ்ரநாம பாராயணத்திற்கு சென்ற வீட்டில்  அழகாக இருந்ததால் புகைப்படம் எடுத்தேன். அங்கு கிடைத்த கிஃபிட் இது. என்னவென்று தெரிகிறதா? பாட்டில் வடிவில்   zip lock bag.  குளிர்சாதன பெட்டியில் ஸ்டோரிங் கன்டைனராக பயன்படுத்தலாம் என்று அமேசான் இல் பார்த்தேன்.  


கடைசியாக ஒரு செய்தி. இதை கிச்சன் டிப்ஸ் என்றும் கொள்ளலாம். அமாவாசையன்று என் மகன் தர்ப்பணம் செய்து விட்டு வைக்கும் பாத்திரதில் இருக்கும் எள், தர்ப்பை போன்றவைகளை எடுத்து விட்டு தேய்க்கப் போட்டால் என்னதான் புளி, பீதாம்பரி எல்லாம் போட்டு தேய்த்தாலும், கறை போகாது. அன்றொரு நாள் இரவு மிச்சமிருந்த சாம்பார், ரசம் இவைகளை அதில் கொட்டி வைத்து விட்டு,   மறுநாள் காலை அவைகளை தேய்க்க, கறை போச்சு, இட்ஸ் கான், பாத்திரங்கள் பளிச்! ஸோ,மாறல் ஆஃப் தி ஸ்டோரி: மீந்து போகும் குழம்பு, ரசத்தில் பித்தளை பாத்திரங்களை தேய்க்கலாம். 



அடுத்த பதிவில் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடை பெறுவது யார் என்று உங்களுக்கே தெரியும்.







   

Friday, October 9, 2020

மைக் மேனியா

மைக் மேனியா 

மூன்று வாரங்களுக்கு முன்பு முகநூலின் மத்யமர் குழுவில் ஒரு விவாதத்தில்  பேசும் வாய்ப்பு கிடைத்தது. இங்கு மத்யமர் என்றால் என்ன என்று கூறி விடுகிறேன். முக நூலில் இருக்கும் எத்தனையோ குழுக்களில் மத்யமாறும் ஒன்று. சங்கர் ராஜரத்தினம் என்பவரால் தொடங்கப்பட்டு இப்போது 30000 உறுப்பினர்களோடு சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. வெறுமனே முகநூலில் அரட்டை அடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் சமூக சேவைகளும் செய்து வருகிறார்கள்.  ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பு கொடுத்து எழுதச் சொல்வார்கள். சிறந்த படைப்புகளுக்கு போஸ்ட் ஆஃப் தி வீக் என்று சான்றிதழ் வழங்குவார்கள். நம் ரஞ்சனி நாராயணன் நிறைய POTW வாங்கியிருக்கிறார்.  நானும் இந்த வருடத்தில்  இதுவரை நான்கு POTW வாங்கியிருக்கிறேன். இதைத்தவிர தனித்திறமை, குழுத்திறமை, நாடகம், கவிதை என்றெல்லாம் நடத்தி  பரிசுகள் வழங்குகிறார்கள். சமீபத்தில் புதன் கிழமைகளில் மத்யமர் சபா என்று விவாதங்கள் நடத்துகிறார்கள். அதில்தான் நான் பங்கு கொண்டு பேசினேன். 

இந்த மத்யமர் சபாவில் மூன்று வாரங்களுக்கு முன்பு நம் சமுதாயத்தில் ஆணாதிக்கம் முடிந்து பெண்ணாதிக்கம் தொடங்கி விட்டது, இல்லை இன்னும் ஆணாதிக்கம்தான் தொடர்கிறது என்று பேச விருப்புகிறவர்கள் பெயர் கொடுக்கலாம் என்றார்கள். அடுத்த நாள் திரு.சங்கர் ராஜரத்தினம் அவர்கள், "என்னது பெண்ணாதிக்கம் தொடங்கி விட்டது என்று பேச யாருமே பெயர் கொடுக்கவில்லையே, அவ்வளவு பயமா?" என்று கேட்டிருந்தார். நான் உடனே," யாருமே முன்வரவில்லையென்றால் நான் பேசுகிறேன் என்று செய்தி அனுப்பினேன். உடனே, "நீங்கள் என்ன பேச நினைக்கிறீர்கள் என்பதை சுருக்கமாக ஒரு நிமிட ஆடியோவாக எடுத்து அனுப்புங்கள்" என்றார்கள். அதன்படி செய்து தேர்ந்தெடுக்கப் பட்டேன். 

அதில் இன்னும் ஆணாதிக்கம்தான் நீடிக்கிறது என்று கலிபோர்னியாவிலிருந்து பேசிய ஒரு பெண்மணி வெளுத்து வாங்கினார். அவர் வீட்டில் மகன், மருமகள்  இருவருமே ஐ.டி.யில் பணிபுரிந்தாலும், மகன் காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருக்க, மருமகள் அடுப்பங்கரையில் பிசியாக இருப்பாளாம். மாலை அலுவலகத்திலிருந்து வந்ததும் மகன் செல்போனுடனும், ரிமோட்டுடனும் சோபாவில் செட்டிலாகி விட, மருமகள் அவன் தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றுவாளாம். கோபம் அதிகமாகும் பொழுது மகனின் கை நீளுமாம். இப்படி அதிரடியாக பேசினார். பின்னூட்டங்களில் கூட அவருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. 

அதே ஆண்டி மறு நாள், " ஐயையோ! என் மகன் தங்கம். வீட்டு வேலைகளை மகன்,மருமகள்  இருவரும் பகிர்ந்துதான் செய்வார்கள்.  நான் என் வாதத்திற்கு வலு சேர்க்க உதாரணம் கொடுப்பதற்காக என் மகனை பயன்படுத்திக் கொண்டு விட்டேன். என் மகனும்,மருமகளும் இதை ஈசியாக எடுத்துக் கொண்டாலும் மற்ற உறவினர்களுக்கு என் மீது ரொம்ப கோபம். எங்கள் சம்பந்தியும் மத்யமரில் இருக்கிறார் அவர் என்ன நினைத்துக் கொள்வார்? தயவு செய்து நான் செய்த தவறை மற்ற பேச்சாளர்கள் இனிமேல் செய்யக் கூடாது என்று விரும்புகிறேன் என்று அந்தர் பல்டி அடித்து விட்டார். ஆண்டியின் ஆண்ட்டி க்ளைமாக்ஸ் எப்படி?     

சிலருக்கு மைக்கை கையில் எடுத்து விட்டால் கீழே வைக்கத் தெரியாது, சிலருக்கு என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்பதே தெரியாது. எல்லாம் மைக் மேனியா!


Sunday, September 27, 2020

இயல்பு நிலை திரும்புகிறதா?

இயல்பு நிலை திரும்புகிறதா? 

கடந்த ஒரு மாதத்தில் மூன்று  சனிக்கிழமைகளில் வெளியே செல்ல நேர்ந்தது. முதல் முறை சென்ற பொழுது சாலையில் அத்தனை வாகனங்கள் இல்லை. சென்ற வாரம் ஓரளவு நார்மல் போக்குவரத்து காணப்பட்டது. நேற்று கொஞ்சம் பர்சேஸ் செய்ய  வேண்டியிருந்ததால் ஜெயநகர் சென்றோம். வழக்கமான நெரிசல் தொடங்கி விட்டது என்றே தோன்றியது. உணவகங்கள் திறந்து விட்டாலும் கும்பல் குறைவாகவே இருக்கிறது.

ஆகஸ்ட் 15 அன்று மாலை எம்.ஜி.ரோட்


மேலே இருக்கும் படத்தில் இருப்பது செலஃபோன் கடை ஒன்றில் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக வரையப்பட்டிருந்த கட்டங்கள். ஆனால் அதை மதிக்காமல் கும்பலாக நின்றபடி வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.  

கொஞ்சம் ஜவுளி எடுக்க வேண்டியிருந்தது எனவே ஜெயநகரில் இருந்த வரமஹாலக்ஷ்மி கடைக்குச் சென்றோம். உள்ளே நுழையும் முன் நம் காலணிகளை ஒரு பையில் சேகரித்து டோக்கன் தந்தார்கள். எல்லா கடைகளையும் போல் ஹாண்ட் சானிடைசரை கையில் பூசிக்கொண்டு உள்ளே நுழைந்தால் நடுவில் பிரதானமாக பெரிய மஹாலக்ஷ்மி சிலை. தரையில் பாய்கள் விரிக்கப்பட்டு அதன் மீது வெள்ளைத் துணியை விரித்து புடவைகளை காட்டுகிறார்கள். நாம் தரையில் உட்கார்ந்து பார்க்கலாம், கீழே அமர முடியாதவர்கள் நாற்காலியிலோ அல்லது குட்டை ஸ்டூலிலோ அமர்ந்து கொள்ளலாம். விற்பனை சிப்பந்திகள் பொறுமையாக, சலிக்காமல் புடவைகளை காண்பித்தார்கள். ஆனாலும் சென்னையில் ஜவுளிக் கடலில் ஷாப்பிங் செய்து விட்டு இங்கெல்லாம் ஷாப்பிங் செய்வது குற்றாலீஸ்வரனை நம்முடைய வளாகத்தில் இருக்கும் சிறு நீச்சல் குளத்தில் நீந்தச் சொன்னது போல் இருக்கிறது. பில்லை கட்டியதும் துணிகளை பையில் போட்டு அங்கிருக்கும் ஐயர் ஒருவர் அவைகளை மஹாலக்ஷ்மி உருவச்சிலை முன் வைத்து, தீபாராதனை காட்டி நம்மிடம் தந்தது வித்தியாசமாக இருந்தது. 

கும்பலில்லாத சென்ட்ரல் மாலில் அனாவசிய எக்ஸ்பிரஸ் பில்லிங் கவுண்டர் 

வீட்டிற்கு வந்ததும் முறையாக ஆவி பிடித்தோம். அதென்ன முறையாக என்கிறீர்களா? ஆவி பிடிக்கும் பொழுது முதல் ஐந்து முறைகள் மூக்கினால் ஆவியை இழுத்து, வாயினால் வெளி விட வேண்டும். பிறகு ஐந்து முறைகள் வாயினால் இழுத்து மூக்கினால் சுவாசத்தை விட வேண்டும். பின்னர் உப்பு நீரில் வாயைக் கொப்பளித்தோம். 


செப்டெம்பர் 27 முதல் அக்டோபர் 03 வரை ஸ்டீமிங் வாரமாம். எல்லோரும் தினசரி   ஆவி பிடித்து அந்த பெயர் சொல்லாத கிருமி பரவாமல் தடுக்க வேண்டுமாம். செய்யலாம். 

Tuesday, September 22, 2020

அதிக மாசம்!

அதிக மாசம்! - மல மாதம்! 


இப்போது பிறந்திருக்கும் புரட்டாசி மாதம் அதிக மாசம் அல்லது மல மாதம் எனப்படும். எந்த மாதத்தில் இரண்டு அமாவாசைகள் அல்லது இரண்டு பௌர்ணமிகள் வருகிறதோ, அந்த மாதத்தில்  திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்யக் கூடாது என்பதாலேயே அது மல மாதம் எனப்படும். இந்த வருட புரட்டாசியில் இரண்டு அமாவாசைகள். 

*நம் நாட்டி இரண்டு விதமான பஞ்சாங்கங்கள் பின்பற்றப் படுகின்றன. ஒன்று சௌரமானம், மற்றது சாந்திரமானம். மேஷம் முதல் மீனம் வரையிலுள்ள பன்னிரெண்டு ராசிகளுள் சூரியன் பிரவேசிப்பதை மாதப் பிறப்பாக கொள்ளும் முறைக்கு சௌரமானம் என்று பெயர். இதை இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டுமே கடைபிடிக்கின்றன.  அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையில் மாதம் பிறப்பதாக கொள்ளும் சாந்த்ரமான முறையைத்தான் மற்ற மாநிலங்கள் கடை பிடிக்கின்றன. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளைத்தான் சித்திரை வருடப் பிறப்பு என்று நாம் கொண்டாடுகிறோம். ஆனால், பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையை வருடப் பிறப்பாக யுகாதி என்று தெலுங்கர்களும், கன்னடியர்களும்  கொண்டாடி விடுவார்கள். இப்படி ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையில் அடுத்த மாதம் பிறக்கும். இதன்படி ஒரு அமாவாசை,ஒரு பௌர்ணமி சேர்ந்தது ஒரு மாதம். நடைமுறையில் இதில் ஒரு மாதத்திற்கு முப்பது நாட்கள் வராது. அதாவது ஒரு வருடத்திற்கு 360 நாட்கள் வராது. ஒரு வருடம் என்பது 365 1/4 நாட்கள் கொண்டது.   அதனால் இந்த வித்தியாசத்தை சரி கட்டுவதற்கு சாந்திரமாசத்தினர் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பன்னிரெண்டு மாதத்தோடு இன்னொரு மாதத்தை சேர்த்து அதிக மாதம் என்பார்கள். அந்த மாதத்தில் சுப கார்யம் செய்ய மாட்டார்கள். ஆனால் இந்த மாதத்தில்  கோவிலுக்குச் செல்வது, தெய்வ வழிபாடுகள் செய்வது போன்றவை அதிக பலன் தரும் என்ற நம்பிக்கை உண்டு.  

இந்த மாதத்தின் சிறப்புகள்:

வருடத்தின் ஒவ்வொரு மாதமும் ஒரு தேவதைக்கு சமர்பிக்கப்பட்டதாகவும், இந்த அதிக மாசம் மல மாதம் என்று கருதப்பட்டதால் அதை ஏற்றுக் கொள்ள மற்ற தெய்வங்கள் மறுத்து விட, புருஷோத்தமனான ஸ்ரீமன் மஹாவிஷ்ணு ஏற்றுக் கொள்கிறார் என்பது ஒரு புராணக் கதை.  எனவே இது புருஷோத்தம மாதம் என்றும் வழங்கப் படுகிறது.  இந்த மாதத்தில் புருஷோத்தமனான ஸ்ரீமன் நாராயணனை வணங்குவது மிகவும் சிறப்பானதாகும்.  விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், பாகவத படனம், தேவி பாகவத பாராயணம் போன்றவை விசேஷ பலனை தரக் கூடியவை. தான தர்மங்கள் செய்வதும், புண்ணிய நதிகளில் நீராடுவதும் சிறப்பான பலனைத் தரும் என்று நம்பிக்கை. 

மஸ்கட்டில் இருக்கும் கிருஷ்ணன் கோவிலில் அதிக மாதம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். தினமும் விதம் விதமாக கிருஷ்ணனுக்கு அலங்காரம் செய்வார்கள்.  அழகான ரங்கோலி, நவ தானிய கோலம் என்று என்றெல்லாம் பார்க்கவே அழகாக இருக்கும். 

ஸ்ரீரெங்கத்தில் இந்த மாதத்தில் சப்த பிரகாரம் சுற்றுவார்கள். கொரோன இல்லாத காலத்தில் கும்பல் அதிகமாக இருக்கும். இந்த வருடம் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. விரைவில் நிலைமை சீரடைய அந்த புருஷோத்தமனை பிரார்த்திக்கலாம்.  

அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரன பேஷஜாத் 
நஸ்யந்தி சகலா ரோகா சத்யம் சத்யம் வதாம்யஹம்!



*-தகவல் தெய்வத்தின் குரல் மூன்றாம் பகுதி

Thursday, September 10, 2020

இதற்குத்தான் ஆசைபட்டாயா பானு..?

 இதற்குத்தான் ஆசைபட்டாயா பானு..?


எனக்கு ஏன் இந்த ஆசை வந்தது என்று தெரியவில்லை. சமஸ்க்ருதம் கற்றுக் கொள்ளலாம் என்று தோன்றியதைத்தான் சொல்கிறேன். என் உறவில் ஒரு பெண்மணிக்கு  போன் செய்த  பொழுது, அவர் சம்ஸ்க்ருத வகுப்பு எடுத்துக் கொண்டிருப்பதாக அவருடைய மருமகள் கூறினார். 

அட! நாம் கூட அவரிடம் சம்ஸ்க்ருதம் கற்றுக்கொள்ளலாமே.. என்று விவரங்கள் கேட்டேன். இப்போதுதான் ஒரு புது பாட்ச் துவங்கியிருக்கிறது, நீங்கள் தாராளமாக சேர்ந்து கொள்ளலாம் என்றார். சம்ஸ்க்ருத பாரதி என்னும் அமைப்பின் மூலாம் கற்றுத் தருகிறார்களாம். புத்தகங்களுக்கும், பரிட்சைக்கு மாத்திரம் பணம் காட்டினாள் போதும் என்றார். சரி என்று சேர்ந்து  விட்டேன்.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஸ்போக்கன் 
ஸான்ஸ்க்ரிட் என்று சின்ன வாக்கியங்கள் சொல்லி  கொடுத்தார்கள். அவை எல்லாவற்றையும் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு படித்த பொழுது எவ்வளவு ஈசியாக இருந்தது! ஆஹா! நமக்கு சமஸ்க்ருதம் வந்து விட்டது, காளிதாசனை கரைத்து குடித்து விட வேண்டியதுதான் பாக்கி. என்று நினைத்துக் கொண்டேன். ட்ரைலரை பார்த்து விட்டு, முழு படமும்  இப்படித்தான் இருக்கும் என்று கணிப்பதை போல அறிமுக படலத்தை வைத்து, முழுமையையும் கற்றுக் கொண்டு விடலாம் என்று நினைத்துக் கொண்டு விட்டேன். 

ப்ரிலிமினரி முடிந்து,அதற்கு ஒரு விழாவும் எடுத்ததும் இனிமேல் பரீட்சைக்கான பகுதிகளை துவங்கப் போகிறோம் என்று சொல்லி விட்டு, எழுத்துக்களை அறிமுகப் படுத்தினார்கள். இது நாள் வரையில் ஒரு 'க', ஒரு 'த' ஒரு 'ப' ஒரு 'ச' ஒரு 'ட' வை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டி விட்டோம். இங்கே என்னடாவென்றால் ஒவ்வொன்றிலும் நான்கு! 

எனக்கு, "ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களை வைத்துக் கொண்டு உலகையே ஆட்சி செய்கிறார்கள்? தமிழுக்கு எதற்கு 247 எழுத்துக்கள்?"  என்று கேட்ட பெரியார்தான் நினைவுக்கு வந்தார். என்னடா இது ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோம் போலிருக்கிறதே.. என்று ஒரு பக்கம் தோன்றியது. மறு  பக்கம்  பரீட்சைக்கு பணம் கட்டியாச்சு, பாதியில் விட்டால் மருமகள் நம்மை பற்றி என்ன நினைத்துக் கொள்வாள்? என்று மானப்பிரச்சனை. கடமையா? பாசமா? என்று ஊசலாடும் அந்தக் கால தமிழ் சினிமா கதாநாயகன் போல் போராட்டம். 

தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒருமை(singular),பன்மை(plural) என்ற இரண்டுதான். இங்கோ  ஒருமை(singular),  இருமை(dual),  பன்மையாம்(plural).  அதே போல உயிருள்ளவை உயர்திணை, உயிரற்றவை அஃறிணை என்ற இரண்டோடு நாம் நிறுத்திக் கொள்கிறோம். அவர்களோ நபும்சகலிங்கம் என்று ஒன்றை வேறு கொண்டு வருகிறார்கள்.  என்ன கொடுமை சரவணா இது. 

இதோடு நின்றதா? நமக்கு இருக்கும் அதே  ஐ,ஆல், கு, இன்,அது, கண் என்னும் வேற்றுமை உறுபுகள்தான் ஆனால்(பெரிய ஆனால்) வார்த்தைகளை அஹ என்று முடியும் வார்த்தைகள், ஆ என்று முடியும் வார்த்தைகள், இ என்று முடியும் வார்த்தைகள், அம் என்று முடியும் வார்த்தைகள் என்று நான்காக பிரித்து இந்த வேற்றுமை உருபுகள் ஒவ்வொன்றுக்கும் ஓவ்வொரு விதமாக வரும் என்னும் பொழுது... ஹா ஹா..  நாக்கு தள்ளி விடுகிறது.  

ராம, ராமஹ, ராமாய என்று படிக்கும் பொழுது மனதின் ஒரு ஓரம்,  " இதற்குப் பதில் ராமா, ராமா என்று சொன்னால் போகிற வழிக்கு புண்ணியம் கிடைக்கும்..நஹி நஹி ரக்ஷதி டுக்ருன்கரனே.. என்று ஆதி சங்கரர் சொல்லியிருக்கிறார் தெரியாதா? " என்று கேட்க, "இப்போ நீ வாயை மூடிக்கொண்டு போகப்போகிறாயா? இல்லையா?" என்று அதட்டினாலும்,  "ஆமாம், சம்ஸ்க்ருதம் படிக்காமலேயே இதெல்லாம் தெரிகிறதே?" என்று மனசின் மறு ஓரம் நினைக்க,, யாரோ "கிக் கிக் கிக்" என்று சிரிப்பது போல இருந்தது வேறு யார்?  எல்லாம் இந்த மனக்குரங்கு செய்யும் வேலைதான்! 

எழுத்தில் இந்த கஷ்டம் என்றால், எண்களில் வேறு கஷ்டம். ஒன்று என்பதை இரண்டு போல் எழுத வேண்டும், இரண்டையும் இரண்டு போல்தான் மேலே சுழிக்காமல் எழுத வேண்டும். ஐந்தை  நாலு  போல் எழுத வேண்டுமாம், ஏழாம் எண்ணை கிட்டத்தட்ட ஆறு போல போட வேண்டும். அவர்களுக்கு என்ன பிரச்னை? அல்லது to learn,first we should unlearn என்பது புரியாதது என் பிரச்சனையா?

சம்ஸ்க்ருதம் படிக்க நேரம் ஒதுக்கினால், மத்யமர், பிளாக்  இவைகளுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அங்கே போய் விட்டால், இங்கே அடி வாங்குகிறது. எதையுமே முழுமையாக செய்யாதது போல் ஒரு உணர்வு. அப்போது பார்த்து, மத்யமரில் போஸ்ட் ஆஃப் த வீக் வேறு கொடுத்து விட்டார்கள். உடனே, "இந்த வயதில் உனக்கு  என்ன வருமோ,எதை செய்தால் சந்தோஷமோ, அதை செய்ய வேண்டும். இங்கே என்ன சொல்றது?" என்று வி.டீ.வி.கணேஷ் மாதிரி மனதின் ஒரு ஓரம் கேட்டது. "நீ கொஞ்சம் சும்மா இருக்கியா?" என்று அதை அதட்ட வேண்டியதாகி விட்டது. 

சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ள ஆரம்பித்ததிலிருந்து எனக்கும் எனக்கும் சண்டை அதிகமாகி விட்டது. எங்கேயாவது வாய் விட்டு பேசிக்கொள்ள ஆரம்பித்து விடப் போகிறேன் என்று பயமாக இருக்கிறது. 

எங்கள் வகுப்பில் இருக்கும் அருணா குமார் என்பவரிடம், மேலே தொடர வேண்டுமா? என்று சந்தேகமாக இருக்கிறது என்றதும், அவர், 'பயிற்சி செய்தால் வந்து விடும், ஒண்ணும் கஷ்டமில்லை என்றதோடு, சந்தேகங்களை தெளிவும் படுத்தினார். அதனால் வகுப்பில் அனுப்பிய டெஸ்ட் பேப்பர்களில் முப்பதுக்கு இருபத்திநாலு வாங்க முடிந்ததும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. "சரி ஒரு கை பார்த்து விடலாம், நேர மேலாண்மை தெரிந்தால் எல்லாவற்றையும் மேனேஜ் பண்ண முடியும்" என்ற நம்பிக்கை வந்தது. சித்திரமும் கை பழக்கம், செந்தமிழ் மட்டுமல்ல ஸம்ஸ்க்ருதமும் நா பழக்கம்தானே?" பார்த்து விடலாம்! என்ன நான் சொல்வது சரிதானே?

Sunday, September 6, 2020

மஹாபெரியவர் தரிசன அனுபவங்கள்

மஹாபெரியவர் தரிசன அனுபவங்கள் 


மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் என்னும் நூலை படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் அவருடைய தொண்டர்கள், மற்றும் பக்தர்கள் அவரை தரிசனம் செய்த அனுபவங்களை விவரித்திருக்கிறார்கள். இதில் டாக்டர் ஸி.கே.ராமன் என்பவர் எழுதியிருக்கும் இரண்டு  அனுபவங்கள் என்னை மிகவும் கவர்ந்ததோடு மட்டுமல்ல, மஹா பெரியவர்களைப்  பற்றிய என் புரிதலையும் மாற்றின. 

1977ஆம் ஆண்டு அமெரிக்காவின் தூதராக புகழ் பெற்ற வழக்கறிஞரும், பொருளாதார நிபுணருமான திரு.பால்கிவாலாவை அரசு நியமித்தது. பதவி ஏற்க அமெரிக்கா செல்வதற்கு முன்பாக பெரியவரை தரிசிக்க விரும்பிய பால்கிவாலா காஞ்சிபுரம் வந்திருந்தாராம். ITDC விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருந்த பால்கிவாலா விருந்துக்கு முன்னர் பெரியவரை தரிசிக்க விரும்பியிருக்கிறார். உடனே டாக்டர் ராமன் அவர்கள் ஒருவரை மடத்திற்கு அனுப்பி, பால்கிவாலா பெரியவரை தரிசிக்க விரும்பும் விஷயத்தை கூறி அனுமதி வாங்கிவர சொல்லியிருக்கிறார். ஆனால் மடத்தில் இருந்தவர்கள் ஹிந்துக்கள் அல்லாதவரை பெரியவர் தனியாக தரிசிக்க இயலாது என்று கூறி விட்டனராம்.உடனே திரு.ராமன் அவர்கள் தானே நேரில் மடத்திற்குச் சென்று, மஹா பெரியவரை சந்தித்து, விஷயத்தை கூறியதும், அவர்,"பால்கிவாலாவா? அவர்தானே நம்ம அர்ச்சகாள் கேஸில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி ஜெயித்துக் கொடுத்தார்?வரச்சொல்லு,வரச்சொல்லு" என்றாராம். உடனே டாக்டர் ராமன் பால்கிவாலாவை அழைத்துக் கொண்டு பெரியவரை காணச் சென்றாராம். பெரியவர் அவரோடு சுமார் அரைமணி நேரம் ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்தாராம். அவருக்கு ஆசீவாதமும் பண்ணி அனுப்பினாராம். "இதை என்றும் மறக்க முடியாது" என்று பால்கிவாலா சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாராம்.   

அவர் குறிப்பிட்டிருக்கும் மற்றொரு சம்பவம்: 1977ஆம் ஆண்டு ஜேசீஸ் அமைப்பின் சார்பில் ஏழை மணமக்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தார்களாம். திருமணம் முடிந்த பிறகு சில தம்பதிகள் பெரியவரிடம் ஆசி பெற விரும்பினார்களாம். நடந்த திருமணங்களில் சில கலப்பு மணங்களாம். அதனால் அவற்றை பெரியவர் ஏற்றுக் கொள்வாரோ மாட்டாரோ என்ற தயக்கம் டாக்டர் ராமனுக்கு வரவே, ஒரு அன்பரை மடத்திற்கு அனுப்பி அனுமதி கேட்டிருக்கிறார். அவர்கள் மறுத்து விட்டார்களாம். இவர் விடாப்பிடியாக தானே நேரில் சென்று மஹாபெரியவரிடம் தம்பதிகளை அழைத்து வர உத்தரவு கேட்டிருக்கிறார். அவர் மறுக்காமல், "வரச்சொல்" என்றதோடு எத்தனை பேர் என்று கேட்டாராம், இருபது ஜோடி மணமக்கள் என்றதும் அனைவரையும் வரச்சொல்லி, அனைவருக்கும் இருபது நிமிடங்கள் அறிவுரையும், ஆசிர்வாதமும் வழங்கி ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ.125/ மதிப்புள்ள வஸ்திரங்கள் வழங்கினாராம். ஜெயேந்திரரும் அதில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தியது மேலும் அதற்கு பெருமை சேர்த்ததாம். பரமாச்சார்யர் பழமையை ஆதரிப்பவர்தான் ஆனாலும், மனிதாபிமானத்திற்கு அப்புறம்தான் இவையெல்லாம் என்று அன்று உணர்த்திக் காட்டியது எங்களையெல்லாம் மெய்சிலிர்க்க வைத்தது என்று திரு.ராமன் முடித்திருக்கிறார்.  எனக்கும் அதே உணர்வுதான். பரமாச்சாரியார் பழமையை வீட்டுக் கொடுக்க மாட்டார், கலப்புத் திருமணங்களை கண்டிப்பாக ஆதரிக்க மாட்டார், தீவிர ஜாதீய அபிமானி என்று நினைத்திருந்தேன். அதை மாற்றியது டாக்டர் ராமன் அவர்களின் கட்டுரை. 

Monday, August 31, 2020

கடலைக் கடந்து - 6

கடலைக்  கடந்து - 6

நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் பணி ஒய்வு பெற்று சென்ற ஒருவருக்கு விடையளிக்கும் வைபவம் நடந்தது. எங்கள் அலுவலகத்தின் டைரக்டர், மற்றும் பல்வேறு டிபார்மென்டுகளின் தலைவர்கள் ஒரு அறையில்  குழுமியிருக்க, எல்லோருக்கும் கேக், சமோசா, மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டன. முதல் வரிசையில் நின்று கொண்டிருந்த நான் குளிர் பான டின்னை சற்று வேகமாக திறந்து விட புஸ்ஸென்ற சீறலோடு வெளிப்பட்ட அது எதிரே அமர்ந்திருந்த ஒரு தலைமை அதிகாரியின் உடையில் தெறித்தது. ஒரு பக்கம் அவமானம், ஒரு பக்கம் பயத்தோடு நான் மன்னிப்பு கோர, அந்த ஓமானிய அதிகாரி,"நோ ப்ராப்லம், மூர்த்தி இஸ் மை பிரதர், யூ ஆர் ஹிஸ் ஒய்ஃப்" என்று மிகவும் பெருந்தன்மையோடு  கூறி விட்டார்.    நல்லவேளை நான் மிராண்டாவோ, பெப்ஸியோ எடுத்துக் கொள்ளாமல் ஸ்ப்ரைட் எடுத்துக் கொண்டிருந்தேன். அவருடைய வெள்ளைவெளேர் திக்தாஷா தப்பித்தது. 

எங்கள் அலுவலகத்தில் ஓத்மான் என்றொரு ஜான்சிபாரி மருத்துவர் இருந்தார். அவர் இடைவிடாமல் சிகரெட் புகைத்துக் கொண்டே இருப்பார். ஒருமுறை என்னிடம் டைப் செய்ய கொடுத்து விட்டு, அதைப் பற்றி புகையும் சிகரெட்டோடு அவர் விளக்க, அப்போது கர்ப்பிணியாக இருந்த எனக்கு குமட்டியது. அவரிடம், "டாக்டர், ஐ காண்ட் பேர் திஸ் ஸ்மெல், கேன் யூ புட்  ஆஃப் யுவர் சிகெரெட்?" என்றதும், "டெஃபனெட்லி" என்று சிகெரெட்டை அணைத்தார். என் அதிகப் பிரசங்கித்தனத்தை அவர் தவறாக நினைக்கவில்லை. அவருக்கு நம் ஹிந்தி படங்கள் மிகவும் பிடிக்குமாம். அதுவும் அதில் பறந்து  பறந்து கதாநாயகன் போடும் சண்டையை மிகவும் ரசிப்பதாக சொல்வார். 

எங்கள் அலுவலகத்தில் இருந்த ஒரு எகிப்திய பெண்மணி ஒரு நாள் என்னிடம், தனக்கு ஒரு ஹிந்தி நடிகையை மிகவும் பிடிக்கும் என்றும், அவள் பெயர் என்ன என்றும் கேட்டாள். இப்படி சொன்னால் எப்படி? அவள் எப்படி இருப்பாள்? என்று நான் கேட்டதும், " ஷி இஸ் டால், ஷி ஐஸ் பியூட்டிஃபுல், ஷி ஹாஸ் பிக் ஐஸ்." என்றெல்லாம் சொன்னதும்,   நான், ரேகா?, ஸ்ரீதேவி? என்றெல்லாம் பெயர்களை அடுக்கினேன். அவளோ, "நோ நோ ..ஷி அக்டேட் இந்த பிலிம் சிங்கம்" என்றதும் எனக்கு பொறி தட்டியது, "யூ மீன் சங்கம்..?" என்றதும்  "எஸ்! எஸ்!" என்று ஆமோதித்தாள். கடவுளே! இன்னும் எத்தனை காலம் வைஜயந்தி மாலாவையே கொண்டாடிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? என்று நினைத்துக் கொண்டேன். 

பஸ்ஸுக்காக காத்திருக்கும் பொழுது இன்னொரு எகிப்திய பெண்மணி," எனக்கு இந்திய பெண்களை மிகவும் பிடிக்கும். இந்தியப் பெண்கள் கருமையான கூந்தலும், கருமை நிறக் கண்களும் கொண்டவர்கள். அது மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்திற்காகவும், கணவனுக்காகவும் எத்தனை தியாகங்கள் செய்கிறார்கள்? கணவன் அடித்தால் கூட பொறுத்துக்க கொள்கிறார்கள், நான் இந்தியப் படங்களில் பார்க்கிறேனே.." என்பார். வடிவேலுவை கோவை சரளா டின் கட்டும் படங்களை அவர் பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.          

  


Wednesday, August 19, 2020

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் 

இந்த நாட்டிலே? 


கொரோனாவின் நேரடி விளைவுகள் நோய், மரணம், வெளியே செல்ல முடியாதது, கோவில்,சினிமா, திருவிழாக்கள் எல்லாவற்றிர்க்கும் தடை. வேலை இழப்பு, சம்பளம் கட்.  இதன் மறைமுக விளைவுகள் மன உளைச்சல், மற்றும் பெருகி வரும் திருட்டுகள், குறிப்பாக ஆன் லைன் திருட்டுகள்.  

வங்கியிலிருந்து பேசுகிறோம், என்று அழைத்து நம் கணக்கு முடக்கப்படும் என்று பயமுறுத்தி விவரங்களை பெற்று கணக்கிலிருந்து பணத்தை அபேஸ் செய்வது ஒரு முறை. இதிலாவது நாம் விவரங்கள் கொடுத்தால்தான் அவர்களால் பணத்தை எடுக்க முடியும். இன்னொரு மிகவும் ஆபத்தான ஒன்று இருக்கிறது. அதில் நம்முடைய செல் போனை அப்படியே கடத்தி விடுகிறார்கள். 

எங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு அவள் பெற்றோர் ஏதோ கூரியர் அனுப்பியிருக்கிறார்கள். அந்தப் பெண் அவர்கள் அனுப்பிய கூரியரை டிராக் செய்து பார்த்திருக்கிறாள். ஒரு நாள் அவளுக்கு ஒருவன் தான் கூரியர் கம்பெனியிலிருந்து அழைப்பதாகவும் அதில் பின்கோட் தெளிவாக இல்லை, என்றும், அவன் சொல்லும் ஒரு ஆப் ஐ டவுன்லோட் செய்யும்படியும் கூறியிருக்கிறான்.  முதலில் அந்தப் பெண் அவன் சொன்னதை கேட்க்கவில்லை. அதனால் அவன் அந்தப் பெண்ணின் அப்பாவை செல்போனில் அழைத்து, "உங்கள் மகளை இந்த ஆப் ஐ டவுன்லோட் பண்ணச் சொல்லுங்கள் அப்போதுதான் எங்களால் கூரியர் அனுப்ப முடியும்"  என்று கூற, அவளுடைய அப்பாவும் அந்தப் பெண்ணிடம் ஆப் ஐ டவுன்லோட் பண்ணும்படி கூறியிருக்கிறார். அந்தப் பெண் ஆப் டவுன் லோட் செய்தவுடன் அவள் போன் அடுத்த நிமிடம் அவளுடைய அவளுடைய செல் போன் ஸ்க்ரீன் மிரரிங் செய்யப்படுவதை உணர்ந்திருக்கிராள் , பிறகு என்ன? அவள் கண்ணெதிரிலேயே அவள் கணக்கிலிருந்து பணம் சூறையாடுப்படுவது தெரிந்திருக்கிறது, என்றாலும் அதை தடுக்க முடியவில்ல. ஸ்க்ரீன் மிர்ரரிங் செய்யப்= பட்டிருப்பதால் ஆன் லைன் பரிவர்த்தனைக்கான ஒன் டைம் பாஸ் வார்ட் அவனால் பார்க்க முடிந்திருக்கிறது. முப்பது வினாடிக்குள் முப்பதாயிரம் அபேஸ்! இம்மாதிரி சைபர் க்ரைம் குற்றவாளிகள் குறி வைப்பது பெரும்பாலும் பெண்களைத்தான். எச்சரிக்கையாக இருங்கள் தோழிகளே. 

புதிதாக எந்த ஆப் ஐயும் டவுன்லோட் செய்ய வேண்டாம் குறிப்பாக உங்கள் கை  ரேகையை பதிவு செய்யச் சொல்லும் ஆப்புகள் நமக்கு அப்பு வைத்து விடும் அபாயம் உண்டு.   பே டி எம், கூகிள் பே என்று எல்லாவற்றையும் பயன் படுத்த வேண்டாம்.  அவை ஏதாவது ஒன்றை ஹாக் செய்தாலும், அதன் மூலம் மற்றவற்றையும் சுலபமாக ஹாக் பண்ண  

-----------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வாரம் தொலைகாட்சியில் நான் பார்த்த செய்திகளில் என்னைக் கவர்ந்த இரண்டு செய்திகளை சொல்கிறேன் கேளுங்கள் 

சிறுவயதில் நாமெல்லாம் மயிலறகு குட்டிப் போடும் என்று நம்பி, அதை நோட்டு புத்தகத்திற்குள் மறைத்து வைப்போம். அது ரசிக்கக் கூடிய அப்பாவித்தனம். கிட்டத்தட்ட அதைப்போலவே ஒருவர் பொன் நகைகளை பூமியில் புதைத்து வைத்தால் அவை இரட்டிப்பாக பெருகும் என்று ஒரு போலி மந்திரவாதி கூறியதை நம்பி அறுவது சவரன் நகைகளை தன் வீட்டின் பின் புறம் புதைத்து வைத்திருக்கிறார். இரண்டு நாள் கழித்து அந்த இடத்தில் தோண்டி பார்க்க, நகைகள் எதுவும் இல்லை. மந்திரவாதியிடம் கேட்டதற்கு,"உலகத்தில் எதுவும் சரியில்லை அதனால்தான் நகைகள் காணாமல் போய் விட்டன' என்று கூறியிருக்கிறான். அப்போது முழித்துக் கொண்ட அந்த புத்திசாலி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலி மந்திரவாதியை போலீஸ் கைது செய்திருக்கிறது.  "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?" 

அடுத்த செய்தி கொஞ்சம் சுவாரஸ்யமானது: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குளியல் அறையில் இருக்கும் ஷவர் சரியாக இல்லையாம். அது அவர் குளிக்கும் பொழுது அவருடைய பின் மண்டையை சரியாக நனைப்பதில்லையாம், எனவே அதை மாற்ற வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். அதை சரி பார்த்து மாற்றித் தர வெள்ளை மாளிகை நிர்வாகம் ஒப்புக்கொண்டிருக்கிறதாம். எப்..பூ..டி?  

---------------------------------------------------------------------------------------------------------------------------

தூங்காதே தம்பி தூங்காதே     

காதல் மன்னன்   

வாயை மூடிப் பேசவும்  

பிதாமகன்  
  
தாய்க்குப்பின் தாரம்   

கல்யாணம் பண்ணியும் பிரும்மச்சாரி   

மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் சினிமா பெயர்கள் எந்த இந்திய பிரதமர்களுக்கு பொருந்தும்? எத்தனை பேர்கள் என்னைப் போகவே யோசிக்கிறீர்கள் என்று பார்க்கலாம். 

 

 





Thursday, August 13, 2020

மும்மொழிக் கொள்கையும், ஐஸ்வர்யாவும், அப்துல் கலாமும்

 மும்மொழிக் கொள்கையும், 

ஐஸ்வர்யாவும், அப்துல் கலாமும் 




நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது ஸ்போர்ட்ஸ் டே வருவதற்கு முன்புதான் நாங்கள் முனைந்து பயிற்சி செய்வோம். அப்போது எங்களோடு பயிற்சியில் ஈடுபடும் ஒரு மாணவி ஆசையாக கலந்து கொள்ள வருவாள்.

Tuesday, August 11, 2020

கோகுலாஷ்டமி நினைவுகள்.

கோகுலாஷ்டமி நினைவுகள். 



எல்லா பண்டிகைகளின் பொழுதும் அம்மாவின் நினைவு வரும். குறிப்பாக கோகுலஷ்டமியிலும், நவராத்திரியிலும்,  தீபாவளியின் பொழுதும் அம்மாவின் நினைவை தவிர்க்கவே முடியாது. 


அம்மாவின் இஷ்ட தெய்வம் ஸ்ரீ குருவாயூரப்பன் என்பதால் அதிக பட்ச ஈடுபாட்டோடு பட்சணங்கள் செய்வாள். அன்று முழுவதும் முழு பட்டினி! ஜுரம் வந்தது போல வித விதமான பலகாரங்கள் அலுக்காமல் சலிக்காமல் செய்து கொண்டே இருப்பாள். ஓரிரு முறை தானே நெல்லை ஊற வைத்து, உரலில் இடித்து வீட்டிலேயே அவல் கூட தயாரித்திருக்கிறாள்! ஒவ்வொரு செயலிலும் தென்படும் கிருஷ்ணனின் மீதான அம்மாவின் அன்பு! மற்றபடி உட்கார்ந்து  சுலோகம் சொல்வதோ பூஜை செய்வதோ அம்மாவின் வழக்கம் இல்லை. பூஜைக்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பாள். நாங்கள் பஜனை செய்வோம்! 

எங்கள் வீட்டில் இடுப்பில் கை வைத்தபடி நிற்கும் ஒரு கிருஷ்ணன் பொம்மை இருந்தது. அம்மா தினமும் ரோஜாப்பூ வாங்கி அந்த கிருஷ்ணனுக்கு சூட்டி, 
"இந்த ரோஜாப்பூ கிருஷ்ணனுக்கு எத்தனை அழகாக இருக்கு பார்" என்று ரசிப்பாள். அதே போல் கீரை மசியல் செய்தாலும், வடு மாங்காய் ஊறுகாய் போட்டாலும்  தயிர் சாதத்தோடு அதை கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். அம்மாவை பொறுத்த வரை குருவாயூரப்பன் ஒரு குழந்தை. தினசரி குளித்து விட்டு ஸ்வாமி நைவேத்தியம் செய்யாமல் இருக்க மாட்டாள். 

ஒரு முறை அம்மா ஊருக்கு சென்றிருந்த பொழுது நான் சமைத்தேன். என்னுடைய சோம்பேறி தனத்தில் குளிக்காமல் சமைத்து விட்டேன். அதனால் ஸ்வாமிக்கு நோ நைவேத்தியம். 

முதல் நாள் ஓடி விட்டது. இரண்டாம் நாள் வேலைகளை முடித்து விட்டு, ஸ்வாமி விளக்கு ஏற்றும் பொழுது, அந்த கிருஷ்ணன்(பொம்மை) முகம் சற்று சோர்வாக இருப்பது  போல் தோன்றியது. மூன்றாம் நாள் கிருஷ்ணன் முகம் இன்னும் அதிகமாக சோர்வாக, குறிப்பாக பசியால் வாடியிருப்பது போல் தோன்றியது. எனக்கு சுரீரென்றது. அம்மா ஊருக்குச் சென்றது முதல்  நாம் சுவாமி நைவேத்தியம் செய்யவே இல்லை, அதனால்தான் குழந்தை(கிருஷ்ணன்) முகம் வாடியிருக்கிறதோ? என்று தோன்றவே, அன்று குளித்து விட்டு சமைத்து, ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்தேன். என்ன ஆச்சர்யம்! சற்று நேரத்தில் அந்த கிருஷ்ணன் (இனிமேல் எப்படி அதை பொம்மை என்று செய்வது?) முகம் சட்டென்று மலர்ந்து விட்டது. அதன் பிறகு, அம்மா வீட்டில் இருந்தவரை குளிக்காமல் சமைத்ததில்லை, ஸ்வாமி நைவேத்தியம் செய்யாமல் இருந்ததும் இல்லை. ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!


Saturday, August 8, 2020

உனக்கும் எனக்கும்

 உனக்கும் எனக்கும் 


*இந்த படத்திற்கு  பொருத்தமான கதை எழுதும்படி மத்யமரில் கேட்டிருந்தார்கள். அதற்கு நான் எழுதிய கதை கீழே:


திவாகர் அன்று அலுவலகத்திலிருந்து வரும் பொழுது  கையில்  சுருட்டி எடுத்து வந்த ஒரு சுருளை   ஹாலில்   இருந்த  டீபாயில்  போட்டான். 
"என்னது?" ஜனனி கேட்டதற்கு ,"பிரிச்சு பாரேன்.." என்று அவன் சொன்னதும் பிரித்தாள். ஒரு வால் போஸ்டர். அதில் ஒரு இளம் ஆணும், பெண்ணும்  உரக்க சண்டை போட்டு கத்துவது போன்ற  படம். 

"எதுக்கு இது"

"நல்ல கேள்வி. வால் போஸ்டர் எதுக்கு வாங்குவாங்க? வீட்டில் மாட்டதான்" 

"ஏன் இப்படி ஒரு படம்?"

"ஏன் இதுக்கு என்ன குறைச்சல்? நல்லா இல்லையா?"

"அப்படி சொல்ல முடியாது,பட்... "  என்று தயக்கத்தோடு ஆரம்பித்தவள் சண்டை போட்ற படத்தை ஏன் வீட்டில் மாட்டனும்?"

"சம்திங் டிஃபரெண்ட் .. நான் தான்  உன்னோடு   சண்டை  போடுவதில்லை, நீ என்ன சொன்னாலும் அதுக்கு சரினு  சொல்லிடறேன். படத்திலாவது ஒருத்தன் தைரியமா மனைவியை  எதிர்த்து சண்டை போடறானே.." குறும்பாக சிரித்துக்  கொண்டே  அவன் கூற, 

"எப்படி? எப்படி? ரிபீட்.." என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு பொய் கோபத்தோடு ஜனனி கேட்டதும் ,  சிரித்துக் கொண்டே  அவளை தன்னருகே இழுக்க, அவனிடமிருந்து விலகி காபி கலக்க உள்ளே சென்றாள்.  

"காஃபியை உரிஞ்சிக்கொண்டே இதை எங்கே மாட்டலாம்? சொல்லேன்.."

"ஹாலில் நன்றாக இருக்காது, டைனிங்  ரூம்..?"

"நோ ".. 

"யெஸ், பெட் ரூம்தான் ரைட் பிளேஸ்.." என்று முடிவு செய்து அதை அவர்கள் கட்டிலுக்கு எதிரே, இரண்டு பக்கங்களிலும் ஒட்டக்கூடிய செல்லோ டேப் கொண்டு ஒட்டி விட்டு, ஹௌ இஸ் இட்?" என்றான். 

ஜனனிக்கு இப்படி ஒரு படத்தை தங்கள் படுக்கை அறையில்  அதுவும் கண்களில் படும்படி மாட்டுவதில் விருப்பமில்லை. இருந்தாலும் அதைச்  சொல்லி அவனை வருத்தப் படுத்த அவள் விரும்பவில்லை. அதுதான் அவள் சுபாவம். யாரோடும்  விவாதங்களில் இறங்க மாட்டாள். தனக்கு ஒரு கருத்தில்  உடன்பாடு இல்லையென்றால் மௌனமாகி விடுவாள். சமயம் பார்த்துதான் சொல்வாள். திவாகருக்கு இதில் மிகவும் சந்தோஷம். அவ்வப்பொழுது அவளை சீண்டுவான், அவளும் பதில் கொடுப்பாள், இப்படி விளையாட்டு சண்டை, சின்ன  சின்ன  வாக்குவாதங்கள் வந்திருக்கிறதே ஒழிய பெரிய சண்டை  அவர்களுக்குள் வந்ததில்லை. 

அவர்கள் கண்ணே பட்டு விட்டதோ  என்னும்படி  கொஞ்ச  நாட்களாக அவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் வர ஆரம்பித்தன. திவாகர் சிடுசிடுப்பதும், சாதாரணமாக பொறுமையாக இருக்கும்  ஜனனி பதிலுக்கு பதில் சொல்லி சண்டையை வளர்ப்பதும் அதிகமாயிற்று. .

அன்று காலை டிஃபன் சாப்பிட திவாகர் உட்கார்ந்தான். ரவை உப்புமாவை கொண்டு ஜனனி வைத்ததும், "ஓ! மை காட்! இன்னிக்கும் உப்புமாவா?"

"என்ன இன்னிக்கும்? இந்த மாசத்தில் இது செகண்ட் டைம்தான், தவிர உப்புமாவுக்கு என்ன குறைச்சல்?" 

"தொட்டுக்க ஒன்னும் இல்லாததுதான் குறைச்சல்."  

"எலுமிச்சங்காய் ஊறுகாய் இருக்கு, சர்க்கரை இருக்கு.." 

"சர்க்கரை தொட்டுக்கொண்டு சாப்பிட நான் ஒண்ணும்  சின்ன  குழந்தை  இல்ல, நீயே சாப்பிட்டுக் கொள் உன் உப்புமாவை"  விருட்டென்று திவாகர் எழுந்து செல்ல, ஜனனிக்கு அழுகை வந்தது. இதற்கு முன் சில சமயங்களில் வெறும் ஊறுகாயோடு  உப்புமாவை சாப்பிட்டிருக்கிறான். இன்று என்ன வந்தது? இப்போதெல்லாம் அவனுக்கு அதிகம் கோபம் வருகிறது. என் மேலும் தப்பு. அன்னிக்கு இப்படித்தான், தோய்த்த  துணிகள்  சோஃபாவில் குப்பலாக இருப்பதைப் பார்த்து, துணியை மடித்து வைக்கவில்லையா? என்று சாதாரணமாகத்தான் கேட்டான், ஆனால் அவளுக்கு சுர்ரென்று கோபம் வந்தது, "தெரியறது தானே? நீ மடிச்சு வெச்சா என்ன?"  என்று அவள் பதிலுக்கு கேட்க, அவன் ஏதோ சொல்ல, வாய்ச்சண்டை வலுத்தது. ஏன் இப்படி ஆனது? என்று யோசித்தவள் கண்களில் பட்டது அந்த ஆணும் பெண்ணும்  சண்டை போடும் படம். இதைப் பார்த்து பார்த்து அதன் பாதிப்பில்  நமக்குள்ளும் சண்டை வருகிறதோ? ஜனனி அந்தப் படத்தை  ஜாக்கிரதையாக பிய்த்து எடுத்தாள். அந்த இடத்தில் காதல்  புறாக்கள் படம் ஒன்றை ஒட்டினாள். இனி அவர்களுக்குகள் பிணக்குகள் வராது .


Thursday, August 6, 2020

கடலைக் கடந்து - 5

கடலைக் கடந்து - 5 

நான் வேலையில் சேர்ந்த சமயத்தில் ஓமானில் அரசு அலுவலகங்கள் காலை 7:30 க்கு தொடங்கி மதியம் 2:30க்கு முடிவடையும். இடையில் உணவு இடைவேளையெல்லாம்  கிடையாது.  ஓமானியர்கள், எகிப்தியர்கள் எல்லாம் லெபனீஸ் ரொட்டியில் சீஸ், காய்கறி துருவல், அல்லது சிக்கன் போன்றவை சேர்த்து சுருட்டிய கபூஸ் எனப்படும் ஒரு உணவை பட்டர் பேப்பரில் சுற்றி கடித்துக் கொண்டே வேலை செய்வார்கள். நம்மைப் போன்ற இட்லி, உப்புமா ஆசாமிகளுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். அவர்கள் மேஜையில் எப்போதும் இருக்கும் லைட் பிரவுன் திரவம் பிளாக் டீ என்று தெரியாமல் நான் கொஞ்சம் மிரண்டு போனது உண்மை. 

1991க்குப் பிறகுதான் வாரத்தில் ஐந்து நாட்கள் என்பது நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பு வரை   சனி முதல் வியாழன் வரை அலுவலகம் உண்டு. வியாழனன்று ஒரு மணி நேரம் முன்பாக அலுவலகம் முடிந்து விடும். ஆனால் இதை என் கணவர் என்னிடம் சொல்லவே இல்லை. வேலைக்கு சேர்ந்த முதல் வார வியாழனன்று வேலை விஷயமாக மற்றொரு அலுவலகத்திற்கு சென்ற என் கணவர்  அலுவலகம் திரும்பி வரவில்லை.  இரண்டு மணிக்கு, ஒருவர் வந்து, "கீப் எவ்ரிதிங் ஆஸ் தே ஆர் அண்ட் கம் வித் மீ" என்றதும் எனக்கு எதுவும் புரியவில்லை. "மூர்த்தி டிண்ட் கம் எட் .." என்றதும், "நோ, நோ, ஹி வில் நாட் கம், யூ கம் வித் மீ " என்றதும் நான் ரொம்பவே பயந்து போனேன். நல்ல வேளையாக என் கணவர் அப்பொழுது போன் பண்ணி, நேரத்தைப் பற்றி சொல்லி  தான் நேராக வந்து விடுவதாகவும் என்னை அந்த நண்பரோடு செல்லும்படியும் கூறினார். 

அப்பொழுது எங்களுக்கு வீடு அலாட் ஆகவில்லை. விடுமுறையில் இந்தியா சென்றிருந்த ரமணன் என்னும் ஒரு நண்பரின் வீட்டில் தங்கிக் கொண்டிருந்தோம். மதியம் ஸ்ரீதர் வேறொரு நண்பரின் வீட்டில் மதிய உணவருந்துவோம். அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, என் கணவர் என்னிடம், "வீட்டு சாவியை என் அலுவலக மேஜை டிராயரில் வைத்திருந்தேனே, எடுத்துக் கொண்டு வந்தாயா?" என்று கேட்டார்? அவர், வீட்டு சாவியை தன் மேஜை டிராயரில் வைத்திருக்கும் விஷயமும் எனக்குத் தெரியாது. நான் "இல்லையே.." என்க, நண்பரின் மனைவி, ''நீங்கள் சாவியை அங்கு வைத்திருக்கும் விஷயம் அவளுக்குத் தெரியுமா? என்று எனக்கு சப்போர்டுக்கு வந்தார். உணவு அருந்திய பிறகு என் கணவரும், அந்த நண்பரும் எங்கள் அலுவலகம் சென்று சாவியை எடுத்துக் கொண்டு வந்தனர். 

அந்த நண்பர்தான் எங்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அப்போதோ மஸ்கட் சிவன் கோவில் ஒன்றுதான் இருந்தது. கிருஷ்ணர் கோவில் கட்டப்படவில்லை. சிவன் கோவிலில் கீழே விநாயகர், சிவன், ஹனுமான் சன்னதிகள் இருக்கும். மாடியில் அம்மன் சன்னதி. பக்கத்தில் ஒரு சிறிய கடையில் எண்ணெய், பால், ஊதுபத்தி, தேங்காய் போன்ற பூஜை சாமான்கள் விற்பார்கள்.  ஆரம்ப நாட்களில் அங்கு அத்தனை கும்பல் இருக்காது. பின்னாளில் இரண்டு கோவில்களிலுமே வியாழன்,வெள்ளிக்கிழமைகளிலும், பிரதோஷம் போன்ற நாட்களிலும் பார்க்கிங் கிடைக்கவே கிடைக்காது.  அதுவும் வியாழக் கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் சிவன் கோவிலுக்குச் சென்றால் இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டு வந்து விடலாம். ஏனென்றால் ஆஞ்சநேயருக்கு அத்தனை பேர்கள் வடை மாலை சாற்றுவார்கள். 
வடை, கேசரி, தயிர்சாதம், சுண்டல் என்று நிறைய பிரசாதங்கள் கிடைக்கும். 

ஆரம்பத்தில் அந்த ஊரில் கடை வீதிகளுக்கும், மற்ற இடங்களுக்கும் சென்ற பொழுது ஒரு விஷயம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அங்கு சுவரொட்டிகளையோ, விளம்பர பலகைகளையோ பார்க்க முடியவில்லை. 
"இங்கு என்ன இப்படி சுவரெல்லாம் காலியாக இருக்கிறது?" என்று ஆச்சர்யமாக கேட்டேன். "இங்கு அதற்கெல்லாம் தடை. போஸ்டேரெல்லாம் ஒட்டக்கூடாது" என்றார்கள். "அப்படியென்றால் வியாபாரிகள் தங்கள் பொருள்களை எப்படி விளம்பரம் செய்வார்கள்?" என்றேன். "அதற்குத்தான் ஹௌஸ் வைவ்ஸ் இருக்கிறார்களே?" என்றார் நண்பர். 

2005க்குப் பிறகு பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதைப்போலவே வெய்யில் கொளுத்தும் அந்த ஊரில் கார்களில் கூலிங் பேப்பர் ஒட்டுவதற்கும் அனுமதி கிடையாது. கோடையில் வெளியில் காரை நிறுத்தி விட்டால், அதை எடுக்கும் பொழுது ஸ்டியரிங்கை தொட முடியாமல் கொதிக்கும். அதனால் பெரும்பாலானோர் ஸ்டியரிங் மீது ஒரு டர்கி டவலை போட்டு வைப்பார்கள். கேசட்டை மறந்து போய் காரிலேயே வைத்து விட்டால் உருகி விடும்.   




 



 

Monday, August 3, 2020

ஆடியில் ஆவணி அவிட்டமா?

ஆடியில் ஆவணி அவிட்டமா?


நாளை ஆவணி அவிட்டம்.  இன்னும் ஆவணி மாதமே பிறக்கவில்லை அதற்குள் ஆவணி அவிட்டம் எப்படி வரும்? இது என் மகள் என்னிடம் கேட்ட கேள்வி.  சிலர் மனதுக்குள் கேட்டுக் கொண்டிருப்பார்களாக இருக்கும்.

பெரும்பாலானோர் ஆவணி அவிட்டம் என்றால் பிராமணர்கள் பூணூலை மாற்றிக் கொள்ளும் நாள் என்று நினைக்கிறார்கள். உண்மையில் ஆவணி அவிட்டம் என்று ஒன்று கிடையவே கிடையாது. இந்த நாளை உபாகர்மா என்பார்கள். உபாகர்மா என்பதை உபா+கர்மா என்று பிரிக்க வேண்டும். உபா என்றால் முன்னால் என்றும், கர்மா என்பதற்கு செயல் என்றும் பொருள். அதாவது ஒரு செயலை தொடங்கும் முன் செய்ய வேண்டியது என்று பொருள். எந்த செயல் தொடங்கும் முன் என்ன செய்ய வேண்டும் என்று அடுத்த கேள்வி வருகிறதல்லவா? செயல் என்பது இங்கே வைதீக கர்மங்களை(குறிக்கும்).  எந்த வைதீக செயலையும் பூணூல் அணிந்து கொள்ளாமல் செய்யக் கூடாது என்பது விதி. ஹிந்து தர்மத்தின்படி நான்கு வர்ணத்தினருமே பூணூல் அணிந்து கொள்ள வேண்டும். இதில்  பிராமணர்களும், க்ஷத்ரியர்களும் எப்பொழுதும் பூணூலை அணிந்து கொண்டிருக்க வேண்டும், மற்றவர்கள் வைதீக கர்மங்களை செய்யும் பொழுது மட்டும் அணிந்து கொண்டால் போதுமானது.  அதைப் போலவே எல்லோருமே வேதம் படித்திருக்கிறார்கள்.  

பிருமச்சாரியாக வேதம் கற்றுக் கொண்டவர்கள்  திருமணம் செய்து கொண்டு வேறு தொழில்களில் ஈடுபட்டாலும் தாங்கள் கற்றதை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக *ஆவணி மாதம் பௌர்ணமி முதல் தாங்கள் படித்ததை தினம் ஓதி நினைவுப் படுத்திக்க கொண்டு, மார்கழி மாதம் போகி அன்று நிறைவு செய்வார்கள்.  ஆவணி மாத பௌர்ணமி பெரும்பாலும் அவிட்ட நட்சத்திரத்தன்று வருவதால்  உபாகர்மா ஆவணி அவிட்டம் என்று வழங்கப் படலாயிற்று.  

எல்லாம் சரி, அது ஆவணி மாதத்தில்தான் வர வேண்டும் ஏன் ஆடியிலேயே வருகிறது ? என்று கேட்கிறீர்களா? இது பஞ்சாங்க குழப்பம். இந்தியாவில் தமிழ் நாட்டிலும், கேரளாவிலும் மட்டுமே சூரியனை அடிப்படியாக கொண்ட சோலார் காலண்டரை பின்பற்றுகிறோம். மற்ற மாநிலங்களில் சந்திரனை அடிப்படியாக கொண்ட லூனார் கேலண்டர்தான். இதை விவரித்து சொன்னால் நம்மை பொறுத்தவரை மேஷம் முதல் மீனம் வரையில் உள்ள பன்னிரண்டு ராசிகளில் சூரியன் பிரவேசிப்பதை வைத்துதான் மாதப்பிறப்பை கணக்கிடுவோம். உதாரணமாக மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் நாள்தான் சித்திரை மாதப் பிறப்பு. அவர் அங்கிருந்து நகர்ந்து ரிஷபத்திற்குள் செல்லும் பொழுது வைகாசி மாதம் பிறக்கும். ஆனால் மற்ற மாநிலத்தவர்களுக்கு அமாவாசை முடிந்தவுடன்அடுத்தமாதம் பிறந்து விடும். அதன்படி நமக்கு இப்போது நடப்பது கர்கடக மாதம் அதாவது ஆடி மாதம்.  இதர மாநிலத்தவர்களுக்கோ ஆடி அமாவாசை முடிந்தவுடனேயே ஆவணி பிறந்து விடும். அதன் படி அவர்களுக்கு இது ஆவணி மாதம்தான். ஆவணி மாத பௌர்ணமியில் உபாகர்மா. இந்த வருடம் நமக்கு இன்னும் ஆடி மாதம் முடியாததால் நாம் ஆடியில் ஆவணி அவிட்டமா? என்று கேட்கிறோம். 

பண்டிகைகள் எல்லாம் சாந்திரமாசத்தை அடிப்படையாக கொண்டுதான் கொண்டாடப்படும்.  அதனால்தான் நமக்கு ராம நவமி சில சமயம் பங்குனியிலும், சில சமயம் சித்திரையிலும் வரும். விநாயக சதுர்த்தி நமக்கு  ஆவணியிலும் வரும், புரட்டாசியிலும் வரும்.  மற்ற மாநிலக்காரர்களுக்கு ராம நவமி என்றால் அது சித்திரையில்தான், விநாயக சதுர்த்தி புரட்டாசியில்தான். உபாகர்மா என்றால் ஆவணியில்தான்.

*சாம வேதக்காரர்கள் ஆவணி பௌர்ணமியில் உபாகர்மாவை தொடங்காமல் புரட்டாசி சதுர்தியில் தொடங்கி, தைப்பூசத்தன்று நிறைவு செய்வார்கள். புரட்டாசி சதுர்த்தி என்பது விநாயக சதுர்த்தி நாள் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோமே.  எனவே போளி வடையோடு ஆவணி அவிட்டத்தை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.