கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, October 24, 2020

மாறுவது பொம்மை, மாறாதது சுண்டல்

 மாறுவது பொம்மை, மாறாதது சுண்டல் 


நவராத்திரி என்றால் முதலில் நினைவுக்கு வருவது  பொம்மைகள்தான். பொம்மை கொலு என்றே இதை சொல்வார்கள். இந்த பொம்மைகளின் பரிணாம வளர்ச்சியை பார்க்கலாமா? 


முன்பெல்லாம் கொலு என்றால் அதில் மரப்பாச்சி  பொம்மைகள்தான்  பிரதான இடம் பிடிக்கும். எங்கள் அப்பா, மரப்பாச்சியைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பார்.  மரப்பாச்சி என்றால் நினைவுக்கு வருவது திருப்பதி. "திருப்பதியில் மரப்பாச்சி கடை வைத்தவனுக்கும், ஸ்ரீரெங்கத்தில் பட்டாணி கடை வைத்தவனுக்கும் நேரே வைகுண்டம், ஏனென்றால் கோவிலிலிருந்து வருபவர்கள் நேரே அங்கேதான் செல்வார்கள்"  என்று அனந்தராம தீக்ஷதர் கூறுவாராம். இப்போதும் எங்கள் வீடுகளில் படி கட்டியதும் முதலில் மரப்பாச்சியைத்தான் வைப்போம்.

அதன்பிறகு மண் பொம்மைகள் வந்தன. மண் பொம்மைகள் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது பண்ருட்டிதான். ஆரம்பத்தில் கடவுள் உருவங்கள்தான் பொம்மைகளாக வந்தன. செட் பொம்மைகள் என்று வரத்தொடங்கிய பொழுது இரண்டு பொம்மைகள் ஜோடியாக வரும். இடுப்பில் குடத்தோடு நிற்கும்  பெண்கள், தலையில் பூக்கூடையோடு நிற்கும் பெண்கள், நடனமாடும் பெண்கள். எங்கள் வீட்டில் இருந்த இரண்டு நடன பொம்மைகளை பத்மினி, ராகினி  பொம்மைகள் என்பார்கள். அதே போல் தியாக பூமி படம் வந்த காலத்தில் பேபி சரோஜா பொம்மை என்பது பிரபலமாக இருந்ததாம். 



பின்னர் ராமர் செட்(ராமன், சீதை, லட்சுமணன், ஹனுமான்), தசாவதார செட், ஆறுபடை வீடு செட், அஷ்ட லட்சுமி செட், கிருஷ்ணர் ராச லீலை செட்  போன்றவை வந்தன. அதற்குப் பிறகு கல்யாண  செட், என்றுதான் முதலில் வந்தது. பின்னர் அதில் முகூர்த்த செட், ஜான்வாச செட், ரிசப்ஷன் செட் என்று விதம் விதமாக வர ஆரம்பித்து விட்டன.  

புத்தர், விவேகானந்தர், மகாபெரியவர் , ஜெயேந்திரர், விஜயேந்திரர் இவர்களோடு காந்தி, நேரு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்கள் பொம்மைகளும் இடம் பெறத் தொடங்கின. அப்போதெல்லாம் பைஜாமா, ஜிப்பா, குல்லா அணிந்து  கையில்  தேசிய கொடியை  தாங்கிக் கொண்ட இளைஞன் பொம்மை பல வீடுகளில் இருக்கும். 

அதே போல முன்பெல்லாம் வெள்ளைக்கார பொம்மைகள் எனப்படும் பீங்கான் பொம்மைகள் நிறைய இருக்கும். அவை பெரும்பாலும் ஆங்கிலேயர்களின் உருவங்களாகத்தான் இருக்கும். கோட், சூட், தொப்பி அணிந்து ஆண்கள், நீண்ட கவுன் அணிந்த பெண்கள் பொம்மைகள் எங்கள் வீட்டில் ஒரு பெட்டி நிறைய இருந்தது. அவை எல்லாம்  வீடுகள்  மாற்றியதில் எங்கே சென்றன என்றே தெரியவில்லை. அவைகளை பெரும்பாலும் பார்க்குகளில் வைப்போம். நவராத்திரி கொலுவில்  ஆங்கிலேயர்களுக்கு என்ன வேலை என்று அப்போது தோன்றவில்லை.  இப்போதும் பீங்கான் பொம்மைகள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் விலங்குகள், பறவைகள், மீன்கள் போன்றவைதான். 


இப்போதெல்லாம் பாற்கடல் கடைவது, ராமாயண காட்சிகள், பாட்டி வடை சுடும் கதை போன்றவை பொம்மைகளாக வருகின்றன. அதைத்தவிர பள்ளிக்கூட செட், கிரிக்கெட் செட், கிரிவலம் செட், கிராம காட்சிகள் , போன்ற சமூக நிகழ்வுகளும் பொம்மைகளாக வருகின்றன. இந்த வருடம் கொரோன செட் என்று மாஸ்க் அணிந்த மனிதர்கள், வெறிச்சோடிய வீதிகள், ஒர்க் ஃபிரம் ஹோம், போன்றவை  பொம்மைகளாக வரும் என்று எதிர்பார்த்தேன். அடுத்த வருடம் நிச்சயமாக வந்துவிடும்.   



பொம்மைகளின் அடுத்த அவதாரம் காகிதக்கூழ் பொம்மைகள். இவைகள் அளவில் பெரிதாக இருந்தாலும் கனமில்லாமல் இருப்பதால் பராமரிப்பது எளிது. எனவே வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இவ்வகை  பொம்மை களையே எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள். இப்போது ஃபைபர் பொம்மைகள் வந்து விட்டன.    

கிராமங்களில் வீடுகள் பெரிதாக இருந்த காலத்தில் பொம்மைகளும் பெரிதாக இரண்டடியில் வந்தன. எங்கள்  வீட்டில், எங்கள் கொள்ளு பாட்டி கால  தவழும் கிருஷ்ணர் பொம்மை நிஜமாக ஒரு எட்டு மாத குழந்தை சைசில் இருக்கும்.  அதற்கு பிறகு வந்தவை ஓரடி பொம்மைகள். அவைகளை வைப்பதற்கு ஏற்றார்போல் படிகளும் பெரிதாக இருக்கும். இப்போது அபார்ட்மெண்ட் வீடுகளுக்கு ஏற்றாற்போல் பொம்மைகளும் அளவில் சுருங்கி விட்டன. படிகளும், கனமில்லாமல், ஈசியாக  விரித்து, மடிக்க கூடியவர்களாக வந்திருக்கின்றன. எதிர் காலத்தில் படிகளும், பொம்மைகளும் இல்லாமல் விருந்தினர் வரும் பொழுது மட்டும் கொலு இருப்பது போல் தோற்றம் அளிக்கும்  வெர்ச்சுவல் கொலுவாக, வந்தாலும் வந்து விடும்.  ஆனால் சுண்டல் கொடுக்கும் பழக்கம் மட்டும் மாறாது என்று நினைக்கிறேன்.   

17 comments:

  1. மத்தியமரில் படித்தேன்.

    ReplyDelete
  2. கொலு பொம்மைகளின் பரிமாண வளர்ச்சி மாற்றத்தை படிப்படியாக விளக்கியது அருமை.

    இவைகளை எல்லாம் நாம் தெய்வங்களாக வணங்கினோம். அவ்வரிசையில் நடிகைகளையும் கொண்டு வந்தது பக்தியின் அவலத்தைதான் காட்டுகிறது.

    மக்கள் இன்னல்களை தொடர்வதின் அடிப்படையே இவ்வகையான பாதைகளில் மக்கள் செல்வதின் பிரதி பலனே...

    ReplyDelete
    Replies
    1. நவராத்திரி, பூஜை, நோன்பு, கொண்டாட்டம் எல்லாம் ஒன்று சேர்ந்த பண்டிகை. கொண்டாட்டம் அதிகமாகும் பொழுது சில அபத்தங்கள் சேர்ந்து விடுகின்றன.

      Delete
  3. ஃபைபர் பொம்மைகளின் வருகை...

    கைவினைத் தொழிலாளர்களையும் ஆதரிக்க வேண்டும்...

    கொலு பொம்மைகளின் வரலாறு அருமை..

    நலம் வாழ்க..

    ReplyDelete
  4. நீங்க சொன்ன மாதிரித் தவழ்ந்த கிருஷ்ணன் பொம்மை எங்களிடம் இருந்தது. வீட்டுக்குள் மழை புகுந்தபோது பொம்மைப் பெட்டிக்குள்ளும் நீர் புகுந்து கிருஷ்ணன், ராஜராஜேஸ்வரி, கோபுரம், துர்கை போன்ற பெரிய பொம்மைகளைக் கரைத்து விட்டது. மற்ற பொம்மைகளும் நீரில் வண்ணம் அழிந்து கிடந்தன. கண்ணில் ரத்தத்தோடு எல்லாவற்றையும் கொடுத்தேன். எனக்கு நினைவு தெரிந்த போதிலிருந்து என் அப்பா வீட்டில் அவை வைக்கப்பட்டுப் பின்னர் எனக்கு ஸ்ரீதனமாகக் கொடுக்கப்பட்டவை! இப்போக் கொஞ்சம் போல் அவற்றிலிருந்து எடுத்துத் தனியாக வைத்தவற்றை மட்டும் கொலுவில் வைக்கிறேன். மற்ற மரப்பாச்சி, மாக்கல் சொப்பு, மரச்சொப்பு, பித்தளை, வெண்கலச் சொப்பு ஆகியவை வீணாகவில்லை. சங்கு, சோழி போன்ற கடல் சாமான்கள் போன இடம் தெரியவில்லை. :(

    ReplyDelete
    Replies
    1. பொம்மைகளோடு நமக்கு ஒரு அட்டாச்மெண்ட் வந்துவிடும். எங்கள் அம்மா வீட்டிலிருந்த வெள்ளாக்கார பொம்மைகள் போன இடம் தெரியவில்லை.

      Delete
    2. எங்களிடமும் இந்த வெள்ளைக்கார பொம்மைகள் 4 ஜோடி இருந்தன. எல்லாம் கீழே விழுந்து உடைந்துவிட்டன.

      Delete
  5. இது தான் மத்யமரில் நீங்க காட்டிய உங்க வீட்டு கொலுவா? சிக்கனமாகச் சிக்கென்று நீங்க எழுதுவதைப் போல் அடக்கமாய் இருக்கிறது. சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பக்கத்தில் கோவில் செட் அப், கோவர்த்தன் கிரி போன்றவை இந்த படத்தில் கவராகவில்லை. வருகைக்கு நன்றி.

      Delete
  6. 1970ம் வருடம் சென்னை யில் குறளகத்தில் சில பொம்மைகள்வாங்கி திருச்சிக்கு கொண்டு சென்றோ அதன் பின் வருடாவருடம் கொலு வைக்கும் வ்ழக்கம் ஏற்பட்டது 1991ல் பெங்களூர் வந்தும் கொலு வைப்பது தொடர்ந்தபின்னர் சில ஆண்டுகள் கழிந்துகொலு வைப்பதில்சிரமம் ஏற்பட்டது பொம்மைகளை பூஜை ச்டெய்பவருக்கே அவற்றை கொடுப்பது என்பதில் மனைவி பிடிவாதமாய் இருந்தாள் சிலர் அவற்றை உப்யோகிக்க எடுத்து சென்றனர் ஒரு வாட்ஸ் ஆப் பதிவில் கொலு வைத்தவீட்டில் எங்கள் பொம்மைகளிருப்பது கண்டு மகிழ்ச்சி அடைந்தாள் இப்போது வெறும் மர்ப்பாச்சிபொம்மைகளே எங்கள் வீட்டுக் கொலுவில் இடம்பெறுகிறது

    ReplyDelete
    Replies
    1. இது உங்கள் வீட்டு கொலுவின் பரிணாம வளர்சிதை மாற்றம். வருகைக்கு நன்றி.

      Delete
  7. கொலு சூப்பர் பானுக்கா..

    சமூக நிகழ்வுகளும் பொம்மைகளாக வருகின்றன. இந்த வருடம் கொரோன செட் என்று மாஸ்க் அணிந்த மனிதர்கள், வெறிச்சோடிய வீதிகள், ஒர்க் ஃபிரம் ஹோம், போன்றவை பொம்மைகளாக வரும் என்று எதிர்பார்த்தேன். அடுத்த வருடம் நிச்சயமாக வந்துவிடும்.//

    ஆம் நான் சொல்ல நினைத்தது நீங்க சொல்லிட்டீங்க பானுக்கா!!!

    பாண்டிச்சேரில இருந்தப்ப அங்க கொலு சேல் நடக்கும் பாருங்க ஒரு மண்டபத்துல பன்ருட்டிலருந்து கொலு பொம்மைகள் ஃபேமஸ் ஆச்சே செமையா இருக்கும். அங்கு இருந்தவரை ஒவ்வொரு வருஷமும் போய்ப் பார்த்து உறவினர்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறேன் சின்ன சின்ன செட் தான். புதுசு புதுசா இருக்கும். விலை குறைத்தும் தருவாங்க சிலதுக்கு.

    கீதா

    ReplyDelete
  8. வரலாறு அருமை. நன்றி. சிறப்பான தொகுப்பு.விர்ச்சுவல் கொலு? ஹா... ஹா...

    ReplyDelete
  9. கொலு வரலாறு நன்று.

    ReplyDelete