கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, May 16, 2017

ப.பாண்டி (விமர்சனம்)

ப.பாண்டி (விமர்சனம்)



தனுஷ் முதல் முறையாக இயக்கி இருக்கும் படம். முதல் காதலில் தோற்ற இருவரும் தங்கள் முதிய பிராயத்தில் அந்த காதலை புதுப்பித்துக் கொள்ளலாமா என்று யோசிக்கும் கதை. 

கதா பாத்திரத்திற்கேற்ற நடிகர்களை தேர்வு செய்திருப்பதிலேயே தனுஷிற்கு பாதி வெற்றி கிடைத்து விடுகிறது. அந்த அப்பா பாத்திரத்திற்க்கு ராஜ் கிரானை விட வேறு ஒரு சிறந்த தேர்வு இருக்க முடியுமா? ஆரம்ப காட்சிகளில் மகனிடம் பயந்து கொண்டு பம்முவதும், பேரக் குழந்தைகளிடம் பாசம் காட்டுவதிலும், நண்பர்களோடு முக நூலில் போடுவதற்காக விடம் விதமாக போஸ் கொடுக்கும் வெள்ளந்தி தனத்திலும், இறுதியில் "உனக்காக இரண்டு தடவ வீட்டை விட்டு ஓடி வந்திருக்கேன்" என்று கூறுவதிலும் சபாஷ் போட வைக்கிறார். 

கடைசி இருபது நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் தன். முத்திரையை பதிக்கிறார் ரேவதி. எந்த கல்மிஷமும் இல்லாமல் முன்னாள் காதலனோடு பைக்கில் ஊர் சுற்றுவதும், "வீட்டு அட்ரஸ் கொடுத்தது தப்பா போச்சு" என்று ராஜ் கிரனை கோபிப்பதும், மகளிடம்(நம்ம டி.டி) முன்னாள் காதலனைப் பற்றி பேசுவதும், கடைசியில் எப்போதோ முன்னாள் காதலனோடு எடுத்துக் கொண்ட புகைப் படத்தை அவனிடமே திரும்ப கொடுத்து விட்டு,அவனுக்கு கண்ணீர்  மல்க விடை கொடுப்பதும்.ஆஹா ...!

"வயதானாலும் துணை துணைதான்" என்று மகள் கூறி விட்டுச் சென்றதும் ஒரு துள்ளல் நடை நடக்கிறாரே..! வயதானாலும் ரேவதி ரேவதிதான். 

சின்ன வயது ரேவதியாக வரும் மடோனா செபாஸ்டியனும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ராஜ் கிரண் மகனாக வரும் பிரசன்னா பாஸ் பண்ணி இருக்கிறார், முதல் வகுப்பில் இல்லை. மற்றபடி எல்லோருமே தங்கள் தங்கள் ரோலை நன்றாக செய்திருக்கிறார்கள். 

வளர்ந்து வரும் இளம் இசை அமைப்பாளரான ஷான் ரோல்டன் இசையில் தனுஷ் மடோனா படும் பாடல் நன்றாக இருக்கிறது. பி.ஜி.எம். சிறப்பு. தற்கால இசை அமைப்பாளர்களை போல சிந்தசைசர் பயன் படுத்தாமல் அசல் இசைக்கருவிகளை கொண்டு இசை அமைத்திருக்கிறாராம். வாழ்க! வளர்க!

கம்பி மேல் நடப்பது போன்ற ஒரு கருவை எடுத்துக் கொண்ட தனுஷின் துணிச்சலையும், அதை கொஞ்சம் கூட விரசம் தட்டாமல் எடுத்திருக்கும் திறமையையும் பாராட்டலாம்!