கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, November 5, 2019

கோலங்கள்

கோலங்கள்



வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தினசரி கோலம் போடுவது நம் மரபு. மண் அடுப்புகளில் சமைத்துத்துக் கொண்டிருந்த பொழுது, தினசரி அடுப்பை பசு மாட்டின் சாணி போட்டு மெழுகி விட்டு அதில் கோலம் போட்டு வைப்பார்கள்,அதை பார்ப்பதற்கே லக்ஷ்மிகரமாக இருக்கும்.  எங்கள் வீட்டில் மண் அடுப்பு போய், காஸ் அடுப்பு வந்த பிறகும், அந்த பழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது பொங்கலுக்கு முதல் நாள் மட்டுமே அடுப்பில் கோலம் போடுகிறோம்.

அதே போல தீபாவளிக்கு முதல் நாள் வெந்நீர் தவலையை தேய்த்து, அதில் சந்திரன், சூரியன் வரையும் பழக்கமும் இருந்தது. வெந்நீர் தவலையை எலக்ட்ரிக் ஹீட்டர்கள் பிடித்துக் கொண்டுவிட்ட இந்த காலத்தில் சந்திரனாவது, சூரியனாவது?

கோலங்கள் வெறும் அழகுக்காக மட்டும் போடப்படுவதில்லை. அதில் ஆன்மீகமும் மறைந்திருக்கிறது. ஒரு வார்த்தையை ஒரு குறிப்பிட்ட மீட்டரில் உச்சரிக்கும் பொழுது, அது சக்தி வாய்ந்த மந்திரமாக மாறுவது போல, சாதாரண கோடுகளும், வளைவுகளும் திட்டமாக வரையப்படும் பொழுது சக்தி பெற்றவைகளாக மாறுகின்றன.



நாம் பிள்ளையார் கோலம் என்று கூறும் மேலும் கீழுமாக இரண்டு முக்கோணங்கள் அமைந்த கோலம் முருகனை குறிப்பது. இதில் மேலிருந்து கீழே இறங்கும் முக்கோணம் மண்ணுலக இச்சைகளையும், கீழிருந்து மேலே செல்லும் முக்கோணம் விண்ணுலகு ஏகும் விருப்பத்தையும் குறிக்கின்றது. மனித வாழ்க்கை இந்த இரண்டும் இணைந்தது என்பதே இதன் உட்பொருள் என்று சான்றோர்கள் கூறுகிறார்கள்.

அதே போல் ஹ்ருதய கமலம் கோலமும், ஐஸ்வர்ய கோலமும் அம்பிகையின் வடிவமாகவே கருதப்படுகின்றன. அதனால் அவைகளை வாசலில் போடக்கூடாது என்பார்கள்.



மஹாலக்ஷ்மியின் கருணைக்கு பாத்திரமாவது எப்படி என்பதை விளக்க வரும் ஒரு கதை இப்படி தொடங்கும்; தன்னுடைய அருளை யாருக்காவது வழங்க வேண்டும் என்று விரும்பிய லட்சுமி தேவி ஒரு முறை பூமிக்கு இறங்கி ஒரு கிராமத்திற்குள் நுழைகிறாள். அங்கு ஒரு வீட்டில் காலை வேளையில் வாசல் திண்ணையில் தலையை விரித்து போட்டுக் கொண்டு பேன் பார்த்துக் கொண்டிருந்தார்களாம் அந்த காட்சியில் அருவருத்து அந்த வீட்டிற்குள் நுழையாமல் தாண்டிச் சென்று விடுகிறாள். அடுத்த வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனராம். அதுவும் அமங்கலமான சொற்களால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், சபித்துக் கொண்டும் இருந்ததை கேட்ட திருமகள் அந்த இடத்தை வெகு விரைவாக கடந்து சென்று விடுகிறாள். இன்னொரு வீட்டிலோ சூரியன் உதித்த பிறகும் எழுந்திருந்து வாசல் தெளித்து கோலம் கூட போடாமல் தூங்கிக் கொண்டிருந்தனராம். அதற்கடுத்த வீட்டில் புழுத்த சாணத்தால் வாசல் தெளிப்பதை பார்த்து அங்கிருந்தும் நகர்ந்து விடுகிறாள். கடைசியாக ஒரு வீட்டில் ஏழ்மை நிலையில் இருந்தாலும் அதிகாலையில் எழுந்து, வாசல் தெளித்து அழகாக கோலமிட்டு, வீட்டிற்குள் பூஜை அறையிலும் கோலமிட்டு, விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்ததாம். அதனால் கவரப்பட்ட ஸ்ரீதேவி,"இந்த இடம்தான் நான் வாசம் செய்ய தோதான இடம்" என்று அந்த வீட்டிற்குள் பிரவேசித்து அங்கு வசிக்க தொடங்கியதும் அந்த குடும்பத்தினரின் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்பட்டது என்று அந்த கதை முடியும்.  இதிலிருந்து முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாமல் தினசரி கோலமிடுவதும் நமக்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிந்து கொள்கிறோம்.

துளசி வழிபாட்டில் சொல்லப்படும் ஸ்லோகத்தில்,
'அன்புடனே நல்ல அருந்துளசி கொண்டு வந்து
முற்றத்தில் தான் வளர்த்து, முத்துப் போல் கோலமிட்டு..' என்று வரும். நம்முடைய வழிபாட்டில் கோலதிற்கு முக்கிய பங்கு உண்டு. கார்த்திகை மாதம் கோவில்களை சுத்தம் செய்து கோலமிடுவது ஒரு மிகச்சிறந்த புண்ணிய காரியமாகவே கருதப்படுகிறது.

பகவதி சேவையின்பொழுது போடப்படும் கோலம்(பத்மம்) 
கேரளீயர்களுக்கு பகவதி சேவை என்னும் அம்பிகை வழிபாடு
முக்கியமானது. அந்த பூஜையில் முக்கியமானது பத்மம் எனப்படும் கோலம் வரைவது. அதை பூஜாரிதான் வரைவார். கலர் பொடிகள் கொண்டு மிக அழகாக காட்சி தரும் அந்த கோலத்தை வரையவே இரண்டு மணிநேரங்கள் பிடிக்கும். கோலத்தின் நடுவில் பெரிய குத்து விளக்கை ஏற்றி வைத்து அதில் அம்பிகையை ஆவாஹனம் செய்து பூஜிப்பார்கள்.

மஸ்கட்டில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலில் விசேஷ தினங்களில் கலர்
பொடி கொண்டு போடப்படும் ரங்கோலி தவிர, பழங்கள், காய்கறிகள், உலர் பழங்கள், நவதானியங்கள் என்று ஒவ்வொரு நாளும் விதம் விதமாக பெரிய பெரிய கோலங்களை போடுவார்கள். அதை விரைவாகவும் போட்டு விடுவார்கள் என்பது சிறப்பு. 

சில பண்டிகைகளுக்கென்று தனி கோலங்களும் இருக்கின்றன. சுமங்கலி பிரார்த்தனை, சமாராதனை போன்றவைகளுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குறிப்பிட்ட கோலம்தான் போட வேண்டும் என்ற வழக்கம் கூட இருக்கும்.  மதுரையைச் சேர்ந்த பிராமணர்கள்  திருமணங்களில் மணமகன், மணமகள் அமர வேண்டிய இடத்தில்  போட வேண்டிய மணை கோலம் போடும்பொழுது தனித்தனியாக இரண்டு கோலங்கள் போடாமல், இரண்டும் ஒன்றையொன்று ஒட்டிக்கொண்டிருப்பதை போல போடுவார்கள்.

அப்பொழுதெல்லாம் ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதம் என்றால் அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து போட்டி போட்டுக் கொண்டு தெருவை அடைத்து பெரிய பெரிய கோலங்களை போடுவார்கள். எங்கள் அம்மா மிக அழகாக கோலம் போடுவார். நான் சிறுமியாக இருந்த பொழுது எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த மாமி, "நீதான் அழகாக கோலம் போடுகிறாய். இரண்டு வீட்டிற்கும் பொதுவாக நீயே கோலம் போட்டு விடு" என்று என் அம்மவிற்கு இடம் ஒழித்து கொடுத்து விடுவார்.  

குனிந்து கோலம் போடுவது நல்ல உடற்பயிற்சி மட்டுமல்ல, மூளைக்கும் நல்ல பயிற்சி. கோடுகளை எப்படி வளைப்பது, எங்கே இணைப்பது என்பதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டாமா? இதைப் போன்ற செயல்களை செய்து கொண்டிருந்ததால்தான் முன்பு டிமென்ஷியா போன்றவை அதிகம் பேர்களை தாக்கவில்லையோ என்னவோ.

இப்போதெல்லாம் திருமணம் போன்ற விசேஷங்களில் கேட்டரிங்காரர்களே கோலமும் போட்டு விடுகிறார்கள். சமீபத்தில் நான் கலந்து கொண்ட ஒரு திருமணத்தில், "ஒரு கோலம் போட வேண்டும்" என்று சாஸ்திரிகள் கூறியதும்  மேடைக்கு விரைந்தது 50+ வயதுக்காரர்கள்தான். இளைய தலைமுறையினர் யாரும் முன்வரவில்லை என்றாலும் கோலம் போடும் கலை அறவே ஒழிந்து போய் விடவில்லை என்பது ஒரு ஆறுதல். அது பழையபடி செழிக்க வேண்டும் என்பது ஆசை.  அத்தனைக்கும் ஆசைப்படுகிறோமோ இல்லையோ, இத்தனைக்கு ஆசைப் படலாமே.






கோலங்களுக்கு கூகுளுக்கு நன்றி.