கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, March 13, 2018

காசி யாத்திரை யூ.கே. யாத்திரை.

காசி யாத்திரை   யூ.கே. யாத்திரை.


நான் சுந்தரேசன் வீட்டை நெருங்கும் போது, சுந்தரேசனும், அவர் மனைவி சீதாவும் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் வீட்டிற்கு செல்லலாமா வேண்டாமா என்று கொஞ்சம் தயங்கினேன். இவ்வளவு தூரம் வந்தாகி விட்டது, பார்க்காமல் செல்ல வேண்டாம் என்று அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தினேன்.

"அடட! வா வா! எவ்வளவு நாளாச்சு?" என்று அவனும், "வாங்கண்ணா, நீங்கமட்டும் வந்திருக்கீங்க, அண்ணி வரலையா?" என்று சீதாவும் வழக்கம் போல உற்சாகமாக வரவேற்க, நானும் சகஜமாக உள்ளே நுழைந்தேன். 

எனக்கு முதலில் குடிக்க நீரும், பிறகு எங்கள் இருவருக்கும் தேன்குழல் பின்னர் எனக்கு சர்க்கரை குறைவான ஸ்டராங் காபி எல்லாம்வந்தன. சீதாவின் சிறப்பு இதுதான். சிலரைப் போல ஒவ்வொரு முறையும் எனக்கு காபி ஸ்ட்ராங்காக, சர்க்கரை குறைச்சலாக வேண்டுமென்று சொல்ல வேண்டாம். முதல் முறை சொன்னதை நினைவில் வைத்துக் கொள்வாள். 

சுந்தரேசனுக்கு எதிர்த்தாற்போல் இருந்த மேஜை மீது காசி யாத்திரை டூர் அழைத்துச் செல்லும் டிராவல்ஸ்களின் ப்ரோஷர்கள் நிறைய இருந்தன. 

"காசிக்கு போகலாம் என்று உத்தேசமா?"

ஆமாம். ஆனால் நான் மட்டும் நினைத்தால்  போதுமா? கூட வரவேண்டியவர்கள் மாட்டேன் என்று சொன்னாலென்ன செய்ய முடியும்?" என்றான்.

"நான் வர மாட்டேன்னு சொல்லவில்லை. இந்த வருஷம் வேண்டாம், அடுத்த வருஷம் வருகிறேன்னுதான் சொல்றேன்" என்று சீதா உள்ளே புகுந்தாள்.

ஓஹோ! இதுதான் இவர்களுக்குள் விவாதமா? என்று நினைத்துக் கொண்டேன். 

"அது என்ன அடுத்த வருஷம்?" என்று நான் கேட்டதும், "கேளு, நீயே கேளு என்ற சுந்தரேசன், தொடர்ந்து, "இந்த வருஷம் யூ.கே. போகணுமாம்..."  

"யூ.கேயா..?" என்னையே கொஞ்சம் தூக்கிப் போட்டது இந்த பதில்.. "யூ.கேயில் யார் இருக்கிறார்கள்?"

இவளோட பெரியப்பா பையன் இருக்கிறான். இந்த முறை விடுமுறையில் வந்தவன் சும்மா இல்லாமல், நீ அங்க வந்து விடு, உனக்கு ஊரை சுற்றிக் காட்டுவது என் பொறுப்பு. லண்டன் மட்டும் இல்ல, பாரிஸ், சுவிச்சர்லாந்து என்று எங்கெல்லாம் போக முடியுமோ அங்கெல்லாம் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டான்.   அவனோட சிஸ்டர் போகப்போகிறாளாம், தானும் போகணுமாம்.." 

"பையன் வேறு, போய்ட்டு வாங்கோ, யாரோ கூப்பிடும் பொழுது ஏன் சான்சை மிஸ் பண்ணனும்? என்று சொல்லி விட்டான். ஒன்வே டிக்கெட் அவன் ஸ்பான்சர் பண்ணுகிறானாமாம்.கேட்கணுமா..?"

"அவன் உங்களையும் சேர்த்துதான் சொன்னான்.  ஒன்வே உங்களால் போட முடியாதா?" 

சுந்தரேசன் இதற்கு பதில் சொல்லாமல் மௌனம் சாதிக்க, சீதா தொடர்ந்தாள். " முதலில் ராமேஸ்வரம், பின்னர் அலகாபாத், காசி,கயா, அங்கு செய்ய வேண்டிய சடங்குகளுக்கான செலவு, பின்னர் மீண்டும் ராமேஸ்வரம், பின்னர் வீட்டில் சமாராதனை இவையெல்லாம் செய்து முடிக்க குறைச்சலாகவா செலவாகும்? அதை யூ.கே. ட்ரிப்புக்கு பயன் படுத்திக் கொள்ளலாமே..?"

இப்போது என் நண்பனுக்கு உதவலாம் என்று நினைத்த நான், "அது சரிம்மா, ஆனா ஒரு விஷயம் இருக்கு, காசி யாத்திரை எல்லாம் சீக்கிரம் செய்து விடுவது நல்லது. அங்கு செய்ய வேண்டிய சடங்குகளை எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக செய்ய வேண்டும். மேலும், அங்கெல்லாம் நிறைய படிகள் இறங்கி, ஏறி, அதிகம் நடக்க வேண்டியிருக்கும். அதற்கெல்லாம் உடம்பில் தெம்பு வேண்டாமா?"

சீதா உடனே, உடம்பில் தெம்பு இல்லா விட்டாலும் பரவாயில்லை" என்று தொடங்கியதும், "என்ன சொல்ல வருகிறாள் இவள்?" என்று ஆலோசித்தேன். அவளோ தொடர்ந்து," காசிக்கு போக முடியாவிட்டாலும், காசிக்கு நிகரான ஷேத்திரங்கள் என்று நம் நாட்டில் பல ஷேத்திரங்கள் இருக்கின்றன. எங்கெல்லாம் நதிகள் கிழக்கு மேற்காக பாயாமல், உத்திர வாஹினியாக, அதாவது வடக்கு தெற்காக பாய்கிறதோ, அவை எல்லாம் காசிக்கு இணையான ஷேத்திரங்கள்தான். அங்கு பிதுர் கடன் செய்யலாம். திருவையாறு அப்படிப்பட்ட ஒரு ஷேத்திரம். பாபநாசம், பவானி என்னும் முக்கூடல் திரிவேணி சங்கமத்திற்கு இணையானது. அந்த மாதிரி யூ.கேவிற்கு இணையாக ஒரு இடம் நம் ஊரில் உள்ளதா?" என்று கேள்வி கணையை வீச, நானும், சுந்தரேசனும் வாயடைத்துப் போனோம். 

அப்புறம் என்ன, இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில், "ஃபாசன் யுவர் சீட் பெல்ட்" என்னும் அறிவிப்புக்கு கட்டுப்பட்டார்கள்.    

Sunday, March 11, 2018

ramani vs ramani



வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப்போகும்.