ஞாயிறு, 6 நவம்பர், 2011

oru kurun chutrula!

ஒரு குறுஞ் சுற்றுலா !

நீண்ட நாட்களுக்குப் பிறகு தவறு, பல வருடங்களுக்குப் பிறகு எங்கள் சொந்த ஊரில் நடந்த ஸ்கந்த சஷ்டி விழாவில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது.

எங்கள் மாமா வீட்டில் பரம்பரையாக கந்த சஷ்டி அன்று காவடி எடுக்கும் பழக்கம் உண்டு.  வீட்டிலிருந்து பூஜிக்கப்பட்ட காவடியை எங்கள் ஊரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சுமந்து சென்று அங்குள்ள முருகன் சன்னதியில் அபிஷேகம், அர்ச்சனை போன்றவைகளை முடித்துக்கொண்டு  வீடு திரும்பிய பின் அன்னதானம் நடக்கும். மாலையில் சுவாமி புறப்பாடு, சூரா சம்ஹாரம், போன்றவையும் சிறப்பாக நடைபெறும். கடந்த சில வருடங்களாக மறு நாள் திருக் கல்யாண உற்சவமும் நடத்துகிறார்கள். இதில் பல வருடங்களுக்குப் பிறகு கலந்து கொண்டேன்.

சென்னையிலிருந்து பேருந்தில் தஞ்சை வரை சென்று விட்டு அங்கிருந்து ஆட்டோவில் எங்கள் ஊராகிய கண்டமங்கலதிர்க்கு சென்றோம். ஆட்டோ ஓட்டுனர் மழையால் சாலைகள் மிக மோசமாக இருப்பதாக கூறினார். அவர் சென்னை சாலைகளை பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். ஓரிரு இடங்களில் குழிவாக இருந்ததைத் தவிர சாலை மிகவும் நன்றாகவே இருந்தது.

சிறு வயதில் பார்த்த கோவில், இப்பொழுது பார்க்கும் பொழுது கோவிலின் சிறப்பு வியப்பூட்டியது. ஊரின் வட கிழக்கில் சற்றே உயர்வாக அழகான சிவன் கோவில். கருங்கல் கட்டிடம் என்பது ஒரு சிறப்பு. கோவிலில் இருக்கும் விநாயகர் மிக அழகு! ராஜராஜேஸ்வரி சமேத கைலாசநாதர் மூலவர். ஊரின் காவல் தெய்வமான வாத்திலை நாச்சி அம்மன் உற்சவ விக்ரகமும் இங்கேதான் உள்ளது. வாத்தில்லை நாச்சி அம்மனின் கிரீடத்தின் பின் புறத்தில் ஸ்ரீ சக்ரம் இருப்பதும் ஒரு சிறப்பு!

இதைத் தவிர முருகன் சந்நிதியின் சிறப்பு ...! முருகன் சந்நிதிக்கு எதிரே நின்று தரிசனம் செய்யும் பொழுது முருகன் சிலை மட்டுமே தெரிகிறது, சற்றே வலது புறம் நின்று பார்க்கும் பொழுது முருகனோடு தேவானை மட்டும்  ,இடது புறம் நின்று பார்க்கும் பொழுது முருகனோடு வள்ளி மட்டும் காட்சி அளிக்கும் அற்புத அமைப்பு!

ஸ்கந்த சஷ்டி விழா முடிந்த பிறகு அங்கிருந்து கும்பகோணம் சென்றோம். கும்பகோணத்தில் ஹோட்டல் ராயாஸ் பிரமிக்க வைத்தது. கும்பகோணத்தில் இப்படி ஒரு ஹோட்டலா! என்று வியந்தோம். ஊடகங்களில் கும்பகோணத்தை சுற்றி உள்ள கோவில்களைப் பற்றி அடிக்கடி வருவதால், அவைகளில் பெரும்பான்மை பரிகார தலங்களாக விளங்குவதால் கும்பகோணத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்
கொண்டே வருகிறது அதன் விளைவுதான் ராயாஸ் போன்ற ஹோட்டல்கள். விவசாயத்திற்குப்  பிறகு கும்பகோணத்தின் முக்கிய தொழில் சுற்றுலாதான்! 

உலா தொடரும்-