கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, August 13, 2020

மும்மொழிக் கொள்கையும், ஐஸ்வர்யாவும், அப்துல் கலாமும்

 மும்மொழிக் கொள்கையும், 

ஐஸ்வர்யாவும், அப்துல் கலாமும் 




நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது ஸ்போர்ட்ஸ் டே வருவதற்கு முன்புதான் நாங்கள் முனைந்து பயிற்சி செய்வோம். அப்போது எங்களோடு பயிற்சியில் ஈடுபடும் ஒரு மாணவி ஆசையாக கலந்து கொள்ள வருவாள். அப்போது அவளுடைய உறவினரான பி.டி. டீச்சர்,"உன்னால் இதையெல்லாம் செய்ய முடியாது, நீ எதற்கு வருகிறாய்?" என்றதும் அவளின் உற்சாகம் கொஞ்சம் குறையும். ஆனாலும் விடாமல் பயிற்சி செய்வாள். ஸ்போர்ட்ஸ் டே அன்று அவளிடம் அந்த ஆசிரியர்," உன்னால் முடியாது, நீ இப்போது கூட விலகிக் கொள்ளலாம் என்றதும், அவளின் தைரியம் சுத்தமாக வடிந்து பரிதாபமாக தோற்றுப் போவாள். 

இந்தக் கதைதான் இப்போது மும்மொழிக் திட்டத்திலும் நம் மாநிலத்தில் நடக்கிறது. கிராமப்புற  மாணவர்களுக்கு கஷ்டமாக இருக்கும், என்று சொல்லி சொல்லியே கிராமப்புற மாணவர்களை வளர விடாமல் செய்கின்றனர். 

இங்கே இன்னொரு விஷயமும் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய தோழி ஒருவர் போலந்து பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்பிற்காக மாணவர்களை அனுப்பும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் போலந்துக்கு அனுப்பிய முதல் பேட்சில் ஈரோட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்திலிருந்து ஐஸ்வர்யா என்னும் பெண் இடம் பெற்றிருந்தாள். அந்தப் பெண்ணின் தந்தை ஓர் விவசாயி. தாய் குடும்பத்தலைவி. இருவரில் தந்தை பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்தவர். 

அப்போதைய ஜனாதிபதியாக இருந்த  அப்துல்  கலாம்  அவர்களின் உரையை டி.வி.யில் கேட்ட அந்த பெண்ணிற்கு ஸ்பேஸ் சயின்ஸ் படிக்க வேண்டும் என்று ஆசை. அதைப்பற்றி கணினியில் தகவல் திரட்டிய அந்தப் பெண் உலகம் முழுவதும் எங்கெல்லாம் அந்தப் படிப்பு போதிக்கப் படுகிறது என்று தகவல்களை சேகரித்திருக்கிறாள். அவளுக்கு போலந்து பல்கலைகழகம் மிகவும் பிடித்திருக்கிறது. எந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் வந்த பொழுது அவள் தொடர்பு கொண்டது யாரைத்தெரியுமா? சாட்சாத் அப்துல் கலாம் அவர்களைத்தான். 

மாணவர்களை சந்திக்கும் பொழுதெல்லாம் மேற்படிப்பு குறித்து அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று கலாம் அவர்கள் கூறியதை மனதில் கொண்டு அந்தப் பெண் அப்துல் கலாம் அவர்கள் கொடுத்திருந்த தொலைபேசி எண்ணுக்கு நேரிடையாக தொடர்பு கொண்டிருக்கிறாள். இரண்டு முறை தொடர்பு கொண்ட பொழுதும், ஜனாதிபதி வேறு அலுவல்களில் பிசியாக இருந்ததால் அவரோடு பேச முடியவில்லை இரண்டாவது முறை அவருடைய உதவியாளர் இந்தப் பெண்ணின் தொடர்பு எண்ணை வாங்கி கொண்டாராம். ஒரு நாள் அப்துல் கலாம் அவர்களே இந்தப் பெண்ணை தொலைபேசியில் அழைத்தாராம் (அங்குதான்  கலாம் நிற்கிறார்). ஐஸ்வர்யா தான் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் கல்லூரிகளைப் பற்றி அவரிடம் கூற, அவர், சிலபஸில் எவையெவை கவர் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதனால்  பெற்ற  தெளிவோடு  அந்தப் பெண் போலந்து சென்று, படித்து, வேளையிலும் அமர்ந்து விட்டாள். 

இதில் குறிப்பிடப் பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்தப் பெண் கிராமத்திலிருந்து வந்தவள். குடும்பத்தில் யாரும் படித்தவர்கள் கிடையாது.  அதுவரை ஈரோடு தாண்டி எங்கும் சென்றது கிடையாது. ஆனால் அவளுடைய ஆர்வம், அவளை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பியது. கற்றுக் கொள்வதற்கு கிராமம், நகரம் என்ற பேதமெல்லாம் கிடையாது. உடனே சிலபேர் அந்தப் பெண் மும்மொழி படித்தாளா? என்று கேட்பார்கள். ஐஸ்வர்யா போன்ற பெண்கள் மும்மொழி என்ன? ஆறு மொழி கூட படிப்பார்கள். 

நீ கிராமம், உன்னால் முடியாது என்று சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி? கிராமத்தில் இருப்பவர்கள் செல்போன் வைத்துக் கொள்வதில்லையா?  மோட்டார் பைக்கும், ட்ராக்டரும் ஓட்டுவதில்லையா? கிராமத்தில் இருந்து வந்தவர்கள் டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் உருவாவதில்லையா?  அவர்களால் மூன்று மூன்று மொழிகள் மட்டும் படிக்க முடியாதா? 

தமிழ் நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கும், ஏன் அயல் நாடுகளுக்கும் செல்பவர்களின் குழந்தைகள் அந்தந்த பிராந்திய மொழிகளைக் கூட கற்று தேர்கிறார்களே? அப்படியிருக்க ஹிந்தி மட்டும் அவர்களால் கற்றுக் கொள்ள முடியாதா? 

"ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும், ஆனால் உன்னால் முடியும்". என்று  ஊக்கப் படுத்தாமல், "நீ கிராமப்புற மாணவன், உன்னால் நகர்ப்புற மாணவனோடு போட்டி போட முடியாது, உனக்கு இது கஷ்டம் ". என்று சொல்வது கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சியை நாமே தடுப்பது போல் ஆகாதா?  இப்படி சொல்லி சொல்லித்தான் படிக்கும்பொழுது ஆங்கிலம் சரியாக கற்றுக் கொள்ளாமல், பிறகு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பில் சேரும்படி செய்திருக்கிறோம். 

தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும் நிச்சயம் ஆளுமை வேண்டும், கூடுதலாக ஒரு மொழி தெரிந்திருப்பது இன்னும் கொஞ்சம் தைரியம் தரும். 





38 comments:

  1. மிகச்சில சமயங்களில் உன்னால் முடியாது என்று ரோஷப்படுத்தி செய்யவைக்கும் வேலைகள் உண்டு.  ஆனால் இப்படி டிஸ்கரேஜ் செய்யாமல் ஊக்கப்படுத்துவதே நல்லது.

    ReplyDelete
  2. சில பேர்களுக்கு அந்தத் தெளிவையும் துணிவையும் இயற்கையிலேயே கொடுத்து விடுகிறான் இறைவன்.  நேரடியாக ஜனாதிபதியிலிடமே சந்தேகம் கேட்கும் துணிவும், தெளிவும் நம்மில் யாருக்காவது வருமா?  அவர்தான் பாருங்கள் எவ்வளவு எளிமையாக அதைப் பற்றிச் சொல்லி மாணவிக்கு உதவி இருக்கிறார்?

    ReplyDelete
  3. இதைப் பற்றி எழுதி அலுத்து விட்டது. நீங்க இதோடு நிறுத்திக் கொண்டு விட்டீர்களே? மாணவர்களைத் தேர்வு எழுதுவதற்கு அதிலும் பொதுத் தேர்வு எனில் மிரளும்படி செய்திருப்பதும் இப்போதைய மாணவர்களுக்குப் பரிந்து பேசும் கூட்டமே. மாணவர்களுக்குத் தேர்வு என்றால் மன அழுத்தம் அதிகம் ஆகிறது என்று சொல்லிச் சொல்லியே தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறும்படி செய்து விட்டார்கள். தேர்வு எழுதித் தேர்ச்சி பெறுவதிலேயே மாணவர்கள் பாடம் குறித்து எதுவும் அடிப்படை தெரியாமல் மனப்பாடம் பண்ணித் தேர்ச்சி பெறுகிறார்கள். இப்படி இருக்கையில் தேர்வே வேண்டாம், அதிலும் பொதுத்தேர்வு என்பதே வேண்டாம் எனச் சொல்லி அதற்காகப் பாடுபடும் குழந்தை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவங்க குழந்தைகள் படிப்பது எல்லாம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் ஹிந்தியும் சேர்த்து!

    ReplyDelete
  4. கிராமப்புறங்களில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்கட்டும். கிராமப்புற மாணவர்கள் சர்வதேச அளவில் போட்டி போடும் அளவுக்குத் திறமை கொண்டவர்களாக ஆகிவிடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கிராமப்புற குழந்தைகளிடம் எல்லா திறமைகளும் உண்டு. பெரும்பான்மையான கிராமப்புற இளைஞர்கள் பக்கத்து நகரங்களுக்குத்தான் படிக்க செல்கிறார்கள். 

      Delete
  5. அருமையான பதிவு அன்பு பானுமா.

    வழிகாட்டலுக்கு ஆள் இருந்தால் அதைவிட
    வேறென்ன வேண்டும். அந்த வழியில் அப்துல் கலாம் ஐயா
    அருமையாக உரைகள் நிகழ்த்தி வந்தார்.
    இந்தக் குழந்தை அவரிடமே வழிகேட்டிருக்கிறதே.

    கிராமத்துக் குழந்தைகளுக்கு அறிவுத் துடிப்பு கொஞ்சமாக
    இல்லை.
    நிறையவே இருக்கிறது. நல்லதொரு பதிவுக்கு மிக நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பெண்ணின் பெற்றோர்களும் உறுதுணையாக நின்றார்கள். 

      Delete
  6. அப்துல்கலாம் அவர்கள் உதவிய ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள்.

    மூன்று மொழியென்ன ஆறு மொழிகள்கூட படிக்கலாம். உண்மைதான் ஹிந்தியை படிக்கலாம் அது ஊறுகாயாக பயன் படுத்துவோம். தமிழ் உணவாக இருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அதில் எந்த சந்தேகமும் இல்லை. தாய்மொழிக்குதான் முதலிடம் கொடுக்க வேண்டும். இப்போதைய குழந்தைகளுக்கு தமிழே சரியாகாது தெரியவில்லை என்பது ஒரு சோகம். நன்றி ஜி. 

      Delete
  7. உண்மை ...எங்களுக்கும் இதே போன்ற எண்ணங்கள் தான் நம் குழந்தைகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து முன்னேற வழிசெய்யாமல் ...ஏதோ ஏதோ செய்கிறார்கள் ...

    ReplyDelete
    Replies
    1. சுயநலமிக்க அரசியல்தான் காரணம் வேறு என்ன? நன்றி அனு. 

      Delete
  8. நமது கில்லெர்ஜீ தமிழ் தவிர ஆங்கிலம், ஹிந்தி, அரபி, மலையாளம், தெலுகு, கன்னடம்  என்று பல மொழிகள் எழுத படிக்க கற்றுள்ளார் என்பது தெரியும். அவர் இம்மொழிகளில் ஆங்கிலம், தமிழ் தவிர வேறு எந்த மொழியையும் பள்ளியில் கற்கவில்லை. பள்ளி அல்லாது இந்தி கற்க பல அமைப்புகள் உள்ளன. அல்லாமலும் மத்திய அரசு தபால் வழி ஹிந்தி படிப்பு நடத்துகிறது. ஹிந்தி படிக்கக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. ஹிந்தி கட்டாய பாடமாக திணிக்கக் கூடாது என்பதைத் தான் நான் உட்பட எல்லோரும் சொல்கிறோம்.

    கிராமத்து பெண் போலந்து பல்கலையை கண்டுபிடித்து சேர்ந்தது போன்று விருப்பமுள்ளவர்கள் CBSE, ICSE பள்ளிகளில் படிக்கலாம். நவோதய பள்ளிகளை எதிர்த்ததிற்கு அங்கு தாய் மொழி கற்பித்தல் இல்லை என்ற காரணம் தான். 

    இந்தி படிக்காத கிராமத்து தமிழர்கள் வடநாட்டில் வேலை செய்கிறார்கள். அதே போன்று ஹிந்தி பேச மட்டுமே அறிந்த வடநாட்டினர் தமிழ்நாட்டில் வேலை செய்கிறார்கள். 

    நானும் கேரளத்தில் வேலை கிடைத்ததால் மலையாளம் கற்றுக்கொண்டேன். 

    தாய் மொழி படிப்பு அவசியம். விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் கற்கலாம். பொதுமொழி என்று  தேவை இல்லை. இந்தியா என்றுமே பல மொழி பேசும் நாடாகத் தான் இருந்தது. அப்படியே இருக்கட்டும். 
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. நவோதயா பள்ளியில் அந்த அந்த மாநில மொழி கட்டாயம் இருக்க வேண்டும். அதைத் தவிர்த்துத் தான் இந்தி, சம்ஸ்கிருதம் மற்ற மொழிகளில் ஏதேனும் ஒன்று கற்க வேண்டும். அதுவும் எட்டாம் வகுப்பு வரை தான். ஒன்பதாம் வகுப்பில் இருந்து இரண்டு மொழியோ ஒரே மொழியோ அவரவர் பாடத்திட்டத்துக்கு ஏற்ப. கேந்திரிய வித்யாலயாவின் பாடத்திட்டம் தான் நவோதயா பள்ளிக்கும். அருமையான பாடத்திட்டம். ஹிந்தி கற்பிக்கிறார்கள் என்னும் ஒரே காரணத்துக்காக இந்தப் பள்ளிகளைத் தமிழகத்தில் மட்டும் வரவிடவில்லை. அண்டை மாநிலமான கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் ஒவ்வொரு கிராமத்திலும் நவோதயா பள்ளி உண்டு. குஜராத்தின் எல்லாக் கிராமங்களிலும் நவோதயா பள்ளி உண்டு. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பார்கள். அதைப் போலத்தான் இதுவும். தனியார் பள்ளிகளில் ஹிந்தி சொல்லிக் கொடுத்துக் குழந்தைகள் அதிகமாய்ப் பணம் கட்டி அந்தப் பள்ளிகளில் சேர்ந்து ஹிந்தி படிக்கலாம். அது ஏற்புடையது. ஆனால் அரசுப் பள்ளிகளில் இலவசமாகக் கற்றுக் கொடுத்தால் ஹிந்தித் திணிப்பா? அதுவும் விரும்பினால் படிக்கலாம் என்று தான் சொல்லப்படுகிறது. ஹிந்தி இல்லை எனில் மற்ற மாநில மொழிகள் எதுவானாலும் படிக்கலாம். மற்றபடி நவோதயா பள்ளியில் தாய்மொழி கற்பித்தல் இல்லை என்பதே பொய்யான செய்தி. கேந்திரிய வித்யாலயாவில் தாய்மொழி எதுவானாலும் அங்கே இல்லை. அங்கே மாணவர்கள் கற்கும் மொழி ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் இவை மட்டுமே. சம்ஸ்கிருதம் எட்டாம் வகுப்பு வரை. ஹிந்தி பத்தாம் வகுப்பு வரை. அதன் பின்னர் ஹிந்தி தேவையானால் படிக்கலாம். சோஷியல் சைன்ஸ் என்னும் பாடம் மட்டும் கேந்திரிய வித்யாலயாவில் ஹிந்தியில் தான் கற்பிப்பார்கள். அதுவும் தேவை இல்லை எனில் ஆங்கிலத்தில் படித்துக் கொள்ளலாம். தனி வகுப்பாகச் சொல்லிக் கொடுப்பார்கள்.

      Delete
    2. அரபு நாட்டில் படிக்கும் இந்தியக் குழந்தைகள், இந்தி, ஆங்கிலம், அரபு படிக்கின்றனர். மூன்று மதத்து குழந்தைகளும் இதற்கு என்ன சொல்வது ?

      தேவையும், சூழலும்தான் நமது படிப்பை தீர்மானிக்கின்றது. தமிழ்நாட்டுக்கு தேவை தமிழ் இதை மாற்ற இயலாது.

      Delete
    3. நேற்று முகநூலில் ஒருத்தர் தான் அரபு நாட்டில் வாழ்வதாகவும், அதனால் தானோ, குழந்தைகளோ அரபு படிக்கவில்லை என்றும் சொல்லி இருந்தார். அவருக்குப் பதில் சொல்ல நினைத்து வேண்டாம்னு விட்டுட்டேன்.

      Delete
  9. நான் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்தேன். பள்ளியில் ஹிந்தி கற்காதவர்கள் ஆட்சி மொழிகளில் ஒன்றான ஹிந்தி கற்கவேண்டும். அதற்காக ஓர் வருடம் நிறுவனம் எங்களுக்கு ஆசிரியரைக் கொண்டு ஹிந்தி கற்பித்தது. மத்திய அரசு நடத்தும் தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்ணும் பெற்றேன். ஆனால் கற்ற ஹிந்தி பெயர் பலகை படிக்க மட்டுமே உதவுகிறது. Twitter ஹிந்தியைப் போலும் புரிந்து கொள்ள முடியவில்லை. 

    ReplyDelete
    Replies
    1. சும்மா ஹிந்தி படித்தால் மட்டும் போதாது. பழக்கமும் வேண்டும். ஹிந்திச் செய்திகள் கேட்கணும், ஹிந்தியில் வரும் தொடர்கள் பார்க்கணும், ஹிந்தியில் பேச முயற்சிக்கணும். அதோடு மத்திய அரசு சும்மாப் பெயருக்காக இரண்டே இரண்டு கோர்ஸ் மட்டும் பாடங்கள் அனுப்பிப் படிக்க வைக்கிறது. அதே சென்ட்ரல் ஹிந்தி டைரக்டரேட் மூலம் படித்தால் இன்னும் அதிகமாய்ப் படிக்கலாம். மற்றபடி தமிழ்நாட்டில் தக்ஷிண் பாரத் ஹிந்தி பிரசார சபா மூலம் படிப்பவர்களுக்கும் அத்தனை சரளமான ஹிந்தி வராது. ஏனெனில் முக்கால் வாசி ஹிந்தி ஆசிரியர்கள் பாடமே எடுப்பதில்லை. பத்து வருஷம், பதினைந்து வருஷம் வந்த தேர்வுகளில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளை பதில்களோடு நோட்ஸாகப் பதிப்பித்து விட்டார்கள். அதைத் தான் மாணவர்கள் படித்து மனப்பாடம் செய்து எழுதித் தேர்ச்சி பெறுகின்றனர். Ka, Kha, ga, gha இவற்றில் உள்ள வித்தியாசமான உச்சரிப்பே அவங்களுக்கெல்லாம் தெரியாது; வராது! gambeer என்றால் ஹிந்தியில் தீவிரமா/(சீரியசா) என்னும் பொருள் படும். ஆனால் ஹிந்தி பிரசார சபா ஆசிரியர்கள் அதற்குச் சொல்லும் பொருளே கம்பீரமாக நடந்தார்/இருந்தார் என்னும் பொருளில் அவரும். ஆஷா எனில் நம்பிக்கை. ஆனால் தமிழ் ஆசையை இதற்குப் பொருள் சொல்வார்கள். தமிழ் ஆசை என்பதற்கு ஹிந்தியில் இச்சா என வரணும். திவஸ் என்பது தினம்/நாள் என்னும் பொருள் படும். ஆனால் இங்கே திவஸம்/ஸ்ராத்தம் எனும் பொருளில் எடுத்துப்பாங்க! இப்படி எத்தனையோ இருக்கு. ஆகவே ஹிந்தி கற்றல் மட்டும் போதாது. பயிற்சியும் வேண்டும்.

      Delete
    2. அந்தப் பெண் CBSCயிலோ  ICSCயிலோ பஅந்தப் பெண் CBSCயிலோ  ICSCயிலோ படிக்கவில்லை. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜெய்குமார் சார். 

      Delete
  10. தேடலும் தேவையும் இருந்தால் கற்பது(ம்) எளிது...

    எந்த திணிப்பும் ஆபத்து... அல்ல... அழிப்பு...

    ReplyDelete
  11. பானுக்கா ஆமாம் உனக்கு ஒன்றும் தெரியாது, உனக்கு வராது என்று சொல்லுவது மிக மிக மோசம் ஒரு குழந்தையும் வாழ்க்கையை மோசடி செய்தல்தான். உற்சாகப் படுத்த வேண்டும். இத்தனை வாய்ப்புகள் உலகில் இருக்கின்றன என்பதை அறிவுறுத்த வேண்டும்.

    எங்கள் வீட்டில் பலரும் கல்வித் துறையில் இருப்பதால் இதைப் பற்றி நன்றாக அறியமுடியும். பள்ளியிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் குறித்த ஆதங்கள் எங்கள் வீட்டில் அடிக்கடிப் பேசப்படும் ஒன்று. வாய்ப்புகளைத் தேடிச் செல்லவும் அதற்கு நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்தலும் மிக மிக அவசியம்.

    ஐஸ்வரியா சூப்பர். இவரைப் பற்றி அப்போது செய்தியிலும் வந்த நினைவு. வாழ்த்துகள். கலாம் போன்று ஊக்கப்படுத்துபவர்கள் சிலரே. அவரைத் தொடர்பு கொள்ளும் அந்த தைரியம் அப்பெண்ணிற்கு நல்ல முடிவு எடுத்து முன்னேற வழி வகுதிருக்கிறது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //ஐஸ்வரியா சூப்பர். இவரைப் பற்றி அப்போது செய்தியிலும் வந்த நினைவு. // இல்லை, எந்த செய்தியிலும் வந்ததில்லை. Exclusively for Engal Blog. நன்றி கீதா. 

      Delete
  12. உங்களின் இன்றைய பதிவிற்கு பல குறள்கள் சொல்லலாம்... ஆனாலும் சற்றே பொருத்தமான ஒன்று..

    உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
    உள்ளியது உள்ளப் பெறின்

    (குறள் எண்) : 550 : மறதியில்லாமல் ஒன்றைத் தொடர்ந்து நினைப்பவன், அதனை எளிமையாகப் பெறுவான்...

    இதை நேற்று நீங்கள் எனது பதிவில் வாசித்த வரிகள்... சரி விளக்கம் சரியாக இருக்கிறதா...?

    இப்படித்தான் பலரின் உரையும் உள்ளது... தவறாச்சே என்று தோன்ற வேண்டும்...! சரி, இந்தக் குறளில் மறதி குறிக்கும் ஏதேனும் சொல் உள்ளதா...?

    சரியான விளக்கம் எழுதி முடிக்காத பதிவில் இருந்து, இந்தக் குறளுக்கான விளக்கம்...

    // அடேய்... சோர்வினை தூக்கி தூரப் போட்டு விட்டு, அடுத்து அடைய நினைத்ததை தொடர்ந்து நினை... அதன்படி செயல் ஆக்கம் செய்... நீ நினைத்ததை எளிதாகவே சாதித்து விடமுடியும்... //

    உங்கள் பாணியில் சுலபமாக இருக்கிறதா...?

    ReplyDelete
    Replies
    1. //உங்கள் பாணியில் சுலபமாக இருக்கிறதா...?// சுலபமாக இருக்கிறது, ஆனால் என் பாணியில் இல்லை. நன்றி. 

      Delete
  13. கேரளத்தில் மாநிலப்பாடத் திட்டத்திலும் ஹிந்தி உண்டுதான். என் குழந்தைகளும் படித்தார்கள்தான். ஆனால் இரண்டாவது மொழி தாய்மொழிதான். கேரளத்தில் தற்போது பலரும் ஹிந்தி பேசுகிறார்கள் பேசவில்லை என்றாலும் புரிந்து கொள்கிறார்கள். என்றாலும் தாய்மொழியை என்றுமே எதற்காகவும், எங்கு சென்றாலும் விட்டும் கொடுப்பதில்லை. அரபு நாடுகளில் அவர்கள் பிழைப்பதற்குச் செல்ல உதவுவது ஹிந்தி தெரிந்திருப்பதும் அல்லது புரிந்து கொள்ள முடிவதும் கூட ஒரு காரணம்.

    ஆனால் எனக்கு ஹிந்தி தெரியாது.

    துளசிதரன்

    ReplyDelete
  14. ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்துகள். அவருக்குத் தேடல் இருந்திருக்கிறது. கற்கும் ஆர்வமும் இருந்திருக்கிறது. ஆனால் ஐஸ்வர்யாவைப் போன்று எல்லோருக்கும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாதே.

    ஓர் ஆசிரியனாகச் சொல்கிறேன். எனது இத்தனை ஆண்டு அனுபவத்தில், எல்லா மாணவர்களும் ஒரே போன்று இருந்ததில்லை. ஒரு சிலரால் எளிதாகக் கற்க முடிந்தது. ஒரு சிலரால் முடியவில்லை. நாம் எத்தனைதான் ஊக்கம் கொடுத்து தட்டிக் கொடுத்துக் கொண்டுவந்தாலும், கற்கும் திறனில் பெரும்பான்மையானோர் குறைவாகவே இருக்கிறார்கள். இதோ இப்போது மலப்புரத்தில். ப்ல சிறு சிறு கிராமங்கள். நாங்கள் இருக்கும் பகுதியும் அப்படித்தான். என் மனைவி பள்ளி ஆசிரியை. ஒவ்வொரு வருடமும் நாங்கள் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று பிள்ளை பிடித்தல் என்று பெற்றோரிடம் பேசி குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டுவோம். கவுன்சலிங்க் செய்கிறோம். பள்ளிக்கு வந்து விட்டுப் பாதியிலேயே நிறுத்திவிடுவதால் ஒவ்வொரு வருடமும் செல்ல வேண்டியுள்ளது. அட்லீஸ்ட் பள்ளிப் படிப்பையாவது முடியுங்கள் என்று சொல்லி என்ன உதவி வேண்டும் உங்களுக்கு என்று கேட்டு அதைப் பள்ளியில் சொல்லி அதற்கான நடவடிக்கைகள் எடுத்து என்றுதான் இருக்கிறது. சில குழந்தைகளால் சிலபஸை எதிர்கொள்ள இயலவில்லை. வீட்டுச் சூழலும் அப்படியாக இருக்கும். பல வீடுகள். பேசும் திறம் உண்டு. ஆனால் படித்து எழுத முடியாமல் கஷ்டப்படுவது பெரும்பாலும் வீட்டுச் சூழலால்.

    எனவே கற்கும் திறன் என்பது தனிப்பட்ட குழந்தை, நபரைப் பொறுத்தது.

    துளசிதரன்

    பானுக்கா துளசி சொல்லியிருப்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன். துளசி மற்றும் அவரது மனைவியுடன் சென்றிருக்கிறேன். அக்குழந்தைகளைப் பள்ளிக்கு வரச் சொல்ல பெற்றோரிடம் பேசுவது என்பது மிக மிகக் கடினமான விஷயம். சில வீடுகளில் பெற்றோர் ஓகே என்பார்கள் ஆனால் குழந்தைகள் வருவதற்குத் தயங்குவார்கள். அதுவும் 9, 10 ஆம் வகுப்புக் குழந்தைகள் உட்பட. அவர்கள் சொல்லுவது படிக்கக் கடினமாக இருக்கிறது என்று. ஏன் என்று ஆராய்ந்தால், முந்தைய தலைமுறை பள்ளிக்குக் கூடச் சென்றிருக்காதவர்களாக இருப்பார்கள் அல்லது குறைந்த வகுப்புகளே படித்திருபபர்கள். குழந்தைகளை ஊக்கப்படுத்திக் கற்க வைக்கும் சூழல் இல்லை.

    இதோ என் பக்கத்து வீடும் அதற்கு ஓர் உதாரணம். அவர்கள் தாய்மொழியான கன்னடம் கூட அவர்களுக்குச் சரியாக எழுத வரவில்லை. 6 ஆம் வகுப்பு படிக்கிறாள்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஒப்புக்கொள்ள வேண்டிய தெளிவான விளக்கம். நன்றி துளசிதரன் & கீதா 

      Delete
  15. பானு, நம் குழந்தைகளுக்கு நாம் முதலில் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடம் "உன்னால் முடியும் தம்பி" என்பதுதான்.
    கீழக்கரையில் ஜனித்து தன் முயர்ச்சியால் இந்நாட்டின் ஜனாதிபதியானவருக்குத்தான் தெரியும் அந்த வெற்றி பெற வேண்டும் என்ற வெறியும் அதே சமயம் கிராம பிரதேசத்தில்ருந்து வருவதால் யாவருக்கும் உதவும் பண்பும்.
    வாழ்க அப்துல் கலாம் புகழ். வளர்க நம் நாடு.

    ReplyDelete
  16. எல்லோரும் அப்துல் கலாமாகவும் இல்லை ஐஸ்வர்யாக்களாகவுமில்லை

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. யானை நடந்தால் செய்தி இல்லை, அது விழுந்தால்தான் செய்தி என்பது ஜர்னலிசத்தின் பால பாடம் என்பார்கள். சாதாரண மனிதர்களைபி பற்றி பதிவுகள் போடுவோமா?  நன்றி. 

    ReplyDelete
  19. ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்துகள் எல்லாவற்றுக்கும் Mindset தான் முக்கியம்

    ReplyDelete