கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, December 18, 2020

பய பக்தி

பய பக்தி  

நாம் கோவிலுக்குச் சேரும் பொழுது பய பக்தியோடு செல்வோம். ஆனால் பயம் 90% பக்தி 10% என்று ஒரு கோவிலுக்குச் சென்றோம் என்றால் அது சோட்டாணிக் கரை பகவதி கோவிலுக்குச் சென்றதை கூறலாம். 

ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு முன் கேரளா சென்ற பொழுது சோட்டாணிக் கரைக்கும் சென்றோம். நாங்கள் சென்றபொழுது சாயரட்சை தீபாராதனை நேரம். அந்தக் கோவிலைப் பற்றி பரணீதரன் எழுதியிருந்தவை நினைவுக்கு வந்து கிலியை  ஊட்டியது. மன நலம் சரியில்லாமல் அங்கே தங்கியிருப்பவர்கள் தரிசனத்திற்கு வரும் நேரம். 

அந்தக் கோவிலின் சுவர்களில் அடிக்கப் பட்டிருந்த  பெரிய பெரிய ஆணிகளை  பார்த்தாலே பகீரென்றது. அவை எல்லாம் அந்தக் கோவிலில் தங்கியிருந்த மன நலம் குன்றியவர்கள், மற்றும் பேய் பிடித்தவர்கள் அர்த்தஜாம குருதி  பூஜையில்  அவர்கள் கைகளால், அல்லது தலையால்  அந்த கருங்கல் சுவர்களில் அடித்தவை.

மன நலம் குன்றியவர்களும், பேய், பிசாசு முதலிய தொல்லைகள் உள்ளவர்களும் சோட்டாணிக்கரைக்கு வந்து தங்கி, அந்த கோவிலில் நடக்கும் பூஜைகளில் கலந்து  கொண்டு, தேவியின் பிரசாதத்தை உண்ண வேண்டும். அங்கு நடக்கும்  குருதி பூஜையின் பொழுது இந்த மன நலம் குன்றியவர்கள் தங்கள் கைகளாலோ அல்லது  தலையாலோ ஆணியை கோவிலின்  கருங்கல் சுவரிலோ அல்லது அங்கிருக்கும் மரத்திலோ  அடிப்பார்களாம், அப்போது அவர்கள் உடலிலிருந்து பெருகும் ரத்தத்தின் வழியே துர் சக்திகள் வெளியேறிவிடும் என்பது நம்பிக்கை. 

இந்த கோவில் இரண்டு பகுதிகளை கொண்டது. மேலே இருக்கும் கோவிலில் அம்பிகை பகவதியாக காலையில் சரஸ்வதியின் அம்சமாகவும், பகலில் லக்ஷ்மியின் அம்சமாகவும் இரவில் துர்கையின் அம்சமாகவும் காட்சி அளிக்கிறாள். மிகவும் சௌமியமான, அழகான ரூபம். கீழ்க்காவு என்று படிகள் இறங்கி கீழே இருக்கும் கோவிலில் குடி கொண்டிருக்கும் அம்மன் பத்ரகாளியின் அம்சமாக விளங்குகிறாள். இங்குதான்  வெள்ளிக்கிழமை இரவுகளில் குருதி பூஜை நடைபெறுமாம். அதை காண்பதற்கு மனதில் மிகவும் உறுதி வேண்டும் என்று திரு.பரணீதரன் அவர்கள் அந்த பூஜை நடக்கும் விதத்தை விவரித்து எழுதியிருப்பார்.  அந்தக் காலங்களில் நிஜமாகவே ஒரு கோழியையோ, ஆட்டையோ பலி கொடுத்து அந்த ரத்தத்தில் சோற்றைக்   கலந்து அதைத்தான் நிவேதனம் செய்வார்களாம். பின்னர் அரசாங்கம் உயிர் பலியை தடை செய்த பிறகு மஞ்சள் பொடியில் சுண்ணாம்பை கலந்தால் சிவப்பு நிறத்தில் வருமே, அதை ரத்த சோறாக கொடுக்கிறார்கள் என்றார்கள். இருந்தாலும் அந்த கீழ்க்காவில் ரத்த வாடை அடிப்பது போல இருந்தது. ஜலதாரைகளில் படிந்திருந்த கறை, ரத்தக்  கறையோ என்று தோன்றியது.  அந்தக் கோவிலில் ஒரு அமானுஷ்யம் நிலவியது.

அதுவும் நாங்கள் சென்றது சாயரட்சை தீபாராதனை நேரம். மன நலம் குன்றிய பெண்கள் சிலர் குளித்துவிட்டு தரிசனத்திற்கு வந்தனர். அவர்கள்  அங்கிருக்கும்  மஹாவிஷ்ணு சந்நிதியில் அமர வைக்கப்பட்டனர். அதில் ஒரு பெண் திடீரென்று விசித்து விசித்து அழுதபடி எழுந்திருக்க நான் வெலவெலத்துப் போனேன்.  அம்மனை தரிசிக்க எங்கே மனம் சென்றது? அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை அல்லவா பார்க்கத் தோன்றியது. "கோவிலுக்கு வந்தால் சாமியை பார்க்காமல், வேறு எதையாவது ஏன் பார்க்கிறீர்கள்?" என்று அம்மா திட்டினாள். 

அதே கோவிலுக்கு மிக சமீபத்தில் சென்றிருந்தோம். கோவில் அடியோடு மாறி நவீனமாகிவிட்டது. அந்த அமானுஷ்யம் போன இடம் தெரியவில்லை. 

25 comments:

  1. நானும் என்மகனும் சபரி மலைக்கு சென்றுவரும்போது 1971என்று நினைவு சோட்டானிக்கரை சென்றோம் மாலை நேரம் தீப ஆராதனை சமயம் அருகில் நின்ற்ருந்தவர்கள் இடமிருந்து வல ம் வலமிருந்துஇடம் என்று மெதுவாக ஆட ஆரம்பித்தவர்கள் வேகவேகமாகஅட ஆரம்பிக்க்ல எனக்கு சற்றே பயம் வந்தது கூட்வே மகன் ஐந்து வயது இருந்ததாஅவனை அங்கிருந்து அப்புறப்படுத்தி கோவிலை வலம் வந்தோம் ம்ரத்தின் உச்சியில் ஆணிகள் அடிக்கப்பட்டிருந்தன மனம் பிறழ்யவர்கள்அடித்தது என்பதைசொன்னார்கள் நம்பமுடிய வில்லை ஏன் என்றால் ஆணிகள் உயரத்தில் அடிக்கப்பட்டு இருந்தன

    ReplyDelete
    Replies
    1. //ஏன் என்றால் ஆணிகள் உயரத்தில் அடிக்கப்பட்டு இருந்தன// Point!

      Delete
  2. பக்தியை விட பயமுறுத்தலெ அதிகம் அதன் பின் இரண்டு மூன்று முறை சென்றிருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இப்போது பயமுறுத்தல் குறைந்து விட்டது. நன்றி.

      Delete
  3. நான் அந்தக் கோவில் சென்றதில்லை.  ஆனால் வர்ணனைகள் படிக்க பயமாகத்தான் இருக்கிறது.  சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.  வியாழன் பதிவில் நான் சொன்ன குறி சொல்பவர்கள் நினைவும் வருகிறது!  இதேபோல வேறு சில கோவில்களும் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம். திருச்சிக்கு அருகில் இருக்கும் குணசீலம் அப்படிப்பட்ட கோவில்தான்.

      Delete
    2. அங்கேயும் நான் போனதில்லையாக்கும்!  சேது படத்தில் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான்!

      Delete
  4. குருதிப்பூஜை... கேட்கவே நடுங்குகிறது என்ன ஒரு மூட நம்பிக்கை, இப்படிப் பல நம்பிக்கைகள் முன்பு இருந்தன ஆனால் இப்போ அவற்றை மக்கள் தவிர்த்து வருகின்றனர் என்றே நினைக்கிறேன். பேய் போக்கவென தலைமயிரைப் பிடித்துக் கொண்டு அடிப்பார்கள்.. கண்ட இடங்களில் எல்லாம் வேல் குத்துவது கூடப் பயங்கரமானதுதான்..

    இன்று கோயிலின் நிலைமை மாறியிருப்பது சந்தோசம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா. உங்களைப் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. இப்போதெல்லாம் மன நலம் குன்றியவர்கள் மருத்துவ சிகிச்சை செய்து கொள்கிறார்கள். நன்றி.

      Delete
  5. நானும் சோட்டானிக்கரை 1989 வெகு காலத்திற்கு முன்பு போயிருக்கிறேன்...

    தங்களது பதிவு மனதில் கிலியை உண்டாக்குகிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு கிலியா? நம்ப முடியவில்லை.

      Delete
  6. வணக்கம் சகோதரி

    நாங்கள் பல வருடங்களுக்கு முன்பு ஒரு தடவை குருவாயூர் சென்று விட்டு இந்தக் கோவிலுக்கும் சென்று வந்தோம். இந்த அம்மன் மிகவும் பிரசித்தி பெற்றவள் என எங்கள் நாத்தனார் இந்த ஊர் அம்மனைப் பற்றி விஷேடமாக நிறைய விஷயங்களை சொன்னார்கள். அதனால் அப்படியே அம்மனை தரிசிக்கலாம் எனச் சென்றோம். அங்குள்ள நிலைமை பார்க்கவே பயமாகத்தான் இருந்தது. எங்கள் குழந்தைகளும் அவர்களைப் பார்த்து பயந்தார்கள். உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர்களும் பேய் பிடித்துள்ளதாக கூறி தலைவிரித்தபடி ஆடிக் கொண்டிருந்தவர் களையும் கடந்து அம்மனை தரிசித்து விட்டு விரைவில் கோவிலை விட்டு வெளியில் வந்தோம். உண்மையிலேயே பய பக்தியுடன் சென்ற கோவில்களில் அதுவும் ஒன்று. இப்போது கோவிலின் நிலைமை மாறியிருப்பது சந்தோஷந்தான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. காலையில் இடுகை படித்து, முன்பு படித்திருந்த துளசிதளம் போன்ற கதைகளை நினைவுக்குக் கொண்டுவர வைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? வருகைக்கு நன்றி.

      Delete
  8. கேரளப்பக்கக் கோயில்கள் அதிகம் பார்த்தது இல்லை. நாலைந்து வருஷஙக்ள் முன்னர் தங்கை கணவர் சஷ்டிஅப்த பூர்த்திக்குத் திருவனந்தபுரம் முதல் முதலாகப் போனோம். நம்மவர் சபரிமலை போகும்போதெல்லாம் காலடி, குருவாயூர், சோட்டானிக்கர பகவதி அம்மன் கோயில், திருச்சூர் எனப் போய் வந்திருக்கார். நான் திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமியைப் பார்த்தது தான் 2015 ஆம் ஆண்டில். அதன் பின்னரோ/முன்னரோ போனதில்லை.

    ReplyDelete
    Replies
    1. கேரள கோவில்களின் அழகு அலாதி. அங்கு நிலவும் அமைதியும்,ஒழுங்கும் பின்பற்றத் தக்கவை.

      Delete
  9. சோட்டானிக்கர கீழ்க்காவு கோயில் பற்றி இப்போத் தான் முதல் முதலாக அறிந்தேன். நம்ம ஊரிலும் குணசீலத்தில் இம்மாதிரியான மனநிலை சரியில்லாதவர்களைப் பார்க்கலாமே! முன்னெல்லாம் பிரகாரத்திலேயே உட்கார்த்தி வைத்திருப்பார்கள். இப்போது அவர்களுக்கெனத் தனி விடுதி கட்டி அங்கே தங்க வைக்கிறார்கள். குறிப்பிட்ட நேரம் மட்டுமே அவர்களைப் பாதுகாப்புடன் வரிசையில் அழைத்து வருகிறார்கள். அந்த நேரம் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.

    ReplyDelete
    Replies
    1. குணசீலத்தில் கூட இப்போது மன நோயாளிகள் வருகை குறைந்து விட்டது என்கிறார்கள். நன்றி.

      Delete
  10. சில வருடங்களுக்கு முன்னர் நானும் இந்தக் கோவிலுக்குச் சென்று வந்தேன். ஆணிகள் பார்த்தேன் - சில வித்தியாச பக்தர்களையும்! நம்பிக்கை சார்ந்த விஷயம் இது.

    ReplyDelete
    Replies
    1. Correct! நம்பிக்கை சார்ந்த விஷயம்தான். நன்றி வெங்கட்.

      Delete
  11. சபரிமலை தரிசனம் முடித்துத் திரும்பும் போது சோட்டாணிக் கரை பகவதியையும் கீழக்காவு பகவதியையும் தரிசனம் செய்திருக்கிறேன்...

    கீழக்காவில் இரவு எட்டரைக்கு மேல் நடக்கும் குருதி பூஜையையும் தரிசனம் செய்திருக்கிறேன்...

    ஒளிமயமாக ஜொலிக்கும் சந்நிதிகள்.. காணக் கண்கள் இரண்டும் போதாது..

    துஷ்ட ஆவிகளின் ஆட்டம் சூழ்நிலையை அதிரடிக்கும் வாத்தியங்களின் பேரொலி...

    அத்தனை மக்கள் சுற்றியிருந்தாலும் அமானுஷ்யம் தான்... நல்ல மன நிலை உடையவர்க்ளும் அசைந்து கொடுக்கும் நேரம் அது...

    இப்போது மாறி விட்டது என்கிறீர்கள்... எப்படி என்று புரியவில்லை...

    ReplyDelete
  12. கோவிலை விஸ்தாரமாக கட்டி விட்டார்கள். மக்கள் வருகை அதிகரித்து விட்டது. அதனால் முன்பிருந்த தோற்றம் மாறியது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் முன்பெல்லாம் வெள்ளியன்று மட்டும் நடந்த குருதி பூஜை இப்போதெல்லாம் தினசரி நடக்கிறதாம். நன்றி.

    ReplyDelete
  13. அன்பு பானுமா,
    திகில் கோவிலா. சாமி!!!
    ஆனால் கேரளாக்காரர்கள் மிக மிக நம்பிக்கை வைத்திருக்கும் இடம்.
    நம் சமயபுரத்தில் மத்யானம் 12 மணிக்கு தீர்த்தம் தெளிக்க சில பெண்களைக் கொண்டு வருவார்கள். நினைக்கவே சங்கடம்.
    ஊஊ என்று சத்தம் வேற.
    தாயாரைப் பார்த்துப் பயப்படுவது என்றால் சோகம்.
    இப்பொழுது மாறி இருந்தால் நன்மையே.
    கேரளாவும் மாந்த்ரீகமும் பிரிக்க முடியாதது.

    ReplyDelete
  14. நீங்கள் சொல்லியிருப்பது பொல் சோட்டாணிக்கரா இப்போது மாறிவிட்டது அக்கா...

    இந்த ஆணி செய்தி எல்லாம் தெரியும் என்பதால் நான் கேட்டுக்கொண்டுதான் போனேன். இல்லை என்றால் தொழ மனம் வராது எனக்கு. ஆனால் போன சமயம் கோயில் மூடிவிட...வந்துவிட்டோம். அப்புறம் சந்தர்ப்பம் பல கிடைத்தும் இக்கோயிலுக்குப் போகும் நாட்டமும் இல்லைக்கா.

    கீதா

    ReplyDelete