கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, August 3, 2020

ஆடியில் ஆவணி அவிட்டமா?

ஆடியில் ஆவணி அவிட்டமா?


நாளை ஆவணி அவிட்டம்.  இன்னும் ஆவணி மாதமே பிறக்கவில்லை அதற்குள் ஆவணி அவிட்டம் எப்படி வரும்? இது என் மகள் என்னிடம் கேட்ட கேள்வி.  சிலர் மனதுக்குள் கேட்டுக் கொண்டிருப்பார்களாக இருக்கும்.

பெரும்பாலானோர் ஆவணி அவிட்டம் என்றால் பிராமணர்கள் பூணூலை மாற்றிக் கொள்ளும் நாள் என்று நினைக்கிறார்கள். உண்மையில் ஆவணி அவிட்டம் என்று ஒன்று கிடையவே கிடையாது. இந்த நாளை உபாகர்மா என்பார்கள். உபாகர்மா என்பதை உபா+கர்மா என்று பிரிக்க வேண்டும். உபா என்றால் முன்னால் என்றும், கர்மா என்பதற்கு செயல் என்றும் பொருள். அதாவது ஒரு செயலை தொடங்கும் முன் செய்ய வேண்டியது என்று பொருள். எந்த செயல் தொடங்கும் முன் என்ன செய்ய வேண்டும் என்று அடுத்த கேள்வி வருகிறதல்லவா? செயல் என்பது இங்கே வைதீக கர்மங்களை(குறிக்கும்).  எந்த வைதீக செயலையும் பூணூல் அணிந்து கொள்ளாமல் செய்யக் கூடாது என்பது விதி. ஹிந்து தர்மத்தின்படி நான்கு வர்ணத்தினருமே பூணூல் அணிந்து கொள்ள வேண்டும். இதில்  பிராமணர்களும், க்ஷத்ரியர்களும் எப்பொழுதும் பூணூலை அணிந்து கொண்டிருக்க வேண்டும், மற்றவர்கள் வைதீக கர்மங்களை செய்யும் பொழுது மட்டும் அணிந்து கொண்டால் போதுமானது.  அதைப் போலவே எல்லோருமே வேதம் படித்திருக்கிறார்கள்.  

பிருமச்சாரியாக வேதம் கற்றுக் கொண்டவர்கள்  திருமணம் செய்து கொண்டு வேறு தொழில்களில் ஈடுபட்டாலும் தாங்கள் கற்றதை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக *ஆவணி மாதம் பௌர்ணமி முதல் தாங்கள் படித்ததை தினம் ஓதி நினைவுப் படுத்திக்க கொண்டு, மார்கழி மாதம் போகி அன்று நிறைவு செய்வார்கள்.  ஆவணி மாத பௌர்ணமி பெரும்பாலும் அவிட்ட நட்சத்திரத்தன்று வருவதால்  உபாகர்மா ஆவணி அவிட்டம் என்று வழங்கப் படலாயிற்று.  

எல்லாம் சரி, அது ஆவணி மாதத்தில்தான் வர வேண்டும் ஏன் ஆடியிலேயே வருகிறது ? என்று கேட்கிறீர்களா? இது பஞ்சாங்க குழப்பம். இந்தியாவில் தமிழ் நாட்டிலும், கேரளாவிலும் மட்டுமே சூரியனை அடிப்படியாக கொண்ட சோலார் காலண்டரை பின்பற்றுகிறோம். மற்ற மாநிலங்களில் சந்திரனை அடிப்படியாக கொண்ட லூனார் கேலண்டர்தான். இதை விவரித்து சொன்னால் நம்மை பொறுத்தவரை மேஷம் முதல் மீனம் வரையில் உள்ள பன்னிரண்டு ராசிகளில் சூரியன் பிரவேசிப்பதை வைத்துதான் மாதப்பிறப்பை கணக்கிடுவோம். உதாரணமாக மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் நாள்தான் சித்திரை மாதப் பிறப்பு. அவர் அங்கிருந்து நகர்ந்து ரிஷபத்திற்குள் செல்லும் பொழுது வைகாசி மாதம் பிறக்கும். ஆனால் மற்ற மாநிலத்தவர்களுக்கு அமாவாசை முடிந்தவுடன்அடுத்தமாதம் பிறந்து விடும். அதன்படி நமக்கு இப்போது நடப்பது கர்கடக மாதம் அதாவது ஆடி மாதம்.  இதர மாநிலத்தவர்களுக்கோ ஆடி அமாவாசை முடிந்தவுடனேயே ஆவணி பிறந்து விடும். அதன் படி அவர்களுக்கு இது ஆவணி மாதம்தான். ஆவணி மாத பௌர்ணமியில் உபாகர்மா. இந்த வருடம் நமக்கு இன்னும் ஆடி மாதம் முடியாததால் நாம் ஆடியில் ஆவணி அவிட்டமா? என்று கேட்கிறோம். 

பண்டிகைகள் எல்லாம் சாந்திரமாசத்தை அடிப்படையாக கொண்டுதான் கொண்டாடப்படும்.  அதனால்தான் நமக்கு ராம நவமி சில சமயம் பங்குனியிலும், சில சமயம் சித்திரையிலும் வரும். விநாயக சதுர்த்தி நமக்கு  ஆவணியிலும் வரும், புரட்டாசியிலும் வரும்.  மற்ற மாநிலக்காரர்களுக்கு ராம நவமி என்றால் அது சித்திரையில்தான், விநாயக சதுர்த்தி புரட்டாசியில்தான். உபாகர்மா என்றால் ஆவணியில்தான்.

*சாம வேதக்காரர்கள் ஆவணி பௌர்ணமியில் உபாகர்மாவை தொடங்காமல் புரட்டாசி சதுர்தியில் தொடங்கி, தைப்பூசத்தன்று நிறைவு செய்வார்கள். புரட்டாசி சதுர்த்தி என்பது விநாயக சதுர்த்தி நாள் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோமே.  எனவே போளி வடையோடு ஆவணி அவிட்டத்தை சந்தோஷமாக கொண்டாடுங்கள். 








   

28 comments:

  1. நல்லதொரு விளக்கம்.

    ReplyDelete
  2. http://sivamgss.blogspot.com/2010/09/blog-post_10.html
    http://sivamgss.blogspot.com/2013/08/blog-post_18.html

    இந்தப் பதிவு தொடர்ந்து மீள் பதிவாக வந்து கொண்டிருந்தது.

    ReplyDelete
    Replies
    1. முதலில் உங்களுக்கு அனுப்பி உங்க கருத்தை கேட்கலாம் என்று நினைத்தேன். கிட்டத்தட்ட நள்ளிரவு ஆகி விட்டதால் பதிப்பித்து விட்டேன். நன்றி.

      Delete
  3. தெளிவான விளக்கம். எனக்கு இந்த குழப்பம் இருந்துகொண்டே இருந்தது.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    நல்ல தெளிவான விளக்கம். என் குழந்தைகளும் இப்படித்தான் சந்தேகம் கேட்பார்கள். நம் பஞ்சாங்கம் முறைப்படி வருகிறது என்பேன். நீங்கள் தெளிவாக கூறியுள்ளீர்கள்.இதைக் கொண்டு இன்னமும் தெளிவு படுத்தலாம்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. விளக்கம் நன்று, நன்றி.

    ReplyDelete
  6. நல்ல விளக்கம் பானுக்கா

    கீதா

    ReplyDelete
  7. நேற்று என் பெண், என்னப்பா தமிழ் மாதத்திற்கு 18 நாட்கள்தானா? இன்றைக்கு ஆடிப் பதினெட்டுனு சொல்றீங்க.. நாளை ஆவணி அவிட்டமா என்று கேள்வி கேட்டு என்னைச் சுத்தலில் விட்டாள். பிறகு விளக்கினேன். ஹா ஹா

    ReplyDelete
  8. நல்ல விளக்கம். நன்றி.

    ReplyDelete
  9. விளக்கம் நன்று சகோதரி

    துளசிதரன்

    ReplyDelete
  10. அருமையான விளக்கம்!

    ReplyDelete
  11. நல்ல தகவல்கள் ..அறிந்துக் கொண்டேன் ..நன்றி மா

    ReplyDelete
  12. உங்கள் அன்பான வேண்டுகோளுக்கு ஏற்ப எங்கள் வீட்டில் ஆகஸ்ட் 22 அன்றே ஆவணி அவிட்டம் நடைபெறும் என்பதைப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete