பூக்கி
சமீபத்தில் 'பூக்கி' என்று ஒரு படம் பார்த்தேன். பூக்கி என்பது ஜென் சீ காதலர்கள் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்ளும் பாஷை போலிருக்கிறது. அதில் காதலனும், காதலியும் ஹோட்டலுக்குச் செல்கிறார்கள். அந்தப் பெண் சிக்கன் லசான்யா சாப்பிட விரும்புகிறாள். அவன் இரண்டு பேருக்கும் மெக்ஸிகன் ஃப்ரைடு ரைஸ் ஆர்டர் செய்கிறான். தான் சிக்கன் லசான்யா சாப்பிட விரும்பவதாக அவள் கூறியதும், எரிச்சலாக ஒரு சிக்கன் லசான்யாவுக்கு ஆர்டர் கொடுத்தவன் தனக்கு எதுவும் வேண்டாம் என்கிறான். "உனக்கு எதுவும் வேண்டாமா?" என்று அவள் கேட்க, "மெக்சிகன் ப்ரை வாங்கினால் ஷேர் பண்ணிக்கலாம்னு நினைச்சேன், இப்போ பசிக்கல" என்பான். உடனே அவள் ஐயோ நம்மால் அவன் சாப்பிடாமல் இருக்கிறானே? என்று தான் ஆசைப்பட்ட சிக்கன் லசான்யாவைத் துறந்து, அவன் ஆசைப்படி மெக்சிகன் ஃப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்வாள். உடனே சந்தோஷமான அவன் மெக்சிகன் ஃப்ரைட் ரைஸ் எக்ஸ்ட்ரா லார்ஜ்" என்று கூறி விட்டு ஒரு நய வஞ்சக புன்னகை புரிவான்.
அவர்கள் இருவருக்கும் ஒரு சமயம் கருத்து வேறுபாடு ஏற்பட, கார் ஓட்டிக் கொண்டிருக்கும் அவன், சிக்னலில் நிற்கும்பொழுது சம்பந்தமேயில்லாத ஒரு மூன்றாம் மனுஷனிடம் தங்கள் பிரச்சனையை சொல்லி நியாயம் கேட்பான். எவ்வளவு அசிங்கம்!
அந்த சமயத்தில் பின்னால் காரில் வரும் ஒருவர் இவனுடைய காரின் ரியர் வியூ மிரரை உடைத்து விட, அவள் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் அந்தக் காரை துரத்திப் பிடித்து, அதன் ஓட்டுனரோடு சண்டைக்குச் சென்று, அடிதடியில் இறங்குகிறான். கோபத்தில் அவள் அவனை அறைந்து விட்டுச் சென்று விடுகிறாள். இந்த விஷயம் சோஷியல் மீடியாவில் வைரலாகி விடுகிறது. அதனால் பிரிந்த இருவரும் ஒருவரை ஒருவர் வெறுப்பேற்ற செய்யும் அசட்டுத்தனங்கள் படத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கிறது.
இருவருமே பழைய காதலை மறந்து விட்டு, வேறு ஒருவரோடு பழக ஆரம்பிக்கிறார்கள். அவள் தன் அலுவலகத்தில் பணிபுரிபவனோடும், அவன் உறவில் ஒரு பெண்ணொடும் பழகுகிறார்கள். அந்தப் பெண்ணின் தந்தை அந்தஸ்து காட்டி தன் அப்பாவை கேலி செய்கிறார். அந்தப் பெண்ணோ நாம் இருவரும் ஒரே ஜாதி என்பதால் என் அப்பா திருமணத்திற்கு ஒப்புக் கொள்வார் என்றது பிடிக்காமல் அவளை உதறி பழைய காதலியை நினைத்து அழுகிறானாம்.
இவளுக்கு வாய்த்த புது காதலன் ரெஸ்டாரெண்ட் போனால், "உனக்கு பிடித்ததை ஆர்டர் பண்ணிக்கொள்" என்கிறான். பழைய காதலனை அவள் அறைந்த ரீல்ஸை அலட்சியப்படுத்துகிறான். மேலும், "நீ அவனை இன்னும் மறக்கவில்லை, அவனை சந்தித்து ப்ரேக் அப் என்று சொல்லி விட்டு வா" என்று கூறும் அளவிற்கு ஜெண்டில்மேன். அதன்படி அவனை சந்திக்கச் சென்றவள், அவன் பூக்கி என்று அழைத்ததும் அப்படியே உருகி, அவனோடு சேர்ந்து விடுகிறாளாம். என்ன கொடுமை!
நாற்பது வருடங்களுக்கு முன்பு வந்த படங்களில் கதாநாயகனின் தங்கையோடு கள்ளத்தனமாக உறவு கொண்டு அவளை ஏமாற்றி விட்டு செல்லும் வில்லனின்(அப்போதெல்லாம் வில்லன்தான் அப்படி செய்வான். கதாநாயகன் செய்ய மாட்டான்) காலைப் பிடித்துக் கொண்டு கதாநாயகி, "அத்தான், என்னை கை விட்டு விடாதீர்கள்" என்று கதறுவாள். அவனோடு தன் தங்கையை சேர்த்து வைக்க கதாநாயகன் படாத பாடு படுவான். அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
அதைப்போல நன்கு படித்து, நல்ல வேலையில் இருக்கும் பெண், படிக்காத, ஒழுங்காக ஒரு வேலையில் இல்லாத ஒரு தற்குறியை மணந்து கொள்வதாக காட்டும் படங்களை பார்க்கும் பொழுது கடவுளே! என்ன எழவு இது? என்றுதான் தோன்றும்.
இந்தப் படத்திலும் கூட ஒரு கணவானை விட்டு விட்டு, நார்சிஸ்டிக் மெண்டாலிடியோடு இருக்கும் ஒருவனை தேர்ந்தெடுக்கிறாள் என்பதன் மூலம் ஒருவனை காதலித்து விட்டால் அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனைத்தான் கை பிடிக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகிறார்கள்.