கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, February 6, 2026

சின்னி சினிமா கடிதம்

அன்புள்ள அம்மா,

எப்படி இருக்கிறாய்? ஊருக்கு போய் செட்டிலாகி விட்டாயா? இந்த முறை ஜெட் லாக் பாதிப்பு அதிகம் இருப்பதாக சொன்னாய். அப்பா எப்படி இருக்கிறார்? நீங்கள் இருவரும் ஊருக்குச் சென்றதும்தான் நீங்கள் இங்கே எனக்கு எத்தனை வேலை செய்து கொடுத்திருக்கிறீகள் என்பது புரிகிறது. குழந்தைகளும் உங்கள் இருவரையும் ரொம்பவும் மிஸ் பண்ணுகிறார்கள். U NO, Carrom விளையாட தாத்தாவும், கதை சொல்ல பாட்டியும் இல்லாதது அவர்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. குளிர் முடிந்தவுடன் மீண்டும் இங்கே வந்து விடுங்கள்.


ஓ.டி.டி.யில் என்ன படம் பார்த்தீர்கள்? நான் இரண்டு நல்ல படங்கள் பார்த்தேன். ஒன்று துரந்தர். ரண்வீர் சிங், அக்ஷை கன்னா, சஞ்சை தத், மாதவன், சாரா(தெய்வத் திருமகள், சைவம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக வந்தவர்) நடித்தது. உரி படத்தை இயக்கிய ஆதித்யா தர் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். 

காந்தகார் விமான கடத்தலில் படம் துவங்குகிறது. பாகிஸ்தான் எப்படி நம் நாட்டில் வன்முறையை கட்டவிழ்கிறது? அதை முறியடிக்க இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன என்பதைத்தான் இந்தப் படம் டீல் செய்கிறது.

கட்டுப் கோப்பான திரைக்கதை, சிறப்பான நடிகர்கள் தேர்வு, திறமையான இயக்கம் எல்லாம் படத்தின் நீளத்தை மறக்கச் செய்கின்றன. வன்முறை கொஞ்சம் அதிகம்தான்.

ரண்வீர்சிங் ஆரவாரமாக நடிக்கக் கூடியவர். அவரிடமிருந்து நடிப்பு பிரவாகமாய் வரும். அப்படிப்பட்டவரைஅடக்கி வாசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். சும்மா சொல்லக் கூடாது மனிதர் பிரமாதப் படுத்தியிருக்கிறார். வசனம் மிகவும் குறைவு. முக பாவங்களும், உடல் மொழியும் அட்டகாசம்! இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை எதிர்பார்க்கலாம். 

அக்ஷை கன்னா மட்டும் இளைத்தவரா என்ன? தோற்றத்தில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம், நடிப்பு கணம். முதல் காட்சியில் டைட் க்ளோசப்பில் வருவது மாதவனா? முன் வழுக்கையில் இரண்டு முடிக்கற்றையோடு அடையாளம் தெரியவேயில்லை, தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு முழு ஜஸ்டிஸ் செய்திருக்கிறார். 

வாட்டசாட்ட ரண்வீருக்கு, குட்டிப்பெண் சாரா அத்தனை பொருத்தமாக தோன்றவில்லை, மேலும் என் மனதில் இன்னும் அந்த சிறுமியாகத்தான் தோன்றுகிறார். நீ பார்த்துவிட்டு உனக்கு என்ன தோன்றுகிறது என்று சொல். ஆனால் அசல் பாகிஸ்தானி பெண்ணைப் போலவே இருக்கிறார். நமக்கு நன்கு அறிமுகமான இவரை அறிமுகம் சாரா அர்ஜுன் என்று டைட்டிலில் போடுகிறார்கள்.ஹிந்தியில் இதுதான் முதல் படம் போல.

கண்டிப்பாக நீயும், அப்பாவும் பார்க்க வேண்டும். இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது நாட்டின் பாதுகாப்பிற்காக எத்தனை பேர்கள், எவ்வளவு ஆபத்துகளை எதிர் கொள்கிறார்கள்? நாம் ஜாலியாக இருக்கிறோம் என்று தோன்றியது. 

ஒரு முக்கிய விஷயம், இந்தப் படத்தில் நடித்திருக்கும் ரண்வீர் சிங்கை ரண்பீர் கபூரோடு குழப்பிக் கொள்ளாதே. தீபிகா படுகோனின் கணவர் இவர். 

சீரியஸ் படத்தை பற்றி சொல்லி விட்டேன், அடுத்தது ஒரு ஜாலியான, ஃபீல் குட் நகைச்சுவை படம் 'சர்வம் மாயா' என்னும் மலையாள படம். நிவின் பாலி, ரியா ஷிபூ, ஜனார்த்தனன், வினீத் முதலியோர் நடிக்க, அகில் சத்யன் இயக்கியிருக்கும் படம்.  


ஒரு வகையில் இது ஒரு முக்கோண காதல் கதைதான், அதே சமயத்தில் பேய்க்கதை. பேய் என்றால் கோவித்துக் கொள்ளும், திடீரென்று மனிதர்கள் வந்து விட்டால் பயப்படும் பேய். தமாஷாக இருக்கிறதா? அதேதான்.

நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தாலும், பூனூலை அறுத்து எறிந்து விட்டு, ஒரு இசைக் குழுவில் எலெக்ட்ரிக் கிடார் வாசிக்கும் நிவின் பாலியை தவிர்த்து விட்டு வெளிநாடு சென்று விடுகிறது அந்த குழு. தாற்காலிக வேலை தேடும் நிவின் பாலி வேறு வழி புலப்படாமல் அவருடைய அத்தை பையனின் ஆலோசனையின் பேரில் பூஜைகள் நடத்தி வைக்க ஒப்புக் கொள்கிறார்.

ஒரு பையனை பிடித்திருந்த பேயை ஓட்டும் பூஜையை அவர் நடத்தியவுடன் அந்தப் பையனை பிடித்திருந்த பேய் ஓடி விடுகிறாது. ஆனால் அது வேறு எங்கும் போகவில்லை, நவின் பாலியின் வீட்டிற்கு வந்து விடுகிறது. ஆரம்பத்தில் அச்சப்படும் நிவின் பாலி போகப் போக பேய்க்கு நல்ல தோஸ்த் ஆகி விடுகிறார். பேயின் உதவியினால் அவருக்கு மும்பையில் ஒரு பிரபல இசை அமைப்பாளரிடம் வேலை கிடைக்கிறது. அங்கு சந்திக்கும் ஒரு பெண் மீது இவருக்கு காதல் அரும்ப, பேய்க்கு பொறாமை வந்து விடுகிறது. அதன் பின் நடப்பது என்ன நடக்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.

இந்த மாதிரி ரோலில் நிவின் பாலி நடிப்பதற்கு என்ன? ஜமாய்த்திருக்கிறார். அவருடைய பெரியப்பாவாகவரும் ஜனார்த்தனன் மிகவும் பொருத்தம். பேயாக வரும் ரியா ஷிபு இதற்கு முன் வேறு ஏதாவது படத்தில் நடித்திருக்கிறாரா? என்று தெரியவில்லை. நாம் பார்ப்பது சினிமா என்பதையே மறக்கடித்து விடுகிறது இவரின் இயல்பான நடிப்பு. குழந்தைத்தனமான முகம், சிரிப்பு, எனர்ஜி, ஸோ கியூட்! பூவே பூச்சூடவா நதியாவை நினைவூட்டுகிறார். உனக்குதான் நதியாவை பிடிக்குமே, இந்தப் படமும் உனக்கு நிச்சயம் பிடிக்கும். 

உடம்பை கவனித்துக் கொள். மாத்திரைகளை ஒழுங்காக சாப்பிடு. என்னதான் ஃபோனில் பேசினாலும் கடிதம் ஒரு சுகம் இல்லையா? அடிக்கடி மெயில் அனுப்பு. 

அன்புடன்

சின்னி


  


11 comments:

  1. ஃபீல் குட் நகைச்சுவைப்படம் என்றதைப் பார்த்ததும், ஜெயராமும் அவர் மகன் காளிதாஸும் அப்படி ஒரு படம் செய்யறாங்க போல.

    எனக்கு ஜெயராம் நடிப்பு ரொம்பப் பிடிக்கும். நல்ல மனிதரும் கூட மிமிக்ரியும் ரொம்பப் பிடிக்கும்

    கீதா

    ReplyDelete
  2. அக்கா கடிதம் வகையில் சினி விமர்சனமா....ரொம்ப நல்லாருக்கு. ரசனையாக எழுதியிருக்கீங்க!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பானுமதி வெங்கடேஸ்வரன்February 9, 2026 at 11:12 PM

      நன்றி கீதா.

      Delete
  3. நானும் ரன்பீர் கபூரோடு குழப்பிக் கொண்டேன்.  படம் இழுவை, நீளம்.  சாராவுக்கு காஸ்டியூம் வாங்கித் தரவில்லை போல..  தெய்வத்திருமகள் படத்தில் போட்ட காஸ்டியூமை பத்திரமாக வைத்திருந்து அதையே உபயோகித்திருக்கிறார்.  மாதவனை எனக்கு சுத்தமாக அடையாளம் தெரியவில்லை. ரன்வீர் ஹேர்ஸ்டைல் கடுப்பேற்றுகிறது என்று சொன்னால் கோபித்துக் கொள்வீர்களா?  ஏனென்றால் நீங்கள் அவார்டெல்லாம் சிபாரிசு செய்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. பானுமதி வெங்கடேஸ்வரன்February 9, 2026 at 11:17 PM

      //ரன்வீர் ஹேர்ஸ்டைல் கடுப்பேற்றுகிறது என்று சொன்னால் கோபித்துக் கொள்வீர்களா?// நான் ஏன் கோபித்துக் கொள்ள வேண்டும்? லோகோ பின்ன ருசி!

      Delete
    2. பானுமதி வெங்கடேஸ்வரன்February 9, 2026 at 11:33 PM

      //நீங்கள் அவார்டெல்லாம் சிபாரிசு செய்கிறீர்கள்.// நான் மட்டுமல்ல, பலர். அது சரி, நல்ல நடிகர் என்று அவார்ட் கொடுப்பதற்கும், ஹேர் ஸ்டைலுக்கும் என்ன சம்பந்தம்? மேலும் ஒரு நாட்டிற்கு உளவாளியாகச் செல்பவன், அதுவும் தாதா கும்பலில் அடிமட்ட கூலியாளாக செல்பவன் டிப் டாப்பாக செல்வானா?

      Delete
  4. அக்ஷய் கன்னா தேவ் ஆனந்தையும் சசி கபூரையும் சேர்த்து செய்த கலவை போல இருக்கிறார்! படேலாக வந்த பிரகாஷ்ராஜை குறிப்பிட மறந்தததேனோ...  

    ReplyDelete
  5. சர்வம் மாயா இன்னும் பார்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. முக நூலில் ஒருவர் என்னுடைய இந்த பதிவை படித்து விட்டு, 'சர்வம் மாயா' இழுவை என்றும் 'துரந்தர்' அற்புதமான படம் என்றும் கமெண்டில் சொல்லியிருந்தார். :)))

      Delete
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. புதிய திரைப்பட விமர்சனங்களை அருமையாக உங்கள் பாணியில் கடிதமாக எழுதி கலக்கியுள்ளீர்கள். படங்கள் நன்றாக இருந்திருப்பதில் மகிழ்ச்சி. இங்கு வீட்டில் மகன்கள், மருமகள்கள் பார்த்திருப்பார்கள். கேட்டால் தெரியும். நீங்கள் நன்றாக உள்ளது என்றதினால், நானும் பார்க்க முயற்சிக்கிறேன்.சனி, ஞாயிறு களில் அவர்களுக்கும் பார்க்க நேரம் கிடைக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    ReplyDelete
  7. பானுமதி வெங்கடேஸ்வரன்February 9, 2026 at 11:46 PM

    வாங்க கமலா //நீங்கள் நன்றாக உள்ளது என்றதினால், நானும் பார்க்க முயற்சிக்கிறேன்.// என் மீது நீங்கள் வந்திருக்கும் நம்பிக்கை சந்தோஷம் அளிக்கிறது. பாருங்கள்.

    ReplyDelete