Sunday, December 17, 2017

பியூஷன் உலகம்

பியூஷன்  உலகம் 

அந்த திருமண பத்திரிகையில் முகூர்த்த நேரம் காலை 9:00 முதல் 10:30 வரை என்றுதான் போட்டிருந்தது. ஆனால் 10:30 தாண்டியும் திருமண சடங்குகள் நடந்து கொண்டே இருந்தன. காரணம் மணமக்கள் வேறு வேறு ஜாதி. 

முதலில் பெண் வீட்டு வழக்கப்படி சடங்குகள் நடத்தப்பட்டன, பிறகு பிள்ளை வீட்டு வழக்கப்படி தொடர்ந்தன. இப்போதெல்லாம் இம்மாதிரி திருமணங்கள் அதிகமாகி விட்டன. காலையில் ஹிந்து முறைப்படியும், மாலையில் சர்ச்சில் கிருத்தவ முறைப்படியும் கூட சில கல்யாணங்கள் நடக்கின்றன.  இத்தகைய திருமணங்களை பியூஷன் வெட்டிங் என்கிறார்கள்.  

இந்த பியூஷன் விஷயங்கள் திருமணத்தில் மட்டுமல்ல, வாழ்வின் பல்வேறு விஷயங்களில் பழக்கத்தில் வந்து விட்டது. கர்நாடக இசையையும், ஹிந்துஸ்தானி இசையையும் இணைத்து பாடும் ஜுகல்பந்தி என்னும் கச்சேரி ஒரு வகையில் பியூஷன் இசைதான். இதை இசை விமர்சகர் சுப்புடு," ஜாங்கிரியை மோர் குழம்பில் ஊறப்போட்டது போல" என்பார்.

இப்போது ஜுகல்பந்தியை விரும்பி கேட்காதவர்கள் கூட, கர்நாடக சங்கீதத்தை மேற்கத்திய இசையோடு இணைத்து பாடும் பியூஷன் ம்யூசிக்கை மிகவும் ரசிக்கிறார்கள். உதாரணம் ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடியிருக்கும் 'ரெங்கபுரவிஹாரா..' பாடல். கேட்டுத்தான் பாருங்களேன். முன்பெல்லாம் பெண்களுக்கு புடவைக்கு மாட்சிங்காக பிளவுஸ் வாங்க படும் பாட்டை வைத்து நிறைய நகைச்சுவை துணுக்குகளும், ஏன் கதைகளும் கூட வந்திருக்கின்றன. இப்போது யாரும் அப்படி மேட்சிங் ஆக பிளவுஸ் அணிவதில்லை. பச்சை புடவைக்கு ப்ரவுன் நிறத்திலும், பிரவுன் புடவைக்கு மஞ்சள் நிறத்திலும், மஞ்சள் புடவைக்கு கருப்பு நிறத்திலும் கான்ட்ராஸ்டாகவோ, அல்லது கலம்காரி பிலௌசுகளோ அணிவதுதான் பேஷன். ஏன் சூடிதார் கூட மிக்ஸ் அண்ட் மேட்ச் என்று ஒரே நிற பாட்டமிற்கு வேறு வேறு நிற குர்தாக்களை அணிகிறார்கள். இவையெல்லாம் பியூஷன்தானே?

திருமண விருந்துகளில் காலை முகூர்த்தத்தின் பொழுது சம்பிரதாய சாப்பாட்டை போட்டு விட்டாலும், வரவேற்பின் பொழுது சூப்,  மன்ச்சூரியன்,சப்பாத்தி,புலாவ், பன்னீர் மட்டர் மசாலா என்று வட இந்திய உணவு, சாம்பார் சாதம், உருளை கிழங்கு கறி, ரசம், தயிர் சாதம், ஊறுகாய் என்று எல்லாவற்றையும் கலந்து பியூஷன் விருந்து  பரிமாறுகிறார்கள். 

பெரும்பாலான நவீன யுவதிகள் ஜீன்ஸ், மூக்குத்தி, மெட்டி என்று அலங்கரித்துக் கொள்கிறார்கள், அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. இதை பியூஷன் செருப்பு என்று கூறலாமா?

28 comments:

 1. வித்தியாசமான அவதானிப்பு! அந்தப் பாடல் கேட்டிருக்கிறேன். இந்த வகையில் பாடகர் கார்த்திக் கூட சில கர்னாடக இசைக் கச்சேரிகள் செய்திருக்கிறார். யூ ட்யூபில் கிடைக்கும். சுப்புடு உவமை பிரமாதம். எனக்குத் தெரிந்த ஒருவர் மோர் சாதத்துக்கு வெல்லம் தொட்டுக்கொள்வார்!

  ReplyDelete
  Replies
  1. எங்கள் அப்பா பஞ்சாமிர்தம் இருந்தால் அதை மோர் சாதத்திற்கு தொட்டுக் கொள்வார். மோர் புளிக்காமல் இருக்க வேண்டும்.

   Delete
 2. மதுரையில் ஒருமுறை செருப்பு வாங்கியபோது, நான் செலக்ட் செய்த செருப்புகளை pack செய்யும்போது சிறிய மாறுதல்களுடைய வேறுபட்ட ஜோடியைக் கொடுத்துவிட்டார் கடைக்காரர். சென்னை வந்துதான் கவனித்தேன். அதைவிட சுவாரஸ்யம் அதே நாளில் அது சென்னை டி.நகர் சிவா விஷ்ணு கோவிலில் திருடு போனது!

  ReplyDelete
  Replies
  1. எடுத்தவர் நாகரீகமானவர் போலிருக்கிறது😉

   Delete
 3. வித்தியாசமாகத்தான இருக்கிறது சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. அதனால்தான் எழுத தோன்றியது.

   Delete
 4. அப்பாடா! உங்கள் பதிவுக்கு வந்தும் கருத்துச் சொல்ல முடியாமல் கீ போர்ட் பிரச்னை. வாழ்க்கை ருசிக்க ரசிக்கணும்னு தானோ என்னமோ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் பிரச்னை! ஒருவழியா கீ போர்டை இப்போத் தான் சரி பண்ணினேன். :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா. உடல் நலம் எப்படி இருக்கிறது.

   Delete
 5. ஃப்யூஷனில் மஹாராஜபுரம்+எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணி பிடிக்கும்.மற்றபடி அவ்வளவா சங்கீதம் தெரியாததால் இதுக்கு பதில் சொல்ல முடியலை.

  ReplyDelete
 6. செருப்பு இப்படி இருந்தால் யாரும் தூக்கிண்டு போக மாட்டாங்கனு நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா! ஒரு நம்பிக்கைதான்.

   Delete
 7. ஹா.. ஹா.. ஃபேஷனில் செருப்பும் இப்படியாகி விட்டதே...

  ReplyDelete
  Replies
  1. இன்னும் என்னவெல்லாம் எப்படி எப்படி மாறப்போகிறதோ...? Let us wait and watch.

   Delete
 8. ப்யூஷன்னு தலைப்பைத் தேர்ந்தெடுத்தாச்சு. அதற்கப்புறம் எதையெல்லாம் ப்யூஷன்லே அடக்கலாம்ன்னு யோசித்தீர்களா, என்ன?...
  இந்த ப்யூஷனுக்கு அடுத்தக் கட்டம் என்னவா இருக்கும்?.. யூகம் பண்ணினா தமாஷா இருக்கும் போல இருக்கே?..

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார். ப்யூஷன் திருமணங்களும், இசை நிகழ்ச்சிகளும்தான் இதைப்பற்றி யோசிக்க வைத்தன. அதற்கேற்றார் போல என் சினேகிதியின் செருப்பு கண்ணில் பட்டது,பிறகென்ன?...

   Delete
 9. Ha ha காலத்தின் கொடுமை

  ReplyDelete
  Replies
  1. மாற்றம் என்றும் கூறலாம்.

   Delete
 10. பியூஷன் சூப்பர் அக்கா...

  சிவராம கிருஷ்ணன் கேட்டுருக்கேன்...கார்த்திக்கும் பண்ணிருக்கார்...அதுக்கு முன் கோலோனியல் கசின்ஸ் கேட்டுருப்பீங்களே..ஹரிஹரன்...கூட அவர் பேர் மறந்து போச்சே.....

  உடையில் கூட இந்தியன் கம் வெஸ்டர்ன் அவுட் fit.. வந்துருச்சே....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. காலனியல் கஸின்ஸில் ஹரிஹரனும்,லெஸ்லி லூயிஸ் உம் பாடியிருப்பார்கள். நன்றாக இருக்கும். கார்த்திக் எனக்கு மிகவும் பிடித்த பாடகர். அவருடைய ப்யூஷன் நான் கேட்டதில்லை. கேட்க வேண்டும்.

   Delete
 11. அக்கா ரெண்டு வருஷம் முந்தி ஒரு ஜம்ப்பர் வாங்கினேன் அது உள்பக்கம் வெளியே வர மாதிரி இருந்து வீட்டில் பார்த்து கடைக்கு தூக்கிட்டு ஓடினேன் ,,அங்கே சொன்னாங்க அது லேட்டஸ்ட் பேஷனாம் :)

  இந்த fusion ஸ்லிப்பர்ஸ் சார்லி மலையாளப்படத்தில் ஹீரோயின் பார்வதி கூட போட்டிருப்பார் ..

  ReplyDelete
  Replies
  1. மாறிக்கொண்டே இருப்பது தானே பேஷன்!!. இப்போதெல்லாம் மலையாளப் படங்களே பார்ப்பதில்லை.

   Delete
 12. ஃப்யூஷன் செருப்பு! :) எல்லாவற்றிலும் கலப்பு!

  பாடல் கேட்கிறேன். இதுவரை கேட்டதில்லை.

  ReplyDelete
  Replies
  1. ப்யூஷன் செருப்பு என் தோழி அணிந்து வந்தார். அதுவும் ஒரு வகையில் இந்த கட்டுரைக்கு இன்ஸ்பிரேஷன். பாடல் கேட்டுப் பாருங்கள். நன்றாக இருக்கும்.

   Delete
 13. ஃப்யூஷன் வெட்டிங் - யாரும் இதுவரை இதுபற்றி வலைத்தளத்தில் எழுதியதில்லை. சுவாரஸ்யமாகவே சொன்னீர்கள். அந்த ஃப்யூசன் செருப்பு .. கல்யாண வீட்டு வாசலிலேயே செலக்ட் பண்ணியது இல்லையே?

  ReplyDelete
  Replies
  1. கடைசி வரியை நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்ளவும்.

   Delete
 14. //அந்த ஃப்யூசன் செருப்பு .. கல்யாண வீட்டு வாசலிலேயே செலக்ட் பண்ணியது இல்லையே?//
  ஹா ஹா ! இல்லை இது என் தோழியின் செருப்பு. அவரை என் வீட்டிற்கு வந்த பொழுது அவருக்குத் தெரியாமல் க்ளிக்கினேன்.

  ReplyDelete