Wednesday, May 9, 2018

மாமி சொன்ன கதைகள்

மாமி சொன்ன கதைகள் 

ஸ்ரீராம் எழுதியிருந்த 'அத்தரி மாக்கு கொழுக்கட்டை' கதையை படித்த பிறகு என் சிறு வயதில் என் மாமியிடம் நான் கேட்ட சில கதைகள் நினைவுக்கு வந்தன. இவைகளை நீங்களும் கேட்டிருக்கலாம், கேட்காமலும் இருக்கலாம். இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள் என்றால் நிச்சயம் ரசிப்பீர்கள். முதல் வகையாக இருந்தாலும் ரசிக்க முடியும். 

இந்த உலகில் பிறந்தவர்கள் எல்லோரும் ஒரு நாள் இறந்துதான் தீர வேண்டும். ஆனால் அந்த இறப்பு வருவதில் ஒரு ஆர்டர் இல்லை. அதாவது முதலில் பிறந்தவர்கள்தான் முதலில் இறப்பார்கள் என்று இல்லை. முதியவர்களும் இறக்கிறார்கள், நடு வயதினரும் இறக்கிறார்கள், இளம் வயதினர்களும் இறக்கிறார்கள், ஏன் குழந்தைகள் கூட இறக்கின்றன. இதற்கு என்ன காரணம்?

இந்த உலகம் படைக்கப்பட்டு அதில் ஜீவராசிகளும் உண்டாக்கப் பட்டதும், படைக்கப்பட்ட ஜீவன்கள் எதுவுமே இறக்கவில்லையாம். இதில் புதிது புதிதாக உயிர்கள் வந்துகொண்டே இருக்க, பூமி பாரம் தாங்க முடியாமல் பூமா தேவி திணறினாளாம். அவள் கடவுளிடம் சென்று முறையிட்டு தன் பாரத்தை குறைக்க வேண்டும் என்று வேண்ட, கடவுள் எம தர்ம ராஜனைப் படைத்து, உயிர்களை பறிக்க வேண்டிய வேலையை அவனிடம் ஒப்படைத்தாராம். 

அந்த வேலையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட எமதர்மன், தன்னுடைய உதவியாளனை அழைத்து இன்று முதல் உலகில் வந்த உயிர்கள் நீடித்திருக்காது, பறிக்கப்படும். அது முதலில் முதியவர்கள், பின்னர் நடு வயதினர், பின்னர் இளம் வயதினர் இறுதியாக குழந்தைகள் என்ற வரிசையில் பறிக்கப் படும் என்று பொருள் படும்படி  பழம் உதிர, காய் உதிர, பிஞ்சு உதிர, பூ உதிர,இலை உதிர என்று தண்டோரா போடச் சொன்னாராம்.

அந்த பணியாள் அப்படியே செய்ய, முதியவர்களுக்கு கோபம் வந்து விட்டதாம். "ஏன் நாங்கள்தான் முதலில் இறக்க வேண்டுமா? ஒத்துக்க முடியாது" என்று அடாவடி செய்தார்களாம்(எதைச் சொன்னாலும் ஒத்துக்க முடியாது என்று சொல்வது எப்போதுமே உண்டு போலிருக்கிறது)

சரி, முதியவர்கள் மனதை நோகடிக்க வேண்டாம், முதலில் குழந்தைகள், பின்னர் இளம் வயதினர் என்று படிப்படியாக உயிரை பறிக்கலாம் என்று முன்னால் போட்ட தண்டோராவை அப்படியே திருப்பி,"இலை உதிர, பூ உதிர, பிஞ்சு உதிர, காய் உதிர, பழம் உதிர" என்று போடச் சொன்னாராம்.   

இதை யாருமே ஒப்புக் கொள்ளவில்லையாம். "கிழம், கட்டைகள் இருக்கும் பொழுது, சிறு குழந்தைகள் சாவதாவது? இப்படி செய்தால், உலகில் முதியவர்கள்தான் இருப்பார்கள். மேலும் தங்களை விட இளையவர்கள் இறப்பதை பெரியவர்கள் பார்க்க நேருவதால் உலகமே சோகமாகி விடும்" என்றெல்லாம் கூறினார்களாம். எமன் பார்த்தானாம், தன்  உதவியாளரிடம், "உன் வாயில் எப்படி வருகிறதோ அப்படி தண்டோரா போட்டு விடு, நான் அதன்படி நடக்கிறேன்" என்று கூறி விட்டாராம்.

உடனே எமனுடைய உதவியாளர்,"காய் உதிர, பூ  உதிர, இலை உதிர, பழம் உதிர, பிஞ்சு உதிர "என்று கலந்து கட்டி தண்டோரா போட்டு  விட்டாராம், அதன்படியே யமதர்மராஜனும் நடந்து கொள்ள ஆரம்பித்தாராம். அதனால்தான் உலகில் இறப்பு எந்த வயதிலும் நேருகிறதாம்.

எப்படி கதை? ரசித்தீர்களா? கொஞ்சம் வேடிக்கையான இன்னொரு கதை அடுத்த பதிவில்.

19 comments:

 1. கதை இரசிக்கும்படி இருந்தது. முதன்முறை கேட்கிறேன்.

  தண்டோரா போடுவதற்கு முதல் தடவை வந்தவரிடம் எல்லோரும் பிரச்சனையை வளர்க்காமல் அவருக்கு பூசையைப் போட்டு கதையை முடித்திருந்தால்.

  எமதர்மருக்கு மக்கள் மரணத்தை விரும்பவில்லை என்பது விளங்கி இருக்கும்.

  மரணமில்லாமல் இருந்திருந்தால் இன்றைய அரசியல்வாதி எவ்வளவு வசதியாக இருந்திருக்கும் ?

  கருணாநிதி, ஜெயலலிதா வகையறாக்கள் இன்னும் 9876543210000000000000000 லட்சம் கோடி சொத்துகள் சேர்த்து இருப்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. //மரணமில்லாமல் இருந்திருந்தால் இன்றைய அரசியல்வாதி எவ்வளவு வசதியாக இருந்திருக்கும் ?//
   அவர்களுக்கு சௌகரியம்தான், நம் நிலைமையை நினைத்துப் பார்த்தீர்களா?
   வருகைக்கு நன்றி சகோ.

   Delete
 2. பள்ளிப் பருவத்தில் கேட்டிருக்கிறேன்...

  மீண்டும் தங்கள் பதிவில்..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ஐயா!

   Delete
 3. முதல் முறை கேட்கிறேன். மனிதனுக்கு கிடைத்த ஆயுள் பற்றி ஒரு கதை உண்டு. கழுதை, நாய் போன்ற விலங்குகளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சம் பெற்றுக் கொண்டான் மனிதன், என்றும், அப்படிக் கிடைத்த பருவத்தில் அந்தந்த குணங்கள் அவனிடம் இருக்கும் என்று படித்திருக்கிறேன்! அதுவும் கதைதான்!

  ReplyDelete
  Replies
  1. நானும் இதை ஆமோதிக்கிறேன்.

   Delete
  2. நானும் அந்த கதை படித்திருக்கிறேன். வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. 'எல்லா மனிதருக்கும் மரணம் நிச்சயமா?' என்று குழந்தைப் பருவத்தில் அதிர்ச்சி அடைந்த தருணம் நினைவுக்கு வருகிறது. மரணமில்லாமல் எல்லோரும் வாழ்ந்தால் பூமி என்னாவது!

  ReplyDelete
  Replies
  1. //மரணமில்லாமல் எல்லோரும் வாழ்ந்தால் பூமி என்னாவது!//

   அதானே..?

   Delete
 5. என் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன் அக்கா....மீண்டும் உங்கள் பதிவு வழி இந்த சுவாரஸ்யமான கதையை வாசித்தேன். வளர்ந்த பிறகு பாட்டியிடம் க்ராஸ் கேள்விகள் கேட்டு கலாய்த்து என்று ....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நம் காலத்தில் பாட்டிகள் கதை சொன்னால் நாம் கேட்டோம், இப்போது குழந்தைகள் கதை கேட்கிறார்களா? நன்றி கீதா.

   Delete
 6. இந்தக் கதை கேட்டதில்லை!

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? இப்போது தெரிந்து கொண்டு விட்டீர்களா? ஸோ, நீங்கள்தான் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். (என்ன ஏதோ சத்தம் கேட்க்கிறது? யாராவது கேலியாக சிரிக்கிறார்களா?)

   Delete
  2. ????????????????????????????????

   Delete
 7. Replies
  1. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. மீண்டும் வருக.

   Delete
 8. Replies
  1. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. மீண்டும் வருக.

   Delete