கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, December 18, 2019

மார்கழி நினைவுகள்

மார்கழி நினைவுகள் 


இவர்தான் சுசித்ரா பாலசுப்பிரமணியன் -சிவானந்த விஜயலக்ஷ்மியின் பேத்தி 

கார்த்திகை, மார்கழி இரண்டுமே ஆன்மீக விஷயங்களுக்கு உகந்த மாதங்கள்தான் என்றாலும், மார்கழி இன்னும் கொஞ்சம் சிறப்பு வாய்த்தது. 
நம்முடைய ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதில் நம்முடைய தக்ஷிணாயணம் அவர்களுடைய இரவு, உத்திராயணம் அவர்களுக்கு பகல். தை மாதம் உத்திராயணம் தொடங்கும். அதாவது இரவு முடிந்து பகல் தொடங்கும். தக்ஷிணாயணத்தின் இறுதியான மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற் காலை. சாதாரணமாகவே பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை நேரத்தில் செய்யப்படும் பூஜைகள் சிறப்பான பலனை கொடுக்க கூடியவை. அதிலும் தேவர்களும் பூஜிக்கும் பிரும்ம முகூர்த்தத்தில் நாமும் இறைவனை பூஜிப்பது இன்னும் சிறப்பல்லவா. அதனால்தான் இந்த மார்கழியில் அதிகாலையில் எழுந்து  இறைவனை துதிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். 

எங்கள் அப்பா 
என் மார்கழி நினைவுகளில் முதலிடம் வகிப்பது கோலம்தான். அம்மா மிக அழகாக கோலம் போடுவாள். எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த மாமி என் அம்மாவிடம்,"கல்யாணி நீயே எங்காத்து வாசலுக்கும் சேர்த்து பெரிதாக போட்டு விடு நாம் தனியாக போடவில்லை" என்று இடம் தந்துவிடுவார். அம்மா போடும் பெரிய கோலத்திற்கு நடுவில் சாணி வைத்து பூசணி பூ வைப்பது எங்கள் வேலை. எங்கள் வீட்டு மாட்டு கொட்டிலை பெருக்கி, சாணி அள்ளும் ரங்கம்மா என்னும் பெண்மணிதான் பூசணி பூ கொண்டு வைத்து விட்டு போய் விடுவார். அவர் ஏழு அல்லது எட்டு பூ வைத்தால்தான் எங்களுக்கு திருப்தியாக இருக்கும். 

அடுத்தது அப்பா பாடும் திருப்பாவை. இனிமையான குரல் வளம் கொண்ட அவர் முப்பது நாளும் தப்பாமல் தானே மெட்டமைத்து பாடுவார்.   அப்பா பாடுவதை கேட்டு கேட்டு எங்களுக்கு திருப்பாவை முழுவதும் மனப்பாடமாகி விட்டது. முதலில் அதைக் கேட்டேன், பின்னர் அதன் இலக்கிய அழகு புரிந்தது, அதிலிருந்து மற்ற பாசுரங்களையும் படிக்கத் தோன்றியது. 

அதன் பிறகு மறக்க முடியாத மார்கழி அனுபவம் என்றால் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி உற்சவ நாட்களில் ஓடி, ஓடி அரங்கனை தரிசனம் செய்த அற்புதமான அனுபவங்கள். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். அவர்களையும் அழைத்துக் கொண்டு செல்வோம். எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த பங்கஜம் மாமி, தான் கோவிலுக்குச் செல்லும் பொழுது அக்கம் பக்க வீடுகளில் உள்ளவர்களையும் அழைப்பார். நமக்கு கோவிலுக்கு போக வேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டாலும் மாமி வந்து கூப்பிடும் பொழுது நாங்களும் கிளம்பி விடுவோம். "ரெங்கநாதருக்கு இன்று பாண்டியன் கொண்டை, இன்று விமான பதக்கம், இன்று வைர கீரிடம்" என்று எங்களிடம் சொல்லி அதையும் பார்க்கச் சொல்லுவார். 



வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் மோகினி அலங்காரம். அடடா! அந்த அழகை சொல்ல முடியாது. வெள்ளைப்புடவையில், அமிர்த கலசத்தை அணைத்தபடி அமர்ந்திருக்கும் அரங்கனை பார்க்க ஒரு ஜென்மம் போதுமா? மோகினி அலங்காரத்தின் பின்னழகையும் ரசிக்க வேண்டும். அந்த நடை! எல்லா நாட்களும் கம்பீரமாக நடக்கும் அதே ஸ்ரீபாதம்தாங்கிகள்தான் பெண்ணைப் போல நளினமாக நடக்கிறார்களா? அல்லது அரங்கனே அவர்கள் நடையை அப்படி மாற்றி விடுகிறாரா?  

வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாயிலை தாண்டி ஆயிரங்கால் மண்டபத்தில்தான் பெருமாள் தரிசனம் தருவார். அங்கு எழுந்தருளுவதற்கு முன்னால் மணல் வெளியில் முன்னும் பின்னுமாக உலாத்துவதை 'பத்தி உலாத்துவது' என்பார்கள். நாங்கள் அந்த சமயத்தில் சென்று பெருமாளை சேவித்து விட்டு வந்து விடுவோம்.  மண்டபத்தில் அவரை அமர்த்தி விட்டால் க்யூ தொடங்கி விடும். அதற்கு முன் பார்த்து விட வேண்டும்.  

அதன் பிறகு ராப்பத்தின் பத்து நாட்களும் தினமும் மாலை பெருமாளை சேவிப்போம். நடுவில் ஒரு நாள் முத்தங்கி சேவையில் மூலவர் தரிசனம். தினமும் இரவு எட்டு மணி சுமாருக்கு ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்படும் பெருமாள் பூந்தட்டி கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு கீழே நின்று   மண்டகப்படியை ஏற்றுக் கொண்டு பள்ளியறை செல்ல பதினோரு மணி ஆகிவிடும். பெருமாளுக்கு முன்பாக பாசுரம் இசைக்கும் அரையர்கள் சுற்றி இருக்கும் மக்களையோ, அவர்கள் எழுப்பும் சப்தத்தையோ கொஞ்சமும் பொருட்படுத்தாமல் பெருமாள் மீது வைத்த கண் வாங்காமல் பிரபந்தம் பாடும்  பக்தியை மெச்சாமல் இருக்க முடியாது. சுற்றி இருக்கும் கசமுசா சத்தம் நேஷனல் காலேஜில் பேராசிரியராக இருந்த ரெங்கராஜன் அவர்கள் வீணை வாசிக்கத் தொடங்கியதும் கப் சிப் என்று அடங்கி விடும். அது முடிந்ததும் பெருமாள் *சர்ப்ப கதியில் உள்ளே சென்று விடுவார். அவர் உள்ளே செல்லும் பொழுது படிகளில் பூக்களோடு பச்சை கற்பூரத்தையும் இரைப்பார்கள். பின்னர் நாங்கள் வீடு திரும்புவோம். பெரும்பாலும் தினசரி செல்வோம். பதினோரு மணிக்கு மேல் கோவிலிலிருந்து ராகவேந்திரபுரத்தில் இருந்த எங்கள் வீட்டிற்கு நடந்துதான் வர வேண்டும். பயம் எதுவும் தெரிந்ததில்லை. அவையெல்லாம் மறக்கவே முடியாத நினைவுகள்.

வைகுண்ட ஏகாதசி சமயத்தில் கோவிலுக்குச் சென்று விட்டு வரும் பொழுது
சுடச்சுட வாங்கி சாப்பிட்ட பட்டாணியையும் மறக்க முடியவில்லை. அனந்தராம தீக்ஷதர் தன் உபன்யாசத்தில்,"திருப்பதியில் மரப்பாச்சி கடை வைத்தவனுக்கும், ஸ்ரீரங்கத்தில் பட்டாணி கடை வைத்தவனுக்கும் நேரே வைகுண்டம்தான் ஏனென்றால் கோவிலுக்குச் சென்று விட்டு வரும் எல்லோரும் நேரே அங்குதான் செல்வார்கள்" என்று கூறுவாராம்.    



அதன் பிறகு திருவண்ணாமலையில் இருந்த நாட்களும் சிறப்பானவைதான். மாணிக்கவாசகர் தன்னை பெண்ணாக கருதி நாயகி பாவத்தில் திருவெம்பாவை பாடிய இடம் திருவண்ணாமலை. இங்கு கிரிவலம் செய்வது சிறப்பாக கருதப்படும் மாதங்களுள் மார்கழியும் ஒன்று. திருவாதிரைத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்படும். கார்த்திகை தீபத்தன்று ஏற்றிய தீபத்தின்  சுடலை மை திருவாதிரை அன்றுதான் பிரசாதமாக கிடைக்கும்.  எங்கள் மகள் திருவண்ணாமலையில் வங்கிப் பணியில் இருந்ததால் நாங்களும் அவளோடு ஒன்றரை வருடங்கள் அங்கு இருந்தோம், அதனால் அருணாச்சலேஸ்வரர் கோவில் உற்சவங்களை காணவும், சில முறை கிரிவலம் செய்யவும் பாக்கியம் கிடைத்தது. 

மற்றபடி கச்சேரிகளுக்கு அதிகம் போனதில்லை. டி.வி.யில் கேட்பதோடு சரி.   

* சர்ப்பகதி: ரெங்கநாதர் நடை அழகை சிம்மகதி என்றும் சர்ப்பகதி என்றும் இரண்டு விதமாக சொல்வார்கள். காலையில் அவர் படியில் இறங்குவது ஒரு சிம்மம் படியில் இரங்குவதைப் போல் நிதானமாக இருக்கும். இரவில் படியேறுவது பாம்பு படியில் ஏறுவதை போல் சரட்டென்று விரைவாக ஏறிச் சென்று விடுவார்.  



27 comments:

  1. பொதுவாக நீங்கள் எழுதுவதை விடக் கொஞ்சம் பெரிய பதிவு. ஆனாலும் ருசிகரமான தகவல்கள். அனைவருக்கும் சின்ன வயசு மார்கழி மாசம் நினைவில் வந்து விட்டது போல! நானும் வல்லியின் பதிவிலும் கோமதியின் பதிவிலும் சொல்லி இருந்தேன். இதற்கு முன்னால் சுமார் பத்துவருஷங்கள் முன்னர் மதுரை மாநகரம் வலைப்பக்கத்தில் என்னோட மார்கழி நினைவுகள், தீபாவளி நினைவுகள், நவராத்திரி நினைவுகள், மதுரையில் பள்ளியில் படித்த காலங்கள் என எழுதி இருக்கேன். அதெல்லாம் வலை உலகுக்கு வந்த புதுசு! அநேகமாக 2007/2008ஆம் ஆண்டாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மார்கழி ஒரு மறக்க முடியாத மாதம்தானே. அதுவும் ஸ்ரீரங்கம் மாதிரி ஒரு ஊரில் வசித்ததை எப்படி மறக்க முடியும்? பழைய பதிவுகளின்சுட்டிகள் அனுப்ப முடிந்தால் அனுப்புங்கள். 

      Delete
    2. https://marudhai.blogspot.com/2008/12/blog-post_29.html மார்கழி நினைவுகள்

      https://marudhai.blogspot.com/2007/10/blog-post_13.html Navarathiri Nostalgia

      Delete
  2. உங்கள் அப்பா ரொம்பவே தெரிந்த முகமாக இருக்கிறார். நம்மவரிடம் காட்டிக் கேட்கிறேன், பார்த்திருக்காரா என!

    ReplyDelete
    Replies
    1. இந்தியன் தாத்தா போல் தோன்றுகிறதா? என் அப்பாவுக்கு நாங்கள் வசித்த இடத்தில் அப்படி ஒரு பட்ட பெயர் உண்டு.

      Delete
  3. //http://sivamgss.blogspot.com/2018/12/blog-post_12.html// ஸ்ரீரங்கம் ஸ்ரீபாதம் தாங்கிகள்.

    ReplyDelete
  4. அப்பா தானே மெட்டமைத்துப் பாடுவது சிறப்பு.  இப்படிப் பின்னணி இருந்தால் இதிலெல்லாம் பழக்கம் வந்து விடும்.  மனனம் ஆகிவிடும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். எனக்கு தெரிந்த பல ஸ்லோகங்கள் அப்பா தினமும் ராகமாக சொல்லக் கேட்டு மனப்பாடம் ஆனதுதான்.

      Delete
  5. சுவாரஸ்யமான தகவல்கள்.  நல்ல ஊர்களில் வசித்திருக்கிறீர்கள்.  எனவே நல்ல பல அனுபவங்களை பெற்றிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அவை எல்லாம் கடவுள் அனுகிரகம் என்றுதான் கூற வேண்டும். 

      Delete
  6. உங்கள் அப்பா படத்தைப் பார்த்தால்கொஞ்சம் என் அப்பா நினைவு வருகிறது.  ஆனால் என் அப்பா அவ்வளவு பக்திமான் அல்ல!

    ReplyDelete
    Replies
    1. அப்போ உங்க அப்பா இந்தியன்(தாத்தா)2வா? (கீதா அக்காவுக்கு தந்திருக்கும் விடையைப் பாருங்கள்).நன்றி.

      Delete
  7. உங்களின் ஸ்ரீரெங்கம் அனுபவங்களை படிக்கும் போதே ஆசையாய் இருக்கிறது ...

    எங்க வீடு உறையூர் இருந்தாலும் , ஸ்ரீரெங்கத்திலேயே ஒரு வருடம் தங்கி பெருமாளை அனுபவிச்சு பார்க்கணும் ங்கறது எங்க பல பெரியவர்களின் ஆசை ...

    சில பாட்டி ங்க அப்படி தங்கி சேவிச்சும் இருக்காங்க ..



    ReplyDelete
    Replies
    1. //சில பாட்டி ங்க அப்படி தங்கி சேவிச்சும் இருக்காங்க ..// ரங்கநாதரை சேவிக்க மட்டுமல்ல, ஸ்ரீரெங்கத்தில் இறந்தால் மோட்சம் என்னும் நம்பிக்கை இருப்பதால் அங்கு வீடு வாங்கிக் கொண்டு வசிக்கும் முதியவர்கள் உண்டு. வருகைக்கு நன்றி அனு.

      Delete
  8. சுவாரஸ்யமான தகவல்கள் காணொலி கேட்டு ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜி. காணொளி சற்று பெரியது. கோமதி அக்கா சுசித்ரா யார் என்று தெரியவில்லை என்று கேட்டிருந்தார்கள். அதற்காக இணைத்தேன்.   

      Delete
  9. இப்போது எண்ணிப்பார்க்கும்போதுதான் அந்தநாட்களின் நிகழ்வுகளுக்கு அர்த்தம் புரியும் போல

    ReplyDelete
  10. நம் மத நம்பிக்கையின்படி சிறப்பு வாய்ந்த ஊர்களில் வசிக்க நேர்ந்ததும், அப்பொழுதே அதன் மகத்துவத்தை புரிந்து கொள்ள முடிந்ததும் இறையருள்தான். நன்றி.  

    ReplyDelete
  11. மார்கழி நினைவுகள் அருமை.
    நேரில் பார்ப்பது போல் உணர்ந்தேன்.

    //"திருப்பதியில் மரப்பாச்சி கடை வைத்தவனுக்கும், ஸ்ரீரங்கத்தில் பட்டாணி கடை வைத்தவனுக்கும் நேரே வைகுண்டம்தான் ஏனென்றால் கோவிலுக்குச் சென்று விட்டு வரும் எல்லோரும் நேரே அங்குதான் செல்வார்கள்" என்று கூறுவாராம். //

    பட்டாணி அவ்வளவு நன்றாக இருக்குமா?

    நாகூரில் பட்டாணி சாப்பிட்டு இருக்கிறேன், மெதுவாக சாப்பிட நன்றாக இருக்கும் பல்லை உடைக்காது. பெரிய அளவில் பட்டாணி இருக்கும்.


    //கார்த்திகை தீபத்தன்று ஏற்றிய தீபத்தின் சுடலை மை திருவாதிரை அன்றுதான் பிரசாதமாக கிடைக்கும்.//

    ஓ ! அருமை.

    சொக்கபனை ஏற்றிய் போது பறக்கும் துகளை பிடித்து அதை நெய்யில் குழைத்து பொட்டு வைக்க கொடுப்பார்கள் எங்கள் ஊர் பக்கம்.


    ReplyDelete
    Replies
    1. //பட்டாணி அவ்வளவு நன்றாக இருக்குமா?// ஆமாம். பட்டாணி பிடிக்காத எனக்கு ஸ்ரீரங்கம் சென்ற பிறகுதான் பட்டாணி பிடித்தது. முட்டை பொரி  கூட மிகவும் சுவையாக இருக்கும். பொரிகொள்ளு என்று நவதானியங்களை வறுத்து கொடுப்பார்களே அதுவும் நன்றாக இருக்கும்.  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. சிவானந்த விஜயலட்சுமியின் பேத்தி யார் என்று தெரிந்து கொண்டீர்களா?

      Delete
  12. நான் ஸ்ரீரங்கத்தில் பிறந்தவள் அவ்வளவே. சிறுவயதில் ovvoஒவ் கோடை விடுமுறை க்கும் பாட்டி அகத்திற்குச் செல்லுவோம். அதனால் கோடை உற்சவங்கள் நிறைய சேவித்திருக்கிறேன். சமீபகாலத்தில் வைகுண்ட ஏகாதசி சேவிக்க என்றே ஸ்ரீரங்கம் போய்வந்த அனுபவம் உண்டு. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நானும் ஸ்ரீரங்கம் போய் வந்தேன். இரவு வீணை ஏகாந்தம் சேவித்து கண்கள் பனிக்க வீடு திரும்பிய அனுபவம் உண்டு. பொதுவாக நாச்சியார் திருக்கோலம் என்று தான் சொல்லுவோம்.ஒரு செய்தி என்ற முறையில் இதைச் சொல்லுகிறேன். அவ்வளவு தான்.







    ReplyDelete
  13. //நாச்சியார் திருக்கோலம் என்று தான் சொல்லுவோம்.// மோகினி அலங்காரத்தை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். என் தளத்திற்கு முதல் முறையாக வந்திருக்கிறீர்களோ? அரங்கன் அழைத்து வந்து விட்டான் என்று நினைக்கிறேன். நன்றி மீண்டும் வருக. 

    ReplyDelete
  14. இவரை சிறு வயதில்(அவர்களீன் சிறு வயதிலிருந்து தெரியும்)
    இவர்தான் சிவானந்த விஜயலக்ஷ்மி பேத்தி என்று தெரியாது.
    நிறைய திறமைகள் உள்ளவர். புதுயுகத்தில் சினிமா பாடல்களை கர்நாடக இசையில் எந்த ராகத்தில் அமைந்து இருக்கிறது இந்த பாடல் என்று பேசி கொண்டு இருக்கிறார்.

    செய்திக்கு நன்றி. மார்கழி நினைவுகளை ரசித்து படித்து விட்டு மேலே உள்ள காணொளியை பார்க்கவில்லை. நீங்கள் சொன்னபின் தான் பார்த்தேன், கேட்டேன்.

    ReplyDelete
  15. வணக்கம் சகோதரி

    நல்ல விளக்கமான நினைவலை பதிவு. ரெங்கனை மார்கழியில் தினமும் தரிசித்த பேறு பெற்றவர் நீங்கள். ஸ்ரீ ரெங்க நாதனை, ஸ்ரீ பாதம் தாங்கியவர்களின் நடையழகை ஆனந்தமாக விமர்சித்து இருக்கிறீர்கள். உங்கள் ஸ்ரீரங்க காட்சிகளையும், திருவண்ணாமலையில் கிடைத்த தரிசனங்களையும் நினைவு கூர்ந்த விதத்தை ரொம்பவே ரசித்தேன்.

    தங்கள் அப்பாவின் சாதனைகள் பெரிது. அவர் திருப்பாவை பாசுரங்கள் பாடி மகிழ்ந்தது அதனால் தங்களுக்கும் பாசுரங்கள் ராகத்தோடு மனனம் ஆனது என அத்தனை செய்திகளும் படிக்க மகிழ்வாக இருந்தது.

    அதுபோல் உங்கள் அம்மாவின் கோலங்கள் நினைவுகளும் எங்கள் அம்மாவை எனக்கு நினைவுபடுத்தின. நல்ல தாய் தந்தையரை அடையப் பெற்ற தங்கள் நினைவுகள் படிக்கும் போது அருமையாக உள்ளது.

    நாங்களும் எங்கள் குழந்தைகள் பள்ளி விடுமுறையின் போது என் மச்சினர் திருவண்ணாமலையில் குடியிருந்ததை சாக்காக வைத்து ஒரு தடவை அங்கு சென்று சில நாட்கள் தங்கி அண்ணாமலேஷ்வரரை கண் குளிர தரிசித்து வந்தோம். அதன் பின் செல்லும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஸ்ரீ ரெங்கமும் குழந்தைகள் சின்னவர்களாக இருக்கும் சமயம் ஒருதடவை வந்ததுதான். தங்கள் பதிவின் மூலம் இரு பெரும் தெய்வங்களை மானசீகமாக தரிசித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete