கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, December 19, 2019

குயின் (வெப் சீரிஸ்) சீசன் 1

குயின் (வெப் சீரிஸ்) சீசன் 1

Image result for queen web series

குயின் (Queen) வெப் சீரீஸ் சீசன் 1 பார்த்து முடித்து விட்டேன். உலகின் கண்களில் அரசியாக கருதப்பட்ட ஒரு பெண், அந்த இடத்தை அடைய அவள் கொடுத்த விலை, பட்ட துயரங்கள் இவற்றை மிகவும் நியாயமாகவும் துயரம் தோய்ந்த அழகோடும் படமாக்கியிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.  இவருடைய சமீபத்திய படங்களை பார்த்த பொழுது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. வியாபார நிர்பந்தம், ஹீரோக்களின் அடாவடி இவைகளால் இவர் கொஞ்சம் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருந்தது போலிருக்கிறது. ஆனால் வெப் சீரீஸில் இந்த பிரச்சனைகள் இல்லாததால் அவர் விருப்பப்படி எடுக்க முடிந்திருக்கிறது. 

சின்ன சின்ன ரோல்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகையின் மகள். கான்வென்டில் படிக்கும் பள்ளியின் சிறந்த மாணவியான அந்த பெண்ணிற்கு நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசை. பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலாவது மாணவியாக வரும் அவளை பெஸ்ட் அவுட் கோயிங் ஸ்டூடண்டாக தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அந்த விருதை வாங்க முடியாமல் அவளை திரைப்படத்தில் நடிக்க அழைத்துச் சென்று விடுகிறாள் அவளுடைய தாயார். அங்கு துவங்குகிறது அவளுடைய சிதையும் கனவுகள். அதன் பிறகு தமிழ் திரையுலகின் முடி சூடா மன்னனான ஜி.எம்.ஆர். அவளை தன்னோடு நடிக்க வைக்க, அவள் விரும்பாத துறையில் அவள் உச்சத்தை தொடுகிறாள். ஜி.எம்.ஆரின் ஆளுமை அவளை பொது வாழ்வில் எப்படி உயர்த்துகிறது, தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி வீழ்த்துகிறது என்பதை  நறுக்கென்று விவரித்திருக்கிறார் கௌதம். அவரே இயக்குனர் ஸ்ரீதராகவும் நடித்திருக்கிறார்.

நடிகர்கள் தேர்வு சிறப்பு. சிறுவயது சக்தியாக வரும் அங்கிதாவாகட்டும், இளம் வயது நடிகையாக வரும் அஞ்சனாவாகட்டும், அரசியல்வாதியாக வரும் ரம்யா கிருஷ்ணனாகட்டும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும், ஒளிப்பதிவும் துல்லியம். அரசியல் தலைவி சக்தி தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கும் பொழுது வசனங்கள் இன்னும் கொஞ்சம் எளிமையாக இருந்திருக்கலாம். மற்றபடி பல இடங்களில் வெகு ஷார்ப். ஜி.எம்.ஆர். மறைந்த பிறகு ஜி.எம்.ஆர் மனைவி ஜனனி தேவியும், சக்தியும் பேசிக்கொள்வது, ஜி.எம்.ஆரும் சக்தியும் உரையாடும் சில இடங்கள். "என்னை சுற்றி இருப்பவர்களிடம் என் புத்திசாலித்தனத்தை நிருபித்துக் கொண்டே இருக்கணும், ஆனால் மக்களுக்கு நான் புத்திசாலி என்று தெரியக்கூடாது". என்று டி. வி. தொகுப்பாளினியிடம் சொல்வது போன்றவை உதாரணங்கள்.

ஜி.எம்.ஆருக்கும் சக்திக்கும் நிலவிய உறவு எப்படிப்பட்டது என்பதை சக்தியின் தாய்,"ஏன் கல்யாணம் கல்யாணம்னு அலையற? அதுதான் கல்யாணம் ஆகாமலே எல்லா கண்ராவியும் கிடைக்கிறதே? கழுத்தில் கால் பவுன் தங்கம் இல்லை.." என்று வெகு சுலபமாக சொல்லி விடுகிறாள். இதை திரைப்படமாக எடுத்திருந்தால் இது சாத்தியமாகியிருக்காது. எதையும் மறைக்கவில்லை, எதையும் போட்டு உடைக்கவுமில்லை. சொல்ல வேண்டியதை நாசூக்காக சொல்லி இருக்கிறார். படிப்பதை தவிர வேறு எதுவும் தெரியாத, வெளி உலகம் புரியாத, அப்பாவி பெண், ஆணவமும், பிடிவாதமும் கொண்டவளாக எப்படி, ஏன் மாறினாள்? என்பதை பார்க்கும் பொழுது நெஞ்சம் கனக்கிறது. பாராட்டப்படவேண்டிய நல்ல முயற்சி! ஒரு அசந்தர்பமான சூழலில் மக்கள் தலைவியாக உருவெடுக்கும் அவள், இது ஆரம்பம்தான் என்று கூறுவதோடு சீசன் 1 முடிகிறது. அடுத்த சீசனுக்கு காத்திருக்கிறோம்.








16 comments:

  1. விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இங்கே இவங்க (பிள்ளை, மாட்டுப்பெண்) பார்த்ததாகத் தெரியவில்லை. பார்ப்போம், இங்கே இருந்து கிளம்பும் முன்னர் பார்க்க முடியுதானு! நீங்க எதிலே பார்த்தீங்க?

    ReplyDelete
  2. முதல்லே "குயின்" வெப் சீரிஸ் எனப் பார்த்ததும் இப்போதைய இங்கிலாந்து ராணியை வைத்து சீரியல் எடுத்து நெட்ஃப்ளிக்ஸில் போடுகிறார்கள். அதுவோனு நினைச்சுட்டேன். அதிலே ஒரு நாலைந்து பெண் வீட்டில் இருக்கையில் பார்த்தேன்.

    ReplyDelete
  3. பார்க்கத் தொடங்கியிருக்கிறேன்.  நான்கு முடித்திருக்கிறேன்.  சில கேள்விகள் உண்டு.   அப்படியா என்கிற சில ஆச்சர்யங்களுண்டு.  ஆனால் சிறந்த முறையில் எடுத்திருக்கிறார்கள். 

    ReplyDelete
    Replies
    1. பயோ பிக் எடுப்பதில் சில லிமிடேஷன்கள் உண்டு. ஆனாலும் ஒரு முக்கியமான நபரை ஏன் விட்டு விட்டார்கள் என்று தோன்றியது. 

      Delete
  4. வலையில் கிடைக்கிறது. பாருங்கள். 

    ReplyDelete
  5. நானும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
    படிக்க நிறைய ஆசை உள்ள அவர் படிக்க முடியாமல் போன ஏமாற்றத்தில் அவர் அழும் போது மனது கலங்கி போகிறது.

    நன்றாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அந்த பெண்ணும் நன்றாக நடித்திருக்கிறார். வருகைக்கு நன்றி.

      Delete
  6. ம்ம்... எப்படியோ மக்களிடம் கொள்ளையடித்து சம்பாதித்து ஒதுக்கியதை மறந்து விட்டு தியாகியைப் போல் சித்தரித்து இவர்கள் கல்லாக் கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

    ஏமாளிகள் நாட்டில் கோமாளிகளே மன்னர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி. சுற்றிலும் சுயநலமிகளால் சூழப்பட்டு,தான் விரும்பிய வாழ்க்கையை வாழ முடியாத, சூழ்நிலைக் கைதியான ஒரு பெண்ணைப் பற்றிய கதை இது. "என் வாழ்க்கை என் கண்ட்ரோலில் இல்லை, முதலில் என் அம்மாவின் கண்ட்ரோலில் இருந்தது,பிறகு அவர்(ஜி.எம்.ஆர்.) கண்ட்ரோலில் இருந்தது" என்று அவர் கூறுவதாக ஒரு வசனம் படத்தில் வரும். இனிமையான வாழ்க்கைக்காகவும், உறவுக்காகவும் ஏங்கிய பெண்ணுக்கு இறுதி வரை அது கிடைக்கவே இல்லை என்பதை எந்த மிகைப்படுத்துதலும் இல்லாமல் காட்டியிருக்கிறார்கள். எதையும் மறைக்கவோ,நியாயப்படுத்தவோ இல்லை என்பது கூடுதல் சிறப்பு. கருத்துக்கு நன்றி.

      Delete
  7. வணக்கம் சகோதரி

    தங்கள் விமர்சனம் மிகவும் நன்றாக உள்ளது. விளம்பரம் பார்த்திருக்கிறேன். இனிதான் மற்றவை பார்க்க வேண்டும். தங்கள் விமர்சனம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. நன்றி கமலா. என்னுடைய மார்கழி நினைவுகளை நீங்கள் பார்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      ஆமாம் சகோதரி.. வர வேண்டுமென நினைத்துக் கொண்டேயிருந்தேன். கொஞ்சம் வேலைகளினால் வர இயலவில்லை. மன்னிக்கவும். ஆனால், இப்போதுதான் உங்கள் மார்கழி நினைவுகளின் சுகானுபவத்தில் நானும் கலந்து படித்து ரசித்து திளைத்து விட்டு வருகிறேன்.. கருத்துகளும் அங்கு தந்துள்ளேன். மிக அழகாக நினைவுகளை பகிர்ந்திருக்கிறீர்கள்.
      ஆனந்தமான அந்த தெய்வீக பகிர்வுக்கு மிக்க நன்றி.

      என் தளத்தில் இன்றொரு சமையல் பதிவு. தங்களுக்கு நேரம் கிடைக்கும் சமயம் வந்து படித்து கருத்திடுங்கள். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. //என் தளத்தில் இன்றொரு சமையல் பதிவு. தங்களுக்கு நேரம் கிடைக்கும் சமயம் வந்து படித்து கருத்திடுங்கள்.//Sure! Thank you.

    ReplyDelete