கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, December 19, 2018

சொமாட்டோ ஊழியர் உணர்த்தும் உளவியல் உண்மைகள்


சொமாட்டோ ஊழியர் உணர்த்தும் உளவியல் உண்மைகள்

மதுரையில் சொமாட்டோ ஊழியர் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் சென்ற உணவை  சாப்பிட்ட வீடியோ, வைரலாகி, அதைப்  பற்றி நெட்டிசன்கள் பேசி தீர்த்து விட்டார்கள்.  இது தவறு  என்று பலரும், அந்த ஊழியர் பசியோடு இருந்ததால்தான் இப்படி செய்திருக்கிறார், அதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று சிலரும் எழுதியிருக்கிறார்கள். 

நான் மஸ்கட்டில் இருந்தபொழுது ஒரு வீட்டில் நான்கு வருடங்கள் வேலையாளாக இருந்த ஒருவன் தன் எஜமானன், மற்றும் எஜமானி அம்மாவை கொலை செய்து விட்டான். இத்தனைக்கும் அவர்கள் ஒரு வேலைக்காரனை போல் அவனை நடத்தமாட்டார்களாம்.   நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்த பொழுது  இதைப்பற்றி பேச்சு வந்தது. நான்," இதற்கு காரணம், வறுமைதான்" என்றதும், அந்த நண்பர், " தப்பாக யோசிக்கிறீர்களே?" என்றார். நான் புரியாமல் விழிக்க,அவர் விளக்கினார்."வறுமைதான் காரணம் என்றால் அவன் அவர்கள் வீட்டிற்குள் வந்தவுடனே கொன்றிருக்க வேண்டும். அவன் வறுமையில் இருக்கும்பொழுது அவனுடைய பசியை போக்கிக்கொள்ள அவனுக்கு ஒரு பிடிப்பு தேவை. அது கிடைத்து, அங்கேயே தங்க ஆரம்பித்த பிறகு, ஒப்பிடத் தொடங்குகிறான். அதில்தான் பிரச்சனை தொடங்குகிறது. நம்மை விட இவர்கள் எந்த விதத்தில் ஒசத்தி? ஏன் அவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் நமக்கு கிடைப்பதில்லைஎன்று எண்ணத் தொடங்குகிறான். அப்போது சின்னச்சின்ன கோபங்கள், அலட்சியங்கள் கூட  அவனை எரிச்சலடைய வைக்கிறது. அதன் விளைவுதான் இதைப்போன்ற நடவடிக்கைகள்" என்றார்.

என்னுடைய பட்டப்படிப்பில் ஆங்கிலத்தில் ஒரு பாடம். லிஃப்ட் ஆபரேட்டராக இருக்கும் ஒருவன் லிஃப்டில் ஏறிய ஒரு ஆசாமி, அவனிடம்,"லிஃப்ட் ப்ளீஸ்" என்பதற்கு பதிலாக, "லிஃப்ட்" என்று கூறியதற்காக அவனை அரைந்து விட்டான் என்னும் செய்தியை செய்திதாளில் படித்த ஒருவர் எழுதிய கட்டுரை எனக்கு எனக்கு பாடமாக வந்திருந்தது. அந்த கட்டுரையாசிரியர்  பெயர் மறந்து விட்டது, ஆனால் விஷயம் மறக்கவில்லை.

அதில் அவர்,"ஒரு லிஃப்ட் ஆபரேட்டர் என்பவன் வாழ்க்கையில் கடை நிலையில் இருப்பவன். ஒரு வேளை அன்று அவன் மனைவியோடு சண்டை போட்டுவிட்டு வந்திருக்கலாம், தெருவில் சென்று கொண்டிருந்த நாய் ஒன்றை ஒரு சிறுவன் கல்லால் அடித்து விட, அது அவன் மனைவியை கடித்திருக்கலாம்,அவள் அந்த கோபத்தை இவன் மீது காட்டியிருக்கலாம், அந்த எரிச்சலில் அவன் தன்னை மரியாதை குறைவாக பேசிய பயனாளியை அறைந்திருக்கலாம். எப்படி ஒரு நல்ல வார்த்தையோ, செயலோ ஒரு தொடர் நல்ல வார்த்தைகளையோ, செயல்களையோ உருவாக்குமோ அதே போல ஒரு மோசமான வார்த்தையோ, செயலோ தொடர் மோசமான வார்த்தைகளையோ, செயல்களையோ உருவாக்கும் என்று முடித்திருப்பார்.

அதைப்போல வாழ்வின் கடை நிலையில் இருக்கும் சொமாட்டோ டெலிவரி ஆளின் எந்த பிரச்சனை அவரை இப்படி நடந்து கொள்ள வைத்ததோ? என்று தோன்றுகிறது.லட்சக்கணக்கில் லாபம் பார்க்கும் இத்தகைய நிறுவனங்கள் இப்படிப்பட்ட டெலிவரி ஆட்களுக்கு ஒரு சாப்பாடு கொடுப்பதில் குறைந்து போய் விடுமா? இலவசமாக கொடுக்காவிட்டாலும் சலுகை விலையில் தரலாமே. டெலிவரிக்கு செல்லும் ஆட்கள் பட்டினியாக கிடக்கக் கூடாது என்பதை கடைபிடித்திருக்கலாம்.  அல்லது அவருடைய மேலதிகாரி அவரிடம் கருணையில்லாமல் நடந்து கொண்டிருக்கலாம். "எங்கிட்டயா மோதற? வெக்கறேன் பாரு ஆப்பு.." அவர் வேண்டுமென்றே தான் சாப்பிடுவதை யாரையாவது விட்டு வீடியோ எடுக்க சொல்லியிருக்கலாம். திருட்டு வீடியோ போல இல்லாமல் தெளிவான படப்பிடிப்பு.

எங்கள் மாமா அவருடைய தாத்தாவைப்பற்றி(அதாவது என் கொள்ளு தாத்தா) அடிக்கடி ஒரு விஷயம் சொல்லுவார்.

எங்கள் வீட்டு வைக்கோல் போரில் பக்கத்து வீட்டு மாடு மேய்ந்தால், அதை நயமாக உரியவரிடம் சொல்ல வேண்டுமே தவிர, அந்த மாட்டை அடித்து விரட்டக்கூடாது என்பாராம். ஒரு மாடு ஒரு கையளவு வைக்கோலை சாப்பிடுமா?  அதற்காக அந்த மாட்டை அடிப்பது, அல்லது உரியவர்களோடு சண்டை போடுவது  போன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த கோபத்தில் அவர் ஒரு நெருப்பு குச்சியை கிழித்து வைக்கோல் போர் அடியில் வைத்து விட்டால் முடிந்தது கதை. அவனுக்கு செலவு ஒரு நெருப்பு குச்சிதான், நமக்கு ஒரு வைக்கோல் போர் காலியாகி விடும்" என்பாராம்.

அதேபோல வீட்டில் விசேஷ சமயங்களில் சமைப்பதற்கு அழைத்திருக்கும் பரிசாகரை பல பேர் முன்னிலையில் அவமானப் படுத்தக்கூடாது என்பாராம். " ஐநூறு பேர்களை சாப்பிடக்கூப்பிட்டு, அண்டா நிறைய பால் பாயசம் செய்ய சொல்லியிருப்போம், சமையல்காரனை திட்டி, அவன் கோபத்தில் கொஞ்சம் உப்பை எடுத்து பால் பாயசத்தில் போட்டு விட்டால், அண்டா பாயசமும் வீணாகிவிடாதா?" என்பாராம்.

பள்ளிப்படிப்பை தாண்டாத அவருடைய உளவியல் அறிவு என்னை வியக்க வைக்கும்.

அடிமட்டத்தில் இருக்கும் மக்களை வேலை வாங்க அதிகாரம் மட்டும் போதாது, உளவியல் ஞானமும், கருணையும் கூட வேண்டும்.

22 comments:

  1. நல்ல பகிர்வு. உங்கள் எண்ணங்களை பகிர்ந்தது சிறப்பு. என்ன நடந்தது என்பதை அவரே அறிவார்.

    ReplyDelete
  2. >>> அடிமட்டத்தில் இருக்கும் மக்களை வேலை வாங்க அதிகாரம் மட்டும் போதாது, உளவியல் ஞானமும், கருணையும் கூட வேண்டும்... <<<

    இதையெல்லாம் உணர்ந்து கொள்ளும் தன்மையுடையவர்களிடம் தான் காட்டவேண்டும்!...

    அஃதில்லாரிடம் கருணையையும் கனிவையும் காட்டினால் - அது வீண்!..

    இங்கே எனக்குக் கீழ் வேலைசெய்பவர்களிடம் கனிவையும் கருணையும் காட்டினேன்..
    விளைவு விபரீதமாகிப் போனது... என்னை அவமதித்தார்கள்...
    சரியில்லாதவன் என்று வேலைத் தளத்திலிருந்து அகற்றி விட்டார்கள்!...

    ஆனாலும், என்னுள் இருக்கும் கனிவும் கருணையும் என்னை வாழ வைக்கும் என்றிருக்கிறேன்...

    இப்போது இரவு 9:52.. பொழுது விடியட்டும் ..

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும், என்னுள் இருக்கும் கனிவும் கருணையும் என்னை வாழ வைக்கும் என்றிருக்கிறேன்.//

      அண்ணா கண்டிப்பாக வாழ வைக்கும்! அதில் கொஞ்சம் கூட ஐயம் இல்லை. எனக்கு அதில் நம்பிக்கை நிறைய உண்டு அண்ணா...டிட் ஃபார் டாட் என்று நாம் இருந்தால், இருந்திருந்தால் இந்த உலகம் கண்டிப்பாக இயங்காது, இயங்கியிருந்திருக்காது..உலகமே..யுத்தகளமாகத்தான் இருந்திருக்கும்...

      கீதா

      Delete
    2. சரியில்லாதவன் என்று வேலைத் தளத்திலிருந்து அகற்றி விட்டார்கள்!...//

      பாத்தீங்களா அவன் வினை அவனுக்கு விளைந்தது!

      இதைப் பத்தி உங்க தள்த்துல எழுதியிருந்ததும் நினைவுக்கு வந்தது..

      கீதா

      Delete
    3. சில சமயங்களில் தகுதி இல்லாதவர்களுக்கு காட்டப்படும் கருணை நம்மை முட்டாளாக்கிவிடும். ஆனாலும் கவலைப்படாதீர்கள் நிச்சயம் உங்களுக்குள் இருக்கும் கணிவும், கருணையும் உங்களை கை விடாது.

      Delete
    4. மஸ்கட்டில் நான் தவறாக யோசிப்பதாக கூறிய நண்பர் வயதில் மூத்தவர். என்ஜினியரான அவர் இந்தியாவில் ஒரு பெரிய நிறுவனத்தில் மேலதிகாரியாக பணியாற்றியவர். அவர் கூறிய சில விஷயங்களை நான் எழுதவில்லை."இவங்களையெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது. நான் யூனியனில் இருந்த பொழுது கவன்சிலிங்குகெல்லாம் ஏற்பாடு செய்வேன். ஆனால் வெளியில் வந்து அவர்கள் பழையபடியேதான் நடந்து கொள்வார்கள்." என்றார். இதை குடி பிறப்பு என்றால் பலருக்கு கோபம் வரும்.

      Delete
  3. பானுக்கா நல்ல பதிவு.

    // செயலோ ஒரு தொடர் நல்ல வார்த்தைகளையோ, செயல்களையோ உருவாக்குமோ அதே போல ஒரு மோசமான வார்த்தையோ, செயலோ தொடர் மோசமான வார்த்தைகளையோ, செயல்களையோ உருவாக்கும் என்று முடித்திருப்பார்.//

    சொல்முகூர்த்தம், வெ வா, கொ வா ஸ்ரீராமின் பதிவின் வார்த்தைகளுக்கு ஒர் உதாரணம்.

    பானுக்கா அமெரிக்கா எஃப்பிஐ அங்கு சிறைக்கைதிகளை உளவியல் ரீதியாக அணுகுவதை ஒரு தொடர் சீரியலாக எடுத்திருக்கிறார்கள். மகன் அதைப் பற்றி நிறைய சொல்லியிருக்கான்...அதைப் பார்க்கணும் என்று நினைப்பதுண்டு.

    ஆனால் மனம் என்பது ஒரு விசித்திரமான ஒன்று. மூளையில் நடக்கும் வேதியியல் யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று அதனால்தான் யாரையுமே நம்மால் முழுவதும் புரிந்து கொள்ள முடியலை என்று சொல்லுவது...இந்த வேதியியல் செய்யும் மாய்மாலங்கள் எத்தனையோ!!!

    இருங்க முழுவதும் படிச்சுட்டு வரேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //சொல்முகூர்த்தம், வெ வா, கொ வா ஸ்ரீராமின் பதிவின் வார்த்தைகளுக்கு ஒர் உதாரணம்//
      நானும் இதைத்தான் நினைத்துக் கொண்டேன்.

      Delete
  4. "எங்கிட்டயா மோதற? வெக்கறேன் பாரு ஆப்பு.." அவர் வேண்டுமென்றே தான் சாப்பிடுவதை யாரையாவது விட்டு வீடியோ எடுக்க சொல்லியிருக்கலாம். திருட்டு வீடியோ போல இல்லாமல் தெளிவான படப்பிடிப்பு.//

    நான் நேற்றுத்தான் அந்தக் காணொளியையே பார்த்தேன். அப்போது எனக்குத் தோன்றியது இதுதான்...

    உங்கள் தாத்தாவின் எண்ணமும் அருமை...அக்கா நான் அடிக்கடி சொல்லுவது எதற்கும் ஒரு அமிக்கபிள் சொல்யூஷன் உண்டு என்று. எத்தவுடன் கவிழ்பது, தடாம் புடாம் என்று கோபப்படுவது என்பது என்னதான் நம் பக்கம் நியாயம் இருந்தாலும் அதன் விளைவுகள் எதிர்வினையாக முடிந்ததையே முடிவதையே பார்த்தும் இருக்கேன், பார்த்தும் வருகிறேன்...

    நயம்பட உரைத்தல்" நினைவுக்கு வருகிறது.

    //அடிமட்டத்தில் இருக்கும் மக்களை வேலை வாங்க அதிகாரம் மட்டும் போதாது, உளவியல் ஞானமும், கருணையும் கூட வேண்டும்.//

    இது உண்மைதான் என்றாலும் துரை அண்ணா சொல்லியிருப்பதையும் எடுத்துக் கொள்ளலாம். அண்ணாவே சொல்லியிருப்பது போல் கனிவும் கருணையும் கண்டிப்பாக வாழ வைக்கும்...

    இல்லையேல் இவ்வுலகம் நாறிப்போகும்....ஏற்கனவே இந்த டிட் ஃபார் தட் மற்றும் வக்கிர புத்திதான் சீரழிக்கிறது.

    கீதா

    ReplyDelete
  5. பெண்களை பாலியல் துன்பம் செய்யும் கிறுக்கன்களை என்ன செய்வது?

    வழி உள்ளது அவர்களைப் பிடிக்கும் போது கோர்ட்டுக்குப் போவது, ஜாமீனில் வெளிவிடுவது என்றெல்லாம் இல்லாமல் சிறையில் போட்டு அவர்களை உளவியல் ரீதியாக நல்வழிப்படுத்தல் என்று செய்யலாம்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நீங்களே சொல்லி விட்டீர்களே கிறுக்கர்கள் என்று... என்ன பண்ண முடியும்? தண்டனைகளை கடுமையாக்கலாம்.

      Delete
  6. அக்கா என்னதான் நாம் பேசினாலும் இந்த ஜோமாட்டோ விஷயம் கண்டிப்பாக வெளியில் உண்ணும் பழக்கத்தை யோசிக்க வைக்கும்...ஆராய வைக்கும்...என்று தோன்றுகிறது..அதுவும் ஒரு உளவியல்தான் ஹா ஹா ஹா.

    கீதா

    ReplyDelete
  7. வீடியோ மேலிருந்து எடுக்கப் பட்டிருக்கிறது. எதிர்பாராமல் இப்படி ஒரு காட்சியைக் கண்டா ஒருவர் இந்த விடியோவை எடுத்திருக்கக் கூடும். அல்லது குறிப்பிட்ட இடத்தில் அவ்வப்போது நிகழ்வதாக இருக்கக் கூடும். ஏனெனில் மனித மனம் சில இடங்களுக்கு பழக்கமாகி விடும். சுற்று வட்டாரம் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணி இருக்கக் கூடும். மேலே பார்த்திருக்க மாட்டார். இதே போல கேஸ் திருடும் காணொளி ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. இது பொய்க்காணொளி என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அப்போ ஸ்ரீராம் உண்மையாத்தான் இருக்கும்னு சொல்றீங்களா...ம்ம்ம்ம் எப்படியோ கண்டிப்பா மக்கள் மனதில் ஒரு எதிர்வினையைக் கிளப்பிருக்கும்..யோசிக்க வைக்கும் வாங்கலாமா வேண்டாமான்னு...

      கீதா

      Delete
    2. இருக்கலாம் ஶ்ரீராம்.

      Delete
  8. உங்கள் அலசல் நன்றாய் இருக்கிறது. விதம் விதமான உணவுகளை விநியோகிக்கும் பொறுப்பில் இருக்கும் அவருக்கு அந்த ஆவல் ஏற்பட்டிருக்கலாம். இப்போது நானே வீட்டில் சிலசமயம் உணவு இருந்தாலும் கூட வித்தியாசமான உணவை நாடிதானே இங்கெல்லாம் ஆர்டர் கொடுத்திருக்கிறேன்? சரி, அந்நிறுவனம் ஊழியர்களுக்கு ஒருவேளையோ, இருவேளையோ நீங்கள் விரும்பும் இடத்தில இலவசமாக (ஒரு குறிப்பிட்ட தொகைக்குள்) சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றெல்லாம் வரையறை வைத்தோ வைக்காமலோ வசதி செய்து கொடுத்தால் இந்தப் பிரச்னை நின்று விடும் என்று நினைக்கிறீர்களா? மனிதமனம் பெரிதினும் பெரிது கேட்கும் பழக்கம் உடையது! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தே வழக்கம். இதுவும் உங்கள் பதிவைப் பார்த்து எழுந்த சிந்தனைதான்.

    ReplyDelete
    Replies
    1. The most complicated animal is human என்பார்கள்.

      Delete
  9. //இதையெல்லாம் உணர்ந்து கொள்ளும் தன்மையுடையவர்களிடம் தான் காட்டவேண்டும்!...

    அஃதில்லாரிடம் கருணையையும் கனிவையும் காட்டினால் - அது வீண்!..// உண்மை. என் அனுபவத்திலும் தகுதி இல்லாதோர்க்கு உதவிகள் செய்துட்டு அவமானம் தான் கிடைத்தது. நாம் செய்த உதவியையே கேலியாகப் பேசும் அளவுக்குப் போனது! இத்தனைக்கும் கஷ்டத்தில் இருந்தவர்கள்! ::(

    ReplyDelete
  10. இப்போதெல்லாம் எல்லாத்திருட்டுக்களையும் நியாயப்படுத்திப் பேசி உளவியல் ரீதியாக மன்னிப்புக் கொடுக்க வேண்டும் என்று பலரும் சொல்கின்றனர். என்னால் இதை நியாயப்படுத்த முடியவில்லை. அக்கம்பக்கம் பார்க்காமல் உணவை எடுத்துச் சாப்பிடுவதிலேயே அவர் கவனமாக இருந்ததால் வீடியோ அவருக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டிருக்கலாம்! அந்தக் கம்பெனியே தங்கள் விளம்பரத்துக்காக இப்படி ஒன்றை வெளியிட்டதாகவும் சொல்கின்றனர். என்னதான் விளம்பரம் என்றாலும் தங்களுக்குத் தாங்களே குழி பறித்துக் கொள்வார்களா என்ன? ஆச்சரியமா இருக்கு!

    ReplyDelete
  11. நான் அந்த ஊழியர் செய்ததை நியாயப்படுத்தவில்லை. அதிலிருந்து உளவியல் சிக்கல்களை மட்டுமே எடுத்துக் கூறினேன்.

    ReplyDelete
  12. அதே நிறுவனம் செய்திருக்காது. போட்டி நிறுவனம் செய்திருக்கலாம்.

    ReplyDelete