கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, June 9, 2025

உடாய் ஷான் புத்தியிஸ்ட் கார்டன்(Wutai Shan Buddhist Garden)

உடாய் ஷான் புத்தியிஸ்ட் கார்டன்(Wutai Shan Buddhist Garden)


மைத்ரேய புத்தா:

என் மகள் வீட்டிலிருந்து அரைமணி நேர டிரைவ் தொலைவில் ஒரு புத்தர் கோயில் புதிதாக வந்திருக்கிறது, அங்கு செல்லலாம் என்று என் மகளின் குடும்ப நண்பர் கூறினார். சென்ற மாதம் வந்த லாங் வீக் எண்டில் போக நினைத்தோம். ஆனால் மழை எங்கள் திட்டத்தை நிறைவேற்ற விடவில்லை.  சென்ற வாரம் சனியன்று அங்கு போக திட்டமிட்டோம். மழை இல்லை, ஆனால் மேக மூட்டம் மற்றும் காற்று.. நல்ல குளிர்.

நுழை வாயில்

நாம் புத்தர் கோவில் என்று சொன்னாலும், அதை Wutai Shan Buddhist garden  என்கிறார்கள். 350 ஏக்கரில் விரிந்து பரந்திருக்கும் இந்த இடத்தை North Platform Manjusri Bodhisattva, West Platform Manjusri Bodhisattva, Central Platform Manjusri Bodhisttva, South Platform Manjusri Bodhisttva, East Platform Manjusri Bodhisttva ஐந்து பகுதிகளாக பிரித்திருக்கிறார்கள்.   

நுழைவு வாயிலின் இரு புறங்களிலும் பக்கத்திற்கு 14 என்று மொத்தம் 28 தூண்கள் அல்லது ஸ்தூபங்கள் உள்ளன. அவற்றை wish fulfilling stoopas என்கிறார்கள். அங்கிருந்து வலது பக்கத்தில் கார் பார்கிங்க்.  வண்டிகளை நிறுத்தி விட்டு, முதலில் பிருமாண்டமான ஹாப்பி புத்தாவை( laughing Buddha)  தரிசிக்கச் சென்றோம். அவரை மைத்ரேய புத்தா என்கிறார்கள்.

பதிமூன்று அடி உயரத்தில், 700 டன் எடையுள்ள (தலை மட்டுமே 27 டன்னாம்) ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த மைத்ரேய புத்தா சிலைதான் வட அமெரிக்காவிலேயே மிகப்பெரிய சிலையாம். இது இங்கு நிறுவப்பட்டதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு.

கனடா புத்த விஹார தலவரான டாய் ஷி(Dayi Shi) 2009 ஆம் ஆண்டின் கோடையில் ஒரு நாள் அப்பொழுது உருவாகிக் கொண்டிருந்த உடாய் ஷான் தோட்டத்தை பார்வையிட்டுவிட்டு, அவர் இருந்த சாம் ஷான் புத்தர் கோவிலுக்கு திரும்பியவுடன் அசதியில் உறங்கி விட்டார். உறக்கத்தில் ஒரு கனவு. "எத்தனையோ போதிசத்துவர்கள் இருக்க, நாலு போதிசத்துவர்களுக்கு மட்டும்தான் கோவிலில் இடமா? மைத்ரேய போதிசத்துவர் என்ன ஆனார்?" என்று குரல் கேட்டது, அதோடு மைத்ரேய புத்தரின் உருவ சிலையும் தெரிந்தது. விழித்துக் கொண்டு விட்டார். உடனே மைத்ரேய போதிசத்துவரின் சிலையை உடாய் ஷான் தோட்டத்தில் நிறுவ முடிவு செய்தார். 

அந்த தோட்டத்தின் விஸ்தீரணத்திற்கு ஏற்ப பிருமாண்ட சிலையை நிறுவினால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்.  ஆனால் அதில் இரண்டு பிரச்சனைகள் இருந்தன. ஒன்று அவர் விரும்பியபடி சிலை அமைக்கத் தேவையான நிதி, இரண்டாவது அந்த சிலையின் உருவ அமைப்பு. அவர் முடிவு செய்த இரண்டாவது நாளே ஹாங்காங்கிலிருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்த ஷெங்க் என்னும் பக்தர் சிலைக்கான செலவை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

அடுத்ததாக சிலையின் உருவ அமைப்பு குறித்து அவருடைய தேடல் துவங்கியது. அவர் பார்த்த எந்த சிலையும் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. அப்போது சைனாவிலிருந்து வந்த ஒருவர் தன்னிடம் மைத்ரேய புத்தரின் வெண்கல சிலை ஒன்று இருப்பதாகவும் அதை டாய் வந்து பார்க்கலாம் என்றும் கூறினார். சைனா சென்று பார்த்த டாய் அவர்களுக்கு ஆச்சர்யம். ஏனென்றால் அவருடைய கனவில் வந்த ஒருவத்தை அப்படியே ஒத்திருந்தது அந்த சிலை.  அந்த சிலையை அடிப்படையாகக் கொண்டே உடாய் ஷான் தோட்டத்து சிலை வடிக்கப்பட்டது.

மைத்ரேய புத்தரின் அமைப்பை பார்க்கலாம்: அவருடைய தோள்வரை தொங்கும் நீண்ட காது அளப்பறிய ஆசிர்வாதத்தை குறிக்கிறது, அவருடைய பருத்த தொந்தி வளமையையும், கருணையையும் குறிகிறது. வலது முழங்காலை தொட்டுக் கொண்டிருக்கும் வலது கையில் ஜப மாலையும், இடது கையில் ஒரு மூட்டை நிறைய ஆசிகளையும் வைத்திருக்கிறார். அவர் அமர்ந்திருக்கும் அறுகோண ஆசனம் போதிசத்துவராக மாற கைகொள்ள வேண்டிய ஆறு பயிற்ச்சிகளை குறிக்கிறாதாம். அறுகோணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் முக்தியடைந்த புத்தமதம் புகட்டும் நெறிகளை கடைபிடித்து முக்தி அடைந்த ஐநூறு மகாங்களின் உருவங்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. 

மைத்ரேய புத்தருக்கு எதிரே தரையில் மூன்று பெரிய சதுரக் கற்கள் சற்றே சாய்ந்த வாக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது. 'இதன் மீது கால் வைக்காதீர்கள்' என்ற அறிவிப்பு. அதில் முழங்கால் படிய அமர்ந்து பிரார்த்த்னை செய்ய வேண்டுமாம். அங்கிருக்கும் ஒரு கடையில் பிரார்த்தனை பொருள்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதி முக்கியமானது விஷ்ஷிங்க் கார்ட்ஸ் என்பவை. 

Wishing cards

கட்டப்பட்டிருக்கும் கோரிக்கை அட்டைகள்

இந்த விஷ்ஷிங் கார்ட்ஸில்(wishing cards) நம்முடைய கோரிக்கைகளை எழுதி, அதை மைத்ரேய புத்தருக்கு முன் இருக்கும் சதுர கல்லில் வைத்து பிரார்த்தித்து, பின்னர் மைத்ரேய புத்தரை மூன்று முறை வலம் வந்து அங்கு சுற்றியிருக்கும் கம்பியில் கட்டி விட வேண்டும். அந்த கோவிலின் பூஜாரி ஒரு மாதத்திற்கு நமக்காக பிரார்த்தனை செய்து கொள்வாராம். நம்முடைய வேண்டுதல்கள் நிச்சயமாக நிறைவேறுமாம். 

உமாமகேஸ்வரி மேடம் படிப்பார்கள்



சிரிக்கும் புத்தருக்கு முன் சிரிக்காத நான் குளிர்  - சிரிக்க முடியவில்லை


- தொடரும் 




   

8 comments:

  1. படங்கள் நல்லாருக்கு, பானுக்கா. அது போல விவரங்களும்.

    கிட்டத்தட்ட எல்லா மதங்களிலும் ஒரே போன்ற நம்பிக்கைகள்தான் போல. சின்ன சின்ன வித்தியாசங்களுடன்.

    இப்படி வேண்டிக் கொண்டு சீட்டு கட்டுதல், பிரார்த்தனைகள் உண்டே இங்கும் இல்லையா?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா.//இப்படி வேண்டிக் கொண்டு சீட்டு கட்டுதல், பிரார்த்தனைகள் உண்டே இங்கும் இல்லையா?//
      ஆமாம்.

      Delete
  2. மைத்ரேய புத்தாவுக்கு போட்டியாக உங்களுடைய வயிறும் பெரிதாக இருக்கிறது. கொஞ்சம் குறையுங்கள்.

    திறந்தவெளிக்கோயில் ஆகையால் கோயில் என்று சொல்லாமல் கார்டன் என்று சொல்லிவிட்டார்கள் போலும். இதை பார்க்கும்போது "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படத்தில் பாடல் காட்சி இடம் பெறும் சிங்கப்பூர் டைகர் பாம் கார்டன் நினைவில் வந்தது. அங்கும் laughing budha உண்டு.

    Jayakumar

    ReplyDelete
  3. //மைத்ரேய புத்தாவுக்கு போட்டியாக உங்களுடைய வயிறும் பெரிதாக இருக்கிறது. கொஞ்சம் குறையுங்கள்.// என் வயிறு சற்று பெரியதுதான். நிற்கும் பொழுது வயிற்றி முன் பக்கம் தள்ளிக் கொண்டு நிற்பதும், கைகளை பாக்கெட்டில் அதை வயிற்றோடு ஒட்டிக் வைத்துக் கொண்டிருந்ததாலும் இன்னும் சற்று பெரியதாக தெரிந்திருக்கிறது. வயிற்றை குறைப்பது சற்று கடினமாகத்தான் இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  4. விவரங்கள் சுவாரஸ்யம். சில பிரார்த்தனைகள் எல்லா இடங்களிலும் பொது போல...

    ReplyDelete
    Replies
    1. Bhanumathy VenkateswaranJune 21, 2025 at 8:52 AM

      ஆம், புத்த மதம் இந்தியாவில் பிறந்ததுதானே? ஒருவேளை அதனால் நம்மைப் போன்ற பிரார்த்தனை முறைகள் அவர்களுக்கும் இருக்கிறதோ என்னவோ?

      Delete
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. புத்தர் கோவிலில் எடுக்கப்பட்ட படங்களும் நன்றாக உள்ளது. கோவிலைப் பற்றிய விபரங்களையும் நல்ல தெளிவாக கூறியுள்ளீர்கள். மைத்ரேய புத்தா மிகவும் அழகாக உள்ளார். அவரின் பிரமாண்ட வடிவம், வியப்பைத் தருகிறது.

    /அவர் அமர்ந்திருக்கும் அறுகோண ஆசனம் போதிசத்துவராக மாற கைகொள்ள வேண்டிய ஆறு பயிற்ச்சிகளை குறிக்கிறாதாம். அறுகோணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் முக்தியடைந்த புத்தமதம் புகட்டும் நெறிகளை கடைபிடித்து முக்தி அடைந்த ஐநூறு மகாங்களின் உருவங்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. /

    நல்ல தகவல்கள். புத்தரை நானும் தரிசித்துக் கொண்டேன். அங்கு பின்பற்றப்படும் பிரார்த்தனைகளை இங்கும் நம்மூர் கோவில்களிலும் பின்பற்றுகிறார்கள் இல்லையா? அனைத்திற்கும் நம் மனதின் நம்பிக்கைத் தரும் சந்தோஷந்தான் காரணம். அந்த மனதின் சந்தோஷத்தின் போது நம்முடலும் சுறுசுறுப்படைகிறது.
    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    ReplyDelete
    Replies
    1. Bhanumathy VenkateswaranJune 14, 2025 at 3:30 AM

      வாங்க கமலா, நம்மைப் போலவே அவர்களும் வேண்டிக்கொண்டு சீட்டு கட்டுவது ஆச்ர்யமாகத்தன் இருந்தது. நம்மைப் போலவே காணிக்கைகளை உண்டியலில் போடுகிறார்கள். பழங்கள் சமர்ப்பிக்கிறார்கள். பூக்களை தனியாக சமர்ப்பிக்காமல் பூங்கொத்தாக வைக்கிறார்கள். விவரமான பின்னூட்டத்திற்கு நன்றி.

      Delete