கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, January 26, 2026

ஆபீஸ் பையனின் அந்தரங்க ரிப்போர்ட்(புத்தக விமர்சனம்)

ஆபீஸ் பையனின் அந்தரங்க ரிப்போர்ட்
(புத்தக விமர்சனம்)


குமுதத்தில் உதவி ஆசிரியர்களுள் ஒருவராக இருந்த, பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் பிரபலமான ஜ.ரா.சுந்தரேசன் அவர்கள் சாவியில் 1998ல் எழுதிய கட்டுரைத் தொடர் ஆபீஸ் பையனின் அந்தரங்க ரிப்போர்ட். 

ஒரு பத்திரிகை காரியாலயத்தில் நடக்கும் நிகழ்வுகளை சுவையாகவும், தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடும் எழுதியிருக்கிறார் பாக்கியம் ராமசாமி அவர்கள். நகைச்சுவைக்கு உதாரணமாக கீழ்கண்ட இரண்டு விஷயங்கள்:

'காரை ராத்திரி அண்ணா நகர்லே கொண்டு போய் விடறதுக்கு டிரைவர் புறப்படறேன்னார். மாம்பலத்திலே இறங்கிக்கிற உதவி ஆசிரியரும் சேத்துபட்டுலே இறங்கிக்கிற உதவி ஆசிரியரும் காரில் ஏறிகிட்டாங்க. நானும் ஒட்டிகிட்டேன். எனக்கு அண்ணா நகர்லேதான் வீடு. மாம்பலத்துலே ஒருத்தரை இறக்கி விட்டுட்டு, வள்ளுவர் கோட்டத்துப் பக்கத்திலே வண்டி வர்ர போது டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு, எதுவும் சொல்லாமல் இறங்கி எங்கேயோ போய் விட்டார்.
"ஏண்டா, வண்டியிலே எதுனா டிரபிளா?" என்று பின் ஸீட்டிலிருந்த உதவி ஆசிரியர் கேட்டார். "டிரைவர் எங்கேடா போயிருக்கிறார்?"

"இன்ட்டர்வெல்லுக்குப் போயிருக்கார்" அப்படீன்னேன். அவருக்குப் புரியலை.பள்ளிக்கூடத்துலேயெல்லாம் அப்படித்தான் நாங்க சொல்லுவோம்.

உதவி ஆசிரியர் பள்ளிக்கூடமே போனதில்லை போலிருக்கு. 'இன்டர்வெல்லுக்குப் போயிருக்கார்'னா என்னன்னே அவருக்குத் தெரியலை.

'நம்பர் ஒன் பாத்ரூமுக்குப் போயிருக்கார்னு வெலாவரியாச் சொல்லணும் போலிருக்கு!’ அய்யோ. அய்யோ.//

ஆசிரியர் ப்ளூ கலரிலே ஒரு மாஜிக் டைரி வெச்சிகிட்டிருக்காரு. அதுலேதான் எல்லோருடைய டெலிபோன் நம்பர், விலாசம், விசிட்டிங் கார்டுங்க எல்லாம் இருக்கும். ஜப்பானிலே, அமெரிக்காவிலே ஆசிரியருக்கு நெறையப் பேரு பிரண்ட்ஸ். விலாசமெல்லாம் அந்த ப்ளூ டைரியிலே இருக்கும். அதிலே என்ன மாஜிக் என்கிறீங்களா?

ஆசிரியர் எந்த ஒரு விலாசத்தைத் தேடறாரோ அது மட்டும் அந்த டைரியில் அகப்படாது. "எங்கயானும் விழுந்திருக்குதா பாருடா," என்பார்.

உதவி ஆசிரியர்களும், லே அவுட் ஆர்டிஸ்டுகளும் புகைப்படங்களை எங்கேயாவது வைத்துவிட்டு தேடுவது வாடிக்கையாம். 

அலுவலகத்திற்கு வந்த வி.ஐ.பி.க்களில் சுப்புடுவை சிவப்பு தாத்தா சார் எங்கிறார். . அவர் பேசுவதைக் கேட்டு உதவி ஆசிரியர்களுக்கு ஒரே சிரிப்பாம்.

கிரைம் கதைகள் எழுதும் ராஜேஷ் குமார், அலுவலகத்திற்கு வந்ததும் ஆசிரியர் காலை தொட்டு வணங்குவராம்.

கவிஞர் வைரமுத்துவும் அவர் மனைவியும் வந்த பொழுது கவிஞர் ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தினாராம், அவர் மனைவி ஆசிரியரின் மனைவிக்கு பொன்னாடை போர்த்தினாராம். இது போல போர்த்த பொன்னாடைகளை தயாராக வைத்திருப்பாராம் ஆசிரியர். அது பரவாயில்லை ஒரு உதவி ஆசிரியர் அலுவலகத்திலிருந்து நேராகா ஏதாவது நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்கு தோதாக சலவை செய்த வேட்டிகள், சட்டைகள் இவற்றை தன்னுடைய அலுவலக பீரோவின் மேல் தட்டில் அடுக்கி வைத்திருப்பாராம். அதைப் பற்றி ஆபீஸ் பையனின் கமெண்ட் "அவங்க வீட்டு பீரோல இடம் இல்லை போலிருக்கிறது, இங்க அடுக்கி வெச்சுட்டாரு"

ஓரு முறை ஒரு உதவி ஆசிரியரை ஏதோ நிகழ்ச்சிக்கு போகச்  சொல்லி யிருக்கிறார் ஆசிரியர். அவர்,"நான் ஷேவ் செய்து கொள்ளவில்லை என்று மூன்று நாள் முள்ளு தாடியை சொரிந்திருக்கிறார், உடனே ஆசிரியரின் வீட்டிலிருந்த(அலுவலகத்திற்கு மாடியில்தான் வீடு) புத்தம் புதிதாக ஷேவிங் செட், சோப்பு, பவுடர் எல்லாம் வந்து விட்டதாம்.

கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போதும் புத்தகம் வெளியானதும் படித்து விட்டு கருத்து கூறி விடுவாராம்.  ஒரு முரை 1996 என்று அச்சிடப்படுவதற்கு பதிலாக 1966 என்று அச்சாகி விட்டதாம், அதை உடனே போன் செய்து சுட்டிக் காட்டினாராம்.   

ஓவியர் கோபுலு ஒரு முறை ஆசிரியரைப் பார்க்க வந்த பொழுது கோபுலு, ஆசிரியர் இருவருமே கோடு போட்ட  சட்டை அணிந்திருந்தார்களாம். கோபுலு அவர்கள் அதை சுட்டிக்காட்டி "நீங்களும் கோடு, நானும் கோடு" என்றதும், ஆசிரியர் சாவி, "உங்கள் கோடு பேசும் கோடு" என்றாராம். 

கோபுலு அவர்கள் வரைந்திருந்த தர்பூஸ் பழங்களின் படத்தை பார்த்து விட்டு, சாவி அவ்வளவு சிலாகித்தாராம். சாவி அவர்களின் ஈடுபாடு, கோபம் போன்றவைகளை நல்ல விதமாக புரிந்து கொள்கிறோம்.

ஓவியர் ஜெயராஜ் படம் வரைந்து ஃபாக்சில்(fax) அனுப்பி விடுவாராம். இதைத் தவிர, ஒரு பத்திரிகையின் ஒரு பதிப்பை வெளிக்கொண்டு வர உதவி ஆசிரியர்கள், ப்ரூஃப் ரீடர்கள் போன்றவர்களின் பங்களிப்பு எவ்வளவு என்பது இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது புரிகிறது.  

என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம், சாவி அவர்களோடு பெங்களூர் மாவேலி டிஃபன் ரூமில்(MTR) சாப்பிட சென்றபொழுது வி.வி.ஐ.பி. க்களுக்கான தனி ரூமில் சாப்பிட்ட லஞ்சை விவரித்திருக்கும் விதம்தான். எல்லோருக்கும் வெள்ளித் தட்டில் சாப்பாடு, ஒண்ணேகால் கிலோ எடையுள்ள தங்க கோப்பையில் காபியாம்.(பார்ரா!) வி.வி.ஐ.பி.க்களுக்காக ஒரு டஜன் தங்ககோப்பைகள் அவர்கள் வைத்திருந்தார்களாம். பேஷ்! பேஷ்!

இப்படி பல சுவையான சம்பவங்களை சுவாரஸ்யமாகவும், சுருக்கமாகவும் பகிர்ந்த்திருக்கிறார். 

www.pustaka.co.in.ல் படிக்கலாம்.