கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, June 24, 2011

innum konjam kavidhai!

புற நகர் குடியிருப்பு! 



 
 
அளவற்ற காற்று அருகாமையில் அங்காடி
பத்து நிமிட நடையில் பேருந்தில் பயணிக்கலாம்
நிலத்தடியில் நீருக்கு பஞ்சமில்லை
என்று பல கூறி அடுக்கு மாடி குடியிருப்பொன்றில்
வீடொன்றினை  விற்று விடும் வித்தகன் 
சொல்வது  மிகையில்லை சொல்லாமல் விடுவது:
இசை என்ற பெயரில் இரைச்சலாய்  ஓசை
விரும்பினாலும் வெறுத்தாலும் வறுபடும் மீன்வாசம்
உங்கள் வீட்டு வாசலில் அடுத்த வீட்டு காலணிகள்
பால் பாக்கெட் திருட்டு, பறிபோகும் செய்தித் தாள்
இன்னும் 
ஜாதிச் சண்டை, மொழிச் சண்டை, இனச் சண்டை 
இத்தனையும் உண்டு எல்லா குடியிருப்புகளிலும்...! 
 




Wednesday, June 15, 2011

konjam kavithai



 

 
சூடுதான், காய்ந்துவிட்டு போகட்டுமே வெய்யில்
கதவைத் திறந்து வை!
புழுதிதான், வீசிவிட்டு போகட்டுமே காற்று
கதவைத் திறந்து வை!
ஈரம்தான், நனைத்து விட்டு போகட்டுமே மழை
கதவைத் திறந்து வை!
வாடைதான் வீசிவிட்டுப் போகட்டுமே குளிர்
கதவைத் திறந்து வை
தென்றலும் ஒரு நாள் வீசும்
கதவைத் திறந்தே வை!
                                        









  


  

Thursday, May 26, 2011

Ko - film review

கோ 

கே.வி. ஆனந்தின் படைப்பில் வெளி வந்திருக்கும் மற்றொரு படம். அரசன் என்று பொருள் தரும் அழகான தமிழ் பெயரை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி! இளங்கோ என்ற பெயர் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ? 


நாட்டில் நல்ல ஆட்சி நிலவ வேண்டுமென்றால் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று கருதும் ஒரு இளைஞர் குழு, அதற்கு மறைமுகமாக உதவும் பத்திரிகையாளர் ஜீவா! அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்,  நடுவில் கிளை கதையாக ஜீவா, கார்த்திகா, பியாவுக்கிடையே நிலவும் முக்கோண காதல். 

பத்திரிகையின் புகைப்பட நிருபராக பச்சென்று பதிகிறார் ஜீவா. பியாவின் இயல்பான கலகல நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. இளைஞர் குழுவின் தலைவராக வரும் அஜ்மலின் நடிப்பும், பாடி லாங்குவேஜும் சபாஷ் போட வைக்கின்றன! கார்த்திகா...?  ஹும்! கண்கள் அழகுதான், அதற்காக எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரி விழித்தால்..? அதீத மேக்- அப்பில் செயற்கையாக நடித்து எரிச்சலூடுகிறார்! இவரைத்தான் கதாநாயகியாக போட 
வேண்டும் வேறு வழி இல்லை என்னும் அளவிற்கு கதா நாயகி பஞ்சம் நிலவுகிறதா என்ன? பிரகாஷ் ராஜ், கோடா ஸ்ரீனிவாச ராவ் என்று இரண்டு வில்லன்கள் இருந்தாலும் அவர்கள் இருவருமே பிரதான வில்லன் கிடையாது என்பது ட்விஸ்ட் ! பிரகாஷ் ராஜ் நல்ல நடிகர்தான் என்றாலும் பத்து வார்த்தைகள் பேசினால் எட்டாவது வார்த்தையில் பல்லை கடித்துக்கொள்ள வேண்டும் என்ற ஸ்டைலை மாற்றிக் கொள்ளலாம்.

காமெடி ட்ராக் என்று தனியே வைக்காமல் காட்சி அமைப்புகளிலேயே நகைச்சுவையை வைத்திருப்பதை பாராட்டலாம்! இளமை துள்ளும் வசனத்தை எழுதி 
இருக்கும் இரட்டையர் சுபாவில் சுரேஷ் ஒரு காட்சியில் தலை காட்டவும் செய்திருக்கிறார். இதே போல பட்டிமன்ற ராஜாவும், வனிதாவும் வந்து போகிறார்கள்!

பாடல்கள் நன்றாகதான் இருக்கின்றன.லோகேஷன்களும் அருமை இருந்தாலும் படத்தின் ஓட்டத்திற்கு ஸ்பீட் ப்ரேகர்களாகவே இருக்கின்றன. குறிப்பாக தனக்கு நெருங்கிய தோழி பரிதாபமாக இறந்த அன்று டூயட் பாடுவது என்ன எதிக்ஸ்? படத்தின் முற் பாதியில் காட்டப்படும் நிகழ்சிகள் யாவும் பிற் பாதியில் அவிழ்க்கப்படும் முடிச்சுகள்
என்பது பின்னால்தானே தெரிகிறது.. எனவே இடை வேளைக்கு முன் திரும்பத் திரும்ப 
ஒரே காட்சியே வருவது போல தோன்றுகிறது. இடை வேலைக்குப் பிறகு சூப்பர்!

 

 

 



     

 



 

Tuesday, May 17, 2011

TN Election result 2011

ELECTION RESULT 2011

சமீபத்திய தேர்தலில் இத்தனை அமோக வெற்றியை ஜெயலலிதாவே எதிர் 
பார்த்திருக்க மாட்டார்.   complete sweep! படுத்துக்கொண்டே   ஜெயிப்போம் என்று 
காமராஜர் சொன்னதாக கேள்விப் பட்டிருக்கிறேன், நிஜமாகவே அதை செய்து 
காட்டி இருக்கிறார் ஜெயலலிதா! நான்கு வருடங்களை பெரும்பாலும் கொட
நாட்டில் ஓய்வு எடுப்பதிலேயே கழித்த ஜெயலலிதா மாபெரும் வெற்றியை 
தழுவி இருப்பது மக்களின் மனதை பிரதிபலிக்கிறது! 

சென்ற தேர்தலில் வெற்றி பெற்ற கருணாநிதியிடம், "உங்களின் வெற்றிக்கு 
காரணம்?" என்று கேட்ட பொழுது, "ஜெயலலிதாதான்..!" என்றார் கிண்டலாக.
இப்பொழுது யாராவது ஜெயலலிதாவிடம், "உங்கள் வெற்றிக்கு காரணம்..?"
என்று கேட்டால், "கருணாநிதியும் அவரது குடும்பத்தாரும்" என்று கூறுவாரா?
தெரியாது.

எலக்க்ஷன்  கமிஷன் கண்டிப்பாக இருந்தும் பணம் பெருமளவில் விளையாடி 
இருக்கிறது. ஆனால் அதையும் மீறி மக்கள் அ.தி.மு.க.விற்கு ஓட்டளித்திருப்பது
மக்கள் எந்த அளவிற்கு எதேச்சாதிகாரத்தை வெறுக்கிறார்கள் என்பதையும் 
அவர்கள் தெளிவாகத்தான்  உள்ளார்கள் என்பதையும் காட்டுகிறது.  ஆனால் 
 ஒரு  சோகம்  அவர்கள்  தேர்ந்தெடுக்க  கழகங்களுக்கு  மாற்றாக  வேறு  ஒரு 
கட்சி இல்லாதது. 

தமிழ் நாட்டைப்பொருத்தவரை காங்கிரசிற்கு உட்கட்சி பூசலுக்கே நேரம் 
போதவில்லை. மேலும் ஊழலை ஒழிப்போம் என்று ஒரு  பக்கம்   பேசிக்கொண்டே மறு பக்கம் ஊழல்வாதிகளுக்கு உதவுவது அதன் மீது
நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. தே.மு.தி.க., பா.ம.க.,  போன்றவைகளை  மக்கள் கழகங்களின் கிளையாகதான் கருதுகிறார்கள். மிஞ்சி இருக்கும் ஒரே 
ஒரு உருப்படியான தேசிய கட்சி பி.ஜே.பி ஒன்றுதான். அதுவோ இன்னும்
தமிழ் நாட்டில் வேர் ஊன்றவே   இல்லை.

       
பி.ஜே.பி ஒரு மத வாத கட்சி என்னும் இமேஜை உடைக்க வேண்டும். 
ஆர்.எஸ்.எஸ். உடன் தனக்கு சம்மந்தம் கிடையாது  என்பதை  உறுதிப்படுத்தி, மற்ற மதத்தினரும் அமைதியாய் வாழ தாம் உதவுவோம்
என்பதையும் நிச்சயப்படுத்த வேண்டியது அதன் கடமை.  தமிழக மக்கள் எனக்கு ஒய்வு கொடுத்துள்ளார்கள் என்று கருணாநிதி கூறினாலும் தன்
முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தனை போன்று உடனேயே வேலை 
செய்ய ஆரம்பித்து விடுவார். அவரைப்போல உழைக்க தமிழக பி.ஜே.பி யில் 
யாராவது இருக்கிறர்களா என்று தெரியவில்லை. இனிமேலாவது 
தமிழக பி.ஜி.பி. தீவிரமாக உழைத்து முதலில் தன் இருப்பை வலுப்படுத்தினால் 
நிஜமான தேசிய உணர்வு கொண்ட ஒரு மாற்றுக் கட்சி தமிழ் நாட்டிற்கு கிடைக்கும்.
ஜெய் ஹிந்த்!
                        

    
      
                                         


              

Monday, May 2, 2011

கோவிந்த வாடி குரு பரிகார தலம்!

கோவிந்த வாடி குரு பரிகார தலம்!

நவக்ரகங்களில் மிகவும் முக்கியமான கிரகம் குரு. முழு சுபரான இவர் ஒருவரின் 
வாழ்கையில் கல்வி, தனம், குடும்பம், வாக்கு, மக்கள் செல்வம் என்னும் ஐந்து 
செல்வங்களை நிர்ணயிக்கச் செய்பவர். பெண்களுக்கு கூடுதலாக மாங்கல்ய 
பலத்தையும் அளிக்க கூடியவர்.  குரு பகவானுக்கு இருக்கும் இடத்தை விட பார்வை சிறப்பானது. குரு பார்க்க கோடி பாவங்கள் விலகும் என்பது வழக்கு  மொழி!

இத்தனை சிறப்புகள் கொண்ட குரு பகவான் சிறப்பாக வழிபட படும் சில தலங்களுள்  
ஆலங்குடி, திட்டை, திருவலிதாயம் எனப்படும் பாடி மற்றும் கோவிந்தவாடி 
முதலியவை ஆகும். இப்பொழுது கோவிந்தவாடியின் சிறப்புகளை பார்க்கலாம்:

காஞ்சிபுரத்திலிருந்து 15  Km  தூரத்தில்  உள்ளது கோவிந்தவாடி தலம்.  சிறிய கோவில்.  கோவிந்தராஜ  பெருமாள்  தன்  குடும்பத்தோடு   வந்து  இங்குள்ள சிவனை வழிபட்டதால் கோவிந்தவாடி என்ற காரணப் பெயர் கொண்டுள்ளது.   சாதாரணமாக சிவன் கோவில்களில் தக்ஷினாமூர்த்தி கோஷ்டத்தில் இருப்பார்.  இங்கு மூலவரும் தக்ஷிணா மூர்த்தியும் ஒரே விமானத்தின் கீழ் இரு 
தனி சன்னதிகளில் எழுந்தருளி உள்ளனர். எங்கும் காண முடியாத விதத்தில் 
கோஷ்டத்தில் மஹா விஷ்ணுவும், பிரும்மாவும் இருபது ஒரு அபூர்வ காட்சி! பிரகாரத்தில் பைரவருக்கும்,கோவில் பெயர்  காரணராகிய, தன் தேவியர் இருவரோடும் 
எழுந்தருளி இருக்கும்  கோவிந்தராஜ  பெருமாளுக்கும்  தனி  சந்நிதிகள்  உள்ளன. 

கோஷ்டத்தில் மகாவிஷ்ணு

 
கோஷ்டத்தில் பிரம்மா

   
குருவின் தலம் என்பதாலோ என்னவோ பெரும்பாலான பக்தர்கள் ராஜா கோபுரம் 
வழியாக உள்ளே வராமல் தக்ஷினாமூர்த்தி சந்நிதி உள்ள வாயில் வழியாகவே 
வருகின்றனர்.   இங்குள்ள தட்சிணா மூர்த்திக்கு தேங்காயில் நெய் விளக்கு ஏற்றுவது 
விசேஷமாக கருதப்படுகிறது. கோவில் வாசலிலேயே தேங்காய், நெய்,  திரி  போன்றவை விற்கப்படுகின்றன. தேங்காயை உடைதுக்கொடுக்க கோவிலுள்  ஒரு ஆள் இருக்கிறார், உடைத்த தேங்காயின் கண் உள்ள பகுதியில் நெய்யை 
ஊற்றி, திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். இதன் தாத்பர்யம் 
என்னவென்று தெரியவில்லை.

ஜோதிட சாத்திரத்தில் குறிப்பிடப்படும் குரு தேவ குருவாகிய ப்ரஹஸ்பதி  ஆவார் என்றாலும் சனி பரிகார தலமாகிய  திருநள்ளாரில்  சனி  பகவானுக்கென்று  தனி சந்நிதி  இருப்பது  போலவோ,  வைதீஸ்வரன் கோவிலில் செவ்வாய்கென்று தனி  சந்நிதி  இருப்பது  போலவோ திருநாகேஸ்வரத்தில் ராகுவுகென்று தனி சந்நிதி இருப்பது போலவோ குரு பரிகார தலங்களில் குரு  அதாவது  ப்ரஹஸ்பதிகென்று  தனி சந்நிதி இல்லாமல் தட்சிணாமூர்த்தியே குருவாக வழிபட படுவது ஏன் 
என்றும் புரியவில்லை...? காரணம் எதுவாக இருந்தாலும் ஆதி குருவான
தட்சிணா மூர்த்தியை வழி படுவது நல்லதுதானே!

மே மாதம் 8 ம் தேதி குரு மீனத்திலிருந்து மேஷத்திற்கு வருகிறார். அன்று 
முடிந்தால் கோவிந்த வாடி சென்று குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி 
வணங்கி விட்டு வாருங்கள். குருவருளால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.