கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, April 14, 2011

thambattam: vasantha navarathri

thambattam: vasantha navarathri: "வசந்த நவராத்திரி தேவி உபாசகர்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகை நவராத்திரி. ஒரு வருடத்தில் நான்கு ..."

Wednesday, April 13, 2011

வசந்த நவராத்திரி

வசந்த நவராத்திரி



தேவி உபாசகர்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகை நவராத்திரி.
ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் அவர்களால்
கொண்டடப்பட்கின்றன. அவைகள் ஆஷாட நவராத்திரிசாரதா நவராத்திரி, பௌஷ்ய அல்லது மக நவராத்திரி,  மற்றும்  வசந்த  நவராத்திரி.


இவற்றில் ஆஷாட நவராத்திரி  என்பது  ஆடி மாத  அமாவாசைக்குப்  பிறகு ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். ஆஷாட நவராத்ரியில் உபா சிக்கப்பட வேண்டிய தேவி மாதங்கி! மதுரை மீனாக்ஷி  மாதங்கியின்  வடிவே!  சாரதா  நவராத்ரியில்  சிறப்பாக  வழிபடப்படுவது  மகிஷாசுரமர்தினி.  பௌஷிய நவராத்ரி வாரஹிக்கு உரியது. ஜம்புகேஸ்வரம்  என்னும் திருவானைகோவிலில் குடி கொண்டிருக்கும் அகிலாண்டேஸ்வரி 
வாரஹியின் அம்சமே! வாரஹி வழிபாடு இரவில் செய்யப்பட வேண்டியது.


பங்குனி மாத  அமாவாசைக்குப்பிறகு  வரும்  பத்து  நாட்கள்  வசந்த  நவராத்ரி ஆகும். தென் இந்தியாவில் சாரதா நவராத்ரியும் வட இந்தியாவில் வசந்த நவராத்ரியும்  சிறப்பாக  கொண்டாடப் படுகின்றன.  சாரதா நவராத்ரியின்  முக்கிய அம்சம் பொம்மை கொலு என்றால், வசந்த நவராத்ரியின்  சிறப்பு  விரதமும்  பூஜையும்.  தெற்கே  நவராத்திரியின் கடைசி நாளான நவமி அன்று கல்விக்  கடவுளான  சரஸ்வதி  தேவியை  பூஜிக்கிறார்கள்,  வட இந்தியர்களோ வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி பூஜை செய்கிறார்கள்.  

இனி வசந்த நவராத்ரியின் சிறப்பை விளக்கும் கதையைப் பார்போம்: 

கோசல நாட்டை ஆண்டு வந்த த்ருவசிந்து என்னும் மன்னன் வேட்டைக்குச் 
சென்ற போது சிங்கத்தினால் கொல்லப்படுகிறான். அவனுக்குப் பிறகு அவனுடைய இரு மனைவிகளுள் ஒருத்தியான மனோரமாவிர்க்குப் பிறந்த 
சுதர்சனனை அரசனாக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்பொழுது  துருவசிந்துவின் மற்றொரு மனைவி லீலாவதி மூலம் பிறந்த மகனுக்கே 
பட்டம் சூட்டப் பட வேண்டும் என்று லீலாவதியின் தகப்பனாரான 
உஜ்ஜைனி அரசர் யுதாஜித் கலகம் செய்கிறார். அவரோடு போரிட்ட
மனோரமாவின் தந்தை  கலிங்க  தேச  அரசர்  வீரசேனர்  யுத்தத்தில்  மாண்டு போகிறார். இதை கேள்விப்பட்ட  மனோரமா  தன்  மகன்  சுதர்சனனையும் உதவிக்கு ஒரு அடிமையையும் அழைத்துக் கொண்டு கானகம் சென்று பரத்வாஜ முனிவரிடம் தஞ்சம் அடைகிறாள்.

லீலாவதியின் தகப்பனார் யுதாஜித்  அவர்  விரும்பியபடி  தன்  பேரனான  ஷத்ருஜித்திர்க்கு பட்டம் சூட்டிய  பிறகு  மனோரமாவையும்  அவள்  மகன் சுதர்சனனையும் கொல்வதற்காக காட்டிற்கு வருகிறான்.  அவர்களை தன்னிடம் ஒப்படைக்கும்படி பரத்வாஜரிடம் வேண்ட,
தன்னிடம் அடைக்கலமாக வந்தவர்களை தான் கை விட முடியாது என்று 
கூறிவிடுகிறார். அவரோடு  யுத்தம்  செய்ய  முற்பட்டவனை  அவரின்  மகத்துவத்தைக் கூறி அமைச்சர் தடுத்து விட நாடு திரும்புகிறான். 

பரத்வாஜரின் ஆஸ்ரமதிற்கு வருகை புரிந்த சில ரிஷி குமாரர்கள் 
மனோரமாவின் அடிமையை அவனுடைய பெயராகிய   க்லீபன் என்று
அழைக்கிறார்கள். இதை கேட்ட சிறுவனாகிய சுதர்சனனுக்கு க்லீபன் என்று 
கூப்பிட வராததால், 'க்லீம்' என்று அழைக்கத் தொடங்குகிறான். க்லீம் என்பது அம்பாளின் பீஜ மந்த்ரமனத்தால் அதை மீண்டும் மீண்டும் 
உச்சரித்த சுதர்சனனுக்கு அம்பிகை காட்சி அளித்ததோடு சக்தி வாய்ந்த  வில் 
மற்றும் எடுக்க எடுக்க குறையாத அம்புராத்துனியையும் அளிக்கிறாள்.

நாளடைவில் அழகிய யுவனாக வடிவெடுத்த சுதர்சனனைக் கண்ட காசி தேச 
அரண்மனை ஊழியர்கள் காசி தேச  இளவரசியான  சசிகலாவிற்கு  நடக்கவிருக்கும் சுயம்வரத்தில் கலந்து கொள்ள அவனுக்கு அழைப்பு
விடுக்கிறார்கள்.

அங்கு சென்ற சுதர்சனனை விரும்பி சசிகலா மாலை இடுகிறாள். அப்பொழது
அங்கு வருகை  புரிந்திருந்த  யுதாஜித்  அதற்க்கு  எதிர்ப்பு  தெரிவிக்கிறான்.  தேவியின் துணையோடு யுதாஜித்தை எதிர்க்கிறான் சுதர்சனன். சுதர்சனனுக்கு உதவி புரியும் அம்பிகையை யுதாஜித் இழிவு படுத்த கோபம்
கொண்ட தேவி அவனை சாம்பலாக்குகிறாள். பிறகு சுதர்சனனையும்  சசிகலாவையும் வாழ்த்திய அம்பிகை தன்னை வசந்த நவராத்ரியில்
முறைப்படி பூஜிக்கும்படி கட்டளை இடுகிறாள்.

சசிகலாவோடு  பரத்வாஜரின் ஆஸ்ரமதிற்கு  திரும்பிய  சுதர்சனனை  வாழ்த்தி கோசல நாட்டு அரசனாக முடி  சூட்டுகிறார்  பரத்வாஜர். பிறகு அரசனான சுதர்சன் தன் மனைவி சசிகலாவோடு  விதிவத்தாக அம்பிகையை  பூஜித்து  சகல  பாக்கியங்களும்  பெற்று  வாழ்ந்தான்.  அவன் வழி தோன்றல்களான ராம லக்ஷ்மனர்களும் வசந்த   நவராத்ரியில் அம்பிகையை  பூசித்திருக்கிரர்கள்.  

வசந்த நவராத்திரியில்தான் ராம நவமியும் வரும். அன்று விசிறி, பலாச்சுளை, பானகம், நீர்மோர் இவை விநியோகிப்பது சிறப்பு.

*இந்த வருடம் ஏப்ரல் 3 தொடங்கிய வசந்த நவராத்திரி ஏப்ரல் 12 ராம 
நவமியோடு முடிந்தது.  இதைப் படிக்கும் எல்லோருக்கும் எல்லாம் 
வல்ல அம்பிகையின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்!

யா தேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:
நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமோ நம:      

*இது 2011இல் எழுதப்பட்டது. ஹேவிளம்பி வருடமான இந்த வருடம்(2018) 18.3.2018 தொடங்கி, 26.3.2018 அன்று முடிகிறது.          

  

                                                

     


  
   
           
      
                    
                    
       

Friday, April 1, 2011

semifinal world cup 2011



ஒரு வழியாக உலக கோப்பை அரை  இறுதியில் பாகிஸ்தானை புறமுதுகிடச் செய்து வெற்றி வாகை சூடி விட்டோம்.

பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை, உயர் கல்வி நிறுவனங்கள்
வகுப்புகளை மாற்றி அமைத்துக்கொண்டன, மதியம் சாலைகள் வெறிச்சோடின.

பாகிஸ்தான் பிரதமரும்,  நமது  பிரதமரும்  அருகருகே  அமர்ந்திருக்க,  சோனியா காந்தி,ராகுல் காந்தி என்று அரசியல் பிரமுகர்களும்,
அமீர்கான், சுனில் ஷெட்டி, ப்ரீத்தி ஜிந்தா போன்ற பாலிவுட்
பிரமுகர்கள், விஜய் மல்லையா போன்ற தொழில் அதிபர்கள் ஆகிய அத்தனை பேரும்
விளையாட்டை நேரில் கண்டு களித்தார்கள் என்றால்,  பல தனியார் நிறுவனங்களில் ஊழியர்கள் பார்க்க வசதியாக பெரிய  திரை  அமைத்திருக்கிறார்கள்,  சிலவற்றில்  ஊழியர்களுக்கு
இலவசமாக பாப்கார்னும், பஞ்சுமிட்டாயும் கூட வழங்கப்படிருக்கின்றன.
எங்கள் குடியிருப்பில் கூட பெரிய திரை அமைத்து  எல்லோரும்  சேர்ந்து  உட்கார்ந்து  விசிலடித்து,  கை தட்டி மகிழ்ந்தோம். முத்தாய்ப்பாக பட்டாசு!

இந்த மாட்சைப் பார்த்து முடித்தவுடன் எனக்கு இரண்டு விஷயங்கள் தோன்றின;
ஒன்று பேசாமல் ஹாக்கியை எடுத்து விட்டு கிரிகெட்டை நம் தேசிய விளையாட்டாக 
அறிவித்து விடலாமே...   

இந்தியாவின் வெற்றி உறுதியானவுடன் குறிப்பாக அந்த கடைசி காட்சிர்க்குப் சோனியா 
காந்தி காட்டிய மகிழ்ச்சியைப் பார்த்த போது இன்னும் இவரை இத்தாலிக்காரர் என்பது 
நியாயம் கிடையாது என்று தோன்றியது.

Wednesday, March 16, 2011

women's day at Marvel Apoorva Apts. Ramapuram

மார்வெல் அபூர்வாவில் மகளிர் தின கொண்டாட்டம்!!!  

ராமாபுரத்தில் உள்ள மார்வெல் அபூர்வா குடியிருப்பில் உலக மகளிர் தினத்தை  மார்ச் 11 சனிக் கிழமை மற்றும் மார்ச் 12 ஞாயிற்று கிழமைகளில் கொண்டாடினார்கள். 
சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு குடியிருப்பில் உள்ள பெண்களுக்கான கோல போட்டி தொடங்கியது. மாலை ஐந்து மணிக்கு கோலம் போட ஆரம்பித்த பெண்கள் முன்னிரவு 7:30 வரை கோலம் போட்டனர். சாதாரணமாக  ஒரு இழையாக  ஆரம்பித்தது  அழகான        மயிலாகவும், கிளிகளாகவும் முடிந்தது பார்க்க  பரவசம் ஊட்டியது.








கோலப் போட்டியில் முதல்,இரண்டு,மூன்றாம் இடங்களை பெற்ற கோலங்கள்



மறு நாள் காலை ஒன்பது மணிக்கு  கார், T.I.cycle, Whirlpool,  என்று  பெரிய கடை முதல் பேஷன் ஜுவல்லரி, லெதர் பைகள், நர்சரி ஆயுர்வேத மருந்துகள் என்று பல்வேறு கடைகள் அமைக்கப்பட்ட ,உணவு சாலையோடு கூடிய  ஒரு சிறிய  பொருள்காட்சி  தொடங்கியது.  அதோடு கூட இலவச மருத்துவ பரிசோதனை மற்றும்  பல் பரிசோதனையும் அமைந்திருந்தது சிறப்பு அம்சமாகும்.


T.I. Cycle ஸ்டால்இல் விளையாடி மகிழும் குழந்தைகள்


மாலை ஐந்து மணிக்கு பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் துவங்கின.
சுவாரஸ்யமான போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கியது oriflame நிறுவனம்.



மிக அழகாக அலங்கரிதுக்கொண்டிருக்கும் பெண் போட்டியில் பரிசு வென்றது அறுபதுகளில் இருக்கும் ஒரு மூத்த பெண்மணி என்பது குறிபிடத்தக்கது!


(இ.வ.) இரண்டாவதாக நிற்பவரே 'சிறப்பாக உடை உடுத்திக்கொண்ட பெண்' பரிசைப்  பெற்றவர்  



திருமதி சாந்தி பாண்டியனுக்கு நினைவு பரிசை தருகிறார் பானுமதி  
அதன் பிறகு காலனியில் வசிக்கும் சிறுமிகள் முதல் முதியவர் வரை எல்லோரும்
சந்தோஷமாக ஆடி விழாவை இனிமையாக முடித்தனர்!                              
விளையாட்டுகளில் உற்சாகமாக பங்கேற்கும் பெண்கள்

women's day celebration by Sri Vigneswara ladies club - Ramapuram

பெண்கள் தின கொண்டாட்டம் - ஸ்ரீ விக்னேஷ்வர லேடீஸ் கிளப்

உலகம் முழுவதும் அகில உலக பெண்கள் தினத்தை மார்ச்  8 அன்றே கொண்டாடி விட்டாலும் ராமாபுரம் பெண்கள்  மட்டும் மார்ச் 11 மற்றும் 12 மகளிர் தினத்தை கொண்டாடினர்.  அந்த  இரு நாட்களும் வார இறுதியாக இருந்தது ஒரு முக்கிய காரணம். 

ஸ்ரீ விக்னேஸ்வரா லேடீஸ் கிளப் தனது மூன்றாம் ஆண்டு விழாவையும்
மகளிர் தினத்தையும்  சேர்த்து ஒரே விழாவாக கொண்டாடினார்கள். 
சனிக்கிழமை மதியம்  ஒன்று   முப்பதுக்கு  விழாவிற்கு  வருகை  தந்திருந்த பெண்கள் அணைவருக்குமான விளையாட்டுப் போட்டிகளோடு
கொண்டாட்டம் துவங்கியது.

முதல் விளையாட்டான musical box ஐ  சுமதி  நடத்தினார்.  இதில்  முதல்  இடத்தை ஜெயஸ்ரீ பிடித்தார், இரண்டு மூன்றாம் இடங்களை முறையே 
சரோஜாவும் ஆனந்தியும் கைப்பற்றினார்கள். 

இரெண்டாம் விளையாட்டான  அப்செர்வேஷன்  மற்றும்  மெமரி  விளையாட்டு  திருமதி. லக்ஷ்மி சாரங்கபானியால் நடத்தப்பட்டது. இதில் அத்தனை உறுப்பினர்களும் மிகுந்த  ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். 
அனால் கலந்து கொண்ட  மற்றவர்களைவிட  தனக்கு கவனிக்கும் திறனும்  ஞாபக  சக்தியும் அதிகம்    என்று  முதல்  இடத்தை  பிடித்ததின்  மூலம்  திருமதி.  மாலதி நிரூபித்தார்.  அவருக்கு அடுத்த இரு இடங்களை  திருமதி. பத்மஜாவும், திருமதி லீலாவும் பிடித்தனர்.       

அடுத்ததாக சற்று தொலைவில் வைக்கப்பட்டிருந்த ஒரு கூடைக்குள் 
பிளாஸ்டிக் பந்துகளை குறிபார்த்து எறியும் விளையாட்டு, இதில் ஒன்பது பந்துகளை குறி தவறாமல் கூடைக்குள் போட்டு முதல் இடத்தை  திருமதி.பானுமதி வெங்கடேஸ்வரன் பிடித்தார், ஏழு பந்துகளை கூடைக்குள் போட்டு இரண்டாம் இடத்தை திருமதி.ராணியும் திருமதி.லீலாவும் பிடித்தனர், மூன்றாம் இடத்தில் அபூர்வ கிளப்ஐ சேர்ந்த திருமதி. ராதா முகுந்தன்... சம்பந்தப்படவர்களின் வீட்டில் வாக்கு வாதங்கள் வரும் பொழுது அவர்களின் கணவர்கள் சற்று தள்ளி நிற்பது நல்லது..

ஒருவாறு விளையாட்டெல்லாம் முடிந்த பிறகு, திருமதி  நித்யா  ரவீந்தர்  வருகை தர, குறிப்பிட்ட நேரத்தில் விழா துவங்கியது. திருமதி.சுந்தரி இறை 
வணக்கம் பாட,சங்க தலைவி திருமதி சியாமளா வெங்கடராமன் வரவேற்புரை 
வழங்கினார்.

தனது உரையில் திருமதி சியாமளா  அவர்கள்  விக்னேஸ்வரா  லேடீஸ் கிளப் கே.ஜி.வகுப்பில் இருக்கும் சிறு குழந்தை என்றார், அனால் நிகழ்சிகள் நடந்த விதமோ கல்லூரி மாணவிகளின் இளமைக்கு சவால் 
விடுவது போல இருந்தது.  கலை  நிகழ்சிகளில்  இடம் பெற்ற       சங்க உறுப்பினர்களின் கோலாட்டம்,மற்றும் நாடகம், அதோடு இளம்  உறுப்பினராகிய குமரி சுகன்யாவின் நடனம் என்ற எல்லாமே  பார்வைக்கு 
விருந்தளித்தன.  

இதன் பிறகு தன்  சிறப்புரையில்   நிகழ்சிகளை   பாரட்டிப்பேசிய  திருமதி நித்யா, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை  வழங்கினர். அதன் பிறகு திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் நன்றி 
உரை கூற விழாவில் கலந்துகொண்ட  அனைவரும்  சேர்ந்து தேசிய  கீதம்  பாட  விழா  இனிதே முடிந்தது.                   
                        
இதோடு மட்டுமல்லாமல் பேஷன் ஜுவெல்லரி, பூஜா சாமான்கள், ஸ்நாக்ஸ், 
போன்றவற்றுக்கான சிறு விற்பனை கூடமும் அமைக்கப்பட்டிருந்தது 
எல்லோரையும் கவர்ந்தது. மொத்தத்தில்  உற்சாகமான  ஒரு  நாளாக  அமைந்தது விக்னேஸ்வரா லேடீஸ்  கிளப்இன் மகளிர் தின கொண்டாட்டம்!       
           

Tuesday, February 22, 2011

மாசி மகம்

மாசி மகம்

ஹிந்து மதம் ஒரு மனிதனுக்குரிய ஆன்மீக வளர்ச்சிக்கு தேவையான விஷையங்களை அந்தர்முக சாதனை, பகிர்முக சாதனை என இரண்டாகப் பிரிக்கிறது. அந்தர்முக சாதனை பிராணாயாமம், ப்ரித்யாகாரம், தாரணை,த்யானம்,சமாதி என விரிந்தால்  பகிர்முக  சாதனையில்  தினசரி வழிபாடு, தான தர்மங்கள் செய்தல், ஆலய தரிசனம், புனித நீராடுதல் என்பவை அடங்கும். 


முக்கிய புண்ணிய நதிகளாக கருதப்படும் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி, போன்ற  நதிகளில் நீராடுவதும்,  ஒரு சில கோவில்களில் உள்ள குளங்களில்(உ,ம். மாமங்க குளம்,மற்றும் திரு நள்ளார் குளம்)   முழுகுவதும், சமுத்திரத்தில் ஸ்நானம் செய்வதும் சிறப்பானதாக கருதப்படுகின்றன. ஆனாலும் எல்லா சமுத்திரங்களும்   எல்லா நாட்களிலும் ஸ்நானம் செய்ய ஏற்றதாகது. ராமேஸ்வரம் தவிர மற்ற  கடல்களில்  குறிப்பிட்ட  நாட்களில்  மட்டும்தான் புனித நீராடலாம்  என்பது  சாத்திர  விதி.   அப்படிப்பட்ட கடல் நீராடலுக்கு ஏற்ற சிறப்பான  நாள் மாசி மகம்!


மாசி மாதத்தில் பௌர்ணமியும் மக நட்சத்திரமும் சேரும் நாளே மாசி மகம் ஆகும். சைவர்கள், வைணவர்கள், சாக்தர்கள்  ஆகிய  எல்லோருக்குமே  இது ஒரு சிறப்பான நாள் ஆகும்.

பிரளயத்திற்குப் பிறகு பிரபஞ்சத்தை படைக்க தேவையான பொருள்கள் அடங்கிய அமுத கலசத்தை சிவ பெருமான்  உடைத்து  பிரும்மாவிடம்  கொடுத்த நாள் மாசி மக திருநாள் ஆகும்.

திருவண்ணாமலையில் இருந்த   வல்லாளன்  என்னும்  அரசனுக்கு  குழந்தைகள் கிடையாது, பெரும்  சிவ பக்தனான அவன், தான் இறந்து  போனால்  தனக்கான  இறுதிச்  சடங்குகளைச் செய்ய ஒரு மகன்  இல்லையே  என வருந்த, சிவ பெருமான் அவனுக்கு முன் ஒரு சிறுவனாக  தோன்றி அவனுடைய இறுதிச் சடங்குகளை  தானே  செய்யவதாக  வாக்குறுதி அளித்தார். அந்த மன்னன் இறந்து போனது ஒரு மாசி மகமாக அமைய, சிவ பெருமான் அவனுக்குரிய  சம்ஸ்காரங்களை  கடற் கரையில்  செய்ததோடு அன்று கடலில் நீராடுபவர்களுக்கு முக்தி அளிப்தாகவும் அருளினார்.    

 மேலும் மீனவப்  பெண்ணாக பிறந்த பார்வதி தேவியை, யாராலும் கொல்ல முடியாத ராட்சச திமிங்கலத்தை  மீனவ தோற்றத்தில் வந்த  சிவ பெருமான் கொல்வதன் மூலம்    மணம் முடித்த நாளும் ஒரு மாசி  மகத்திலேதான்!(திரு விளையாடல் படத்தில் ஜிங்கு சக்கு.. ஜிங்கு சக்கு என்று  பின்னணி     ஒலிக்க  சிவாஜி  கணேசன்  நடந்தது  நினைவிற்கு  வருகிறதா?அதே தான்...!)  பராசக்தியே தனக்கு மகளாகப் பிறந்தது குறித்து மகிழ்ந்த மீனவ குல அரசன், சிவனும் பார்வதியும் மணக்கோலத்தில் தனக்கு காட்சி தந்தது போல உலக மக்கள் அத்தனை பேருக்கும் காட்சி தர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள மாசி மகத்தன்று பார்வதி தேவியோடு சிவ பெருமானும் கடற் கரையில் எழுந்தருள்கிறார்!


வைணவ சம்பிரதாயத்தில் சமுத்திர ராஜன் மகளான லட்சுமி தேவியை திருமால் மணந்து கொண்டதால், சமுத்திர ராஜன் திருமாலுக்கு  மாமனாராகிறார்! தொலை  தூரத்தில்  மகளை  திருமணம்  செய்து கொடுக்கும் எல்லா தந்தையரையும்  போலவே கடலரசனும் தான் தான் மகளையும்  மருமகனையும்  எப்போது பார்ப்பது என கேட்க, ஒவ்வொரு வருடமும் மாசி மகத்தன்று தான் கடற் கரைக்கு வந்து காட்சி தருவேன் என பெருமாள் வாக்களித்து, அப்படியே கடற் கரைக்கு எழுந்தருளுகிறார். எனவேதான் கடற்கரையை ஒட்டிய நகரங்களில் உள்ள பெருமாள் கோவில்களிலெல்லாம் அன்று பெருமாள் கடற் கரைக்குச் செல்வதும் தீர்த்தவாரி கொண்டருள்வதும் இன்றும் வழக்கமாக உள்ளன.      

இந்த வருடம் மாசி மகம் 18 .02 .2011  வெள்ளைக் கிழமையன்று வந்தது. நானும் என மகளும் கடற் கரையை(மெரினா பீச்) அடைந்த பொழுது கலை மணி 6:30 . அப்பொழுதே  அங்கு  பலர்  பெருமாளின்  வருகைக்காக  காத்திருந்தனர். முதலில் எழும்பூரிலிருந்து ஸ்ரீனிவாச பெருமாள் எழுந்தருளினார்.

கண்ணகி சிலை சிக்னலுக்கு எதிரே பெருமாளின் குடை தெரிந்தது, அதுவரை அமர்ந்து கொண்டிருந்த மாமிகள் பரபரவென்று பெருமாளை  வரவேற்க பெரிதாகவும் அழகாகவும் கோலங்கள் போட்டனர். பின்னர்
பெருமாளோடு பக்தர்களும் கடலுக்குச் சென்று நீராடினர். அதன் பின்னர் திருவல்லிகேணியில் இருந்து பார்த்தசாரதி பெருமாள் கடற்கரைக்கு   எழுந்தருளினார்.  அவரோடும்  தீர்த்தவாரியில்  உற்சாகமாக  பங்கெடுத்துக்   கொண்டோம்.  


 

அதன் பின்னர் திருவடீஸ்வரன்பேட்டையில்ருந்து  கடற் கரைக்கு வந்த சிவன் பார்வதி தேவியை தரிசனம் செய்து கொண்டு உடல்   முழுக்க நர நரத்த மணலோடும், மனம் முழுக்க கொப்பளித்த சந்தோஷத்தோடும்  வீடு வந்தோம்.                                   

         

                                                                               

  
      

                       

                          

Sunday, February 13, 2011

yuthum sei - review


ஒரு நகரில்  திடீர் திடீரென காணாமல்  போகும்  இளம்  பெண்கள்  ஒரு புறம்,  பொது மக்கள் நடமாடும் இடங்களில், குறிப்பாக  காவல்  துறையை  சேர்ந்தவர்கள்  கண்ணில்  படும்  படியாக  அட்டைப்    பெட்டியில்  வைக்கப்படும்  துண்டிக்கப்பட்ட இரு கரங்கள் இன்னொரு புறம், இந்த இரண்டு வகையான குற்றங்களுக்கும் என்ன தொடர்பு,  பின்னணி என்ன என்பதை மர்மமான முறையில் காணாமல் போன தன்  தங்கை  கேசை  சரியாக விசாரிக்காமல் மூடிவிட்ட குற்றப்  பிரிவின் மேல்  கோபமாக  இருக்கும் சி பி சி ஐ டி அதிகாரி சேரன் துப்பு துலக்கும் கதை.

முதலில் இயக்குனர் மிஷ்கினுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துவிட வேண்டும். ஹீரோயிசம் இல்லாமல், டூயெட் இல்லாமல், தனி காமெடி ட்ராக் இல்லாமல் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் முதன் முறையாக கதா நாயகியே இல்லாமல் ஒரு படம் எடுத்திருப்பதோடு கிளைமாக்ஸில் கதா நாயகன் விலகி நிற்க துணை கதா பத்திரங்களை   முக்கிய  பங்கு  வகிக்க  வைத்த துணிச்சலுக்காக! 

ஹீரோயின் வேண்டாம்  என  முடிவு  செய்ய  முடிந்த  மிஷ்கினால்  ஐடெம்  டான்ஸ் வேண்டாம் என்று முடிவு செய்ய முடியாததற்கு காரணம் வியாபார நிர்பந்தமா? 

ஆக்க்ஷன் ஹீரோவாக சேரன்..! தங்கை காணாமல் போனதால் சோகமாக இருக்கட்டும்.. ஆனால் தான் கண்டு பிடித்தவைகளை மேல் அதிகாரியிடம் தெரிவிக்கும் போது ஏன் குற்ற உணர்ச்சி உள்ளவர் போல தலை குனிந்து கொண்டு பேச வேண்டும்?

இடை   வேளை வரை படம் மெதுவாகத்தான் நகர்கிறது. அடுத்த  பாதியில்  Y.G. மகேந்திரனும் அவர்  மனைவியாக  வரும்  லக்ஷ்மியும்  படத்தை  தங்கள்  தோள்களில் தாங்கிச் செல்கிறார்கள். லக்ஷ்மி ஆரம்ப காட்சிகளில் கொஞ்சம்  நாடகத்தனமாக  நடித்தாலும் போகப் போக சுதாரித்து விட்டார். மகேந்திரன்..! வாவ்!.. வசனமே பேசாமல் பாடி லாங்குவேஜிலும் முக பாவங்களிலும்  பின்னி எடுத்து விட்டார்! ஒரு  நல்ல  நடிகரை  வெறும்  காமெடியனாகவே  இத்தனை நாட்கள் வீணடித்து விட்டோமோ? 

நடிப்பில் குறிப்பிடத்தக்க இருவர் கிட்டப்பாவாக வருபவரும், சேரனின்  மேல் அதிகாரியாக வருபவரும்..முதலில் சேரனிடம் இறங்கி வந்து கேசை ஒப்படைக்கும் போதும் கடைசியில் சேரனுக்கு உதவ மறுக்கும் போதும் சிறப்பாக செய்திருக்கிறார்!       

கொட்டும் மழையில் ஒரு ஆட்டோ நின்றிருக்க குடை  பிடித்துக்கொண்டு  வரும் பெண்ணை ஏரியல் வியூவில் காண்பிக்கும்   முதல் காட்சி முதல் இறுதி வரை ஓளி ஒகே,  ஒலி... ?திகிலை கூட்ட இன்னும்  கொஞ்சம்  முயன்றிருக்கலாம்!           

ஆடோப்சி செய்யும் டாக்டராக வரும் ஜெயப்ரகாஷ் மீது அறிமுக காட்சியிலேயே சந்தேகம் வந்து விடுகிறது. 

குண்டடி பட்டு விழுந்து கிடக்கும் ஜெயப்ரகாஷ் மூச்சு விட திணறியபடியே நடந்தவைகளை விவரிப்பது, கடத்தும்  எல்லா  பெண்களையும்  வைத்து  லைவ்  ஷோ  நடத்தும்  வில்லன்  கோஷ்டி  சேரனின்  சகோதரியை  மட்டும்  விட்டு வைத்திருப்பது, சேரனை தாக்க வரும் அடியாட்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து அடி வாங்கி கொள்வது போன்ற மாமூல் சினிமாத்தனங்களை தவிர்த்திருக்கலாம்.   

இட்லி, வடை, பொங்கல் என்றே சாப்பிட்டு  பழகியவருக்கு  திடீரென்று  சாண்ட்விச், பாஸ்தா என்றெல்லாம் கொடுத்தால் சாப்பிட்ட  நிறைவு  இல்லாமல் தவிப்பார். அதைப்போல ஒரு மாதிரி  மசாலா  படங்களையே  பார்த்து  பழகிவிட்ட  சராசரி ரசிகனுக்கு இந்த படம் ஒரு புது அனுபவமாக இருக்கும்.                  
  



             

     
                  

                       

Tuesday, February 1, 2011

aacharyamana ahobilam - III

பாவன நரசிம்மர்  கோவிலுக்கு மட்டும் அரை நாளா? கொஞ்சம் பொறுத்திருங்கள்  காரணம் சொல்கிறேன் என்று கூறி உங்களை அதிக நாட்கள் காக்க வைத்து விட்டேன். சில நாட்கள் ஊரில் இல்லாததால் தாமதம் ஆகி விட்டது. மன்னித்து விட்டு தொடர்ந்து படிக்கவும்.       

மதிய உணவை முடித்து விட்டு பாவன நரசிம்மர் கோவிலுக்கு கிளம்பினோம். இங்கும் ஜீப்பில்தான் செல்ல வேண்டும் என்பதால் அவரவர் காலையில் எந்த ஜீப்பில் சென்றீர்களோ அதே ஜீப்பில் ஏறிக்கொள்ளுங்கள்  என்றார்  கைடு  மற்றவர்கள்  அந்த அந்த ஜீப்பில் ஏறிக்கொண்டு  விட்டார்கள்  எங்கள்  ஜீப் டிரைவரை நாங்கள் கூப்பிட்ட பொழுது அவர் எங்களைப் பார்த்து மையமாக சிரித்தாரே ஒழிய   அடையாளம் தெரிந்து கொண்டதாக தெரியவில்லை... அந்த கைடு சொன்ன பிறகே எங்களை ஏற்றிக்கொண்டார் "என்ன இந்த ஆளு? கார்த்தால பார்த்தவரை  மதியும்  அடையாளம்  தெரியாதா?"  என்று  நினைத்துக்கொண்டோம், விஷயம்  வேறு என்பது பிறகு தெரிந்தது.  .

பறந்தது பாருங்கள் எங்கள் வண்டி..! தேசிங்கு ராஜன் குதிரை கெட்டது.. ! மற்ற வண்டிகளில் இருந்தவர்கள் எங்களை பார்த்து பொறாமைப் பட நாங்கள் விரைந்தோம்..! 15 நிமிடங்கள் நல்ல சாலை, அதன் பிறகு வனப்பகுதி துவங்குகிறது... எதுவாக இருந்தாலும் எங்களுக்கு என்ன? அதான் தேசிங்கு ராஜன் இருக்கிறாரே என்று சற்றே இறுமாந்து ஜாலியாக பேசிக்கொண்டு வனக்காட்சிகளை வீடியோ எடுத்துக்கொண்டு சென்றோம்... சுற்றிலும் மரங்கள், கீழே சரளைக் கற்கள் இடையே சல சலத்து ஓடும் சிற்றாறு... என்ன ஒரு அழகான இயற்கை காட்சி என்று மிகவும் ரசித்தபடி சென்று   கொண்டிருந்தோம்.. திடீரென்று வண்டி நின்று விட்டது..  டிரைவர் கீழே இறங்கி என்னவோ செய்தார்.. பிரச்சனை என்ன என்று விசாரிக்க எங்களில் யாருக்குமே தெலுங்கு போதவில்லை.. பின்னால் வந்து கொண்டிருந்த எங்கள் குழுவினரின் வண்டி ஒன்று நின்றது அதிலிருந்த கைடு மற்றும் டிரைவர் இறங்கி வண்டியை பழுது பார்க்க உதவினர்... "சின்ன ப்ராப்லம்தாங்க சரி பண்ணிடலாம்.."என்றதோடு நிற்காமல் எங்கள் வண்டி ஓட்டுனரை காண்பித்து," இவருக்கு கண் கொஞ்சம் சரியா தெரியாதுங்க, பழக்கத்துல ஓட்டுறாரு" என்றரேப் பார்க்கலாம்.. கண்ணு மண்ணு தெரியாம ஓட்டுறதுன்னா இதுதானா என்று நினைத்துக்கொண்டோம்.. அதருக்கு பிறகு பேச்சாவது சிரிப்பாவது எங்களோடு வந்த ஒரு மாமி செல் போனில் விஷ்ணு சஹாஸ்ரனாமத்தை ஒலிக்கச் செய்ய கூடவே நாங்களும் ஸ்மரித்துக்கொண்டு   சென்றோம். சரளை கற்கள் முடிந்த  பிறகு  சகதியும்  நொடியுமான   பாதை  தொடங்கியது. ராமாபுரம், போரூர், மடிப்பாக்கம் போன்ற புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சேர், சகதி, நொடி, போன்ற பாதைகள் பழகியிருக்கும் ஆனால் அதைப் போல ஆறு மடங்கு சகதி.... பத்து மடங்கு நொடி..  அதில் எங்களோடு வந்த, ஒரு  வண்டி  மாட்டிக்கொண்டதும்  எங்களுக்கு இன்னும் அதிக பயம் பிடிதுக்கொன்டது. எப்படியோ பாவன நரசிம்மர் கோவிலை அடைந்தோம். 

சிறிய  கோவில், சிறிய மூர்த்தம். செஞ்சுலட்சுமி என்னும் வேடுவப்பெண் நரசிம்மரை மணந்து கொள்ள வேண்டும் என்று தவமிருந்து அவரை மனது கொண்டதாக ஐதீகம். எனவே இங்கிருக்கும் வேடுவ, மற்றும் மலைஜாதி மக்களுக்கு இவரே குல தெய்வமாக  விளங்குகிறார்.  பிரார்த்தனை தலமாக விளங்குவதால் முடி கொடுப்பது, ஆடு, கோழி போன்றவைகளை பலி கொடுப்பது போன்றவை பழக்கத்தில் உள்ளன. இங்கும் நல்ல அதிர்வுகளை உணர முடிந்தது.

அன்று  இரவு சாப்பாடு  முடிந்ததுமே மறு நாளுக்கான  நிகழ்ச்சி  நிரல்  தெரிவிக்கப்பட்டது. மறு நாள் மேல் அஹோபிலம், வராஹா நரசிம்மர், உக்ர(ஜ்வாலநரசிம்மர்) நரசிம்மர், மாலோல நரசிம்மர் இவர்களை  தரிசிப்பதாக ஏற்பாடு.  ஜ்வாலா நரசிம்மர் மற்றும் மாலோல நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் பாதை முழுக்க முழுக்க மலை பாங்கானது என்பதால் லைட்டாக சாப்பிட்டு விட்டு செல்வதே நலம் என்றும், கையிலும் அதிக கணம் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் சொன்னார்கள். அதன்படியே காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு மேல் அஹோபிலம் சென்றோம்.

மேல்  அஹோபிலம் பெயருக்கு ஏற்றாப்போல நிஜமாகவே  ஆச்சர்யமான தலம்தான்.  ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகு ஆவேசம் அடங்காமல் ஜ்வாலை வடிவமாக விளங்கிய நரசிம்மரை கண்டு பயந்த பிரகலாதன் ஓடி வந்து அமர்ந்து தவம் செய்த குஹை இது, அங்கு தன் உக்ர ரூபத்தை மாற்றிக்கொண்டு பிரகலாதனுக்கு பெருமாள் காட்சி அளித்த இடம். இவ்விடத்தில் சிவ பெருமானும் நரசிம்மரை பூஜித்திருக்கிறார். அதர்க்கு சாட்சியாக சிறிய சிவலிங்கத்தையும் கருவறைக்குள் நுழையும் முன் தரிசிக்கலாம். மூலவர்  சுயம்பு மூர்த்தம், அருகிலேயே லக்ஷ்மி நரசிம்மராக உற்சவர், மூலவருக்கு எதிரே மண்டபத்தில் பிரகலாதன். அத்தனை பேரையும் ஒருங்கே தரிசித்துக்கொள்கிறோம்! 

இனிமேல் செல்ல வேண்டிய க்ரோட நரசிம்மர்,  ஜ்வாலா நரசிம்மர், மாலோல நரசிம்மர், உக்ர ஸ்தம்பம், மற்றும் பிரகலாதன் பயின்ற பாட சாலை, போன்றஅத்தனை இடங்களும்  மலை  பாங்கானவை  என்பதால்  நடப்பதற்கு சுலபமாக இருக்க ஊன்றி செல்ல தோதாக  கம்புகள்  மேல் அஹோபிலம் கோவில் வாசலிலேயே   வாடகைக்கு கிடைக்கின்றன. ஒரு கம்பிற்கு ரூ.10 கொடுக்க வேண்டும். கம்பு தேவை இல்லை என்று தன்னை மட்டும் நம்பி நடந்தவர்களும் உண்டு. 
மலை ஏறத் தயாராக நானும் பிரேமா மாமியும் நவீன ஒவையார் வேடத்தில்   

க்ரோட நரசிம்மர் சந்நிதி வரை பாதை சுலபமாகவே இருக்கிறது. அங்கேயே, "இதற்குப் பிறகு பாதை கடினமாகத்தான்  இருக்கும்  எனவே  வயது  முதிர்ந்தவர்களும், நடக்க முடியாதவர்களும் இங்கேயே இருந்து விடுங்கள், பெருமாளை தரிசித்தே தீர வேண்டும் என்பவர்கள் டோலியில் செல்லலாம் ஒரு டோலிக்கு ரூ.1800/- அளிக்க வேண்டும்" என்று அறிவித்தார்கள். அதன்படி சிலர் தங்கினார்கள், வெகு சிலர் டோலியில் செல்ல விரும்பினர், நாங்கள் மலை ஏற ஆரம்பித்தோம்.... 

அசல் காடு, அசல் மலை, முழுக்க முழுக்க இயற்கைச் சூழல்.... இந்த மலை ஏற்ற அனுபவங்களை விவரித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நான் சொல்லலாம், சுவையாக இருக்குமா என்று தெரியாது.. நீங்களே சென்று அனுபவிதுப்பருங்கள் . ... 

ஜ்வாலா நரசிம்மர் சிறிய மூர்த்தி, உக்ர வடிவினராக இருப்பாரோ என்று நாம் நினைத்தற்கு மாறாக மிகவும் சாந்தமாக காட்சி அளிக்கிறார். இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டுக்கொண்டு,  மடிமீது ஹிரண்யனை கிடத்தி எட்டு கரங்களுள் இரண்டு மடிமீது கிடைக்கும் ஹிரண்யனை அசையாமல் பிடித்திருக்க, இரண்டு கரங்கள் அவன் வயிற்றைக்கிழிக்க, இன்னும் இரண்டு கரங்கள் குடலை   மாலையாக போட்டுக்கொள்ள மற்ற இரண்டு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி இருக்கும் அற்புத கோலம்! தரிசித்துக்கொண்டு மாலோல நரசிம்மரை தரிசிக்க கீழே இறங்கினோம்.
ஜ்வாலா நரசிம்மர் கோவில் வாயிலில் சக யாத்ரிகர்களோடு  

மா  என்பது மகாலக்ஷ்மியை குறிக்கும். ஹிரண்யனை அழித்த கோபம் தீர்ந்த பிறகு மகாலட்சுமி தாயாரை  தன் மடியில் இருத்தி நரசிம்மர் காட்சி அருளும் இடம். இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டு, இடது மடியில் தாயார் இருக்க, தன் ஒரு திருக்கரத்தால் தாயாரை அணைத்துக்கொண்டு, மற்ற கரங்களில்  சங்கு,சக்கர, அபய  ஹஸ்தங்கலோடு காட்சி அளிக்கும்  சௌமிய   ரூபம்.     

புராண காலத்தில்  இந்த  இடத்தில்தான்  ஹிரண்யகசிபுவின்  அரண்மனை  இருந்ததென்றும் , இங்கிருந்த ஒரு தூணிளிருந்துதான் நரசிம்மர் வெளிப்பட்டார் என்றும் காலப் போக்கில் அரண்மனை அழிந்துவிட, அவர் ஆவிர்பவித தூணின் எச்சம் இன்னும் உக்ர ஸ்தம்பம் என்னும் பெயரோடு இருக்கிறது. அதன் அருகே சென்று தரிசிக்க வேண்டுமென்றால் கிட்டத்தட்ட தவழ்ந்தபடியேதான் செல்ல வேண்டும் என்பதாலும், நாங்கள் சென்ற வாரத்திற்கு முதல் வாரம்தான் ஒரு விபத்து நிகழ்ந்திருந்தது என்பதாலும் எங்களுக்கு உக்ர ஸ்தம்பம் அருகே செல்ல அனுமதி  வழங்கப்படவில்லை. தொலைவில் இருந்தபடியே தரிசித்துக்கொண்டோம்.
உக்ர ஸ்தம்பம்

நவ நரசிம்மர்களில் கடைசியாக நாங்கள் தரிசித்தது கரஞ்ச நரசிம்மர். நாம் வேறு எங்கேயும் பார்க்க முடியாத ஒரு அதிசய கோலத்தில் கையில் வில்லும் அம்பும் ஏந்தி காட்சி அளிக்கிறார் நரசிம்மர். முன்பொரு காலத்தில் கரஞ்ச வனமாக விளங்கிய இங்கு, ராமனை காண வேண்டும் என்று தவம் இருந்த ஆஞ்சநேயருக்கு நரசிம்ம பெருமான் காட்சி அளிக்க, "நீங்கள் யார் நான் ராமனை காண வேண்டும் என்றல்ல்வா தவம் செய்தேன்"? என்று வினவிய ஹனுமனுக்கு,"நான்தான் ராமன்" என்று விடை அளித்தாராம் பெருமாள்,ஆனால் ஹனுமானோ," என் ராமன் அழகானவன், உம்மைப்போல சிங்க முகம் கொண்டவன் அல்லன்" என்று கூறிவிட, தான் வேறு,ராமன் வேறு  அல்ல என்று மெய்பிக்க, ராமனுக்கு உரிய வில்லையும் அம்பையும் தாங்கி காட்சி தந்தாராம் நரசிம்மர். தவிர நவ நரசிம்மர்களில் இவருக்கே நெற்றிக்கண் உள்ளது. தீபாராதனை சமயத்தில் நெற்றிக்கண்ணை திறந்து காட்டுகிறார்கள். மிக நல்ல அதிர்வுகளை  கொண்டுள்ள இவ்விடத்தில் த்யானம் செய்வது  நல்ல பலன்களை தரும் என்று கூறுகிறார்கள். உண்மை  என்றே  தோன்றுகிறது.                                         ,                                                                                   

வைணவ சம்ப்ரதாயத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரே பெரிய  பெருமாள்  என வழங்கப்படுவார் ஆனால் அஹோபிலம் நரசிம்மரோ பெரிய பெரிய பெருமாள் எனப்படுகிறார். அஹோபிலம் நரசிம்மரை  கருடன்  பூஜித்திருக்கிறார், சிவ பெருமான் பூஜித்திருகிறார், வன வாசத்தின் பொழுது ராம லக்ஷ்மனர்களும் இவரை வணங்கி இருக்கிறார்கள்,  இப்படி அவதார புருஷர்களும், தெய்வங்களுமே வழிபட்டதாலேயே இவர் பெரிய பெரிய பெருமளாகிறார்!   இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த பெருமாளின் அருளாலே அவரை நானும்  சேவித்தேன்! அதோடு மட்டுமல்லாமல் தன்னைப்பற்றி என்னை கொண்டு எழுத வைத்தான்.
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உந்தனோடு 
உற்றமே ஆவோம்;உமக்கே யாம் ஆட் செய்யோம் மற்றை நம் காமங்கள் மாற்று..
என்று   வேண்டி விடை பெரு முன்.....

எங்களை  மிக வசதியாக,  சௌகரியமான பேருந்து பயணம், திருப்தியான தங்குமிடங்கள், அருமையான உணவு, அவசரப்படுத்தாமல் சுற்றிகாட்டிய வழிகாட்டிகள் என்று  அழைத்துச்சென்ற ஜெயஸ்ரீ  டிராவேல்சுக்கு  மனமார்ந்த நன்றிகள்!  மேலும் இந்த தொடரை படித்து, பாராட்டி,
உற்சாகப்படுத்திய அத்தனை அன்பு  உள்ளங்களுக்கும்   நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கங்களும்! 
        

                                                 நாராயண! நாராயண! நாராயணா!
                                                       


                                                                                 

Thursday, December 16, 2010

aacharyamana ahobilam - II

நெல்லூரிலிருந்து அஹோபிலம்  செல்லும் வழி ஆந்திராவின் அழகையும் வளத்தையும் செப்புகிறது.

இரவு சுமார் ஒன்பதரைக்கு அஹோபிலத்தை அடைந்தோம் .  அங்குள்ள அஹோபிலம் மடத்தில் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வார இறுதி என்பதால்  யாத்ரிகர்கள்  வந்த வண்ணம்  இருந்தார்கள். "முன்பெல்லாம் இத்தனை கும்பல்  கிடையாது, இப்பொழுது  மீடியாயக்களில் கோவில்களை பற்றி அதிகம் வருவதால் வார இறுதி என்றால் ஒரே கும்பல்தான்" என்று ஒரு பட்டாச்சாரியார் கூறினார்.

 108 வைஷ்ணவ திருப்பதிகளில் முக்கியமான ஒன்று.  திருமங்கை ஆழ்வாரால் பாடப் பெற்றது.   அஹோபிலம் என்று  வட மொழியில்  கூறப்பட்டாலும்  தமிழில் சிங்கவேழ் குன்றம் என்று அறியப்படும் இந்த திவ்ய தேசம்  கிழக்கு தொடர்ச்சி மலையில்  அமைந்துள்ளது.  ஆதிசேஷனே மலையாக சுருண்டு படுத்திருப்பதாகவும், படமெடுத்திருக்கும் அதன் தலைப்பகுதி திருப்தி(திருமலை), உடல் அஹோபிலம், வால் பகுதி ஸ்ரீ சைலம் என்றும் ஐதீகம். மஹா விஷ்ணுவை நரசிம்மராக தரிசிக்க ஆவல் கொண்ட கருடன் இங்கே தபஸ் செய்ய அவருக்கு நரசிம்மராக பகவான் காட்சி அளித்த இடம் இது என்பதால் இந்த மலை கருடாசலம் என்றும் அறியப்படுகிறது.

மறு நாள் காலை விஸ்வரூப தரிசனம்  காண அஹோபிலம் கோவிலுக்குக் சென்றோம். மூலவர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள். அமர்ந்த கோலத்தில்  சங்கு சக்கர தாரியாக இடது மடி மீது தாயாரை இருத்திக்கொண்டு ஒரு கை அபயம் அளிக்க மறு கையால் தாயாரை அணைத்த வண்ணம் நான்கு கரங்களோடு அருளுகிறார். அமிர்த வல்லி தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார்.  ப்ராகாரத்தில்   கல்யாண  கோலத்தில்  பத்மாவதி தாயாரோடு ஸ்ரீனிவாச பெருமாளுக்கும் தனி சந்நிதி உள்ளது. திருப்பதியில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருமணம்  நடக்கும் பொழுது செய்யப்படும் நைவேத்தியத்தை அஹோபில  நரசிம்மரே ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். கற்றளி கோவில். மண்டபத்திலும் பிராகார சுற்று சுவர்களிலும்  வெகு  அழகான  சிற்பங்களை  காண முடிகிறது. கிருஷ்ண தேவராயர் எடுபித்த கோவில்.  கிருஷ்ணா தேவா ராயர் தன்னுடைய  வெற்றியை  கொண்டாட ஜெய ஸ்தம்பம் நிறுவி உள்ளார். அதனாலோ என்னவோ சுற்று சுவர் சிற்பங்களில் போர் காட்சிகள் அதிகம்  காணப்படுகின்றன. ஒரு சில  கஜுரஹோ பாணி சிற்பங்களும் இருக்கின்றன.
குதிரை மீதமர்ந்து யானை மீது அம்பு தொடுக்கும் வீரன்  
  
மற்றும் ஒரு போர் காட்சி  

அன்று   காலை சிற்றுண்டிக்குப்பிறகு பார்கவ நரசிம்மரை  தரிசிக்க  சென்றோம். எங்களுடைய திட்டப்படி நவ நரசிம்மர்களில் அன்று பார்கவ நரசிம்மர்,  பாலயோக  நரசிம்மர், சத்ரவட நரசிம்மர், மற்றும் பாவன நரசிம்மர் என்று நான்கு நரசிம்மர் கோவில்களை சேவிப்பதாக ஏற்பாடு. இதற்கென்று ஜீப்புகளை டிராவல்ஸ்காரர்களே ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஜீப்புகள் ஒரு ஹெட் லைட் இல்லாமல் காயலான் கடைக்குச் செல்ல தயார் நிலையில் இருந்தன. ஒரு ஜீப்பில் எல்லோரும் அமர்ந்த பிறகு இரண்டு  பேர்கள்  தள்ளி  ஸ்டார்ட்  செய்ய வைத்ததைப் பார்த்த நான் என் தோழியிடம்,"பிரமிளா, அங்கே பாருங்கள் வண்டியை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்கிறார்கள் என்றேன்.."  "எல்லா வண்டியும் அப்படிதான்.." என்று அவள் என் வாயை அடைத்தாள்.
பார்கவ    நரசிம்மர் கோவிலுக்குச் செல்ல சுமார் 130 ௦ படிகள்  ஏற  வேண்டும்.  பார்க்க முனிவர் ஸ்ரீமன் நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யனை வதைத்ததை
தனக்கு காட்சி அருள வேண்டும் என்று தவம் இருக்க, அவருக்கு அப்படியே பெருமாள் காட்சி தந்த கோலம். பெருமாள் சதுர் புஜங்களோடு, தன் மடி மீது ஹிரண்யனை போட்டுக்கொண்டு அவன் குடலை கீழ் இரு கரங்களால் கிழித்த படியும், மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியும் காட்சி அளிக்கிறார். சிறிய சுயும்பு மூர்த்தம். படிகள் துவங்கும்  இடத்தில் பார்கவ முனிவரால் உண்டாக்கப்பட்ட சிறிய குளம் பார்கவ  தீர்த்தம்என்று அழைக்கப்படுகிறது. அதில் தண்ணீர் எப்போதும் வற்றுவது கிடையாது என்பதால் அக்ஷய தீர்த்தம் என்றும் வழங்கப்படுகிறது.    அதிலிருந்துதான்  பெருமாளுக்கு  திருமஞ்சனத்திர்க்காக தீர்த்தம் எடுத்துச்  செல்லப்படுகிறது.

இந்த குளத்து நீரை தலையில் தெளித்துக் கொள்ளலாம் என்று     நாங்கள்  சென்ற  போது அஹோபிலத்திர்க்கு முப்பது வருடங்களுக்கும் மேலாக சென்று கொண்டிருக்கும்  ஒருவர், "ஒரு முறை இந்த குளத்தில் கால் அலம்பினேன் ஒரு முதலை  சர்ரென்று  வந்தது அவசர அவசரமாக கரை ஏறி ஒரே ஓட்டம்தான்" என்றார்.  எங்களுக்கு  எதுவும்  பயம் இல்லை முதலை வந்து காலை கவ்வினால் ஆதி மூலமே! என்று அழைத்து விடுவோம், பெருமாள் பாவம் ஓடி வர வேண்டும். அதெல்லாம் வேண்டாம் என்று அதன் கரையில் நின்று போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டோம்.
அக்ஷய தீர்த்தத்தின் முன் நானும் ப்ரமீலாவும்
 
 இதற்குப் பிறகு சத்ரவட நரசிம்மரை தரிசிக்க சென்றோம். வட மொழியில் சத்ரம் என்றால் குடை என்று பொருள்; வடம்  என்பது  அரச  மரத்தைக்  குறிக்கும். அரச மரமே  ஒரு குடை போல கவிழ்ந்திருக்க அதனடியில் பத்மாசனத்தில் நான்கு திருக்கரங்களோடு  நரசிம்ம பெருமான் எழுந்தருளியிருக்கும் அழகை வர்ணிக்க எனக்கு ஆற்றல் போதாது.  சற்றே பெரிய சாளக்ராம விக்கிரகம்.

பெருமாள் தலையில்  கிரீடம், மார்பில் ஹாரம், கால்களில் சதங்கை, கைகளில் காப்பு, விரலில் மோதிரம் என்று சர்வாபரண பூஷிதராக விளங்குகிறார். மேலிரண்டு கைகளும் சங்கு சக்கரம் தாங்கி இருக்க, கீழ் வலது  கை அபய ஹஸ்தமாகவும், இடது  கையை  தொடையில்  ஊன்றியும்  வித்தியாசமான  ஒரு கோலத்தில் விளங்குகிறார். இதைப் பார்த்த ஒருவர், "வலது கை அபய ஹஸ்தமாக இருந்தால் இடது கை வர ஹஸ்தமாக இருக்கும் அல்லது கையை இடுப்பில்  வைத்து  கொண்டிருந்தால் பொருத்தமாக இருக்கும். இதிலே வலக்கரத்தை தொடையில் வைத்துக் கொண்டிருக்கிறாரே"? என்று கேட்டார். அதற்கு  கோவில் பட்டாச்சாரியார்,  "இங்கு 'ஆஹா', 'ஊஹு' என்று இரண்டு கின்னரர்கள் பெருமாளை இசையாலும் நடனத்தாலும் வழிபட்டனராம் அவர்களின் பெர்பார்மன்சை பகவான் தொடையில் தாளம் போட்டு ரசிப்பதாக ஐதீகம்". என்று விளக்கம் அளித்தார். ஒரு வேளை அதனால்தான் இப்பொழுதும் கூட உச்ச பட்ச பாராட்டு வார்த்தைகளாக  ஆஹா ஊஹு  என்று சொல்கிறோம் போலிருக்கிறது! இந்த கோவில் அமைந்திருக்கும் அழகை சொல்வதா? பெருமாளின் அழகை போற்றுவதா? அல்லது அங்கு நிலவும் சாநித்தியத்தை வியப்பதா?   நவ நசிம்மர்களில் என்னை மிகவும் கவர்ந்த கோவில் இது.

இதை அடுத்து  யோக நரசிம்மரை சேவித்தோம். பிரஹலாதனுக்கு யோக முத்திரைகளை கற்பித்த இடம் என்று நம்பப்படுகிறது. நான்கு கரங்களோடு கூடிய சிறிய மூர்த்தம். மேல் இரண்டு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியும் கீழ் இரண்டு கரங்களில் யோக முத்திரை காட்டிய படியும் அருளுகிறார்.

இந்த கோவிலுக்கு வெளியே ஒரு மண்டபத்தில் நவ நரசிம்மர்களும் எந்தெந்த நரசிம்மர் எந்தெந்த க்ரஹதிற்குரியவர் என்ற குறிப்போடு நவ கிரகங்கள் போல வட்டமாக எழுந்தருளப் பட்டிருக்கின்றனர். அம்மூர்தங்களை தனித் தனியே வலம் வரவும் முடியும். 

இதோடு எங்கள் காலை தரிசனங்கள் முடிந்தன. மதியம் பாவன நரசிம்மரை தரிசிக்கலாம் என்றார்கள். ஒரே ஒரு கோவிலுக்கு அரை நாளா? என்று நினைத்தேன்...என் யோசனை சரியா? தவறா? கொஞ்சம் பொறுத்திருங்கள் சொல்கிறேன்...                     



                                                

Monday, December 6, 2010

aachirayamaana ahobilam...!

அஹோபிலம் என்பதற்கு ஆச்சர்யமான குகை என்று பொருளாம். நிஜமாகவே ஆச்சர்யம்தான் குகை மட்டுமல்ல, அமைந்திருக்கும் இடம் மற்றும் அங்கு நிலவும் தெய்வீக சானித்தியமும்!

"ஜெயஸ்ரீ டிராவேல்சில் அஹோபிலம் அழைத்துச் செல்கிறார்கள் மூன்று நாள்கள் யாத்திரை, நீங்களும் வருகிறீர்களா?"  என்று என் தோழி பிரமிளா கேட்டதும் அதிகம் யோசிக்காமல் "சரி"  என்று விட்டேன். பிறகு கொஞ்சம் பயம் வந்தது, "அஹோபிலம் போனால் அரை சொர்க்கம் போனது போல என்பார்களே.. "என்று ஒரு சிந்தனையும், "ஏதோ பெருமாள் நம்மை அழைக்கிறார் போலிருக்கிறது, போகும் வரை தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணலாம்" என்று நினைத்துக்கொண்டாலும் செயல் படுத்தியது என்னவோ ஒரு நாளைக்கு மட்டும்தான்.

மூன்று நாட்களுக்கு தேவையான உடைகள், ஒரு மெல்லிய போர்வை,  டார்ச் லைட், மற்றும் உங்களுக்கு தேவையான மருந்துகள் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சாமான்களின் பட்டியல் தந்தார், டூர் ஆபரேடர். அதோடு செல் சார்ஜெர், காமிரா என்று நான் சேர்த்துக்கொண்டேன். ஆனால் வேறு சிலர் கல்கண்டு, உலர்ந்த திராட்சை, பாதாம் இவைகளை ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்துக்கொண்டு எல்லா கோவில்களிலும் அர்ச்சனை செய்யும் பொழுது  கையோடு கொண்டு வந்திருந்த சிறிய மரபேழையில் இவைகளை போட்டு நெய்வேத்தியம் செய்ய செய்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் கருவறை தீபத்தில் சேர்க்க நெய் கொண்டு வந்தவர்களும் உண்டு. ஒரு மாமி கையோடு அரிசி மாவு கொண்டு வந்து சுவாமி சந்நிதியில் கோலம்  கூட போட்டார்.

நவம்பர்  25 வியாழக்கிழமை தி.நகர் நாதேல்ளாவுக்கு அருகே இரவு ஒன்பது முப்பதுக்கு புறப்பட்ட எங்கள் பேருந்து இரவு இரண்டு மணிக்கு நெல்லூரை அடைந்தது. அங்கு ஒரு கல்யாண சத்திரத்தில் தங்க வைக்கப்பட்டோம். காலை ஐந்து மணிக்கு காபிக்குப் பின்னர் அருகில் இருந்த நெல்லூர் ரெங்கநாதர் கோவிலில்  விஸ்வரூப தரிசனம்! எங்கெல்லாம் ஆறு இரண்டாக பிரிகிறதோ அங்கெல்லாம் ரெங்கன் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருவார் என்னும் கோட்பாட்டின்படி இங்கு வட பெண்ணை ஆறு இரண்டாக பிரிகிறது நடுவே  ஆதிசேஷன் மீது  பள்ளிகொண்ட அரங்கன், அவருடைய தொப்பூழிளிருந்து  புறப்பட்ட தாமரையில் பிரம்மா. வடக்கே சிரம் வைத்து தெற்கே பாதம். அழகான திருக்கோலம்!  தனி சந்நிதியில் அருள் வடிவான தாயார். கண் குளிர தரிசம் செய்தோம்   அதன் பின்னர் அருகிலேயே இருந்த ஸ்ரீதேசிகன் மடத்திலேயும்  தரிசனம் செய்தோம்.  சமீபத்தில்   கட்டப்பட்டுள்ள  தேசிகன் மடத்தில் பெரிய அளவில் மகாவிஷ்ணுவின்   
 விஸ்வரூப கோலம், சக்கரத்தாழ்வார், யோகா நரசிம்மர் சிலைகள் கண்ணைக் கவருகின்றன.    
வடபெண்ணை ஆற்றங்கரையில் பிரேமா மாமி,உஷா மற்றும் நான்  

நரசிம்மாகுடாவில் கருடன் புடைப்பு சிற்பம்  

 

Premila infront of Mahavishnu staue - Desikan asram 

நரசிம்ம குடாவில் அனுமன் புடைப்பு சிற்பம்
 

நெல்லூர் தேசிகன் ஆஸ்ரமத்தில் நவீன சிற்பங்கள் முன்பு கட்டுரை ஆசிரியர்      
 
அதற்குப் பிறகு சிற்றுண்டி, பிறகு நரசிம்ஹாகுடாவிற்கு சென்றோம். சிறிய குன்றின் மீது அமைந்துள்ள அழகிய கோவில். கீழேயே அர்ச்சனை தட்டு, சீட்டு முதலியவை வாங்கிக்கொண்டு சென்று விட வேண்டும். சுயும்பு மூர்த்தியான மூலவர், அளவில் பெரியவர். வெள்ளி கவசம் அணிவித்திருந்தார்கள். அந்த சன்னதியிலும் அமிர்தவல்லி தாயார் சன்னதியிலும் மிக நல்ல அதிர்வுகளை உணர முடிகிறது. விசாலமான பிராகாரம் .  பிராகரத்தில்  மகாலக்ஷ்மிகென்று தனி சந்நிதி உள்ளது. 
 அங்கிருந்து புஜ்ஜிரெட்டிபாளையத்தில் உள்ள  ராமர்  கோவிலுக்குச்  சென்றோம். இதுவும் சிறிய கோவில்தான்.  கருவறையில்  நின்ற திருக்கோலத்தில் ராமர், லக்ஷ்மணர் மற்றும் சீதா பிராட்டி! அவர்களுக்கு கீழே சிறிய விக்கிரக ரூபங்களாக  சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர்  சேவை சாதிக்கிறார்கள். கோவிலுக்கு வெளியே ராமர் சன்னதிக்கு நேர் எதிரே  கூப்பிய கரங்களோடு சிறிய கோவிலில் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர்! கோவிலின் நுழை வாயில் அழகிய சிற்பங்களோடு விளங்குகிறது.  வாயிலின் இரண்டு புறமும் மற்றும் விதானத்தில் செதுக்கப்பட்டிருக்கும்  தசாவதார,அஷ்ட லக்ஷ்மி சிற்பங்கள் மிகவும்   அழகாக   இருக்கின்றன. 
 
 
 
 
முதல் நாள் தரிசனங்களை முடித்துக்கொண்டு  மதிய உணவையும்  முடித்துக்கொண்டு அஹோபிலம் புறப்பட்டோம்.   
 
அஹோபில  யாத்திரை அனுபவங்கள் தொடரும்.....