கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, March 21, 2012

what is in name?

ஒரு ரோஜாவை எந்த  பெயரிட்டு  அழைத்தால் என்ன?  அது  ரோஜாவாகத்தனே இருக்கும்  என்னும் ஷேக்ச்பீயரின் பிரபலமான
மேற்கோளை எல்லோரும் ஒரு முறையாவது மேற்கோள் காட்டாமல்
இருக்க மாட்டோம். ஆனால் பெயர் அவ்வளவு சாதாரணமான விஷயம்
கிடையாது என்பது 18 .3 .12 அன்று 'நீயா நானா'வில் விவாதிக்கப்பட பொழுது
புரிந்தது. பெண் பெயரைக் கொண்ட ஆண்களும், ஆண் பெயரைக் கொண்ட
பெண்களும் விவாதத்தில் கலந்துக் கொண்டனர். ராஜரத்தினம், புகழேந்தி என்ற
பெண்களும், சிந்து, தேன்மொழி என்றெல்லாம் பெயர் கொண்ட ஆண்களும்
கலந்து கொண்டனர்.

பொதுவாக ஆண் பெயெர் கொண்ட பெண்களெல்லாம் தங்கள் பெயரால்
தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை கூறும் பொழுது அதிகம் உணர்ச்சி
வசப்படாமல் இயல்பாக பேசினார்கள்.மேலும் ஆண் பெயரைக் கொண்டிருப்பது தங்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கிறது
என்று கூட கூறினார்கள். இதற்க்கு நேர் மாறாக பெண் பெயரைக் கொண்டிருக்கும்
ஆண்களின் பேச்சில் கழிவிரக்கமும், கோபமும், தாபமும் வெளிப்பட்டன.
ஒரு இளைஞர் தனக்கு பெண் பெயரை வைத்த  தன் பெற்றோர்  மீது  வெறுப்பு  வருகிறது என்றார். மற்றொருவருக்கு பேசும் பொழுது துக்கம் தொண்டையை
அடைத்தது.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த சாரு நிவேதிதா(இவர்  நீயா  நானாவின்  நிலைய வித்வான்) இப்பொழுது பெயர்கள் தம் அடையாளங்களை இழந்து
விட்டன என்றார். உண்மைதான். முன்பெல்லாம் பெயரை  வைத்து  அவர்  தென் இந்தியரா, வட இந்தியரா என்று  கணிக்க  முடியும்.  ஏன்  தமிழ் நாட்டை  எடுத்துக் கொண்டாலே பெயரை வைத்து அவர் தமிழ் நாட்டின்  எந்த  பகுதியைச்  சார்ந்தவர்,  எந்த  குலத்திரிக்குரியவர்  என்றெல்லாவற்றையும்  அறிந்து கொண்டுவிட முடியும்.

குருசாமி, குருநாதன், சுவாமிநாதன் போன்ற பெயர்களை கொண்டவர்கள் என்றால் அவர்களுக்கு சுவாமி மலை முருகன் குல தெய்வமாக இருக்கும்.
மன்னார்குடியை சேர்ந்தவர்கள் ராஜகோபாலன், விமலா என்றெல்லாம் பெயர்
வைப்பார்கள்.  மாது என்னும் மாத்ருபூதம்,  சுகந்தா/சுகந்தி,  ஜம்புநாதன்,  அகிலா போன்ற பெயர்கள் திருச்சி மாவட்டகாரர்களுக்கு    உரியவை.  சப்த ரிஷி, ஸ்ரீமதி போன்ற பெயர்கள்  லால்குடி  வட்டத்தில்  உண்டு.  காந்திமதி, கோமதி, நெல்லையப்பன் போன்ற பெயர்கள்  நெல்லை  மாவட்டதிற்குரியவை  என்று  சொல்லத்   தேவை    இல்லை. 

தாங்கள் வைணவவர்கள் என்று அப்பட்டமாக வெளிப்படுத்தும் கமலவல்லி, வேதவல்லி, குமுதவல்லி,உப்பிலி, கேசவன்,போன்ற பெயர்களும் மற்றும் ஆராவமுதன், வகுளாபரணன் என்ற அழகான தமிழ் பெயர்களும் போனதெங்கே?

நிகிதா என்றால்  ரஷ்ய  மொழியில் 'சாந்தி' என்று  பொருளாம், அதனால்  தன்  மகளுக்கு நிகிதா என்று பெயர் வைத்திருப்பதாக ஒரு பெண்மணி கூறினார்.
சாந்தி என்றே வைத்திருக்கலாமே! எந்த ரஷ்யரும் சாந்தி என்று  பெயர்  வைப்பதாக  தெரியவில்லை.  ஏன்   நாம்  வட  இந்திய  பெயர்களை  ஸ்வீகரித்திருக்கும் அளவிற்கு அவர்கள் செய்வதாக தெரியவில்லை. நாம்தான்
நம் அடையாளங்களை தொலைத்து விட்டு நிற்கிறோம்.

எனிவே, ஒரு ஜோக்கோடு இதை முடிக்கலாம் என்று நினைகிறேன். அருண ஜடை என்னும்
வித்தியாசமான பெயர் கொண்ட ஒரு நண்பர் சொன்ன ஜோக் இது. ஒருவனுக்கு முதலில் பிறந்த
பெண் குழந்தைக்கு பூஜா என்று பெயர் வைத்தானாம் , இரண்டாவதாக பிறந்த
பெண்ணுக்கு ஆர்த்தி என்று பெயர்  சூட்டி  விட்டான்.  மூன்றாவதாக  பிறந்தது  ஆண் குழந்தை, என்ன பெயர் வைக்கலாம்  என்று  நண்பரிடம்  ஆலோசனை  கேட்க,  குறும்புக்கார  அந்த  நண்பன்,  பேசாமல்  குருக்கள்  என்று  வைத்து  விடேன் என்றானாம்.