கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, April 20, 2016

Morning Marina

MORNING MARINA


"ஞாயிரு காலை பீச்சுக்கு போகலாமா"? என்றேன், வெளியே செல்வதில் அதிக விருப்பம் கொண்ட என் கணவர் உடனே ஆமோதித்தார். காலை ஐந்து முப்பதுக்கு பீச்சில் இருந்தால் உதய சூரியனை, சீ சீ சூரிய உதயத்தை காணலாம். அப்படியே பிள்ளையார் சதுர்த்தி அன்று வாங்கிய பிள்ளையாரையும் கடலில் விசர்ஜனம் செய்து விடலாம். ஒ.கே. டன்! என்று முடிவு செய்தோம். எங்களோடு பெண், மாப்பிளையும் சேர்ந்து கொண்டார்கள். பிறகு என்ன, காலையில் பீச், பிறகு கற்பகாம்பாள் கோவில், பிறகு சரவண பவனில் சிற்றுண்டி.. என்று திட்டம் போட்டு கொண்டோம்.

எல்லோரையும் போலவே எனக்கும் கடலை பார்க்க பிடிக்கும். கடலோ,மலையோ அந்த பிரம்மாண்டத்தின் முன் நாம் எத்தனை சிறியவர்கள் என்ற எண்ணம்தான் தோன்றும். கடலை கை கூப்பி வணங்கத் தோன்றும். ஏதோ ஒன்றிர்க்கு கட்டுப்பட்டு கடல் தன் எல்லையை மீறாமல் இருக்கிறது. அது மீறினால்..? சீறினால்..? ஒரு முறை சீறியதை பார்த்தோமே.! 

திருச்சியில் வசித்த வரை விடுமுறையில் போர் அடிக்கும் பொழுதெல்லாம், "மெட்ராசில் இருந்தால் பீச்சுக்காவது போகலாம், இங்கு எதுவும் இல்லை" என்று கூறுவோம். எங்களுக்கெல்லாம் அப்போது  மெட்ராசில் இருக்கும் அத்தனை பேரும் தினசரி பீச்சுக்கு செல்வார்கள் என்றுஒரு நினைப்பு .  இதைத் தவிர லா.ச. ரா. அவர்கள் தன்னுடைய சிந்தாமணி என்னும் நூலில் இரவில் பீச்சில்  அமர்ந்து கொண்டு  க.நா.சு., புதுமை பித்தன்,ந.பிச்சமூர்த்தி போன்ற மணிக் கொடி இலக்கிய ஜாம்பவான்கள் நடத்திய இலக்கிய பரிவர்த்தனை பற்றியும், என் அபிமான எழுத்தாளராகிய இந்துமதி தன் நண்பர்களான மாலன், சுப்பிரமணிய ராஜு, பாலகுமாரன் போன்றவர்களோடு தான் நடத்திய இலக்கிய விவாதங்களைப் பற்றியும் படித்த பிறகு என் பீச் ஆசை அளவு கடந்து போனது. ஆனால் இங்கு வந்த பிறகு நிதர்சனம் வேறு மாதிரி இருக்கிறது. 

சென்னையில் செட்டில் ஆகி பதிமூன்று வருடங்கள் ஆகின்றன, இது வரை பதிமூன்று முறை பீச்சுக்கு சென்றிருப்போமா என்பது சந்தேகம்.ஆரம்பத்தில் சில முறை மாலையில் கடற்கரைக்குச் சென்றோம். அது கடற்கரையாக இல்லை. நடக்க முடியாமல் கடைகள், கடற்காற்றை அனுபவிக்கலாம்.. உணவகங்களிலிருந்து வரும் எண்ணை கமறல் வாசம் + மீன் பஜ்ஜி வாசத்தையும் சகித்துக் கொண்டு... குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்றால் கையேடு ஒரு குடை எடுத்துச் செல்வது நலம், அப்போதுதான் பொது இடம் என்று கூட தெரியாமல் தாறுமாறாக நடந்து கொள்பவர்களை உங்கள் குழந்தைகள் கண்ணில் படாமல் மறைக்க முடியும். ஆகவே இப்போதெல்லாம் கடற்கரைக்கு செல்வதென்றால் காலையில்தான் செல்கிறோம். 

எங்களைப் போல நிறைய பேர்கள் கலையில் வருகிறார்கள் என்பது அங்கு போகும் பொழுதுதான் தெரிகிறது. வாக்கிங் செல்லவும், உடற் பயிற்சி செய்யவும், விளையாடவும், குடும்பத்தோடு பொழுதை செலவிடவும், கை கோர்த்து நின்றபடி சிரிக்கவும்(லாபிங் கிளப்), பறவைகளுக்கு உணவிடவும், மூலிகை சாறு பருகவும்  பலர் வருகிறார்கள். பஜ்ஜி கடை மட்டும் வந்து விடக் கூடாது.







6 comments:

  1. படங்களும் சொல்லிப் போனவிதமும் அருமை
    இன்னும் விரிவாக எழுதி இருக்கலாமோ
    எனத் தோன்றியது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழத்தும் உற்சாகமூட்டுகின்றன.மிக்க நன்றி




      Delete
  2. நாங்களும் சென்னையில் பல ஆண்டுகள் இருந்திருக்கோம். அப்போதெல்லாம் கிராமத்தில் இருந்த என் மாமியார் என்னிடம், உனக்கென்ன, தினம் தினம் பீச்சுக்குப்போய்க் காத்து வாங்கிட்டு வருவே! இங்கே அப்படியா என்பார்கள்! அதோடு தினம் தினம் சினிமா, டிராமா என்று போவதாகவும் நினைத்துக் கொள்வார்கள். நிதரிசனம் என்பது அவர்களும் எங்களோடு வாழ வந்ததும் தான் மெல்ல மெல்லப் புரிந்தது. இங்கேயும் ஶ்ரீரங்கத்தில் இருப்பதால் பலரும் தினம் கோயிலுக்குப்போயிடுவியா என்பார்கள்! சிரிப்போம். இரண்டு மூன்று மாதத்துக்கு ஒரு முறை போனாலே அதிகம்.

    ReplyDelete
  3. அதே போல் கடற்கரைக்கும் எண்ணினாற்போல் நான்கைந்து முறை தான் சென்றிருப்போம். அதுவும் கல்யாணம் ஆவதற்கு முன்னர் இரு முறை ஆன பின்னர் இரு முறை என எண்ணி வைத்தாற்போல் போயிருக்கோம். :) அம்பத்தூரிலிருந்து தினம் தினம் கடற்கரைக்கு வர முடியுமா என்ன! :)

    ReplyDelete
  4. வார முதல் நாளான ஞாயிறு அன்று ஞாயிறை (அதாங்க.. சூரியனை) தரிசித்தல் ஞாயிறில் ஞாயிறைப் பார்த்தல் என்று சொல்லலாமா?..

    ஞாயிற்றுக் கிழமைதான் வாரத்தின் தொடக்க நாள் என்பதால், தொடக்க நாளே ஓய்வா என்று கருதி அந்நாளைய சோவியத் யூனியனில் ஞாயிறு விடுமுறை நாள் இல்லையாம். இப்போ எப்படி தெரிலே. இது எப்படி இருக்கு, பாருங்க!..

    ReplyDelete
  5. ji i know atleast two of my friends who had never visited THE FAMOUS KALASHETRA and had not seen ADYAR AALA MARAM
    even though both of them worked near adyar beasant nagar thiruvanmiyur for over thirty years...

    ReplyDelete