Saturday, July 9, 2016

ஹையா! என்னோட அக்கா சீனியர் சிடிஸின் ஆயிட்டா!

ஹையா! என்னோட அக்கா சீனியர் சிடிஸின் ஆயிட்டா!

இதில் உனக்கு அப்படி என்ன சந்தோஷம்? என்று கேட்க்கிறீர்களா? எனக்கும் என் அக்காவுக்கும் சரியாக ஒரு வருடம்தான் வித்தியாசம். முதல் வருடம் ஜூலை 5ம் தேதி அவள் பிறந்தாள். நான் எல்லாவற்றிலும் கொஞ்சம் ஸ்லோ, அவளோடு சேர்ந்து பிறந்திருக்க வேண்டியவள் ஒரு வருடம் லேட்டாக அடுத்த வருடம் அதே ஜூலை 5ம் தேதி பிறந்தேன். எனவே இரட்டையர்களைப் போலவேதான் வளர்ந்தோம். அவளை பள்ளியில் சேர்க்க வேண்டிய காலம் வந்த பொழுது, அவளை பிரிய முடியாது என்று நான் அழுதேனாம், எனவே என்னையும் அவளோடு சேர்த்து பள்ளிக்கு அனுப்பி விட்டார்கள். அப்போதெல்லாம் பர்த் செர்டிபிகேட் கெடுபிடியெல்லாம் கிடையாது என்பதால் என் அக்காவுக்கு எனக்கு இரண்டு பேருக்குமே ஒரு வயது அதிகம் கொடுத்து சேர்த்து விட்டார்கள். பிறந்த நாள் எல்லாம் யாருக்கு தெரியும். பள்ளி ஆசிரியரிடம் ஆனி  மாதம் என்று சொல்லி இருப்பார்கள், அவர் தனக்கு தோன்றிய ஒரு தேதியை போட்டிருப்பார். சமீபத்தில் என் சகோதரிக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டி வந்தது. அதர்க்காக அவள் அந்த அலுவலகம் செல்வதற்கு முன் அவள் பேரன், "அம்மம்மா உன் டேட் ஆப் பர்த் கேட்டால், ஜுலை 5 என்று சொல்லக் கூடாது, ஜூன் 24 என்று
சொல்ல வேண்டும்" என்று அவளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தான். ஆக, சீனியர் சிட்டிஸின்களுக்கு வழங்கப் படும் ரயில்வே சலுகைகள் இனிமேல் அவளுக்கு கிடைக்கும். எனக்கு அடுத்த வருடம்தான். இதில் என்ன அவ்வளவு சந்தோசம் என்று மீண்டும் கேட்காதீர்கள், என் சொந்த கதை சோகக் கதையை சொல்கிறேன்.

ஒரே வகுப்பில் படித்தாலும் நாங்கள் இருவரும் சகோதரிகள் என்று நிறைய பெருக்குத் தெரியாது. வகுப்பு வாசல் வரைதான் ஒன்றாக செல்வோம், பிறகு அவளுடைய குழு வேறு, என்னுடைய குழு வேறு. ஒத்த ஜாடையும் கிடையாது.  அது மட்டுமல்ல, பழக்க வழக்கங்களிலும் நானும் அவளும் எதிரெதிர் துருவங்கள்தான். நான் கொழு கொழுவென்றிருக்க, சவலைக் குழுந்தையாகிய அவள் சோனியாக இருப்பாள் (இன்றும் அப்படித்தான்). எங்கள் வகுப்புக்கு புதிதாக வரும் ஆசிரியர்கள் இருவருக்கும் ஒரே இனிஷியல் வருவதைப் பார்த்து, நீங்கள் இரண்டு பேரும் சிஸ்டெர்ஸா? என்று ஆச்சர்யமாக கேட்பார்கள், ஆமாம் என்றால் யார் அக்கா?, யார் தங்கை என்பார்கள்? உண்மையைச் சொன்னால் நம்பவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, பலரும் இன்று வரை அவள்தான் அக்கா, நான்தான் தங்கை என்பதை நம்புவதில்லை. 

இதை விட பெரிய கொடுமை அப்போதெல்லாம் பஸ்ஸில் அரை டிக்கெட் உண்டு. நான் சிறுமியாக இருந்த பொழுது நாங்கள் திருச்சி உறையூரில் இருந்தோம், அங்கிருந்த ராம விலாஸ் பஸ் ஸ்டாப்பிலிருந்து மெயின் காட் கேட் செல்ல முழு டிக்கெட் 10 பைசா, அரை டிக்கெட் 5 பைசா. பஸ்ஸில் கண்டக்டரிடம் என் அம்மா, ரெண்டு அரை டிக்கெட் என்றால், அவர் என்னை காண்பித்து, இந்த பாப்பாக்கு முழு டிக்கெட் வாங்கிடுங்க, அந்த பாப்பாக்கு அதாவது என் அக்கா அரை டிக்கெட் வாங்கிக்கலாம் என்று என் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்வார். ஒரு முறை எங்கள் பள்ளியில் திருச்சி ஏர் போர்ட் காண்பிக்க அழைத்துச் சென்றார்கள். அப்போது ஒரு அசிரியை மாணவிகளை இரெண்டு வரிசையாக பிரித்தார். ஒரு வரிசை முழு டிக்கெட்டுக்கானது, மற்றது அரை டிக்கெட். என்னை முழு டிக்கெட் வரிசையில் நிற்க வைத்துவிட்டு, என் அக்காவை அரை டிக்கெட்டுகளோடு சேர்த்தார். என்ன கொடுமை!!

என்னை பொறாமை பட வைத்த என் சகோதரியும் நானும் 


இப்படி எத்தனை முறை என் காதில் புகை வர வைத்திருக்கிறாள்.. அந்த பாச்சாவெல்லாம் இனிமேல் பலிக்காது  ட்ரெயினில் டிக்கெட் புக் பண்ணும் போதே சீனியர் சிட்டிசன் என்று குறிப்பிட்டால், சலுகை கிடைக்கும். நான் இன்னும் ஒரு வருடம் ஜாலியாக காத்திருப்பேன்.

இதற்காகவே அவளோடு எங்காவது ரயிலில் செல்ல வேண்டும் போல் இருக்கிறது. டிக்கெட் புக் பண்ணி விட்டு," பாத்தியா நீதான் சீனியர் சிட்டிசன், நான் கிடையாது", என்று கொக்கரிக்கலாமே.(அட அசட்டு அல்பமே! இவ்வளவுதானா நீ?!!?)  

10 comments:

 1. உங்கள் இருவருக்குமே இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நீங்க எப்படி சிட்டிஸன் ஆகமுடியும்? சிட்டி டாட்டர் தானே ஆகமுடியும்? ஹிஹிஹிஹி...

  சென்னையில் இல்லாமல் எங்காவது கிராமத்தில் இருந்திருந்தால் வில்லேஜ்ஸன் ச்சே.. வில்லேஜ்டாட்டர் ஆகியிருப்பீங்களோ...!! மறுபடியும் ஹிஹிஹிஹி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 2. ஹா ஹா இந்த விஷயம் எங்க பையருக்கு நடந்தது. அவனை விட நான்கு வயது பெரியவள் ஆன எங்க பெண்ணும், எங்க நாத்தனார் பையரும் எங்க பையரை விட உயரம் குறைச்சல்! ஆகவே அவங்களுக்கு அரை டிக்கெட்னா ஒத்துப்பாங்க. எங்க பையருக்கு வயசாகும் முன்னரே முழு டிக்கெட் வாங்குவோம். கையிலேயே பிறப்புச் சான்றிதழை வைத்திருந்தும் ஒத்துக்க மாட்டாங்க. தேதியை மாத்திக் கொடுத்திருப்பீங்கனு கூசாமச் சொல்லிடுவாங்க. அவன் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போதே பள்ளிப் பேருந்தில் கூடப் பயணித்த ஆரம்பப் பள்ளிக் குழந்தைகள் அங்கிள் என்று கூப்பிட ஆரம்பிக்க நொந்து நூலாகிப் போன எங்க பையர் அப்புறமா கடுமையாக ஜிம் சென்று பயிற்சிகள் செய்து உயரத்தை ஒரு அளவுக்கு மேல் அதிகம் ஆகாமல் பார்த்துக் கொண்டார்.

  ReplyDelete
 3. பெண்கள் சீனியர் சிடிசன் ஆகவே வேண்டாம். 55 வயது ஆனாலே ரயிலில் சலுகைகள் உண்டு. இது ரொம்பப் பேருக்குத் தெரியலை! :)

  ReplyDelete
 4. உங்களுக்கும் உங்க அக்காவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! 58 வயது முதல் சலுகைகள் கிடைக்கும்! உங்கள் பையரின் உணர்வுகள் முழுமையாக புரிகிறது.

   Delete
 5. ம்ம் இப்படியும் ஒரு சந்தேஷம் இருக்கட்டும்... இருக்கட்டும்
  தங்களது பதிவு வெளிவருவது உடன் தெரிவதில்லை

  ReplyDelete
 6. என் அல்பத்தனத்தை நினைத்தால் எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது. அந்த அளவு நொந்து நூலாகி இருக்கிறேன். வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 7. அன்றும் சலுகை இன்றும் சலுகை உங்கக்காவுக்கு உண்மையில் இப்போதும் காதில் புகைய வேண்டுமே

  ReplyDelete
  Replies
  1. அன்றைக்கு கிடைத்தது அன்டியூ அட்வான்டேஜ், இன்று கிடைப்பது நியாயமான சலுகை, எனவே நோ புகை இன் காது! வருகைக்கு நன்றி!

   Delete