Monday, November 21, 2016

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே


1965 ஆம் வருடத்திலிருந்து 1971 வரை சென்னை மைலாப்பூர் பி.எஸ்.ஹை ஸ்கூல்(வடக்கு)ல் படித்த மாணவர்கள் ஒன்று கூடிய நிகழ்வு 15.11.16 செவ்வாய் அன்று மைலாப்பூர் கிளப்பில் நடந்தது. அந்த மாணவர்களில் என் கணவரும் ஒருவர் என்பதால், நானும் என் கணவரோடு அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன். 

மாலை 6:30 முதல் 8:30 வரை என்று குறிப்பிட்டிருந்தார்கள். நாங்கள் அங்கு சென்ற போது 6:40 இருக்கும். மூன்று குடும்பத்தினர்தான் வந்திருந்தனர். சற்று நேரத்தில் பெரும்பான்மையோர் வந்து விட்டனர். உடனே ஜூசும், ஸ்டார்ட்டர்களும் வரத் துவங்கின, மெயின் கோர்ஸ் உணவு ஆரம்பிக்கும் வரை வந்து கொண்டே இருந்தன.

ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையோர் 45 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் சந்திக்கின்றனர். 

"உன்னைப் பார்த்ததும் படகோட்டி படத்தில் வரும் பாடல்தாண்டா நினைவுக்கு வருது, நீ பாடுவாயே..." என்றும்,

"எப்படிடா அப்படியே இருக்க? இப்போ கூட தோளில் ஒரு பையை மாட்டி விட்டால் கடைசி பெஞ்சில் உட்கார்த்தி விடலாம்". என்றும் 

"நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு முறை கணக்கு வாத்தியார், மிகவும் கஷ்டமாக கேள்வித்தாளை தயாரித்து விட்டார், இவன் கிட்ட கொஞ்சம் ஆன்செர் ஷீட் காட்டுடானு சொன்னேன், காட்ட  மாட்டேன்னு சொல்லிட்டான்..." என்றும் அந்த காலத்திற்கே சென்று விட்டார்கள். 

இந்த ரீ யூனியனை ஏற்பாடு செய்ததில் பெரும் பங்கு வகித்த திரு.கிருஷ்ண பிரசாத், திரு. முரளி, மற்றும் திரு.ரகுநாதன் இவர்களில் ரகுநாதன் அமெரிக்கா சென்று விட்டதால் கலந்து கொள்ளவில்லை. கிருஷ்ண பிரசாத் ஏதோ அவர் வீட்டு விசேஷம் போல எல்லோரையும் தனிப்பட்ட முறையில் உபசரித்து, கவனித்துக் கொண்டார். 

எல்லோரையும் வரவேற்று பேசிய கிருஷ்ண பிரசாத் அவர்கள் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக ஒரு நண்பரின் வீட்டில் சந்தித்த பொழுது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 30ம் தேதி சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்ததாகவும் ஆனால் இந்த வருடம் பல்வேறு காரணங்களால் அது தள்ளிப் போய் விட்டது என்றும் கூறினார்.. 

தங்கர் பச்சனின் பள்ளிக்கூடம் படத்தை பார்க்கும் போதெல்லாம் தனக்கு தங்கள் பள்ளியின் ஞாபகமும், ஆசிரியர்களின் ஞாபகமும்தான் வரும் என்றார். பள்ளிக்கூட நண்பர்களை பார்த்தால் தான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விடுவேன் என்று கூறிய அவரை விட அப்படி எதுவும் சொல்லாத திரு.விஸ்வநாதனும், திரு. ராஜசேகரும் உணர்ச்சி பொங்க தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 

அவர்களுக்கிடையே நிலவிய ஆரோக்கியமான போட்டி பற்றியும், அதே நேரத்தில் நண்பர்கள் எப்படி ஒருவரை ஒருவர் மோட்டிவேட் செய்து கொண்டனர் என்பது பற்றியும் விரிவாகவே பேசினார் ராஜசேகர். 

சமீபத்தில் மரணமடைந்த அவர்களின் பள்ளித் தோழர் நாகலிங்கம் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினோம். 

இதில் கிருஷ்ண பிரசாத், விஸ்வநாதன், விஜயகுமார் என்ற மூவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை ஒன்றாகவே படித்தனராம். இப்படி ஆண்கள் தங்கள் நட்பை கொண்டாடிக் கொண்டிருக்க, பெண்கள், " ஆண்கள் எப்படி இத்தனை ஆண்டுகள் தங்கள் நட்பை தொடர்கிறார்கள்,நம்மால் ஏன் முடிவதில்லை? என்ற கேள்வி எழுந்தது.(ஏன் முடிவதில்லை? யாராவது சொல்லுங்களேன்) 

சிட்டிபாபு என்பவரின் மனைவி டாக்டர் ஆனந்தி என்பவர் மட்டும் இதை மறுத்தார். கோவில்பட்டியில் பள்ளி படிப்பை முடித்திருக்கும் இவரும் இவர் பள்ளித் தோழிகளும் அதே பள்ளியிலேயே ரீ யூனியனை நடத்தினார்களாம். விதி விலக்கான பெரிய விஷயம்தான்.  

இன்றைக்கு தாத்தாவாகி விட்ட எல்லோரும் ஒரே குரலில் ஒப்புக்கொண்ட விஷயம், பேரன் பேத்திகளிடம் அவர்களுக்கு உள்ள வாஞ்சை! எங்கள் குழந்தைகள் சிறியவர்களாக இருந்த பொழுது அவர்களோடு நேரம் அதிகமாக செலவிட முடியவில்லை, இன்றைக்கு பேரக் குழந்தைகளோடு இருக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இல்லை என்றார்கள். 

இதன் பிறகு,  இனிப்பு மற்றும் ஐஸ் கிரீமோடு சுவையான உணவு. என்னென்ன ஐட்டம் என்பதை சொல்ல மாட்டேன், கண் பட்டு விடும். கால எந்திரம் எதுவும் இல்லாமலேயே பல வருடங்களுக்கு பின்னால் சென்று விட்டு வந்த சந்தோஷம் என் கணவருக்கு. புதிதாக சில நண்பர்களை சந்தித்த எனக்கு மகிழ்ச்சி!

10 comments:

 1. சுவாரஸ்யமான விஷயம். என் பள்ளித் தோழர்களில் ஒருவருடனும் எனக்கு தொடர்பில்லை. ஹூ...ம்.

  ReplyDelete
  Replies
  1. நானும் கூட பள்ளித் தோழிகளோடு தொடர்பில் இல்லை. கல்லூரித் தோழிகளை அவ்வப்பொழுது சந்திப்பது உண்டு.

   Delete
 2. நல்லதொரு சந்திப்புதான் தங்களது எழுத்தில் தெரிகின்றது
  பெண்கள் ஏன் இதை தொடர முடிவதில்லை என்பதை தனியொரு பதிவில் சொல்லலாம் என்று நினைக்கிறேன் - கில்லர்ஜி

  ReplyDelete
  Replies
  1. சொல்லுங்கள் கில்லர்ஜி, தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

   Delete
 3. பள்ளிக்காலத்து நண்பர்கள் யாருடனும் தொடர்பில் இல்லை. ஏதாவது பழைய நண்பர்களைத் தேடினால் அவர்கள் பெரும்பாலும் இல்லை என்றே தகவல்

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலோருக்கு இப்படித்தான் நேருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை தந்திருக்கிறீர்கள். நன்றி!

   Delete
 4. நினைவில் மட்டுமே சிநேகிதிகள்!

  ReplyDelete
 5. பதிவைப் படிக்கும் எல்லோர் மனதிலும் இப்படியோர் நிகழ்வை நடத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழும். நன்றி

  ReplyDelete