கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, December 20, 2016

சாருவும் நானும் - 3

சாருவும் நானும் - 3

"இனிமே நாளைக்கு காலைல ஏழு மணிக்குத்தான் மொத பஸ்" என்ற டீ கடைக்காரரிடம், "அப்போ இனிமே பஸ் கிடையாதா"? என்று டி. வி. யில் பேட்டி எடுப்பவர் போல கேட்க, அவர் முறைத்தார். 

"என்ன சார் கொடைக்கானலா"?... கேட்பது யார் ? ஒரு  ட்ரைவரா?

"என்ன சார்?" மறுபடியும் என் மனதிற்குள் சொல்லி பார்த்துக் கொண்டேன், சிலிர்த்தது. "இன்னா?" "எவ்ளோ தர"? "குந்து.." என்று அஃறிணையில் விளிக்கப்பட்டே பழக்கமாகி விட்டதால் இவருடைய 'சாரு'க்காகவே அவர் வண்டியில் போவதென்று தீர்மானித்தேன்.

"அம்பாசிடர் கார் இருக்கு, பெட்ரோல் போட்டுக்கணும், டீசல் பூட்டின வண்டி இருக்கு எது சார் வேணும்.."?  

"அம்பாசிடர்" என்றேன் மிதப்பாக.

"அறுநூறு ரூபா ஆகும் சார், வேனுக்கு நானூறு ரூபா ஆகும்.."

என் சந்தோஷம் அத்தனையும் நொடியில் மறைந்து போனது. "என்னப்பா இது? கொஞ்சம் பாத்து சொல்லுப்பா.."

நீங்க எவ்ளோ சார் தருவீங்க"?

சாரு ஏதோ சொல்ல வாயைத் திறப்பது தெரிந்தது. அவளை இப்போது பேச விடுவது ஆபத்து. சாருவுக்கு பேரம் பேச ரொம்ப ஆசையுண்டு. காலையில் நான் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் பொழுது பக்கத்து வீட்டிலிருந்து இரையும் ரேடியோ இரைச்சலையும் மீறி வாசலில் கறிகாய்காரனோடு சண்டை போடுவாள். அவன் ஒன்று எட்டணா சொல்லும் வாழைக்காய்களை,"தோ பாருப்பா, அதெல்லாம் முடியாது, நான் மூணு எடுத்துக்கறேன், ஒண்ணே முக்கால் ரூபா குடுத்திடறேன்.." என்று வெற்றிகரமாக வியாபாரத்தை முடிப்பாள்.
எனவே அவளை முந்திக்கொண்டு ஏதோ ஒரு குருட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "முன்னூறு ரூபா தரேன்.." என்றேன்.

கையிலிருந்த பெட்டியை தொப்பென்று கீழே போட்டான். "ஏய்! சாருக்கு முன்னூறு ரூபாய்க்கு மேலே கொண்டு விடணுமாம் என்று சற்று தள்ளி நின்றிருந்த தன நண்பர்களை பார்த்து கேலியாக கூறினான். 

அங்கிருந்த ஒருவன், " பாவம் ஏன் சார் கஷ்டப்படுரீங்க"? இப்படியே துண்டை விரிச்சுப் படுங்க, கார்த்தாலே மொத பஸ்சுல போய்டலாம்" என்றான். 

கொடை ரோடில் வந்து டாக்ஸி டிரைவர் ஒருவன் கேலியை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தலை எழுத்து..!

டீக்கடை ரேடியோவில் 'ஜெயமாலா' முடிந்து 'தேன் கிண்ணம்' துவங்கி விட்டது.சுற்றிலும் கவிந்து கொண்ட இருளில் நாங்கள் தனித்து விடப் பட்டோம். இங்கு தங்குவதற்கு நல்ல லாட்ஜ் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் இருப்பதையே லட்சியம் செய்யாமல் ட்ரைவர் குழு அரட்டை அடித்துக் கொண்டிருந்தது. கடைசியில் வேறு வழி இல்லாமல், எங்களிடம் வந்து பேசிய டிரைவரிடம் மன்றாடித் தோற்று, அவன் கேட்ட தொகையை தருவதாக ஒப்புக் கொண்டு வேனில் ஏறினோம். 

"என்ன சார் ஹோட்டலில் ரூம் புக் பண்ணிடீங்களா..? இப்போ கோடை விழா நடக்குது, ரூமே கிடைக்காது.." சொன்ன அவன் நாக்கு கரி நாக்காக இருக்க வேண்டும்.

ஹோட்டல் ஸ்வயம் ப்ரகாஷில் ரிஸப்ஷனிஸ்ட் விவரம் கேட்டு விட்டு, தடிமனான புத்தகத்தை திறந்து எதையோ தேடினான். "என்னிக்கு டெலிக்ராம் கொடுத்தீங்க.."? என்று கேட்டு, சற்று சிறிய நோட் ஒன்றில் மீண்டும் தேடி விட்டு, " சாரி சார், உங்க பேர்ல ரூம் புக் பண்ண சொல்லி எந்த இன்பார்மேஷனும் எங்களுக்கு வரலை.." என்றான். 

-தொடரும் 

3 comments:

  1. பேரம் பேசி இது மாதிரி கிண்டல்களுக்கு சென்னையில் ஆட்டோக்காரர்களிடம் அனுபவித்திருக்கிறேன் நான். தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. நல்ல அனுபவங்கள். தொடரக் காத்திருக்கேன்.

    ReplyDelete
  3. ஹஹஹ சாரு நன்றாகவே பேரம் பேசுகிறாளே!!

    எங்கள் ஊரில் அதான் கேரளத்தில் பேரம் என்பது அவ்வளவு தேவையிருந்ததில்லை. வெகு அரிது..

    கீதா: சென்னையில் பேரம் பேசாமல் கிண்டலுக்கும் ஆளாகாமல் பொருள் வாங்குவது ரொம்பவே கஷ்டம்தான்..

    தொடர்கிறோம்

    ReplyDelete