Saturday, May 6, 2017

கோடையும் எடையும்

கோடையும்  எடையும்


வெய்யில் காலம் வருகிறது என்றால் எனக்கு கொஞ்சம் பயம் வரும். தகிக்கும் வெய்யில், பவர் கட் இவைகளை நினைத்து மாத்திரம் அல்ல. கூடப் போகும் என் எடையை நினைத்தும்தான். கோடையில்தான் எடை குறையுமாம். அதிகம் வியர்பதால் எடை குறைந்து விடும் என்கிறார்கள். நாம் வியர்க்க விட்டால்தானே? வியர்க்க ஆரம்பிக்கும் பொழுதே, "உஸ்... அப்பா... முடியல... ஏ.சி.ஐ போடு" என்று வியர்வையை அடக்கி விடுகிறோம். 
அது மட்டுமா? ஜில்லுனு ஏதாவது குடிச்சால்தான் தாகம் அடங்கும் என்று நன்னாரி சர்பத் என்ன? ரோஸ் மில்க் என்ன? இவைகளைத் தவிர பாட்டில் பாட்டிலாக உள்ளே தள்ளும் குளிர் பானங்கள் கிலோ கிலோவாக நம் எடையை ஏற்றி விடுகின்றனவே...! குளிர் பானங்களோடு நிறுத்திக் கொள்கிறோமா? ஆங்காங்கே இருக்கும் ஐபாகோக்களும்(IBACO) , மில்கிவேக்களும்(MILKY WAY) நம்மை வா என்று அழைக்கும் பொழுது மாட்டேன் என்றா சொல்ல முடியும்? உள்ளே நுழைந்து வித விதமான ப்ளேவர்களில் ஐஸ் க்ரீம்களை வெளுத்து கட்டினால் எடை ஏறாமல் இருக்குமா?

வெய்யில் கொளுத்துகிறதே என்று திருமணங்கள் நடத்தாமலா இருக்கிறார்கள்? கல்யாணம்,காது குத்தல், பிறந்த நாள், க்ரஹ பிரவேசம், என்று எப்படியும் ஒரு மாதத்தில் இரண்டு நிகழ்ச்சிகளிலாவது கலந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இப்பொழுதெல்லாம் எந்த விருந்துமே ஐஸ் கிரீம் இல்லாமல் இல்லை. அதைத் தவிர இன்னும் இரண்டு இனிப்புகள்... எல்லாவற்றையும் பரிமாறி வைத்து விடுகிறார்கள். உணவை வீண் ஆக்க முடியுமா? ஜோதிகா வேறு சின்ன திரையில் வந்து, "உணவை வேஸ்ட் பண்ணாதீர்கள், ப்ளீஸ், வேஸ்ட் பண்ணாதீர்கள்" என்று கெஞ்சும் போது வீண் பண்ண முடியுமா? எல்லாவற்றிற்கும் நம் வயிற்றில் இடம் அளிக்கிறோம். எடை ஏறாமல் இருக்குமா? 

ஐஸ் க்ரீம் ஐ ஒதுக்கலாம் என்றால்?"ஏன் ஐஸ் க்ரீம் சாப்பிடலையா? ஷுகரா"? என்று அக்கறையாக விசாரிப்பார் பக்கத்து இலை காரர்."சீ சீ அதெல்லாம் இல்ல, வெய்ட் ஏறிக் கொண்டே போகிறது, அதான்.." "ஒரு நாள் சாப்பிட்டா ஒண்ணும் ஆகிடாது". என்று உசுப்பேற்றி உசுப்பேற்றியே நம்மை 'ஓவர் வெய்ட்' ஆக்கி விடுகிறார்கள்.விருந்தை விட்டுத் தள்ளுங்கள், என்றாவது ஒரு நாள்தான், வீட்டில் இருக்கும் வில்லன்களை என்ன செய்வது? எல்லாவற்றிலும் முதன்மையானது மாங்காய்!!! மாவடு, மாங்காய் தொக்கு, ஆவக்காய், மாம்பழம் என்று பல வடிவங்களில் அது படுத்தும் பாடு இருக்கிறதே..!


அம்மாவிடமும், மாமியாரிடமும் எதை கற்றுக் கொள்கிறோமோ இல்லையோ ஊறுகாய் போட கற்றுக் கொண்டு விடுகிறோம். முதலில் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளத்தான் ஊறுகாயை போட்டுக் கொள்வோம். அது கொஞ்சம் மீந்து விடும். சரி ஊறுகாயை வீணாக்க வேண்டாமே என்று கொஞ்சம் சாதம் போட்டுக் கொள்வோம், இப்போது மறுபடியும் ஊறுகாய் மீந்து விடும். இப்படி சாதத்திற்கு ஊறுகாய், ஊறுகாய்க்கு சாதம் என்று மாற்றி மாற்றி சாப்பிட்டால் எடை எப்படி ஏறாமல் இருக்கும்? 

இனிமேல் இப்படிப் பட்ட சபலங்கள் எல்லாம் கூடாது என்று எண்ணி ஊறுகாயை குறைவாக போட்டுக் கொள்கிறேன். ஐபாகோ களையும், மில்கி வேக்களையும் புறக்கணித்து விட்டேன்.  ஆனால் மாம்பழம்?? 


செந்தூரான், நீலம், பங்கனப்பள்ளி, இமாம்பசந்து என்று கலர் கலராக வண்டிகளில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் மாம்பழக் கவர்ச்சியிலிருந்து விடுபடுவது கொஞ்சம் கடினம்தான்... வயதோ ஏறிக் கொண்டிருக்கிறது ஒரே ஒரு நல்ல சுவையான மாம்பழத்தை சாப்பிட்டு விட்டு நிறுத்தி விடலாம் என்று தீர்மானித்தேன். ஆனால் அதில் ஒரு சிக்கல் பாருங்கள், ஒரு வெற்றி படம் கொடுத்து விட்டு நடிப்பதை நிறுத்தி விடலாம் என்று நினைக்கும் சூப்பர் ஸ்டாருக்கு வெற்றி படம் வாய்க்காதது போல எனக்கும் சுவையான மாம்பழம் கிடைக்க மாட்டேன் என்கிறது. ஒன்று புளிக்கிறது, அல்லது நாராக இருக்கிறது, அல்லது சப்பென்று இருக்கிறது. என்ன செய்வது? இன்றைக்கு கூட மாம்பழம் வாங்கி இருக்கிறேன்.. எப்படி இருக்க போகிறதோ? 

எடை? அதைப் பற்றியெல்லாம் இப்போது என்ன? கொஞ்சம் நடந்தால் குறைந்து விடப் போகிறது... தவிர நான் என்ன அழகி போட்டிக்கா செல்லப் போகிறேன்?.. கிடக்கட்டும் கழுதை

படங்கள் உதவி: கூகுள் . இது ஒரு மீள் பதிவு 

24 comments:

 1. அந்தக் கடைசி வார்த்தை என்னவோ செய்கிறதே!...இத்தனை வருடமாக உங்களோடே தொடர்ந்து இருக்கும் ஒன்றை 'கழுதை' என்று சொல்வது நியாயமா?

  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா! என் சகோதரர் இதையே வேறு விதமாக அதற்காக கழுதையை ஏன் திட்ட வேண்டும் என்றார்.

   Delete
 2. //எடை? அதைப் பற்றியெல்லாம் இப்போது என்ன? கொஞ்சம் நடந்தால் குறைந்து விடப் போகிறது... தவிர நான் என்ன அழகி போட்டிக்கா செல்லப் போகிறேன்?.. கிடக்கட்டும் கழுதை//

  கரெக்ட். கடைசியில் நிறைவாகச் சொல்லியுள்ளது என் மனதுக்கும் நிறைவாகவே உள்ளது. :)

  மாம்பழம் போன்ற வாய்க்குப் பிடித்ததை உடனே வாங்கிச் சாப்பிட்டு விடவேண்டும். நாக்குக்கும் வயிற்றுக்கும் வஞ்சனை செய்யவே கூடாது. பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

  ReplyDelete
 3. நேற்றென்ன, நாளை என்ன.. இன்று வாழ்வோம்!

  ReplyDelete
  Replies
  1. அதேதான். வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. தலைப்பும் பதிவும்
  வெகு வெகு சுவாரஸ்யம்
  டக் வைத்துக் கொண்டே இருந்து
  கடைசிப் பாராவில்
  அடித்த சிக்ஸரை மிகவும் இரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. இங்கே வெயிலுக்கு வியர்க்கவும் செய்யாது நம்ம ஊரு போல சுட்டெரிக்கும் வெய்யிலுமில்லை ..ஆசையா இருக்கு நல்ல வெயிலில் அங்கே வரணும் போலிருக்கு ..கலக்கல் பதிவு அக்கா ..

  ReplyDelete
  Replies
  1. //நல்ல வெயிலில் அங்கே வரணும் போலிருக்கு ..//இதைத்தான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்களோ? உங்களை வரவேற்க காத்திருக்கிறோம். பாராட்டுக்கு நன்றி.

   Delete
 6. பங்கனபள்ளி மாம்பழம் கடைசிவரை இனிக்கும். எனக்கென்னமோ இமாம்பசந்த் பிடிக்கலை! :) அடுத்து ருமானியும் கொஞ்சம் சிவந்த மாம்பழ நிறத்தில் தோல் இருந்தால் கட்டாயமாய்ச் சாப்பிடலாம். தித்திப்பாக இருக்கும். ருமானி மாம்பழங்களின் கதுப்புக்கு ஈடு இணையே இல்லை. அடுத்து நீலமும் மாம்பழ வரத்து முடியும்போது சுவையாக வந்து அடடா, முடியப் போகிறதா என்று சொல்ல வைக்கும். ஆனால் ஒண்ணு இப்போதெல்லாம் மாம்பழம் சாப்பிடறதில்லை. யாரானும் வந்தால் கூட மாம்பழம் வாங்கி வராதீங்கனு சொல்லிடுவோம். மாம்பழத்துக்கு மட்டுமில்லை, இன்னும் சில பழங்களுக்கும் தடா! :) அதிகம் வாங்குவது மாதுளையும், வாழைப்பழமும் தான்!

  ReplyDelete
  Replies
  1. //இப்போதெல்லாம் மாம்பழம் சாப்பிடறதில்லை. யாரானும் வந்தால் கூட மாம்பழம் வாங்கி வராதீங்கனு சொல்லிடுவோம்.// Point noted.

   Delete
 7. அது என்னங்க ஐபாகோ, மில்கிவே? அப்படியெல்லாம் கடைகள் இருக்கின்றனவா? எந்த ஊரில்? ஙே!!!!!!!!!!!!!!!! கேட்டதே இல்லை. அதோடு நாங்க அதிகம் பழச்சாறுகள் தான் குடிப்போம். அதிலும் பெரும்பாலும் வீட்டுத் தயாரிப்பு! சர்க்கரை சேர்க்காமல்! வெளியே போனால் முதல் தேர்வு இளநீரே! இளநீர் இல்லைனால் பழச்சாறு கிடைக்குமானு பார்த்துப்போம். இல்லைனா இருக்கவே இருக்கு கரும்புச்சாறு! மற்றபடி டின்களிலும், பாட்டில்களிலும் அடைக்கப்பட்டக் குளிர்பானத்தின் சுவையே எங்களுக்குத் தெரியாது! ஒரு முறை தம்பி வீட்டில் காளிமார்க் பொவன்டோவைப் பத்திப் பேசப் போகத் தம்பி மனைவி வாங்கி வந்தாள். ஒரு வாய் தான் விட்டுக் கொண்டேன். மூக்கில் ஏறி ஒரே ஏப்பம், தொண்டையில் தொந்திரவு! போதும்டா சாமினு ஒரு பெரிய கும்பிடு போட்டாச்சு! அதான் முதலும், கடைசியும்.

  ReplyDelete
  Replies
  1. திருச்சியில் ஐபாகோ, இல்லையா? ஆச்சர்யமாக இருக்கே!! ஐபாகோவும், மில்கி வேயும் சென்னையில் உள்ள பிரபல ஐஸ் கிரீம் பார்லர்கள். திருச்சியில் இருக்கும் மைக்கேல்ஸ் போல. எங்கள் குடும்பத்தினர்களுக்கெல்லாம் திருச்சிக்கு வரும் பொழுதெல்லாம் மைகேல்சில் ஐஸ் க்ரீம் சாப்பிட வேண்டும்.

   Delete
  2. திருச்சியில் மைகேல்ஸ்? ஹிஹிஹி, தெரியாத் என்றால் தெரியாத்! எங்க குடியிருப்பு வளாகத்தின் கீழே உள்ள வணிக வளாகத்தில் அருண்(?) ஐஸ்க்ரீம் விக்கிறாங்கனு நினைக்கிறேன். அதுவும் வாங்கியதில்லை. ஐஸ்க்ரீமெல்லாம் தேவைப்பட்டால் வீட்டிலேயே செய்துடுவேன். பால் சுத்தமாக இருக்கும். க்ரீமும் வீட்டிலேயே எடுத்துடுவோம். இப்போக் குழந்தைகள் இல்லையா எதுவும் செய்வதில்லை. 2015 ஆம் வருஷம் கடைசியாக் குல்ஃபி செய்தேன். அதையும் குழந்தைகள் சாப்பிடவில்லை! :) பெரியவங்களாப் போயிட்டாங்க!

   Delete
 8. மற்றபடி ஊறுகாயெல்லாம் போட்டு பிறருக்குக் கொடுப்பது தான். வீட்டில் மாவடு போடுவேன். அது மட்டும் அவ்வப்போது ஒன்று அல்லது இரண்டு! மற்ற ஊறுகாயெல்லாம் நோ! புளிப்பச்சடி, நாரத்தங்காய்ப் பச்சடி, ஆரஞ்சுப் பச்சடினு பண்ணி வைச்சுப்பேன். நம்ம ரங்க்ஸுக்கு மட்டும் கொஞ்சம் போல் மாங்காய் ஊறுகாய் போட்டு வைப்பேன். மாவடு இருந்துட்டால் அவருக்கு அதுவும் வேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், விரிவான பின்னூட்டங்களுக்கு நன்றி.

   Delete
 9. நல்லா இருக்கு, படங்களும் உங்க அனுபவமும். நுங்கைக் காணோமே. ஃபெப்ரவரில இருந்து ஆகஸ்டு வரை மாங்காய் காலம் (வடு, காய், பழம்) அங்க. நாங்கள்லாம் நினைச்சுக்க வேண்டியதுதான்.

  உடல் எடைக்காக தடா சொல்லவேண்டிய பழங்கள் வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம்.

  ReplyDelete
  Replies
  1. //நுங்கைக் காணோமே.// எடை ஏற்றும் உணவு வகைகளைப் பற்றி மட்டுமே எழுதி இருக்கிறேன். வருகைக்கு நன்றி.

   Delete
 10. படங்கள் நாவில் நீரை வரவழைக்கிறது! எங்கள் தோட்டத்தில் மாம்பழங்கள் அறுவடை. பலாப்பழம் என்று கோடை கொண்டாட்டம்...

  கீதா: என் மாமியார் வீட்டிலும் மாங்காய், மாம்பழம் என்று கூடை கூடையாக...செம டேஸ்டாக இருக்கும் மாம்பழம். வெளியில் வாங்கும் எண்ணமே வராது. ஆனால் எனக்கு இமாம்பசந்தும், மல்கோவாவும், அல்ஃபோன்சாவும் பிடிக்கும் அல்ஃபோன்சா லாஸ்ட்தான். எங்கள் வீட்டுப்பழத்தைச் சாப்பிட்டால் பங்கனப்பள்ளி எல்லாம் சாப்பிடவே தோன்றாது. பங்கனப்பள்ளி இம்முறை நேரடியாக ஆந்திராவிலிருந்து வந்துமே டேஸ்டும் இல்லை, ஸ்வீட்டும் இல்லை. மாமியார் வீட்டு மாம்பழம் அத்தனை இனிப்பு, சுவையும். மில்க் ஷேக் அடித்தால் கூட சர்க்கரையே சேர்க்க வேண்டாம் அந்த அளவிற்கு இனிப்பாக இருக்கும். பெயர் என்ன என்று தெரியவில்லை. எங்கள் தளத்தில் மாங்காய் ஃபோட்டோ போட்டுருக்கேன்....

  நுங்கும் சாப்பிட்டு, நுங்கு சர்பெத்தும் அடித்து..நன்னாரி, ரோஸ் மில்க் வித்தவுட் சுகர்...காஃபியே கூல் காஃபிதான்...வித்தவுட் சுகர்...அது போல எல்லா ஜூசும் மில்க் ஷேக்கும் வீட்டிலேயே..ஷார்ஜா முதல்...எல்லம்...ஆஹா...கோடை கொண்டாட்டம் தான்....ஆனால் நான் இவை சாப்பிட்டால் வேறு உணவு சாப்பிடாமல் சமாளிப்பு ஹஹஹ...ஸோ நோ ஐபேகோ, மில்கிவே விசிட். ரொம்பப் பிடித்தாலும் நானே ஸ்வீட்டாச்சே!!! ஆனால் பழங்களை மட்டும் விடுவதில்லை அதை அட்ஜஸ்ட் செஞ்சு வேறு உணவுகளைத் தவிர்த்துவிடுவேன்.....

  ஊறுகாய்...ஆ! ஆவக்காய், தொக்கு, எண்ணை மாங்காய், பச்சடி என்று எல்லாம் செய்தாலும் இப்போது ஊறுகாய்கள் குறைவு. யாரும் இல்லை வீட்டில் சாப்பிட அதனால் போடுவதில்லை. போடுவேன் ஆனால் அவை அனைத்தும் என் கசின்களுக்குப் போய்விடும். வடநாடு மற்று வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு...

  சாப்பாடு பத்தி பேசினா அவ்வளவுதான் நல்ல சுவையான பதிவு...

  ReplyDelete
 11. மாவடு, மாங்காய், மாம்பழம் என்று ரொம்பவே ரசித்து சாப்பிட்டு இருக்கிறீர்கள் போலிருக்கிறது. ஏழைகளுக்கு ஏற்ற எள்ளுருண்டை மைக்கேல் ஐஸ்தான். திருச்சியில் IBACO ஐஸ் பார்லர்கள் தென்னூர் சாஸ்திரி ரோட்டிலும், சுந்தர்நகரிலும்(கே.கே.நகர்) உள்ளன.

  ReplyDelete
 12. Very nice . I like mango very much . I like jack fruit and banana also .
  Mukkanigal . Jack fruit icecream also very tasty .

  ReplyDelete