கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, June 24, 2017

பூனைகள் திரிகின்றன.

பூனைகள் திரிகின்றன.

கடந்த சில வருடங்களாக படிப்பில் முன்னாலும் பொருளாதாரத்தில் பின் தங்கியும் இருக்கும் மாணவர்களுக்கு படிப்பிற்க்காக பொருளுதவி கிடைக்க உதவி செய்கிறேன். தகுதியான மாணவர்கள் என்று தெரிந்தால் பள்ளிக்கட்டணம் கட்ட உதவும் தொண்டு நிறுவனங்களில் சிபாரிசு செய்வேன், என் அக்காவின் மருமகளிடம் சொன்னால் அவள் அலுவலகம் மற்றும் நட்பு வட்டாரத்தில் பணம் வசூலித்துக் கொடுப்பாள். அதை  தேவைப் படும் பெற்றோர்களுக்கு அனுப்பி வைப்பேன். என்னால் முடிந்த தொகையை கொடுப்பதும் உண்டு.

இந்த வருடமும், சிலர் என்னை உதவிக்கு அணுகினர். ஆனால் எதிர்பார்த்த இடங்களில் கிடைத்த தொகை போதுமான அளவு இல்லை. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் வசூலிக்கும் தொகையைப் பார்த்தால் மயக்கம் வருகிறது. ஏழாம் வகுப்பிற்கும், எட்டாம் வகுப்பிற்கும் இருபத்தி இரண்டாயிரம் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதில் பள்ளிக் கட்டணம் ரூ.ஏழாயிரம், புத்தகங்கள்  மற்றும் இதர சேவை(??) என்று குறிப்பிட்டு ரூ.பதினைந்தாயிரம். என்னிடம் பள்ளிக் கட்டணம் பெற்றுச் சென்ற ஒருவர், "மேடம், முழு கட்டணமும் செலுத்தினால்தான் புத்தகம் தருவார்களாம், கொஞ்சம் உதவி செய்யுங்கள் மேடம்" என்று கெஞ்சும் பொழுது மனம் சங்கடப் படுகிறது.  

இன்னொரு பள்ளியிலும் பள்ளிக் கட்டணம் ரூ.ஒன்பதாயிரம், இதர சேவைகள்,ரூ.ஐந்தாயிரம் என்று வசூல் செய்கிறார்கள். இதர சேவைகள் என்பதில் புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள், சீருடை, காலணி, புத்தகப் பை(school bag) என்பவை அடங்குகின்றன.

ஏழாம் வகுப்பிற்கும், எட்டாம் வகுப்பிற்கும் பதினைந்தாயிரத்திற்கு புத்தகங்களா? ஷூவும், புத்தகப் பையும், சீருடையும் பள்ளியில்தான் வாங்க வேண்டும் என்பது என்ன சட்டம்? 

ஒவ்வொரு வருடமும் அதிகம் பணம் வசூலிக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்ற அறிவிப்பு மட்டும் வருகிறது, ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாக தெரியவில்லை.பிளஸ் டூ தேர்வில் ரேங்க் சிஸ்டத்தை ஒழித்தது போல பள்ளிகள் புத்தகங்கள், சீருடை, இன்ன பிற விஷயங்கள் வழங்கக் கூடாது என்று சட்டம் வந்தால் பள்ளிக் கட்டண சுமை பெரிதும் குறையும்.  

பூனைகள் திரிகின்றன, வீட்டில் உள்ள பாலையும், தயிரையும், குடிக்கின்றன. அவற்றை பிடிக்க, குறைந்த பட்சம்  மணி கட்டத்தான் ஆட்கள் இல்லை. 

23 comments:

  1. தலைப்பும் சொல்லிச் சென்ற விஷயமும்
    மிகச் சரி. யார்தான் மணி கட்டுவது ?
    கல்வி, மருத்துவம்,இரண்டிலும்
    கொள்ளையர்கள் அதிகரித்துவிட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. ஒரு காலத்தில் noble profession என்று கருதப்பட்ட மருத்துவம், கல்வி இரண்டுமே இன்று பகல் கொள்ளையாகி விட்டது துரதிர்ஷடம்தான். வருகைக்கு நன்றி!

      Delete
  2. கல்வி பணம் கொழிக்கச் செய்யும் ஓர் வியாபாரமாக மாறிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன! இனியாவது மாறுமா என எதிர்பார்ப்பது வீணே! இந்த அழகில் தமிழ்நாடு கல்வி,தொழில் துறை போன்ற எல்லாவற்றிலும் முன்னேற்றம் அடைந்திருப்பதாகப் பெருமையாகச் சொல்லிக் கொள்கின்றனர்!

    ReplyDelete
    Replies
    1. அரசு முனைந்து ஏதாவது செய்ய வேண்டும். நோட்டு புத்தகங்கள், சீருடை போன்றவற்றை பள்ளியில்தான் வாங்க வேண்டும் என்று நிர்பந்திக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

      Delete
  3. இதற்கும் ஒரு போராட்டம் வர வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. செய்யப் போவது யார்? என்பதுதான் கேள்வி. வருகைக்கு நன்றி!

      Delete
  4. Replies
    1. வாங்க சார்! வருகைக்கு நன்றி!

      Delete
  5. மக்களுக்கு இன்னும் தெளிந்த சிந்தை இல்லை இதோ வருகிறது தேர்தல் அதை மறந்து மயக்கத்தில் ஆட்டம் போடுவார்கள் பிறகு ஐந்து வருடத்துக்கு மறக்க வேண்டியதுதான்...

    ReplyDelete
    Replies
    1. நாம்தான் படிக்கவில்லை, நம் குழந்தைகளாவது நன்றாக படிக்கட்டும் என்று எளிய மக்கள் நினைக்கிறார்கள். அவர்களுடைய நியாயமான
      ஆசைக்காக அவர்கள் சுரண்டப் படுவதுதான் வேதனை. வருகைக்கு நன்றி சகோ!

      Delete
  6. அங்கு சில ஏழைகளுக்கு எழுத்தறிவித்தலுக்கு பாராட்டுக்கள். என் அப்பா கடைசிக் காலங்களில் இதுபோல நிறையவே உதவிகள் செய்திருக்கிறார். திஜர பேத்திக்குக் கூட உதவி செய்திருக்கிறார்!

    என் மகன் படித்தபோது அவன் கட்டண ரசீதில் கட்டணம் என்று ஒரு தொகை, மிசலனியஸ் என்று ஒரு தொகை, அதர்ஸ் என்று ஒரு தொகை காட்டி இருப்பார்கள். என்ன வித்தியாசமோ!இவர்களை எல்லாம் எந்த அரசும் தட்டிக் கேட்பதேயில்லை. கூட்டுக்கொள்ளைக்காரர்கள்.

    ReplyDelete
  7. ஆனால் தனியார் பள்ளிகளையே ஏன் நாடுகிறோம்? அரச பள்ளியில் ஏன் நம் குழந்தைகளைச் சேர்ப்பதில்லை? அவைகள் மோசம் என்று மனதில் போட்டுக்கொண்டு விடுகிறோம். அவற்றை நம் மனதில் விதைப்பதும் இதே மீடியாக்கள்தான். இரு ஒருவித கூட்டு வியாபாரம். மக்கள் அடிமைகள்!

    ReplyDelete
    Replies
    1. போதுமான அளவு அரசுப் பள்ளிகள் இல்லாததால்தான் தனியார் பள்ளிகளை நாடிச் செல்ல வேண்டியிருக்கிறது. அரசாங்கத்தால் எல்லா இடங்களிலும் பள்ளிகளை நிறுவி நிர்வகிப்பது கடினம் என்பதால்தான் தனியார் பள்ளிகளுக்கு மான்யம் அளித்து பள்ளிகள் துவங்க அரசாங்கம் அனுமதி அளித்தது. அவை காலப்போக்கில் கொள்ளையர் கூடாரமாகிப் போனது வேதனை.

      Delete
    2. //போதுமான அளவு அரசுப் பள்ளிகள் இல்லாததால்தான் தனியார் பள்ளிகளை நாடிச் செல்ல வேண்டியிருக்கிறது. அரசாங்கத்தால் எல்லா இடங்களிலும் பள்ளிகளை நிறுவி நிர்வகிப்பது கடினம் // இதற்குத் தான் நவோதயா பள்ளிகளை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் வீச்சு அதிகம். பல குக்கிராமங்களிலும் பள்ளிகளை நிறுவி மத்திய அரசு பாடத்திட்டத்தில் கற்பிக்க மத்திய அரசால் முடியும்! பல மாநிலங்களிலும் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் தான் தனித்தமிழர்களாச்சே! நவோதயா பள்ளி வந்தால் தமிழ் அழிந்து போயிடுமே! ஆகையால் வர விடவில்லை இனியும் வரவிட மாட்டோம்! நம்ம கிராமப்புற ஏழை மாணவர்களுக்கெல்லாம் தரமான கல்வி கிடைச்சுட்டால் அப்புறமா அவங்களும் "நீட்" "ஐஐடி" நுழைவுத் தேர்வு, ஜேஈஈ, ஐஏஎஸ் தேர்வு போன்றவற்றில் சிறப்பான தேர்ச்சி பெற்று விடுவார்கள்! அதுக்கப்புறமா அவங்களுக்காக யார் என்ன போராட்டம் நடத்த முடியும்? நாம இருக்கிறவரைக்கும் மத்திய அரசையும் அது கொண்டு வரும் நல்ல திட்டங்களையும் எதிர்த்துப் போராட்டம் நடத்தியே ஆகணும்! இல்லையா? :))))))) தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்யும் துரோகங்களை எல்லாம் அப்புறமா எப்படிச் சொல்றது? :)))))

      Delete
  8. //அரச பள்ளியில்//

    *அரசு

    ReplyDelete
  9. எனக்கும் ச்ட்ரிராமின் கருத்தே தோன்றுகிறதுதனியார் பள்ளிகளை வளர்ப்பதும் நாம் குறை சொல்வதும் நாம் இத்தனை ரூபாய் கட்டிபடிக்க வைக்கிறேன் என்று சொல்லும் போது தெரிவது மகிழ்ச்சியா அல்லது ஒரு பெருமையா

    ReplyDelete
    Replies
    1. தோழர் ஸ்ரீராமுக்கு தந்திருக்கும் பதிலையே உங்களுக்கும் உரித்தாக்குகிறேன். வருகைக்கு நன்றி.

      Delete
  10. மன்னிக்கவும் மேலே ஸ்ரீராம் ச்ட்ரிராமின் என்று வந்து விட்டது

    ReplyDelete
  11. அரசுப் பள்ளிகளில் படித்தால்தான் கல்லூரிகளில் முன்னுரிமை என்று அறிவிக்கவேண்டும். ஐம்பது சதம் இடங்கள் அரசுப்பள்ளிகளில் இருந்து வெற்றிபெற்றுவரும் மாணவர்களுக்கே ஒதுக்கவேண்டும். இல்லையெனில் இந்தக் கல்விக்கொள்ளையைத் தடுக்க முடியாது. எனது தளத்தில் இன்றைய பதிவைப் பார்க்கவும்.

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார்! முக்கியமாக அரசுப் பணியில் இருப்பவர்களின் குழந்தைகளும், மந்திரிமார்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தால் அரசுப் பள்ளிகளின் தரம் தானாக உயரும்.

      Delete
  12. கல்வியை வியாபாரமாக்கி இவ்வாறு கொள்ளையடித்துவரும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் உடனடியாக அரசுடமை ஆக்க வேண்டும்.

    தனியார்கள் பள்ளிகள் நடத்த அனுமதிக்கவே கூடாது.

    தனியார்கள் நடத்தும் சில பள்ளிகளில் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டு வரும் ஊதியத்திலும் ஊழல் கணக்குகளைக் காட்டி வருகின்றனர்.

    அவற்றில் சரிபாதி பணம், பள்ளி நிர்வாகத்தால் வேறு விதமாக ரொக்கமாக திரும்பவும் வசூலித்து கொள்ளையடித்து, கணக்கில் காட்டாத கருப்புப்பணமாக சேர்த்துக்கொண்டு வருவதாகக் கேள்விப்படுகிறோம்.

    இதையெல்லாம் வெளியே சொன்னால் அந்த ஆசிரியர் அல்லது ஆசிரியைக்கு உத்யோகம் போய்விடும் என்ற நிலை நீடித்து வருவதால் இவை பற்றி யாரும் வெளியே சொல்லிக்கொள்வது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. இந்திய போன்ற ஒரு பரந்த நாட்டில் தனியார் பள்ளிகளை ஒழிக்க முடியாது. அதன் செயல்பாட்டை அரசாங்கம் கண்காணித்து சீரமைக்க வேண்டும். வருகைக்கு நன்றி சார்!

      Delete
  13. துளசி : தமிழ்நாட்டில்தான் இந்தப் பிரச்சனை அதிகமாக இருக்கிறது போல்..இங்கு அந்த அளவிற்கு இல்லை என்றாலும் இப்போது மருத்துவக் கல்லூரி பொறியியல் கல்லூரிகளில் தனியார் மயம் அடியெடுத்து வைத்து ஆனால் அரசு அதன் ஃபீஸை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.

    கீதா: லேட்டாகிப் போச்சு! அதனால் எல்லோருமே அழகான கருத்துகளைச் சொல்லிவிட்டனர். நல்ல பதிவு பானுக்கா... குறிப்பாக, ஸ்ரீராம், செல்லப்பா சார், கீதாக்கா கருத்துகளை வழிமொழிகிறேன்..

    ReplyDelete