கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, August 21, 2017

வரமா? சாபமா?

வரமா? சாபமா?

என்னுடைய 'நாள்  நல்ல நாள்' என்னும் பதிவில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது விடுமுறை அளிப்பது என்பதை பற்றி நகைச்சுவையாக எழுதியிருந்தேன். ஆனால் சமீபத்திய குமுதம் சிநேகிதி இதழில் இதைப் பற்றிய செய்தி ஒன்றை படித்த பொழுது அதே விஷயத்தை கொஞ்சம் சீரியசாக யோசிக்கலாமோ என்று தோன்றியது. 



மேற்கண்ட செய்தியை மேலெழுந்தவாரியாக பார்த்தால் பெண்களுக்கு மிகவும் உதவும் ஒரு திட்டமாகத்தான் தோன்றும். ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால்...?

மேலும் இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து பார்த்தார்களா என்று தெரியவில்லை. பள்ளியில் ஒவ்வொரு பெண்ணுக்கும், ஆசிரியைக்கும் மாதம் மூன்று நாட்கள் விடுமுறை என்பது எவ்வளவு பெரிய சிக்கல்? அன்றைக்கு தேர்வு இருந்தால் அதிலிருந்தும் விலக்கு கோருவார்களா ?  தவிர பெண்களின் அந்த வலியையும், வேதனையையும் உணர முடியாத விடலை பருவ ஆண்கள், "இவர்களுக்கு வேறு வேலை கிடையாது," என்றோ, "உங்களுக்கு என்ன மாதம் மூன்று நாள் ஜாலியாக லீவு போட்டு விடுவீர்கள்" என்றோ கேலிதான் பேசுவார்கள்.  

மாத விலக்கின் பொழுது எல்லா பெண்களுக்கும் வயிற்று வலி வரும் என்று கூறி விட முடியாது. அப்படியே வந்தாலும் அது இரண்டு மணி நேரங்களுக்கு மேல் நீடிக்காது. அப்பொழுது, சூடாக ஏதாவது குடித்து விட்டு,கொஞ்சம் தூங்கினால் சரியாகி விடும். எனவே பள்ளிகளில், ரிட்டயரிங் ரூம் ஒன்று கட்டி, வயிற்று வலியால் அவதிப் படும் பெண்களை ஓய்வெடுக்கச் சொல்லலாம். வேண்டுமென்றால் வலி நிவாரணி மருந்துகளை தரலாம். இன்னும் நிஜமான அக்கறை இருந்தால் யோகா பயிற்சிகள் கொடுத்து வயிற்று வலியை சமாளிக்கும் வழிகளை சொல்லிக் கொடுக்க வேண்டுமே ஒழிய, விடுமுறை அளிப்பது பயன் அளிக்காது. 

என்னுடைய இரண்டாவது அக்கா கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர்கள். அவர் வயதுக்கு வந்த புதிதில் ஒவ்வொரு மாத விலக்கின் பொழுதும் பள்ளி செல்லாமல் விடுமுறை எடுத்துக் கொண்டாராம். ஒரு முறை ஊரிலிருந்த வந்திருந்த எங்கள் பெரிய மாமா,(அவருக்கு பெண்கள் ஆண்களுக்கு நிகராக படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டு) என் அக்காவுக்கு கவுன்சிலிங் கொடுத்து பள்ளி செல்ல வைத்தாராம். அதுதான் முறையான செயல். 

அலுவலகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு பணி புரியும் பெண்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டால் அவர்கள் செயல் திறன் குறைவாக மதிப்பிடப்படாதா? கட்டிட வேலை, வயல் வேலை, ஏன் திரைப்பட துறையில் கூட ஆண்களுக்கு வழங்கப் படும் சம்பளம் பெண்களுக்கு கிடையாது. காரணம், ஆண்கள் செய்யும் அளவிற்கு, பெண்களால் வேலை செய்ய முடியாது என்பதுதான். மாதம் மூன்று நாள் விடுமுறை என்பதை ஒப்புக் கொண்டால், எல்லா துறைகளிலும் ஆண்கள் அளவு பெண்கள் செயலாற்றுவதில்லை என்று குறிப்பிட்டு, பெண்களுக்கு சம்பளத்தை குறைத்தால் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியுமா?

பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது இப்போது மட்டும் நடக்கும் ஒரு நிகழ்வு அல்ல. காடு,கழனிகளில் வேலை செய்யும் பெண்களுக்கும், வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கும் இந்த தொந்திரவுகள் கிடையாதா? இந்த திட்டத்தை வரவேற்பவர்கள் அவர்கள்  வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்ணுக்கு மாதம் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கத் தயாரா?

பெண்கள் பணியாற்ற மிகவும் கடினமான துறைகளான ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி, திரை உலகில் தொழில் நுட்ப பிரிவுகள் ஆகி இவற்றில் பெண்கள் புகுந்து, சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் சிறகுகளை வெட்டும் முயற்சியாகத்தான் இது எனக்குப் படுகிறது. 

13 comments:

  1. என்னவோ முற்போக்கு என்னும் பெயரில் சிந்திக்கின்றனர். சில மாதங்கள்/நாட்கள் முன்னர் படித்த ஒரு முகநூல் பதிவில் இந்த விஷயத்தில் யூதர்கள், பார்ஸிகள் இன்னமும் விலக்கு என்னும் போக்கைக் கடைப்பிடிப்பதாகப் படித்தேன். அதோடு இல்லாமல் குழந்தை பிறப்பின் போது பெண் குழந்தை எனில் 15 நாட்கள் தந்தைக்கும் தீட்டு உண்டு எனவும் ஆண் குழந்தை எனில் 10 நாட்கள் எனவும் படித்தேன். இம்மாதிரியான நடைமுறை பலரிடமும் இன்னமும் இருந்து வருகிறது! இதையே தானே நம் முன்னோர்கள் செய்தார்கள்!

    ReplyDelete
  2. அப்போ வீட்டை விட்டு வெளியே விஷயம் செல்லாது. இப்போது பெண்கள் பொதுவெளியில் இம்மாதிரி விடுமுறை எடுத்துக் கொண்டால் பல சிக்கல்கள். அதோடு சில சமயங்களில் நாள் தவறி ஒழுங்கில்லாமலும் மாதவிடாய் ஏற்படக் கூடும். சில பெண்களுக்குத் தள்ளிப் போகலாம். சிலருக்குச் சீக்கிரம் வரலாம். சீக்கிரம் வந்தால் அப்போ விடுமுறைக்காகப் பொய் சொல்கிறாயா என்றும் கேட்கலாம். மேலும் ஆண், பெண் இரு பாலாரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் இது அவ்வளவாக ஏற்கக் கூடியது அல்ல. ஆண் மாணவர்கள் பெண்களின் குறிப்பிட்ட நாட்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு பல விதங்களிலும் கேலி பேசலாம். தொந்திரவு செய்யலாம். எத்தனையோ இருக்கு! இது முன்னேற்றமாகத் தெரியவில்லை. பின்னேற்றமாகவே தெரிகிறது. :(

    ReplyDelete
  3. அலுவலகங்களில் ஒரே சமயம் இரண்டு, மூன்று பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விடுமுறை எடுக்க நேர்ந்தால் அப்போக் குறிப்பிட்ட பகுதியின் வேலை பாதிக்கப்படாதா? அது சரி, விடுமுறை அளிப்பதை ஏற்றுக் கொண்டால் கூட அது சம்பளத்துடன் கூடிய விடுமுறையா அல்லது சம்பளம் கழிக்கப்படுமா? காஷுவல் லீவ் எனப்படும் 11+3 நாட்களில் சேர்ந்ததா? இது தனியா? சம்பளத்துடன் கூடிய விடுமுறை தினங்களான 21 நாட்களில் இதுவும் சேருமா? அப்போ ஆண்களுக்கு அதை எப்படிச் சரி செய்வார்கள்? அவங்களும் கேட்க மாட்டாங்களா?

    ReplyDelete
    Replies
    1. பல விஷயங்களை தீவிரமாகவும்,தெளிவாகவும் யோசித்திருக்கிறீர்கள். யோசிக்க வேண்டியவர்கள் யோசிக்கட்டும்.

      Delete
  4. பானுக்கா டிட்டோ!!! உங்கள் கருத்த்துகள் அனைத்திற்கும் ஹைஃபைவ்!!! அருமை!!!

    கீதா

    ReplyDelete
  5. பெண் ஆசிரியைகள் இப்படி லீவ் எடுத்துவிட்டால்குழந்தைகளின் கதி??!!! இது முன்னேற்றமா?

    அம்மா என்பவர் தன் பெண்ணுக்கு இது போன்ற சமயத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற தைரியத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் பாசிட்டிவாக....பல பெண்கள் இதனை ஒரு சாக்காக வைத்து வயிற்றுவலி வரவில்லை என்றாலும் கூட வயிற்றுவலி அது இது என்று என் பள்ளியில் லீவு எடுப்பதைப் பார்த்திருக்கிறேன் அப்போது பள்ளியில் சொல்லிவிடுவார்கள் பரவாயில்லை நீ இங்கு வந்து வேண்டுமானாலும் படுத்துக் கொள்...உனக்கு வயிற்றுவலி என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் கற்றுத் தருகிறோம் என்று சொல்லி லீவு எடுக்கக் கூடாது என்று சொல்லிவிடுவார்கள். பெண்கள் பள்ளி என்பதால் பிரச்சனை இல்லை. இதுவே கோஎட் என்றால் வகுப்பில் உள்ள ஆண் பிள்ளைகளுக்கும் இது ஒரு விதமான கேள்விகளை எழுப்பும் இல்லையா அதுவும் ரெண்டாங்கெட்ட வயசு என்றால்...எனவே ஆண் பிள்ளைகளுக்கும் இதனைக் குறித்த அறிவியல் ரீதியான படிப்பினை மிகவும் தேவை...

    நல்ல கட்டுரை அக்கா

    கீதா

    ReplyDelete
  6. மிக விரிவான ஆழ்ந்த கருத்துகளின் அலசல்...

    யோசிக்க வேண்டிய விசயங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி

      Delete
  7. அருமையான கருத்துக்கள்!
    இனிய பாராட்டுக்கள்!

    ReplyDelete
  8. சிக்கல்களை விட்டு விடுங்கள். ப்ரைவசி விஷயங்கள் பகிரங்கப்படுத்தக் கூடாதவை. அந்த மூன்று நாட்களை சிக் லீவ் நாட்களாக பெண்களுக்கு மட்டும் கூட்டிக் கொடுக்கலாம்.

    அலுவலகத்தில் விடுமுறை; வீட்டில் வேலை என்பது இன்னொரு கொடுமை. அலுவலகம் ஒத்துழைக்கிற மாதிரி கணவன்மார்கள் ஒத்துழைக்கப் போகிறார்களா என்ன?..

    ReplyDelete
  9. என்ன, ஆண்கள் யாரும் பதிலளிக்கவில்லையே என்று நினைத்தேன். வருகைக்கும், பெண்களிடம் உங்களுக்கு இருக்கும் அக்கரைக்கு நன்றி!

    //அலுவலகத்தில் விடுமுறை; வீட்டில் வேலை என்பது இன்னொரு கொடுமை. அலுவலகம் ஒத்துழைக்கிற மாதிரி கணவன்மார்கள் ஒத்துழைக்கப் போகிறார்களா என்ன?..
    இப்போது கொஞ்சம் தேவலை.

    ReplyDelete